Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈழப் போராட்ட அரசியல் – தொடரும் காட்டிக்கொடுப்பு : சபா நாவலன்

மகிந்த ராஜபக்ச அரசு வன்னிப் படுகொலைகளை நிகழ்த்தி முடித்த மூன்றாவது வருடம் அண்மித்துக்கொண்டிருக்கின்றது. ஈழப் போராட்டத்தில் தன்னைத் தானே இணைத்துக்கொண்ட அமரிக்க அரசின் மனித முகமாகத் தொழிற்படும் நோர்வே அரசு இரண்டு வருடங்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுடனும் இலங்கை அரசுடனும் நடைபெற்ற பேச்சுவார்த்தையை மீளாய்வு செய்து ‘பிரமாண்டமான’ அறிக்கையை வெளியிட்டிருக்கின்றது.

இலங்கையில் நடைபெற்ற இன அழிப்புக்குறித்து எங்காவது ஒரு முலையில் கூட அவர்களின் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. உலகில் நடைபெறுகின்ற போராட்டங்களை ஒட்டச் சிதைப்பதில் நோர்வே அரசு “அளப்பரிய” சேவையாற்றியுள்ள வரலாற்றுப் புள்ளிவிபரத்தோடு ஈழப் போராட்டமும் இணைக்கப்படும்.

எது எவ்வாறாயினும் உலகின் அனைத்து ஏகபோகங்களும் வன்னிப் படுகொலைகளின் காலத்தில் ஒரே நேர்கோட்டிலேயே பயணித்தன. இந்திய அரச அதிகாரம் நேரடியான ஆதரவை இலங்கை அரசிற்கு வழங்கிய மறுபக்கத்தில் மேற்கு நாடுகள், சீனா, ரஷ்யா என்ற அனைத்து அதிகாரங்களும் போட்டிபோட்டுக்கொண்டு மனிதப்படுகொலைகளை நிறைவேற்ற இலங்கை அரசிற்குத் தமது முழுமையான ஆதரவை வழங்கின.

லிபியாவில் அந்த நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருந்த கடாபி மனித உரிமை மீறுகிறார் என்று போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஆக்கிரமித்த மேற்கின் அதே ஏகபோக அதிகாரங்கள் ராஜபக்சவின் கொலைகளை செய்மதியில் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தன.

தமிழ்ப் பேசும் மக்களின் தலைமையைத் தமது கட்டுப்பாட்டு எல்லைக்குள் வைத்துக்கொண்டு வியாபாரம் செய்ய விரும்பும் கூட்டங்கள் ராஜபக்சவோடும், இந்தியாவோடும், மேற்கு நாடுகளோடும் ஒட்டிக்கொண்டன. இனப்படுகொலையின் பின்புலத்தில் செயலாற்றிய அத்தனை அழிவு சக்திகளோடும் பேரம் பேசி தமது சொந்த வியாபார நலன்களை உறுதி செய்துகொண்டன.

உலகம் முழுவதும் அழிவுக்கு உள்ளாக்கப்படும் மக்கள் கூட்டங்கள், அவற்றின் தலைமை சக்திகள் தம்மிடை ஒருங்கிணைவை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். ஒருவர் மற்றவறைப் பலப்படுத்தும் ஒருங்கிணைவு உலகம் முழுவதும் ஏற்பட்டுவருகின்றது.

இலங்கையில் இனப்படுகொலையின் பின்புலத்தில் தொழிற்பட்ட இந்திய அதிகாரவர்க்கத்திற்கு எதிராகப் போராடுகின்ற பழங்குடி மக்களை ஆதரரித்து ஆயிரத்திற்கு மேலான ஐரோப்பியர்கள் சில மாதங்களின் முன்னர் நடைபெற்ற பொதுக்க்கூட்டத்தில் அருந்ததி ராய் நடத்திய பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்தியாவில் கிஷன்ஜீ கொல்லப்பட்டதும் உலகம் முழுவதுமிருந்த முற்போக்கு இயக்கங்கள் மத்தியில்ருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன. இந்திய அரசின் பழங்குடி மக்கள் மீதான இனப்படுகொலைக்கு எதிராக உலகப் பொது அபிப்பிராயம் ஏற்பட்டு வருகிறது.

கடந்த வாரம் பிரான்சில் இருந்து பிரஞ்சுப் பல்கலைகழகப் பேராசிரியர் சமீர் அமீன் பிரித்தானியாவிற்கு வந்திருந்தார். வன்னிப் படுகொலைகளும் அதன் தொடர்ச்சியும் குறித்த சர்வதேசப் பிரச்சாரம் ஒன்றை முன்னெடுப்பது குறித்து அவருடன் பேச முற்பட்ட போது அதுகுறித்த புரிதல் தனக்குப் போதிய அளவு இல்லை என்பதிலிருந்தே உரையாடலை ஆரம்பித்தார்.

உலகத்தின் பெரும்பகுதி இலங்கையைப் போன்றே மனிதப்படுகொலைகளின் களமாக மாற்றப்பட்டுவிட்டது. சமீர் அமீனின் தந்தை நிலமான எகிப்தில் எதிர்ப்பியக்கங்கள் 2009 இன் ஆரம்பத்திலேயே உருவாகியிருந்தது. இவை அனைத்திற்கும் மத்தியில் ஈழப் போராட்டம் குறித்த புரிதல் உலக முற்போக்கு இயக்கத்தின் மத்தியில் எடுத்துச் செல்லப்படவில்லை.

ஏகபோகங்கள் திட்டமிட்டுக் கடத்திய இந்த நூற்றாண்டின் மனிதப்படுகொலை இந்தியா அமரிக்க அதிகார வர்க்கங்களின் எல்லைகுள்ளேயே முடக்கப்படுவிட்டது. புலிகளிடமிருந்து மக்களை விடுவித்தோம் என்ற இலங்கை அரசின் பிரச்சாரத்திற்கு எதிரான வெளிப்படையான பிரச்சார இயக்கம் முன்னெடுக்கப்படவில்லை. இதற்கு மாறால புலிகளின் புனிதம் குறித்தும் உலகின் மனித கசாப்புக்கடைக்காரர்களான அமரிக்காவினதும் அதன் ஆதரவு அணிகளின் மேன்மை குறித்துமே உலக அரங்கில் பேசப்பட்டது.

உலக முற்போக்கு இயக்கத்தைப் பலவீனப்படுத்த ஏகபோகங்கள் மேற்கொள்கின்ற அத்தனை நடவடிக்கைகளையும் புலிகள் சார்ந்த தலைமைகளும், ஊடகங்களும் மேற்கொண்ட அதே வேளை முப்பது வருடமாக ஒற்றைப்பரிமாண சிந்தனைக்குள்ளேயே முடங்கிக்கிடந்த புலம்பெயர் புலி ஆதரவாளர்களும் ஏகபோகங்களின் ஏஜண்டுகள் போலவே செயற்படுகிறார்கள்.

சர்வதேச சமூகம் என்பதற்கு உலகில் போராடும் மக்கள் மத்தியில் ஒரு வகையான அர்த்தம் உண்டு. ஒடுக்கும் மனோபாவம் உள்ளவர்களுக்கு மத்தியில் இன்னொரு வகையான அர்த்தம் உண்டு. இரண்டும் ஒன்றிற்கு ஒன்று முற்றிலும் முரணானவை. நேபாளத்திலே இந்திய – சீன அடக்குமுறைகளையும் மீறி வெற்றியடைந்த போராட்டத்திற்கு “ஒரு சர்வதேச சமூகத்தின்” ஆதரவு உண்டு. அதிலிருந்து முற்றாக எமது போராட்டத்தை அன்னியப்படுத்தி அழிப்பவர்களிடம் ஒப்படைத்த பெருமை புலம் பெயர் அரசியல் தலைமைகளையும், குறுகிய எல்லைக்குள் சிந்திக்கும் தேசியவாதிகளையுமே சாரும்.

அவர்கள் தமது தவறுகளைப் புரிந்து கொள்வதற்கான எந்த சமிக்ஞையும் தெரியவில்லை.

பிரித்தானியப் பாராளுமன்றக் கட்டடத்தில் ஒன்று கூடிய தமிழ் அமைப்புக்கள் அழிவை ஏற்படுத்திய அதே அரசியலை நாம் இன்னும் முன்னெடுப்போம் எனத் தெளிவாகக் கூறுகின்றன. பிரித்தானிய தமிழர் பேரவையோடு இணைந்த மூன்று அமைப்புக்கள் பிரதானமாக அங்கு கூடியிருந்தன. லிபரல் கட்சிக்கான தமிழர்கள், அடிப்படைவாதக் கட்சிக்கான தமிழர்கள், தொழிற்கட்சிக்கான தமிழர்கள் என்ற அமைப்புக்கள் ராஜபக்ச மீதான போர்க்குற்றத்தை வலியுற்த்த இந்த ஒன்றுகூடலை நிகழ்த்தின. இவர்களோடு தமிழ் சொலிடாரிட்டி என்ற அமைப்பும் இணைந்துகொண்டது.

ஈழப் போராட்டத்தை அழிவிற்கு உட்படுத்திய, போர்க்குற்றவாளிகளின் குகைக்குள் அமர்ந்துகொண்டு அவர்களின் ராஜபக்சவைத் தண்டிக்கவேண்டும் என்று அவர்கள் பேசுவது ஒரு புறத்தில் கேலிக்குரியது மட்டுமன்றி அப்பட்டமான காட்டிக்கொடுப்பு.

உலக முற்போக்கு அணிகளிமிருந்தும், தமிழ்ப் பேசும் மக்களின் நண்பர்களிடமிருந்தும், ஒடுக்கப்பட்ட மக்களின் நேசசக்திகளிடமிருந்தும் அவர்களை அன்னியப்படுத்தி உலக மக்களின் அரங்கில் அவர்களின் குரலைப் பலவீனப்படுத்துகின்றனர்.

சமீர் அமீன் மட்டுமல்ல உலக மக்கள் மத்தியில் உரிமைப் போருக்காகக் குரலெழுப்பும் நூற்றுக் கணக்கானோர் இனிமேலாவது இணைத்துக்கொள்ளப்பட வேண்டும்.

இன்று நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன, சிறையில் ஆயிரக்கணக்கானோர் அடைத்துவைத்துச் சித்திரவதை செய்யப்படுகின்றனர், மக்களின் அவலக் குரல்கள் அத்தனை திசைகளிலும் கேட்கின்றன.

இவற்றிற்கெல்லாம் மக்கள் தமக்குத் தெரிந்த வழிகளில் போராடுகிறார்கள். புலம் பெயர் தலமைகள் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் கூட்டம் நடத்த இலங்கை அழியப் போகிறது ராஜப்கச கூண்டில் அடைக்கப்படப் போகிறார் என போலி நம்பிக்கைகளை வழங்குகின்றனர்.

முப்பது வருடமாக வழங்கப்பட்ட அதே நம்பிக்கைகள். முள்ளி வாய்க்கால் அழிவின் பின்னர் இரண்டு வருடங்களாகப் பேசிய அதே மொழி.

இவற்றிற்கு அப்பாலான புதிய அரசியல் வழிமுறை இன்னும் தாமத்தப்படுத்தப்படலாகாது.

Exit mobile version