Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈழப் போராட்டம் தவறாகத் திட்டமிடப்பட்டது –  நேபாள  மாவோயிஸ்டுகளுடன்  உரையாடல் (முதலாம் பகுதி) :  சபா  நாவலன்

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவின் புற நகர்ப் பகுதி பட்டன். மல்லர் சாம்ராஜ்யத்தின் எச்ச சொச்சங்கள் பட்டனின் அனைத்துப் பகுதிகளிலும் காணலாம். நேவாரி இனக்குழுவினர் அதிகமாக வாழும் பட்டனில் நேவாரிகளின் சிற்பங்கள், கட்டட அமைப்புக்கள் என்பன இன்னொரு யுகத்தை நினைவுபடுத்துகின்றது.

பட்டனிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தால் விமான நிலையத்திற்குச் செல்லும் பெருந்தெருக்களைச் சந்திக்கலாம். மெல்லிய காற்றும் மண்ணைச் சுமந்து செல்லும் தூசு மண்டலாமகத் தான் இந்ததெருக்கள் காணப்படும். 80 களின் யாழ்ப்பாணத்தை நினைவுபடுத்துகின்ற செப்பனிடப்படாத வீதிகளூடாக விமான நிலையப் பகுதியை நோக்கி அரைக் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தால் கோடீஸ்வர் மகாதேவ் ஆலயத்தைக் காணலாம். மிகப் பிரபலமான இந்த ஆலயத்திலிருந்து ஐந்து நிமிட நடைத் தூரத்தில் பரிஸ் டன்டா பகுதி காணப்படும். அங்கே விசாலமான ஒரு மாடிக்கட்டத்தின் உச்சியில் செங்கொடியொன்று பறந்துகொண்டிருக்கும். அதுதான் நேபாள மாவோயிஸ்டுக்களின் தலைமையகம்.

ஏறக்குறைய 30 அறைகளைக் கொண்ட அந்தக் கட்டடத்தின் வெளியே பத்திரிகையாளர்கள் கூடியிருந்தனர். காவல் போடப்பட்டிருந்தது. காலை பத்து மணிக்கு சுறு சுறுப்படைந்திருந்த அந்த அலுவலகத்தில் பலரும் போவதும் வருவதுமாக இருந்தனர். ஏற்கனவே மாவோயிஸ்ட் அமைப்பால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நண்பர் ஒருவருடன் சென்றதால் எனக்கு எந்த சோதனையும் நடக்கவில்லை. அலுவலகத்துள் நுழைந்ததும் வாசலிலேயே தோழர் என்று விழித்தனர்.

பதினைந்து வருடங்களின் முன்னர் இந்தியாவால் பயிற்றப்பட்ட ரோயல் நேபாளி இராணுவம் சல்லடை போட்டுத்தேடிக்கொண்டிருந்த மனிதர்கள் நம்பிக்கையோடு அலுவலகத்தில் அமர்ந்திருந்தனர்.

அலுவலாக நிவாகத்திர்குப் பொறுப்பான கணக் என்பவருடன் சிறிது நேரம் உரையாடச் சந்தர்ப்பம் கிடைக்கிறது. 24ம் திகதி ஓகஸ்ட் மாதம், இந்தச் சந்திப்பிற்கு முதல் நாள் கட்மண்டுவை அண்மித்த் கிராமங்களுக்குச் சென்று திரும்பியதால் ஏற்பட்டிருந்த களைப்பு அவரின் உள்ளூர்க் குளிர்பானத்தால் சற்றுத் தணிந்திருந்தது. முன்னை நாள் போராளியான அவர் தன்னைப்பற்றி அறிமுகம் செய்கிறார்.

பல்கலைக் கழகத்தில் கல்விகற்கும் போதே நேபாள பராளுமன்ற கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணியில் இணைந்து செயற்பட்ட புஸ்பப கமல் பிரசண்டா, பின்னதாக யூ.ஸ் ஏயிட்ஸ் இல் தனக்குக் கிடைத்த வேலையை மூன்றே மாதங்களில் ராஜினாமா செய்துவிட்டு ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

நேபாள பாராளுமன்ற வழிக் கொம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணியின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட பிரசண்டா, பின்னதாக மன்னனின் பாசிச இராணுவத்தால் தேடப்படுகிறார். ஏனையோரோடு இணைந்து ஒருங்கிணைந்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை ஆரம்பித்த பிரசண்டா, சில காலங்களிலேயே அதன் தலைமைப் பொறுப்பிற்குத் தெரிவாகிறார்.

Unified Communist Party of Nepal (Maoist), 1994 இல் தனது சிறிய அளவிலன அரசியல் நடவடிக்கைகளையும் மக்களை அணிதிரட்டும் செயல் முறைகளையும் நேபாள தொலைதூரக் கிராமங்களில் ஆரம்பிக்கிறது. 1996 ஆம் ஆண்டு கட்மண்டுவின் இதயப் பகுதியான தமெல் என்ற இடத்தில் நடத்தப்பட்ட மாவோயிஸ்டுக்களின் இராணுவத் தாக்குதல் தோல்வியில் முடிகிறது.

பத்து வருடங்களில் 13 ஆயிரம் போராளிகளும், பொதுமக்களும், இராணுவத்தினரும் உயிரிழந்தனர்.

2004 ஆம் ஆண்டிலிருந்து மன்னராட்சியை முடிவிற்குக் கொண்டுவரும் மக்கள் போராட்டம் தீவிரமடைந்தது. 2006 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றுடன் இந்தியாவும் இணங்க ஏழு கட்சி ஐக்கிய முன்னணி ஒன்று உருவாகிறது. இதுவரை பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்ட மக்கள் விடுதலை இராணுவம் கலைக்கப்படாமல், அவர்களின் கட்சி அமைப்புமுறை எந்த மாற்றமும் பெறாமல் போர் நிறுத்த ஒப்பந்தம் உருவாகிறது.

2007 ஆம் ஆண்டு 220 ஆசனங்களைப் பெற்று மாவோயிஸ்ட் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவாக, ஓகஸ்ட் 2008 ஆம் ஆண்டு புஷ்ப கமல் பிரசண்டா பிரதமராகத் தெரிவுசெய்யப்படுகிறார்.
நேபாள மாவோயிஸ்டுக்களை வெற்றிகொள்ள முடியாது என்ற நிலையிலேயே அதிகார வர்க்கம் சமரசம் என்ற முடிவிற்கு வந்தடைகிறது. மாவோயிஸ்டுக்களோ சமரசம் என்பது தமது கட்டமைப்பைச் சீர்குலைக்காமல் இடைக்காலத் தீர்வாகவும், புரட்சியின் அடுத்த நிலையை நோக்கி நகர்வதற்கான தந்திரோபயமாகவும் முன்வைக்கின்றனர்.

அலுவலகப் பொறுப்பாளரான முன்னை நாள் ஆயுதப் போராளியுடன் உரையாடிக்கொண்டிருக்கும் போதே, மத்திய குழுக் கூட்ட இடைவேளையில் பிரசண்டா, பிரகாஷ், பசுந்தா, ராம் கார்க்கி, மகாரா ஆகிய தோழர்கள் சந்திக்கின்றனர்.

பிரகாஷ், பிரசண்டா ஆகியோர் சில நிமிடங்களில் விடைபெற்றுக்கொள்ள உரையாடலை ஏனையோர் தொடர்கின்றனர்.

ஏற்கனவே மின்னஞ்சல் மற்றும் தொலைபேசியூடாகப் பரிமாறிக்கொண்ட விடயங்களை வ் விரிவாகப் பேசுகிறோம். இலங்கையின் இன்றைய அரசியற் சூழல், அரசியல் கட்சிகளின் நிலை, புலம் பெயர் சூழல், மாவோயிஸ்டுக்களின் இன்றைய அரசியல் முரண்பாடு என்ற பொதுவான விடயங்கள் பேசப்படுகின்றன.

கடந்த ஐம்பது வருடங்களில் எந்த வெளிச் சக்திகளதும் பின்புலமின்றி வெற்றிகொள்ளப்பட்ட போராட்டம் என்பதில் நேபாள மாவோயிஸ்டுக்களின் போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும், உலகம் முழுவதும் இடது சாரி அமைப்புக்கள் மாற்றங்களை உன்னிப்பாக அவதானிக்கிறார்கள் என்றும் கூறினேன்.

“அடக்குமுறை உச்சமடைந்திருக்கும் ஒரு நாட்டில் போராட்டத்தில் வெற்றிகொள்வதென்பது மிகவும் எளிதான ஒன்று, அதனைத் தக்கவைத்துக் கொள்வதில் தான் சிக்கலே இருக்கிறது” என்றார் ராம் கார்க்கி.

அவ்வாறானால் ஈழப் போராட்டம் தோல்விடைந்ததற்கு இந்தியாவின் அதீதமான தலையீடுதான் காரணமாக இருக்குமோ என நான் கூறியதும் இடை நிறுத்திய ராம் கார்க்கி, நேபாளத்தை இந்தியா ஒரு குடியேற்று நாடுபோலவே இன்றும் கருதுகிறது, நேபாள ஆயுதப்படைகள் இந்தியாவின் நேரடிக் கட்டுப்பாட்டோடுதான் இருந்தது இப்போது இருக்கிறது என்றார். ஆக, எமது போராட்டம் ஆரம்பம் முதலே இந்திய விரிவாக்கத்திற்கு எதிரான போராட்டமாகவும் தான் அமைந்திருந்தது என்று மேலும் கூறினார்.

ராம்கார்க்கியைத் தொடர்ந்த பசுந்தா, இலங்கை நேபாளம் போன்ற நாடுகளின் புவிசார் நிலைமைகளும் அரசியலும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டத்தை இலகுபடுத்துகிறது என்றார். எமது நாடுகளைப் பொறுத்தவரை 80 வீதமான மக்கள் இருக்கின்ற அரச அதிகார அமைப்பில் வெறுப்ப்டைந்தவர்களாகக் காணப்படுகின்றனர்.

ஈழப் போராட்டம் என்பது சிங்கள மக்களுக்கு எதிரான போராட்டமல்ல, சிங்கள மக்கள் மீதான அரச அடக்குமுறையும் தேசிய இன விடுதலையில்தான் தங்கியிருக்கின்றது என்ற உண்மையை தெளிவுபடுத்தி அவர்களுடை பிரச்சனைகளுக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட தலைமைத்துவத்தை வழங்கியிருந்தால் ஈழப்போரட்டம் வன்னியில் தோல்விடைந்திருக்காது. நாம் 80 வீதமான எல்லைப்பரப்புக்களை மக்களோடு இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்ததால் மட்டும்தான் இந்திய அரசு அடிபணிந்தது என்றார்.

ஆக, இப்போது நாம் எவ்வாறு போராட்டத்தை ஒழுங்கமைக்க வேண்டும்? தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்விக்குக் காரணங்கள் என்ன என்று வினவிய போது அவர்களுக்கு மத்திய குழுக் கூட்டத்திற்கு நேரமாகிவிட்டது. இதற்கான பதில்களுடன் உரையாடல் இரண்டு நாட்கள் ஒத்திவைக்கப்படுகின்றன.

அடுத்த பகுதியில் உரையாடலின் ஒலி வடிவமும் பதியப்படும்…

Exit mobile version