Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈழத் தமிழர்கள் – இந்தியாவின் நிலை : சபா நாவலன்

தெற்காசியாவின் தெற்கு மூலையில், நந்திகக்கடலோரம் பல்லாயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்ட வேளையில் முழு உலகமுமே செய்வதறியாது வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்தது. இந்திய இலங்கை அரசுகளின் கூட்டு இராணுவம் திட்டமிட்டு உருவாக்கிய மனிதப் பேரவலம் வெறுமனே இந்திய சீன அரசுகளுக்கிடேயேயான இராணுவப் பொருளாதாரப் போட்டி என்ற குறுகிய எல்லைக்குள் நிறுத்திக் கொள்வோமாயின் அதைவிட அறிவீனம் இருக்க முடியாது.

90 களின் பின்னர் உருவான புதிய உலக அரசியற் சூழல் சீனா இந்தியா ரஷ்யா அமரிக்கா என்ற நாடுகளிடையேயான முரண்பாடுகளிலேயே தங்கியிருப்பதைக் காணலாம். இலங்கையைப் பொறுத்தவரை இந்த நாடுகளின் அணிசேர்க்கைகளின் பரிசோதனைக் கூடம். இவற்றின் ஈர்ப்பு மையமும் கூட.

ஹம்ப்பாந்தோட்டையில் சீனாவின் துறைமுகம் 450 மில்லியன் டொலர் செலவில் உருவாக்கப்பட்ட போது முதலாவதாக அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த நாடு இந்தியா அல்ல. அமரிக்க புஷ் அதிகாரம் அதனை செயற்பாட்டுத் தளத்தில் எதிர்த்தது. ஹம்பாந்தோட்டையில் துறைமுகக் கட்டுமானத்திற்கான ஒபந்தம் உருவான நான்கு மாத எல்லைக்குள் அமரிக்க செனட் சபையில் இலங்கைக்கான ஆயுத ஏற்றுமதி அனுமதியை நிறுத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2008 ஆம் நிதியாண்டிற்கான முன்மொழிவாக இது கருதப்பட்டாலும் 01.07.2007 இலிருந்தே ஆயுத விற்பனைக்கு அமரிக்க நிறுவனங்களுக்கு அனுமதி நிறுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தெற்காசியாவில் அமரிக்காவின் அழிவுக்காலம் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்திலிருந்து தான் ஆரம்பமானது என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல.

இதே ஆண்டில் அமரிக்க பாதுகாப்பு செயலகத்திற்கு சின்டி கேர்ட்ஸ் என்ற இராணுவ ஆய்வாளர் ஒரு அறிக்கை சமர்ப்பிகிறார். இந்தியாவைச் சூழவர கடல் வழியூடாக எரிபொருளை கொண்டு செல்வதற்கு வசதியாக சீனா துறை முகங்களை உருவாக்கிக் கொள்கிறது என்ற அவரது ஆய்வு இராணுவ ஆய்வாளர்களுக்கு மத்தியில் முக்கியத்துவம் அடைகிறது.

இலங்கையில் ஹம்ம்பாந்தோட்டை, பாகிஸ்தான், மாலைதீவு, சோமாலியா போன்ற நாடுகளில் பில்லியன் டொலர் செலவில் உருவாக்கப்படும் துறைமுகங்கள் இந்தியாவின் பிராந்தியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் என அமரிக்க இராணுவ மையங்கள் இந்தியாவை நோக்கி அபாய சமிக்ஞை செய்கின்றன. இதையே சீன அரசின் முத்துமாலைத் திட்டம் என்று பெயரிட்டுக்கொள்கின்றனர்.

குறிப்பாக அமரிக்க இராணுவ ஆலோசனை மையம் இக்கருத்தை மேலும் பிரச்சாரம் மேற்கொள்கின்றது.  இதனையே சீன கற்கை மையத்தைச் சேர்ந்த பி.ராமன் போன்றோர் மேலும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்கின்றனர்.

அமரிக்கா இராணுவத் தளபாட அனுமதியை அமரிக்க ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்கு நிராகரிக்கத் தீர்மானம் நிறைவேற்றிய அதே வேளை தனது தெற்காசிய நண்பனாகக் கருதிக்கொண்ட இந்தியாவிடமிருந்து இலங்கையில் சீனத் துறைமுகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்பார்த்தது. இதன் பின்புலத்தில் தெற்காசியாவில் இந்திய – சீனப் போட்டி உருவாகும் என்பதையும்  அதனூடாக தனது ஆதிக்கத்தை மேலும்  வலுப்படுத்தலாம் என்பதையுமே அமரிக்கா தனது தந்திரோபயமாகக் கொண்டிருந்தது.

ஆக, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான முரண்பாட்டை கூர்மைப்படுத்தும் களமாக இலங்கையை அமரிக்கா கருதியிருந்தது.

ராஜீவ் – ஜெயவர்தன பாதுகாப்பு ஒபந்தத்தின் அடிப்படையிலும் இந்திய இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் இந்தியாவே இலங்கையில் அதிக இராணுவ உரிமை பெற்றிருந்தது. ஏனைய நாடுகளிடையேயான இராணுவ ஒத்துழைப்பு நடவடிக்கைகளில் கூட இந்தியா தலையிடும் உரிமை இவ்வொப்பந்தங்களில் வழங்கப்பட்டிருந்தன.

இவ்வாறான இலங்கை மீதான அனைத்து ஆதிக்கங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த இந்தியா ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு எதிரான எந்தச் செயற்பாட்டையும் இதுவரை மேற்கொண்டதில்லை.

90 களின் பின்னர் பாய்ச்சல் நிலையிலான மாற்றத்தை ஏற்படுத்திய சர்வதேசிய அரசியல் நகர்வுகள் உலகின் அணிசேர்க்கையை முற்றாக மாற்றிவிட்டிருந்தது. இரண்டாயிரத்தின் ஆரம்பத்தில் உச்ச நிலையை அடைந்த அமரிக்க – ஐரோப்பியப் பொருளாதார நெருக்கடி மீட்சியற்ற தொடர் நிகழ்வாகவே உணரப்பட்டது.

இதன் பிரதான வெளிப்பாடாக,  அமரிக்காவின் புதிய உலக ஒழுங்கு குறித்த தந்திரோபாயம் முற்றாக மாற்றமடைந்தது. ஐரோப்பாவும் இந்தப் புதிய யுக்தியோடு கைகோர்த்துக் கொண்டது. இரு துருவ வல்லரசுகள் என்ற உலக ஒழுங்கிலிருந்து பல துருவ வல்லரசுகள் உருவாவதற்கான சாத்தியப்பாட்டை அமரிக்கா சார்ந்த அணி ஊக்கப்படுத்தியது. இந்தியா, சீனா, ரஷ்யா என்ற மூன்று வல்லரசுகள் உருவாவதையும் அதன் தலைமை சக்தியாக அமரிக்கா தன்னை உயர்த்திக் கொள்வதையுமே தனது பிரதான தந்திரோபாயமாகக் கொண்டிருக்கிறது.

பலதுருவ வல்லரசுகளிடையேயான முரண்பாடுகளைக் கூர்மையடையச் செய்வதனூடாகத் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலை நாட்டுவதையே அமரிக்க தனது புதிய உலக ஒழுங்கு குறித்த திட்டமாக மேற்கொண்டது.

பலதுருவ வல்லரசுகளின் தலைமை சக்தியாக உருவாகும் அமரிக்காவின் அரசியல் பொருளாதாரக் கனவிற்கு முதலில் புதைகுழி வெட்டப்பட்டது இலங்கையில் தான்.

இலங்கைக்கான இராணுவ உதவிகளுக்கான அனுமதியை நிறுத்திக் கொள்வதாக அமரிக்க செனட்சபை தீர்மானித்த அதே வேளை 2003 ஆம் ஆண்டு ரஷ்யாவுடன் இலங்கை கைச்சாத்திட்ட இராணுவ ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கான தொழில் நுட்ப இராணுவத் தளபாடங்களை ரஷ்ய அரசு விற்பனை செய்ய ஆரம்பித்தது.

லெப்.கேணல் மெல்பென்ஸ்கோவ் டிசம்பர் 2007 இல் ரஷ்யாவுடனான இராணுவ ஒப்பந்தத்தைத் துரிதப்படுத்துவதற்காக இலங்கை செல்கிறார். செச்சினியாவின் கட்டளைத்துறைத் தளபதியாகச் செயற்பட்ட இவரின் வருகைக்குப் பின்னர் அமரிக்கா விற்பனை செய்வதற்கு மறுப்புத் தெரிவித்த, இந்திய அரசிடம் கொள்வனவு செய்துகொள்ள முடியாத அனைத்து இராணுவத்தளபாடங்களையும் ரஷ்யா விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகிறது.

இலங்கை மீதான இராணுவ ஆதிக்கத்திலிருந்து அமரிக்கா துடைத்தெறியப்பட்ட முதலாவது நிகழ்வு இது.

கனரக ஆயுத விற்பனையில் ரஷ்யா அமரிக்காவைப் பிரதியிடுவதற்கு இரண்டு மாதங்களின் முன்னர் இந்தியா சென்ற இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியுறவுத் துறைச் செயலர் ஷிவ் சங்கர் மேனனைச் சந்தித்து புலிகளுக்கு எதிரான யுத்தம் குறித்த பேச்சுக்களை மேற்கொள்கிறார்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவின் நிலையே உலக அரங்கில் அமரிக்காவின் ஆதிக்கத்தைத் தீர்மானிக்கும் பிரதான காரணியாக அமையும் என அமரிக்க உளவுத்துறை ஆலோசனை மையம் “எதிர்கால உலகின் படமாக்கல் 2025” என்ற அறிக்கையைச் அமரிக்க அரசிற்குச் சமர்ப்பிக்கிறது.

வன்னி யுத்தம் நடத்தப்படுவதற்கான அத்தனை ஆயத்தங்களையும் சீன ரஷ்ய உதவியோடு இந்தியா மேற்கொள்கிறது. அதே வேளை இந்திய சீன எல்லைகளில் தமக்கிடையே சச்சரவுகள் உருவாகின்றன என்று இவ்விரு அரசுகளும் அமரிக்காவிற்கும் உலகிற்கும் காட்டிக்கொள்கின்றன.

இந்திய அரசு திட்டமிட்டபடி இலங்கையில் யுத்ததை நிகழ்த்தி முடிக்கிறது. இந்திய அரசால் ரஷ்ய சீன அரசுகளின் துணையோடு தெற்காசியாவின் திட்டமிட்ட இனப்படுகொலை நிகழ்த்தி முடிக்கப்படுகிறது. இன்றைக்கு வரைக்கும் அமைரிக்கா போன்ற நாடுகளே இலங்கையில் நடந்தது போன்ற இனப்படுகொலைகளை நன்கு திட்டமிட்டு நிகழ்த்திவிட்டு தமது ஜனநாயக முகமூட்டிக்குள் ஒளிந்து கொன்டிருந்தன. இப்போது இந்தியாவும் கூட அதனோடு இணைந்து கொண்டுள்ளது. அது தான் ஆசியப் பொருளாதாரத்தின் கோர முகம்.

அமரிக்க அணியின் அரசியல் பொருளாதார இராணுவ ஆதிக்கத்திற்கு தெற்காசியாவில் ஆசியப் பொருளாதார நாடுகள் இணைந்து வழங்கிய மிகக் குறிக்கத்தக்க சாட்டையடிதான் வன்னிப் படுகொலைகளும் யுத்தமும்.

யுத்தத்தின் பின்னான காலம் என்பது இந்த முரண்பாடுகளையும் அரசியல் சதுரங்கத்தையும் இன்னும் தெளிவாகவே கோடிட்டுக் காட்டுகிறது.

இலங்கையின் அரசியல் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்ட அமரிக்கா அதன் புகழ்பெற்ற ராஜதந்திரியான பற்றீசியா பட்டனிஸை 2009 இல் இலங்கைக்கான தூதுவராக அமரிக்க அரசு நியமித்தது.

சர்வதேச வல்லரசுப் போட்டியின் பிரதான ஈர்ப்பு மையமாக இலங்கை சிக்குண்டுள்ளது. இன்றைக்கு இலங்கையில் தனது ஆதிக்கத்தை மீள்கட்டமைப்பதற்காக அமரிக்காவிற்கு இரண்டு அடிப்படையான துருப்புச் சீட்டுகள் உள்ளன. முதலாவதாக மனித உரிமை மீறல் இரண்டாவதாக ஜீ.எஸ்.பி பிளஸ். இந்த இரண்டையும் எதிர்கொள்ள இலங்கை அரசு இந்தியப் பின்பலத்தில் தயாராகவே உள்ளது.

ராஜபக்ச ஜீ.எஸ்.பி பிளஸ் நிபந்தனைகளை  முற்றாக நிராகரித்துவிட்டார்.   ஐ.நா சபைகளின் பிரதிநிதிகள் இலங்கை வருவதை இந்தியா அணிசேரா நாடுகளின் குழுவுடன் இனைந்து எதிர்த்துள்ளது.  சீனா  மற்றும் ரஷ்யா  போன்ற நாடுகள் தனித்தனியாக ஐ.நா விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்திய ஜனநாயகமும் அதன் புதிய பொருளாதாரக் கட்டமைப்பும் எதிர்ப்பியக்கங்களையும், போராட்டங்களையும் அடக்கியொடுக்குவதிலிருந்தே உருவாக முடியும். அமரிக்க அரசின் ஆதிக்கமும் கூட மனித உரிமை குறித்துப் பேசுவதிலிருந்தே உருவாக முடியும். இந்தியாவின் மிகப்பெரிய சவால் வேலையற்ற மக்கள் பகுதியும், உரிமைப் போராட்டங்களும் பயங்கரவாதமுமே என்கிறது அமரிக்க உளவுத்துறை ஆலோசனை மையம். ஆக, இந்திய அரசும் அதன் மக்கள் மீதான தாக்குதல்களும் ஒரு புறத்தில் அமரிக்க ஆதிக்க்கத்திற்குத் துருப்புச் சீட்டாகப் பயன்படும் என்பது தவிர இந்திய அரச அதிகாரத்திற்கு எதிரான போராட்டம் என்பது இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களின் போரட்டத்தோடு இரண்டறக் கலந்துள்ளது.

அமரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதன் முற்போக்கு பண்பியல் ஆசியப் பொருளாதாரத்தின் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளாமல் நிறைவனதாக அமையாது.

இவ்வாறான ஒரு புதிய அரசியல் பகைப்புலத்தில் இந்திய அரசை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாற்றமுடியும் எனக் கருதினால் அது அப்பாவித்தனமானது. இந்திய – சீன முரண்பாட்டை நாம் கையாளமுடியும் என்று கருதினால் அது கேலிகூத்தானது. அவ்வாறான ஒரு முரண்பாடென்பதே இந்த இரு நாடுகளிடையே  இலங்கை விவகாரத்தில்  மட்டுமல்ல  தென்னாசிய  அரசியல்  சூழலில் கூடக்  காணப்படவில்லை.  ஆசியப் பொருளாதாரத்தின் கோரமுகத்திற்கு எதிராக மக்கள் சார்ந்து நம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதே இன்றையை சமூகப் பிரக்ஞை கொண்ட ஒவ்வொரு தனிமனிதனதும் கடமை.

Exit mobile version