ஈழப் போராட்டத்தை அழிப்பதற்கு இந்திய அதிகாரவர்க்கம் பல தந்திரோபாயங்களைப் பயன்படுத்தியது. போராட்ட இயக்கங்களை ஊதிப் பெருப்பித்தது. இராணுவ வீக்கமடைந்த இயக்கங்களை மோதவிட்டு வேடிக்கை பார்த்தது. ஏனைய இயக்கங்கள் புலிகளால் கோரமாக அழிக்கப்பட்டனர். அழிக்கப்பட்ட போது அவர்களின் பிற்போக்கு அணியை உள்வாங்கி அடியாள் படைகள் ஆக்கிக்கொண்டது. இந்திய அமைதிகாக்கும் படை (IPKF) என்ற பெயரில் ஆக்கிரமிப்பு இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது. இவை அனைத்துக்கும் மேலாக ஈழப் போராட்டத்திற்கு எதிரான புறச் சூழலைத் திட்டமிட்டு உருவாக்கியது. இலங்கையில் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களிடையேயான இணைவு ஏற்படுவதையும் சுய நிர்ணய உரிமைக்காக ஒருங்கிணைந்து போராடுவதையும் தடுத்தது.
இரண்டு பிரதான அழிப்பு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டன.
1. ஒடுக்கப்படும் தேசிய இனங்களிடையே திட்டமிட்ட முரண்பாடுகளைத் தோற்றுவித்தது.
2. சிங்கள பொளத்த பேரினவாத அரசுக்கு எதிராகப் போராடிய விடுதலைப் போராட்ட அமைப்புக்களை முழுச் சிங்கள மக்களுக்கும் எதிரியாக மாற்றியது.
முஸ்லிம்களை அன்னியமாக்கிய அவலம்
1915 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் மீதே முதன் முதலாக இலங்கை பேரினவாத அரசின் வன்முறை தூண்டிவிடப்பட்டது. தமிழ்ப் பேசும் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் ஆயுதம் தாங்கிய குழுக்களாக ஆரம்பித்த காலத்திலிருந்தே கொழும்பு சாராத முஸ்லிம்களின் ஆதரவைப் போராட்டக் குழுக்கள் பெற்றிருந்தன.
எழுபத்தைந்தாயிரம் முஸ்லிம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஓகஸ்ட் மாதம் 1990 ஆம் ஆண்டு இரவோடிரவாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டதோடு இரண்டு ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களிடையேயான இணைந்த போராட்டத்திற்கான அத்தனை சாத்தியங்களும் நிரந்தரமாக நின்று போயின.
1990 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்தே முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டன. 1985 ஆம் ஆண்டிற்கும் 1990 ஆம் ஆண்டிற்கும் இடையேயான ஐந்து வருட காலத்தில் 396 முஸ்லிம்கள் காத்தான்குடியில் மட்டும் கொலைசெய்யப்பட்டனர். இந்தக் கொலைகளின் பின்னணியில் இந்திய அரசின் நேரடி ஆலோசனையும் பேரமும் இருந்தன என்ற அனுமானங்கள் வெளியாகின. இதனை நிறுவுவது போன்று இந்திய அமைதிகாக்கும் படை என்ற ஆக்கிரமிப்புப் படையால் பயிற்சி வழங்கப்பட்ட, ஈ.பி.ஆர்.எல்.எப் இனால் பலவந்த ஆட்சேர்ப்பில் உருவான தமிழ் தேசிய இராணுவம் (TNA) கிழக்கில் முஸ்லிம் இனக்கொலையை நடத்தியது.
இணைத்துக்கொள்ளப்படாத மலையக மக்கள்
இதே காலப்பகுதியில் மலையகத்திலும் யாழ்ப்பாணத்திலும் வெகுஜன இயக்கமாகச் செயற்பட்டுவந்த பாசறை என்ற சிறிய குழு பரவலான மக்கள் அமைப்புக்களைத் தோற்றுவித்திருந்தது. சில தலைமறைவு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவந்தது. இவர்களின் மலையகம் சார்ந்த செயற்பாடுகளை அறிந்துவைத்திருந்த ஈரோஸ் அமைப்பு காட்டிக்கொடுக்கும் வேலைகளில் ஈடுபட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணை வேந்தர் சு.வித்தியானந்தனைக் கைது செய்து சிறை வைத்திருந்த ஈரோஸ் அமைப்பு அதனை பாசறைக் குழு செய்ததாகவே ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்தது. அந்த அறிக்கைகள் ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக வெளியாகின.
இதே போன்று ரி.ஆர்.ஓ என்ற அமைப்பைச் சேர்ந்த கந்தசாமி என்பவரைக் கைது செய்து கொலைசெய்த ஈரோஸ் அமைப்பு அதனைப் பாசறையின் வேலையாக ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்தது.
இதனைத் தொடர்ந்து பாசறை அமைப்பு தனது மக்கள் வேலைகளைத் தற்காலிகமாக இடை நிறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
ஈரோஸ் அமைப்பு புலிகளில் இணைத்துக்கொள்ளப்பட்ட பின்னர் அதிலிருந்து வெளியேறியவர்கள் இந்தியாவின் தூண்டுதலே தாமது இவ்வாறான செயற்பாடுகளுக்குக் காரணம் என தெரிவித்திருந்தனர்.
ஆக, ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் இணைந்த போராட்டங்களை முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தியும் முற்போக்கு இயக்கங்களை அழிப்பதற்கு ஊடாகவும் இந்திய அரசு சீர்குலைத்தது.
திட்டமிட்டு அன்னியமாக்கப்பட்ட சிங்கள மக்கள்
இதன் இரண்டாவது பகுதி சிங்கள மக்களை சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கு எதிராகத் திசைதிருப்புவதற்காக இந்திய அரசு மிகவும் நுணுக்கமாகத் திட்டமிட்டுச் செயற்பட்டது. 80 களின் ஆரம்பங்களில் புளொட் இயக்கம் சிங்களத்தில் நடத்திய தமிழீழத்தின் குரல் வானொலி இலங்கை முழுவதும் பிரபலமடைந்திருந்தது. சிங்கள பௌத்த அரசிற்கு தலைவலி கொடுத்த இந்த வானொலியைச் சிங்களப் பகுதிகளில் கேட்போர் கைதுசெய்யப்பட்டனர். இவ்வாறான பிரச்சாரங்கள் ஊடாக சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை தமது விடுதலைக்கான ஆரமபமாகவும் கருதிய பல சிங்கள இளைஞர்கள் தமிழ் இயக்கங்களைத் தொடர்புகொண்டனர்.
80களின் ஆரம்பத்தில் 200 வரையான சிங்கள இளைஞர்கள் புளொட் இயக்கத்திடம் ஆயுதப்பயிற்சி பெற்றுக்கொண்டனர். இந்த இளைஞர்கள் பலரின் வாழ்க்கை சிதைந்து சின்னாபின்னமான வரலாறு தனியானது.
பேரினவாதக் கருத்துக்களோடு நிறுவனமயப்பட்டிருந்த ஜே.வி.பி என்ற மக்கள் விடுதலை முன்னணியை நிராகரித்து அந்த அமைப்பிலிருந்து வெளியேறிய பல குழுக்கள் விடுதலைக்காகப் போராடிய இயக்கங்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டன.
இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் சிங்கள அப்பாவி மக்கள் மீது நடத்திய இரண்டு தாக்குதல்கள் இலங்கை அரசுக்கு எதிரான அப்பாவிச் சிங்கள மக்களைக் கூட சுய நிர்ணய உரிமைகோரி நடத்தப்பட்ட போராட்டத்திற்கு எதிரானவர்களாக மாற்றியது. மே மாதம் 14 ஆம் திகதி 1985 ஆம் ஆண்டு பஸ் வண்டியொன்றில் அனுரதபுர நகருக்குள் நுளைந்த புலிகள் பஸ் நிலையத்தில் நின்றிருந்த சிங்கள மக்கள் மீது கண்மூடித்தனமாகச் சுட்டதில் பல பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கொலைசெய்யப்பட்டனர். பின்னர் மகாபோதி பௌத்த விகாரைக்குள் நுளைந்த புலிகள் அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்த சிங்கள மக்களைச் சுட்டுக்கொன்றனர். பின்னதாக அனுராதபுரம் பூங்க்கா ஒன்றிற்குச் சென்றவர்கள் அங்கும் சிங்களவர்களைச் சுட்டுக்கொன்றனர். இலங்கையில் சிங்கள மக்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரும் தாக்குதலாக இது கருதப்படுகின்றது. தமிழீழத்தின் பெயரால் 146 அப்பாவி மனிதர்கள் கொல்லப்பட்டனர்.
இதே வகையான தாக்குதல் ஒன்று அனுராதபுரம் மாவட்டத்தில் 1987 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.
இந்த இரண்டு தாக்குதல்களும் இந்திய உளவுத்துறையின் அனுசரணையுடன் ஆயுத பேரம் ஒன்றின் அடிப்படையில் நடத்தப்பட்டதாக பின்னதாகத் தகவல்கள் வெளியாகின.
இதைவிட, மார்சிய அமைப்பாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஈரோஸ் அமைப்பினால் கொழும்பின் மையப்பகுதிகளில் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த அமைப்பு இதனை இந்திய உளவுத்துறையின் தூண்டுதலாலேயே நடத்தியதாக அதன் உறுப்பினர்கள் வெளிப்படையாகவே கூற ஆரம்பித்தனர்.
1990 ஆம் ஆண்டில் சிங்கள மக்களிடமிருந்தும், முஸ்லீம்களிடமிருந்தும், மலையக மக்களிடமிருந்தும் ஈழப் போராட்டத்தைத் தனிமைப்படுத்தும் முயற்சியை இந்திய அரசு மிக நுணுக்கமாகச் செயற்படுத்தி முடித்தது. அதன் பின்னர், தேசியம், சுய நிர்ணயம் போன்ற அடிப்படைக் கோட்பாடுகள் குறித்த அடிப்படைப் புரிதல்கள் கூட இல்லாத தேசிய விடுதலைப் போராட்ட அமைப்புக்கள் கிழக்கு மாகாணத்திலிருந்து போராட்டத்தை அன்னியப்படுத்தின.
ஆயுதங்களையும் பயிற்சிகளையும் வழங்கி மோதல்களை ஏற்படுத்தி அழித்தது மட்டுமன்றி மற்றொரு அரசியல் பகைப்புலத்திலும் இந்த அழிவுகள் திட்டமிட்டு இந்திய அதிகார வர்க்கத்தால் மேற்கொள்ளப்பட்டன.
2008 ஆம் ஆண்டு போர் ஆரம்பிப்பதற்கு முன்னர் இலங்கை அரசே திட்டமிட்டு பல குண்டுவெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்தியது. இனப்படுகொலை நடத்தப்படுவதற்கு முன்னர் மக்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுக்க்கொள்ள ராஜபக்ச அரசின் தந்திரோபாய நகர்வாக இது கருதப்படுகின்றது.
தமிழ் சிங்கள ஒடுக்கப்படும் மக்களிடையேயான பகைமையை ஆழப்படுத்துவதும் ஒடுக்கபடும் தேசிய இனங்களிடையேயான முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்துவதும் இந்திய அதிகாரவர்க்கத்தின் பிரதான நிகழ்ச்சி நிரலாக இன்றுவரை தொடர்கிறது.
இன்றும் தொடர்கிறது…
தமிழ் நாட்டின் பிழைப்புவாத அரசியல் தலைமைகள் இதன் தொடர்ச்சியை முன்னெடுக்கின்றன. பேரினவாத அரசின் இன அழிப்பிற்கு எதிரான அனைத்துத் தரப்பிடமிருந்தும் தமிழ்ப் பேசும் மக்களைத் தனிமைப்படுத்தும் வகையில் இனவாத முழக்கங்களை முன்வைக்கும் தமிழ் நாட்டு அரசியல் கனவான்கள் அடிப்படையில் இந்திய அரச அதிகாரத்தின் இன்னொரு பக்கமே.
தேசிய விடுதலைப் போராட்டம் என்பது முழு மக்களின் விடுதலைக்குமான போராட்டமன்று. ஒடுக்கப்படும் வர்க்கங்களின் விடுதலை அதன் தலையங்கத்திலேயே இல்லை. ஆனால் ஏகாதிபத்திய உலகில் தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கு முற்போக்குப் பாத்திரமுமுள்ளது. பல சந்தர்ப்பங்களின் முழுமக்களின் விடுதலைக்குமான ஆரம்பப்புள்ளியாக அமைய வாய்ப்புண்டு.
இலங்கை முழுவதுமுள்ள வர்க்கரீதியாக இணைந்த தலைமை இலங்கைப் பேரினவாத அரசின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை சுய நிர்ணய உரிமை கோரி நடத்தும் போதே வெற்றி குறித்துச் சிந்திக்க முடியும். அவ்வாறன்றெனின் ஈழப் பிரச்சனையைத் தமது அரசியல் பிழைப்பிற்காக மட்டும் பயன்படுத்திக்கொள்ளும் இனவாதிகள் மனிதப் பிணங்களைக் காட்டிப் பிழைப்பு நடத்துவதைத் நிறுத்த முடியாது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து நான்கு ஆண்டுகள் கடந்து ஐந்தாவதை அண்மித்துக்கொண்டிருக்கிறோம். ராஜபக்ச அரசு ஒவ்வொரு தடவையும் பலவீனமடையும் போதும் இனவாதிகளும், ஏகபோக அரசுகளும், தன்னார்வ நிறுவனங்களும் இந்தியாவும் விழித்துக்கொண்டு அதனைக் காப்பாற்ற முன்வருகின்றன.
அண்மையில் நடைபெற்ற இரண்டு பிரதான சம்பவங்கள் அதனைத் தெளிவாகக் காட்டுகின்றன. முதலாவதாக இலங்கை அரசு வெலிவெரியாவில் நடத்திய படுகொலை. இந்த வருடம் ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் கொழும்பிலிருந்து 20 கிலோ மிட்டர் தொலைவிலுள வெலிவேரிய என்ற புற நகர்ப் பகுதியில் குடி நீர் அசுத்தமாவதைத் தடுக்கக்கோரி அரசுக்கு எதிராக நடைபெற்ற அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்றில் இராணுவம் கண்மூடித்தனமாகச் சுட்டதில் பல உயிர்களைப் பலிகொண்டது. சிங்கள பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் இப் பகுதில் அரசு நடத்திய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
ராஜபக்ச அரசிற்கு எதிரான உணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட ஆரம்பித்தது. வெலிவேரியாவில் கொல்லப்பட்ட மாணவன் ஒருவரின் தந்தை தொலைக்காட்சியில் பேசிய போது, ‘சிங்கள பௌத்தர்களான எமக்கே இந்த நிலை என்றால் இலங்கை வன்னியில் என்ன நடந்திருக்கும் என எம்மால் ஊகிக்கக் முடிகிறது’ என்று கூறிய செய்தி இலங்கையில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இலங்கை முழுவதும் ஏதோ பாரிய மாற்றம் ஏற்படப்போவதாக ஊடகங்கள் ஒரு பிரமையை வழங்கின.
தமது காலத்தைத் தாமதிக்காமல் இலங்கை அரசின் பாதுகாவலர்கள் விழித்துக்கொண்டனர். மக்களை வீட்டுக்குள் முடங்கியிருக்குமாறும், ராஜபக்ச அரசுக்கு எதிராகப் போராட வேண்டாம் என்றும் தாம் பார்த்துக்கொள்வோம் என்றும் முழங்க ஆரம்பித்துவிட்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் உட்பட பலர் தாம் நவனீதம் பிள்ளையை அழைத்துவந்து ராஜபக்ச மீது போர்க்குற்றம் சுமத்தி தண்டனை பெற்றுக்கொடுக்கப் போவதாக கூக்குரலிட்டனர். தன்னார்வ நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புக்கள் என்று பலர் மக்களுக்கு போலி நம்பிக்கைகளை வழங்கி வெலிவெரியவில் முகமிட்டனர்.
இவர்களை நம்பிய மக்களின் போராட்டங்கள் உறக்க நிலைக்குச் சென்றது. ராஜபக்ச அரசு பாதுகாக்கப்பட்டது.
மறுபுறத்தில் ராஜபக்ச அதிகாரத்தைப் பலவீனப்படுத்த விரும்பாத தமிழக இனவாதிகளோ, புலம் பெயர் பிழைப்புவாதிகளோ வெலிவெரியவைக் கண்டுகொள்ளாமல் தமிழீழம், சிங்களவன் போன்ற தமது வழமையான மந்திரங்களை உச்சாடனம் செய்தனர்.
சுய நிர்ணய உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாக எழுந்த சிங்கள மக்கள் விரக்தியடைந்தனர்.
இந்த நிகழ்வு வெறும் உதாரணம் மட்டுமே. அனேகமாக இலங்கையில் நடைபெறும் அனைத்து அரசியல் நகர்வுகளும் இவ்வாறு தான் சீர்ழிக்கப்பட்டு சிதைக்கப்படுகின்றன.
ஈழத் தமிழர்களின் அழுகுரலை விற்பனைப் பொருளாக மாற்றி வியாபாரம் செய்யும் நவீன வியாபாரிகளது நோக்கமும் இந்தியா மற்றும் மேற்கு ஏகபோக அரசுகளின் நோக்கமும் பல தடவைகள் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றன.
முள்ளிவாய்க்கால் அழிப்பின் நான்கு வருடங்களின் பின்னர் இந்திய மற்றும் ஏகாதிபத்திய அரசுகளின் தந்திரோபாய நகர்வுகள் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் இனிமேலும் முளைவிடாமல் தடுப்பதற்குரிய இருண்ட சூழலை உருவாக்கியுள்ளது.
இலங்கை அரசு, இந்திய அரசு, புலம்பெயர் அரசியல் வாதிகள், தமிழ் நாட்டு இனவாதிகள் ஆகிய அனைவரதும் நலன்களின் அடிப்படையில் இச் சூழல் திட்டமிட்டு தோற்றுவிக்கப்பட்டுளது.
சுய நிர்ணய உரிமைக்கான கோரிக்கை, தமிழ்ப்பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களை மீட்டல் போன்ற முழக்கங்களை முன்வைத்து வடமாகாணத்தில் ஆட்சிக்கு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வருகையோடு மிக நீண்ட காலத்திற்கு தன்னுரிமைக்கான போராட்டம் பின் தள்ளப்பட்டுள்ளது.
இது தற்காலிகமானது என்றாலும் ஆபத்துக்கள் நிறைந்தது.
எப்போதும் போராடத் தயாராகவுள்ள மக்கள்..
இலங்கையின் பாசிச அரசமைப்பையும் அதன் ஒழுங்கமைப்பையும் பெரும்பாலான இலங்கை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆட்சி மாற்றம் என்பது தமது வாழ்க்கையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தப்போவதில்லை என்பதை உறுதியாக நம்புகிறார்கள். 1958 ஆம் ஆண்டு இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வித்திட்டம் இச்சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு புதிய அடிப்படைகளைத் தோற்றுவித்திருந்தது. இதுவே இரண்டு தடவைகள் இலங்கையில் ஆயுதக் கிளர்ச்சிகளைத் தோற்றுவித்தது.
இன்றோ முன்னெப்போது இருந்திராத அளவிற்கு இவ்வாறான எதிர்ப்புணர்வு அதிகரித்துள்ளது. இலங்கையில் தற்கொலை வீதம் வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ளது. நாளொன்றிற்கு 11 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். பல்தேசிய நிறுவனங்களின் வியாபார வெறி மக்களிடமிருந்து அடிப்படைப் பொருளாதார வசதிகளைக் கூடப் பிடுங்கிக் கொள்கிறது. இலவசக் கல்வி வியாபார நிறுவனங்களால் பிரதியீடு செய்யப்படுகின்றது.
இவை அனைத்திலும் மேலாக வன்னிப் படுகொலையின் பின்னரான நிலைமைகளில் ஒரு குறித்த எதிரியை நோக்கி சுட்டுவிரலை நீட்டுவதற்கு ராஜபக்ச அரசு இயலாத நிலையில் உள்ளது. ராஜபக்ச அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் நடைபெற்ற சிங்கள மக்களின் மூன்று ஆர்ப்பாட்டங்களில் இலங்கை அரச படைகள் துப்பாக்கிப் பிரையோகம் மேற்கொண்டுள்ளன.
மலையக மக்களை பேரினவாதமும் பொருளாதார ஒடுக்குமுறையும் கொன்று தின்றுகொண்டிருக்கிறது. மலையகமக்கள் மத்தியிலிருந்து இலங்கையின் எந்தப் பேரினவாதக் கட்சிகளும் தேர்தலைல் வாக்குகளைப் பெற்றுக்கொண்டதில்லை.
இலங்கையின் குடிப்பரம்பலில் மலையகத் தமிழர்கள் 4.2 வீதமானவர்கள் என்று இலங்கை அரசின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
முஸ்லிம்களின் மீதான பேரினவாத வன்முறையை இலங்கை அரசு நிறுவனமயப்படுத்தப்பட்ட வகையில் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. தமிழ்ப் பேசும் முஸ்லீம்களின் எண்ணிக்கை 9.2 வீதம் என்று அரச புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. வடகிழக்கு சார்ந்த இலங்கையில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை 11.2 விதம். ஏனைய 74.9 வீதமான சிங்கள மக்களின் தொகையில் 60 வீதமானவர்கள் மத்தியதர வர்க்கத்தின் கீழ் அணிகளைச் சார்ந்தவர்கள். கிராமப் புறங்களில் விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தை ஆதரமாகக் கொண்ட இவர்களில் குறித்த பகுதியினர் இலங்கையின் அரைக் காலனிய அமைப்பில் வெறுப்படைந்தவர்கள். ஆக, சமூகத்தின் இன்றைய இருப்பிற்கு எதிரான அரசியல் விழிப்புணர்வைப் பெற்றுள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்று. ஏனைய தெற்காசிய நாடுகளைப் போலன்று இலங்கையின் குறிப்பான சூழல் இது.
ஆக, இலங்கையில் பேரினவாதத்தையும் கோரமான ஒடுக்குமுறையையும் தவிர்த்து அரசு அதிகாரம் செலுத்தமுடியாது. புலிகள் அழிக்கப்பட்டு வடக்கும் கிழக்கும் இராணுவ மயமாக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை அரசு தனது எதிரிகளைத் தேடியலைகிறது.
இலங்கை அரசு விரும்பும் போலியன எதிரிகள்..
இவ்வறான ஆபத்தற்ற போலியான எதிரிகளையே இலங்கை அரசு தனது இருப்பை உறுதிப்படுத்துவதற்காக விரும்புகிறது. நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக வடக்குக் கிழக்கில் நடைபெறும் போராட்டங்கள், வெலிவேரிய ஆர்ப்பாட்டம் போன்றவற்றிற்கே அரசு அச்சமடைகின்றது.
வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இலங்கை சிங்கள பௌத்த அதிகார வர்க்கத்தின் நண்பருமான விக்னேஸ்வரன் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களுக்கு ஒரு செய்தி கூறப்பட்டது. தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்டாலும் இலங்கை அரசோடு நல்லிணக்கத்திற்கு வருவோமே தவிர அரசுக்கு எதிரான, ஒடுக்கப்படும் சிங்கள மக்களோடு இணைந்து கொள்ள மாட்டோம் என்பது தான் அச் செய்தி.
ஈழப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக நடைபெற்ற காலத்தில் இலங்கை அரசுக்கு எதிரான வர்க்க ஒற்றுமையைச் சீர்குலைத்து இலங்கை அரசாங்கத்தைப் பலப்படுத்த இந்திய அதிகாரவர்க்கம் துணைபோனது. இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகவும் விக்னேஸ்வரன் ஊடாகவும் அதனைச் செய்துமுடிக்கின்றது.
இதன் மறுபுறத்தில் இலங்கை அரசின் போலி எதிரிகளான தமிழகத்தின் இனவாதிகள் தமது அரசியல் செயற்பாடுகளை எந்தத் தடையுமின்றி மேற்கொள்கின்றனர். ஈழத் தமிழர்கள் குறித்தோ, இலங்கை வாழ் ஏனைய ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் குறித்த சிறிதும் துயர் கொள்ளாத வியாபாரிகளான இவர்கள் பாரதீய ஜனதா போன்ற மதவாத அமைப்புக்களைக் கூட வெளிப்படையாக ஆதரிக்கும் இழி நிலைக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். இலங்கை ராஜபக்ச அரசு இனச் சுத்திகரிப்புச் செய்ய ஆரம்பித்திருக்கும் தமிழ்ப் பேசும் முஸ்லிம்களை வட கிழக்குத் தமிழர்களோடு இணைந்து போராட்டங்களை முன்னெடுக்கவிடாது இந்து வெறியர்களோடு இணைவை ஏற்படுத்தும் இவர்கள் ராஜபக்ச பாசிசத்தை பலப்படுத்தும் கடைந்தெடுத்த பிழைப்புவாதிகள்.
ஏனைய ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களான மலையக மற்றும் முஸ்லிம் தமிழர்களோடு இணைந்து ராஜபக்ச அரசிற்கு எதிரான பெரும்பான்மையைத் தோற்றுவித்து பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதில் கிஞ்சித்தும் உடன்பாடுகொள்ளாத இனவாதிகளின் இறுதித் தீர்வு இந்திய அரசு இலங்கையில் தலையிட வேண்டும் என்பதே. மாறிமாறி ஆட்சிக்கு வரும் இந்திய அரசியல்கட்சிகளோ இலங்கை அரசின் இனச் சுத்திகரிப்பு நிகழ்ச்சி நிரலுக்குத் அனைத்து ஆதரவையும் வழங்குகின்றன. ஆக, இலங்கை இந்திய அரசுகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் பலப்படுத்தும் தமிழகத்தின் இனவாதிகள் ஈழ மக்களின் தன்னுரிமைக்கான போராட்டத்தின் அடிப்படை எதிரிகள்.
இவ்வாறு இலங்கையில் வாழும் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் எதிரிகளால் புடைசூழப் பட்டுள்ளது. அதிகார வர்க்கத்தின் நலன்கள் சார்ந்து தமது பிழைப்பிற்காக ஈழத் தமிழர் பிரச்சனையில் தலையீடு செய்யும் அனவரும் அரசியல் நீக்கம் செய்யப்படுதல் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் சார்ந்து மட்டுமன்றி இலங்கை மக்களின் விடுதலை சார்ந்தும் அவசியமான ஒன்று. உலகம் முழுவதும் புத்துயிர்ச்சி பெறும் உழைக்கம் மக்களோடும் ஜனநாயக முற்போக்கு இயக்கங்களோடும் பொதுவான வேலைமுறையின் அடிப்படையில் இணைவை ஏற்படுத்திகொள்வதும். கொலைகார அரசுகளின் போலி முகத்திரையைக் கிழித்து ஈழப் போராட்டத்தைப் புரட்சிகரப் போராட்டமாக முன்னெடுப்பதும் இன்றைய அரசியல் தேவையாகும்.