2009ம் ஆண்டில் உலகத்தின் அனைத்து வல்லரசுகளும் ஏக போக நாடுகளும் ஒருங்கிணைந்து மக்களை துடிக்கத் துடிக்கக் கொன்று போட்டுவிட்டு போர்க்குற்ற விசாரணை நடத்தப்போவதாக நான்கு ஆண்டுகள் வரை எதிர்ப்பு சக்திகளை கட்டிப்ப்போட்டு வைத்திருந்தன. இந்தியாவும், இலங்கைப் பேரினவாதிகளும் இனச் சுத்திகரிப்பை தொடர்ந்தவண்ணம் இருந்தனர்.
இந்த இடைவெளிக்குள் புதிதாகப் பல எதிர்ப்புரட்சியாளர்கள் முளைத்தெழுந்தனர். ஒரு புறத்தில் சமூகத்தை வழி நடத்தப் போகிறோம் என்ற மேட்டுக்குடி புத்திசீவிகள், குறுகிய தேசிய வாதிகள், தன்னார்வ சேவை நிறுவனங்கள் என்று ஒவ்வோன்றாக மக்களைச் சூறையாட ஆரம்பித்திருந்தன.
2010 முடிவடையும் போது பலர் கடந்த வரலாற்றை எழுத ஆரம்பித்திருந்தனர். இளைஞர்களான நாங்களோ, கடந்துபோன வரலாற்றை அனுபபித்திருந்தோம். எமக்கு வரலாறு என்பதை அழிக்கப்படும் மக்களின் கூக்குரல்கள் கூடக் கற்றுத்தந்தன.
அரசியல் ஏதுமற்ற இராணுவக் குழுவான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அரசியல் தலைமை வழங்கியவர்களோ அயோக்கியர்கள். அமரிக்காவையும், இந்தியாவையும், சீனாவையும் இன்னும் அத்தனை அழிவுசக்திகளையும் சார்ந்திருந்த வியாபாரிகள். மக்களைச் சார்ந்திருக்கவில்லை. மக்களிலிருந்த தனிமைப்படுதப்பட்டு உருவாக்கப்பட்ட விடுதலைப் புலிகளை மக்களுக்கு எதிராக இவர்கள் பயன்படுத்திக்கொண்டனர். இறுதியில் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் கூட்டத்தோடு புலிகள் அழிந்து சிதைந்து போயினர்.
இவைகள் எமக்கு அனுபவங்களாயின. ஆயிரம் உண்மைகளைக் கற்றுக்கொண்டோம். அப்போது மக்களை அணிதிரட்டுதல் எவ்வாறு என்பது பெரும் சிக்கலான பணியாக எமக்கு முன்னால் இருந்தது.
மக்களின் நாளாந்த வாழ்வின் துன்பங்களை ஒருங்கிணைத்தால் மட்டுமே அரசியலில் மக்கள் நேரடியாகப் பங்காற்ற வழி பிறக்கும் என்ற முடிவிற்கு வருகிறோம். எம்முன்னே நீண்டு கிடந்த வெற்றி பெற்ற போராட்டங்களின் அனுபவங்களைக் கற்றுக்கொள்கிறோம்.
ஆசிரியர்களின் வாழ்வாதரப் பிரச்சனை, மாணவர்களின் சிக்கல்கள், நாளாந்தம் கூலிக்கு வேலைசெய்கின்ற விவசாயிகளின் வாழ்வு, சிறு நிலங்களை உடமையாக வைத்திருந்த விவசாயிகளின் நிலமை, புதிதாக உருவாகியிருந்த தொழிற்சாலைகளின் தொழிலார்கள் குறித்த பிரச்சனைகள் என்ற வேறுபட்ட பொருளாதார நிலைமைகளில் வாழும் மக்கள் பிரிவுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கிறோம். இவர்கள அனைவருக்கும் பொதுவான ஒடுக்கு முறையாக சிறீலங்கா பாசிச பேரினவாத அரசின் தேசிய இன ஒடுக்கு முறை காணப்படுவதை பிரதானமான ஒன்றாக நாம் முடிவெடுக்கிறோம்.
இந்த மக்கள் பிரிவுகளை அவர்களது நாளாந்த வாழ்வாதாரப் பிரச்சனைகளை முன்வைத்து அணிதிரட்ட வேண்டும் என்ற முடிவிற்கு வருகிறோம். இந்தக் கருத்தின் அடிப்படையோடு இணைந்தவர்கள் பல்வேறு விவாதங்களை பல்வேறு அரசியல் நிலைகளின் நடத்துகிறோம்.
2012 ஆம் ஆண்டின் இறுதியில் நாம் இந்த நோக்கங்களுக்காகக் கட்சி ஒன்றை ஆரம்பிபதாக இணைந்துகொள்கிறோம்.
கட்சியின் நேரடியான இன்னொரு பகுதியாக தேசிய விடுதலை இயக்கம் ஒன்றையும் உருவாக்கிக் கொள்கிறோம்.
இதன் பின்னதாக கட்சியால் தலைமைதாங்கவல்ல வெகுஜன முன்னணியை உருவாக்குகின்றோம்.
இந்த வெகுஜன முன்னணி வறிய விவசாயிகள் சங்கத்தையும், ஆசிரிய சங்கத்தையு, மாணவர் அமைப்புக்களையும், தொழிலாளர் அமைப்புக்களையும், பெண்கள் அமைப்பையும், வெவ்வேறு மக்கள் நலனை முன்நிறுத்திய அமைப்புக்களையும் கொண்டதாக அமைகிறது.
கட்சியும், தேசிய விடுதலை இயக்கமும் தலைமறைவு இயக்கங்கள் என்பதால் அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. வெகுஜன அமைப்புக்களோ கட்சியின் நேரடியான கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பதால் வெளிப்படையாகவே, பெரும்பாலும் பொருளாதார நலன்களை முன்வைத்தே உருவாக்கப்பட்டிருந்தது.
கிராமங்கள் தோறும் நிர்வாக அலகுகளை உருவாக்கும் வேலைத் திட்டத்தை முன்வைத்திருந்ததால் வெகுஜன அமைப்புக்களை அங்கெல்லாம் உருவாக்குவது இலகுபடுத்தப்பட்டது.
கிராமங்களில் பஞ்சாயத்து அமைப்புப் போன்று மக்கள் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்வதற்கான அடிப்படை அமைப்புப் போன்று நிர்வாக அலகுகள் உருவாக்கப்பட்டதால் யாரும் சந்தேகம் கொள்ளவில்லை. 2014 ஆம் ஆண்டளவில் வட கிழக்கு முழுவதும் இந்த நிர்வாக அமைப்புக்கள் உருவாகிவிட்டன. இவ்வமைப்புக்களிடையே தொடர்ச்சியான தொடர்புகள் இருந்தன. ஒவ்வொரு பத்து அல்லது பதினைத்து அமைப்புக்கும் ஒரு தலைமைக் குழு இருந்தது.
இந்தப் பஞ்சாயத்துப் போன்ற அமைப்பே கிராமங்களில் ஏனைய வெகுஜன அமைப்புக்களை உருவாக்க வழிசெய்திருந்தது. 2015ம் ஆண்டளவில் வட-கிழக்கில் பொதுவான அனைத்துப் பிரதேசங்களிலும் வெகுஜன அமைப்புக்கள் உருவாகிவிட்டன.
2015 ஆம் ஆண்டு ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரிப் போராட்டங்களை நடத்த ஆரம்பித்தனர். இந்தக் கோரிக்கை சிங்கள, முஸ்லீம், மலையக ஆசிரியர்களையும் கவர்ந்ததால் அவர்களும் ஆதரவளித்தனர். அவர்களின் போராட்டங்களிலிருந்து இனம் கண்டுகொண்ட சில மலையக, முஸ்லீம், சிங்கள தோழர்களும் கட்சிக்குள் உள்வாங்கப்படுகின்றனர்.
முஸ்லீம்கள் மத்தியிலும், மலையக மக்கள் மத்தியிலும் பிரிந்துசெல்லும் உரிமைக்காகப் போராடும் தேசிய விடுதலை இயக்கங்கள் உருவாகின்றன. கட்சியும் தேசிய விடுதலை இயக்கமும் இன்னமும் தலைமறைவு அமைப்புகளாகத் தான் காணப்பட்டன.
2017 ஆம் ஆண்டில் சிங்களப் பகுதிகள், மலையகம் வட-கிழக்கு என்று அனைத்து இலங்கையிலும் நிர்வாக அமைப்புக்களும் வெகுஜன அமைப்புக்களும் உருவாகிவிட்டன. அதே ஆண்டின் இறுதியில் கட்சி ஆயிரத்திற்கும் மேலான தமிழ்ப் பேசும் மற்றும் சிங்களத் தோழர்களைக் கொண்ட கட்சிக் கூட்டத்தை அறிவிக்கிறது. வெகுஜன அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அங்கு வந்திருந்தனர். மத்திய குழு தெரிவுசெய்யப்பட்டு கட்சி வெளிப்படையாக அறிவிக்கப்படுகின்றது. தேசிய விடுதலை இயக்கங்கள் இன்னும் தலைமறைவு அமைப்புக்களே.
2018ம் ஆண்டு மலையகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் இராணுவம் குவிக்கப்பட்டு மக்கள் மீது இராணுவ ஒடுக்குமுறை ஏவிவிடப்படுகிறது. அதே வேளை வட கிழக்கில் மாணவர் போராட்டங்களும், தொழிலாளர் போராட்டங்களும் உருவாகின்றன. சிங்களப் பகுதிகளில் இவற்றிற்கு ஆதரவான போராட்டங்கள் ஏற்படுகின்றன.
இலங்கையில் ஒவ்வோர் சந்தியிலும் இராணுவமும் போலீசும் குவிக்கப்படுகின்றன.
மேட்டுகுடித் தமிழர்களும், சிங்களவர்களும் ஓரணியில் இணைந்து கொழும்பின் அணுக முடியாத பகுதிகளில் குடியமர்ந்து கொள்கின்றனர். பலர் வெளி நாடுகளுக்குத் தப்பியோடிவிட்டனர். பெரும்பான்மையான ஏழை மக்களின் பிரதிநிதிகளே கட்சியைப் பிரதிபலித்தனர்.
இந்தியாவிலும் ஏனைய நாடுகளிலுன் நாம் தொடர்பிலிருந்த அனைத்துப் போராட்ட அமைப்புக்களும் போராட ஆரம்பிக்கின்றன. இந்திய அரசு திணறிப் போகின்ற அளவிற்குப் பல போராட்டங்கள் உருவாகின்றன.
இலங்கை இராணுவ ஒடுக்குமுறைக்கு எதிராக அவர்களின் போராட்டங்களால் எமது போராட்டம் வலிமை பெறுகிறது.
வட-கிழக்கிலும், மலையகத்திலும், முஸ்லீம் மக்கள் வாழும் பகுதிகளிலும் இனவாதத் தாக்குதல்களை இலங்கை அரசு முடுக்கி விடுகின்றது. இதற்கு எதிரான தற்காப்பு யுத்தம் ஆயுதமின்றி நடத்தப்பட முடியாது என்ற முடிவிற்கு மக்கள் வருகின்றனர்.
நிர்வாக அமைப்புக்கள் ஆயுதப் பயிற்சிக்கு ஆயத்தங்களை மேற்கொள்ளுகின்றது. கட்சியின் தேசிய விடுதலை இயக்கத்திற்கான ஆயுதக் குழு மலையகத்திலும், வட-கிழக்கிலும் மக்களைத் தாக்கவரும் இராணுவத்திற்கு எதிரான தற்காப்பு யுத்ததில் ஈடுபடுகின்றன.
இராணுவம் மக்களைத் தாக்க முற்படும் ஒவ்வோர் தடவையும் தெற்கில் போராட்டங்கள் உருவாகின்றன. இலங்கைப் பாதுகாப்புப் படைகளுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலைக்கு இலங்கை அரசு தள்ளப்படுகின்றது. பாதுகாப்புப் படையில் பலர் எமது அணிகளோடு இணைந்து கொள்கின்றனர்.
சிங்களப் பகுதிகள் முழுவதும் வேலை நிறுத்தங்களாலும், போராட்டங்களாலும் செயலிழந்திருந்த 20221ம் ஆண்டின் இறுதியில் பலாலி இராணுவ முகாமையும், தியத்தலாவ இராணுவ முகாமையும் எதிர்பாராத வகையில் தேசிய விடுதலை இயக்கத்தின் துணையோடு மக்கள் கையகப்படுத்திக் கொள்கின்றனர்.
செல்வாக்கிழந்த இலங்கை அரசு தேர்தலை நடத்தாமல் பின்போடுகின்றது. இந்தியாவிலும் உலகெங்கும் போராட்டங்கள் உருவாக வட கிழக்கிலிருந்தும் மலையகத்திலிருந்தும் இராணுவம் வெளியேறுகின்றது. ஒவ்வொரு தேசிய இனங்களுக்குமான தேசிய அரசுகள் உருவாக்கப்படுகின்றன. மலையக, முஸ்லீம், வட-கிழக்குத் தமிழர்களின் தனி அரசுகள் இணைந்து கூட்டாட்சி ஒன்றை நிறுவிக் கொள்கின்றன. தெற்கில் எமக்காகப் போராடிய சிங்கள மக்கள் வெற்றியை நோக்கிப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். 2025ம் ஆண்டளவில், இன்னும் மூன்று வருடங்களுக்கு உள்ளாக மக்கள் அரசு அங்கும் உருவாகும் அவர்களும் எமது கூட்டாச்சியில் இணைந்து ஒரு பொதுவான அரசு உருவாகும். அங்கு ஒரு தேசிய இனம் பிரிந்துபோக நினைத்தால் கூட்டாட்சியிலுருந்து விலகிக்கொள்ளல்லாம்.
ஆட்சியிலிருக்கும் நாம் அனைவருமே 40 வயதிற்குக் குறைந்த இளஞர்கள். ஆயிரம் அனுபவங்களோடு வெற்றி கண்டிருக்கிறோம்.
இனிமேல் சிங்கள மக்களும் ஏன் தெற்காசிய மக்களும் ஒடுக்கு முறையிலுருந்து விடுதலை பெறும் காலம் தொலைவில் இல்லை.
எவ்வாறு சர்வதேச அழுத்தங்களை உருவாக்கினோம், உலகம் முழுவதும் எவ்வாறு எமது ஆதரவுத்தளத்தைக் கட்டமைத்தோம் என்ற பல விபரங்கள் இந்தச் சிறு குறிப்பில் தவிர்க்கப்பட்டுள்ளன. அடுத்த சந்தர்ப்பத்தில் அவற்றை விபரிக்க முனைகிறேன்.
(யாவும் கற்பனை)