இனியொருவில் விடுதலைப் புலிகளின் முன்பகுதி வரலாற்றை எழுதிய ஐயரின் பதிவுசெய்யப்பட்ட நேர்காணலின் முதலாவது பகுதி இங்கு தரப்படுகிறது. சில நாட்களின் முன்னர் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஐயர், இப்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உடல் நிலை தேறி வருகிறார். மிகவும் நேர்மையாக வாழ்ந்த ஐயர் தனக்காக சொத்துக்களை வைத்திருந்ததில்லை. தனியார் மருத்துவமனை ஒன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நான் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவன். ஐயர் என்ற எனது பெயர் கூட அதன் அடிப்படையிலேயே அனைவராலும் அறியப்பட்டிருந்தது. சிறு வயதில் எனது பள்ளிப்பருவ நண்பர்களில் பலர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே அமைந்திருந்தனர். இது குறித்துப் எனது குடும்பம் சார்ந்தவர்கள் பல தடவை என்னைக் கண்டித்திருந்தனர். அவை ஏன் எனது நட்பைக் கண்டிக்கிறார்கள் என்பது எனக்குப் புதிராகவே பல சந்தர்ப்பங்களில் தென்பட்ட்டது.
பின்னர் நான் கோவிலில் பூஜை செய்வதற்காக நியமிக்கப்பட்டேன். அப்போதெல்லாம் கோவிலுக்கு வருகின்ற தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. கொட்டும் மழையில் கூட அர்ச்சனைத் தட்டுகளோடும் பூக்களோடும் பூஜைக்காக கோவிலுக்கு வெளியிலேயே அவர்கள் காத்திருப்பார்கள்.
இந்த அவலம் அவர்களுடனான எனது நெருக்கத்தையும் நட்பையும் ஆழப்படுத்தியது மட்டுமன்றி சமூகத்தின் மீதான கோபத்தையும் ஏற்படுத்தியிருந்தது. சில காலங்களில் இதுவே கடவுள் மறுப்பாக என்ன்னுள் உருவானது.
ஆக, சமூகத்தின் விதி முறைகளுக்கும் வரம்புகளுக்கும் எதிராக உழைக்கும் வலுவை எனக்கு வழங்கியிருந்தது. இதன் மறு பகுதியாகத் தேசிய இன அடக்கு முறை உச்சத்தை அடைந்த வேளையில் நான் சார்ந்த சமூகத்தின் வரம்புகளைக் கடந்து அதற்கு எதிரான போராட்டத்தில் முழுமையாகப் பங்காற்றும் உறுதியை எனக்கு வழங்கியிருந்தது. ஆக, பிரபாகரனைச் சந்திப்பதற்கு முன்பதாகவே எதிர்ப்புப் போராட்டங்களில் பல வகைகளில் பங்களிக்க ஆரம்பித்திருந்தேன்.
பிரபாகரனை முதலில் சந்தித்த போது விடுதலை இயக்கத்தை ஆரம்பிப்பதாகத் தீர்மானித்துவிட்டீர்களா?
பிரபாகரனை ராகவன் தனது தொடர்புகளூடகவே முதலில் அறிமுகம் செய்தார். ராகவன் அப்போது பாடசாலை மாணவன். நாம் போராட்டங்களில் நம்பிக்கை உடையவர்கள் என்ற அடிப்படையிலேயில் தனது தலைமறைவு வாழ்க்கைக்கு உதவி கோரியே அவர் எம்மைச் சந்தித்தார். முதலில் செட்டியுடன் தொடர்புடையவர் என்பதால் அவருக்கு உதவிசெய்ய மறுத்துவிட்டோம்.
பின்னதாக செட்டியுடன் அவர் தொடர்புகளைக் துண்டித்துவிட்டதாகக் கூறியதும் அவருக்கு உதவிசெய்யச் சம்மதம் தெரிவித்தோம். நானும் குலம் என்ற எனது பால்ய நண்பனும் அவரின் தலைமறைவு வாழ்க்கைக்கான உதவிகளைச் செய்து வந்தோம்.
தவிர, அவ்வேளையில் பிரபாகரன் தன்னோடு சார்ந்திருந்த எவருமற்றுத் தனித்திருந்தார். முதலில் பல நாட்கள் சரியாக உணவருந்தாமல் களைப்புற்ற நிலையிலிருந்தார்.
யாழ்ப்பாண மேயர் துரையப்பாவைக் கொலைசெய்திருந்த காரணத்தால் இலங்கை அரச படைகள் எப்போதும் அவரைக் கைது செய்யலாம் என்ற நிலையே காணப்பட்டது. தவிர, மீசை கூட அரும்பாத பதினேழு வயது இளைஞனான பிரபாகரன் இலங்கை அரச படைகளுக்கு எதிராக இன்னும் ஏதாவது செய்தாகவேண்டும் என்ற துடிப்புடன் காணப்பட்டார்.
இவை அனைத்தும் பிரபாகரன் மீதான விமர்சனங்களுக்கு அப்பால் அவர் மீதான அனுதாபத்தையும் மதிப்பையுமே ஏற்படுத்தியிருந்தது.
(இன்னும்வரும்..)