Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈழத்து –தமிழகத்துக் கலைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் : சேனன்

40th Ilakkiyach Chanthippu -London - 6th, 7th April 201340வது இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடத்த வேண்டும் என்று தொடங்கிய இலங்கை அரசு சார்ந்து இயங்குபவர்களின் அடாவடித்தனம் இன்று ஈழத்து எழுத்தாளர்கள் மத்தியில் பாரிய பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலைமையில் இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடத்தக் கூடாது என்று வாதிட்டவர்கள் 40வது இலக்கியச் சந்திப்பை லண்டனில் நடத்தினர். இதற்கான எதிர்ப்புடன் கலந்துகொண்ட அரசு சார் இலக்கியவாதிகள் அடுத்த சந்திப்பை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்காக பறித்துச் சென்றுள்ளனர்.

இவர்களின் நோக்கத்தையும் அவர்தம் அரசியற் பின்னணியையும் அனைத்து முற்போக்கு எழுத்தாளர்களும் கண்டிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஈழம் இன்றிருக்கும் நிலையில் அரசியலுக்கு அப்பாற்பட்ட இலக்கிய‌ம் என்று பேசுவது தவறு. சுயநலன்களுக்கும் அப்பாலான ஒடுக்கப்பட்டோர் அரசியல் சார்ந்து சிந்தித்து எத்தகைய அரசியலைப் பலப்படுத்துகிறோம், எதைப் பலவீனப்படுத்துகிறோம் என்ற முடிவை நாம் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தயவு செய்து யாழ்ப்பாணத்தில் நடக்க இருக்கும் ‘புலம்பெயர் இலக்கியச் சந்திப்புக்கு’ உங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். நடத்துவோரின் அரசியலைக் கண்டிக்க வேண்டும்.

1.
ஈழத்தில் இலக்கியக் கூட்டம் போட அங்கிருக்கும் இலக்கியவாதிகளின் உரிமையை யாரும் கேள்வி கேட்க முடியாது. எல்லாப் பிரச்சினைகளுக்குள்ளும், தடைகளுக்குள்ளும் அங்கு பத்திரிகைகள் வருகின்றன; கூட்டங்கள் நடக்கிறது. பல காத்திரமான எழுத்துக்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

2.
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்குச் சென்று கூட்டம் போடலாம் என்பதையும் மறுக்கவில்லை. அப்படி ஒரு கூட்டத்தில் அதை நடத்துபவர்கள் தாம் ‘அதிகாரத்துக்கு எதிர்’, ‘அரசுக்கு கண்டணம்’ என்றெல்லாம் கூடப் பேசலாம். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூட பாராளுமன்றத்தில் வெளுத்து வாங்கியிருந்ததை அறிவோம். பல்வேறு எழுத்தாளர்கள் தமது கடும் எதிர்ப்பைப் பதிந்துதான் வருகிறார்கள்.

3.
எதிர்ப்பரசியலுக்குள் இருந்து முளைத்த வரலாறு இலக்கியச் சந்திப்புக்குண்டு. கடும் எதிர்ப்பிலக்கியம் செய்யும் கலைஞர்களின் தளமாக இருக்கவேண்டும் – பல்வேறு வகையில் ஒடுக்குதலுக்கு உள்ளான கலைஞர்கள் ஒன்றுகூடும் இடமாக இருக்க வேண்டும் – ஒடுக்கப்பட்டோர் அரசியலையும் கலையையும் பேசும் தளமாக இருக்க வேண்டும் – கருத்துச் சுதந்திரத்தைப் பலப்படுத்தவேண்டும் ‍ போன்று பல்வேறு அடிப்படைக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட, பல்வேறு கலைஞர்கள் இச்சந்திப்புடன் நீண்டகால உறவு கொண்டவர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். இவர்களுள் சுசீந்திரன், லட்சுமி, ரஞ்சி, உமா போன்றவர்கள் லண்டன் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்கள்.

4.

இருப்பினும் பல ஆண்டுகளாக இலக்கியச் சந்திப்பின்மேல் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. பல கலைஞர்கள் சந்திப்பில் நின்று விலகி நிற்க இது காரணமாக இருந்தது. கிழக்கின் உதயம் என்ற பெயரில் கருணா, பிள்ளையான் முதலான அதிகார சக்திகளின் பிரச்சாரக்கூடமாக இலக்கியச் சந்திப்பை மாற்ற முனைந்தனர் சிலர். டக்ள‌ஸ் தேவானந்தா, சிறிடெலோ என்று அரச சார்புக்குழுக்களின் ஆதரவாளர்கள் அல்லது அங்கத்தவர்களின் ஆதிக்கம் வளர ஆரம்பித்தது. ‘மாற்று’ அரசியல் என்ற போர்வையில் கொலைகார அரசியலுக்கு புலத்தில் தளம் தேடியோர் இலக்கியச் சந்திப்பை நோக்கித் திரும்பினர் என்று கூறுவது மிகையில்லை. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் சந்திப்போடு சம்மந்தப்பட்டோர் பலர் இந்த நடவடிக்கைகளைப் பொறுத்துக்கொண்டதை நான் உட்பட பலர் கண்டித்திருக்கிறோம். அவர்களுக்கு கருத்து சொல்ல இன்று பல தளங்கள் உண்டு. இலக்கியச் சந்திப்பிலும் அவர்கள் கலந்து கொள்ளலாம்; கருத்துச் சொல்லலாம். ஆனால் அவர்கள் தமது பிரச்சார நடவடிக்கைக்கு தளம் தேடுவதற்கு துணை போகக்கூடாது என்ற அடிப்படையில் நாம் இந்த விமர்சனங்களைச் செய்திருந்தோம். ஆனால் அவர்களின் ஆதிக்கம் வளர்வது தவிர்க்கப்படவில்லை. அராஜக அரசு ஆதரவாளர்கள் தமது அரசியல் நலன்களுக்காக இலக்கியச் சந்திப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள திட்டவட்டமான நகர்தலைச் செய்தது இன்று பல கலைஞர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது.

5.

இலங்கை கலைஞர்கள் கேட்டா அங்கு சந்திப்பு நிகழ்கிறது? இல்லை.

புலத்தில் நடந்துவரும் இலக்கியச் சந்திப்பை இலங்கைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை இலங்கைக்குள் இருந்து எழவில்லை. அது பிரான்ஸ் கலைஞர்களிடம் இருந்துதான் எழுந்தது. அடுத்த சந்திப்பை இலங்கையில் நடத்துவோம் என்பது பிரான்ஸ் வாழ் தேவதாசிடம் இருந்து வந்த கோரிக்கை. ‘அவங்கள் அங்க பொன்னாடை போர்த்தித் திரியிறாங்கள். அவங்களுக்கொருக்கா நடத்திக் காட்டோனும்’ என்றும் பேசியதாகத் தெரிய வருகிறது. இதன் தொடர்ச்சியாக இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலும் இருக்கும் எழுத்தாளர்களைத் தாம் தொடர்பு கொண்டு அங்கு இச்சந்திப்பை நடத்த ஏற்பாடு செய்ததை தேவதாசும் அசுராவும் லண்டன் சந்திப்பில் ஏற்றுக்கொண்டார்கள்.

6.

லண்டன் சந்திப்பின்மேல் அவதூறு

‘இலங்கை இலக்கியச் சந்திப்பின் ஊடக அறிக்கை’ என்ற தலையங்கத்தோடு ஒரு அறிக்கை மார்ச் 28ல் தேவதாசின் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டது. அது 40வது இலக்கியச் சந்திப்பின்மேல் பின்வரும் தாக்குதல்களைச் செய்தது.

‘மூன்றாவதாக ஒரு பொது அரங்கை நிர்மானித்து அதன் உச்சியில் பௌசரும் கிருஸ்ண‌ராஜாவும் அமர்ந்திருந்து தீர்ப்பு வழங்க எத்தனிக்கும் அவல நாடகத்தை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.” என அறிவித்துக்கொண்டது அவ்வறிக்கை.

‘லண்டன் இலக்கியச் சந்திப்பின் செயல் வெறுக்கத்தக்கது.’ என்று சாடியது அறிக்கை.

தாம் இலங்கையில் சந்திப்பு நடத்துவது மறுக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து யூலையில் சந்திப்பை நடத்திக் காட்டுவோம் என்றும் அவ்வாறான ‘பிளவு’ ஏற்பட்டால் அதற்கும் நீங்களே பொறுப்பு என்றும் மிரட்டியிருந்தது. இலக்கியச் சந்திப்பை உடைத்தாவது தாம் இதைச் சாதிப்போம் என்ற அவர்களின் அடாவடித்தனத்தையும் அவர்தம் மொழியில் இருக்கும் அதிகாரத்தையும் இவ்வறிக்கையை படிப்பவர்கள் தெரிந்து கொள்ள முடியும். தவிர இந்த அறிக்கையை ஈழத்து எழுத்தாளர்களில் எத்தனைபேர் ஏற்றுக் கொள்கிறார்கள் என்ற கேள்வி எமக்குண்டு. ஆக இவ்வறிக்கையின் தலையங்கத்தைப் பொய்ப்பாவனையாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

இது தவிர இணையத்தில் எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் மேல் கேவலமான அவதூறுகள் தூவிவிடப்பட்டுக் கொண்டிருந்தது.

7.

லண்டனில் நடந்தது என்ன?

சுசீந்திரன், ரஞ்சி. லட்சுமி, ராஜா, பௌசர் நான் உட்பட பலர் அடுத்த இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடத்துவதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தோம். தேவதாஸ் முதற்கொண்டு பலர் இந்தச் சந்திப்பை புறக்கணிக்க நின்றனர். அவர்களை வரவழைத்தது தான்தான் என்ற ராகவன் வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்கலாம் என்றார். நாடுகடந்த தமிழீழம் மாதிரி வாக்கெடுப்பு நடத்தி சனநாயகம் பேசுவதெல்லாம் விசர்க்கதை என்றவர்கள் எல்லாம் விழுந்தடித்துக் கைதூக்கினார்கள். நாங்கள்தான் பெரும்பான்மை என்று ஒருவர் சத்தமாகச் சொல்லிக்கொண்டார். இந்த விசர்த்தனமான சனநாயகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த பிறகு சந்திப்புக்குழு கூடி முடிவெடுப்பதாக அறிவிக்கப்பட்டது. அனைத்து அதிகாரங்களுக்கும் எதிராக நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் அடுத்த சந்திப்பை இவர்கள் நடத்தலாம் என்று முடிவை பௌசர் அறிவித்தார். அடுத்த சந்திப்பை எங்கு நடத்துவது என்பதையும் இங்கு தீர்மானிக்க வேண்டும் என்றார். ஜேர்மனியில் நடத்துங்கள் என்று சொல்லி கொதிப்பில் நின்ற சுசீந்திரனை வளைச்சுப்போடும் முயற்சி நிகழ்ந்தது. நீங்கள் புலமபெயர் இலக்கியச் சந்திப்பை இச்சமயத்தில் இலங்கைக்கு எடுத்துச் செல்வது சந்திப்பை உடைப்பதற்குச் சமன் என்று அவர்கள் முன்பு வைத்த மிரட்டலை அவர்களுக்கு நாம் ஞாபகப்படுத்த வேண்டியிருந்தது. முடிவை அறிவித்த போதும் ராஜா, பௌசர் உட்பட பலரும் தமது எதிர்ப்பை பதிவு செய்தனர். ‘வந்திட்டான் உடைக்கிறதுக்கு’ என்று என்மேலும் அனாவசியமாக தாக்குதல் நடத்தினர். எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் விட்டுக்கொடுக்கவில்லை. தமது எதிர்ப்பை வரலாற்றில் பதிய வேண்டிய முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்கள் உறுதியாக இருந்தது தெரிந்தது. சந்திப்பு அரசுசார் கலைஞர்கள் – அரச எதிர்ப்புக் கலைஞர்கள் என்று பிரிந்தது என்று சொல்வது மிகையில்லை.

ஏற்கனவே அரசுசார் ‘கலைஞர்கள்’ அள்ளி எறிந்து கொண்டிருந்த பொய்கள், புரட்டுகள், அடாவடிக் குற்றச் சாட்டுகள் என்பவற்றை பலரும் வரிசைப்படுத்தியிருந்தனர். கேவலமாக அரச எதிர்ப்பாளர்களை அரசுக்கு அடையாளம் காட்டிக்கொடுத்தது தொடங்கி காசுவாங்குவது ஈறாக கேவலமான முறையில்தான் இந்த அரச ஆதரவாளர்கள் தொடர்ந்து இயங்கி வந்தனர் என்பதை யமுனா ராஜேந்திரன், பௌசர், ரஞ்சி ஆகியோர் சுட்டிக்காட்டியிருந்தனர். இதற்காக தேவதாஸ் ‘பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும்’ என்று பாலா பலதடவை வற்புறுத்தி அவரை மன்னிப்புக் கேட்க வைத்தார். இவர்கள் எல்லாரும் வெள்ளாள சாதி அரசியல் செய்பவர்கள் என்ற குண்டைத் தூக்கி எறிந்தார் கீரன். சாதி வெறி இப்படியும் கிளம்பும் என்ற உய்தறிவின்றி ரஞ்சி கலங்கிப்போய் நின்றதையும் அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையும் அனைவரும் பார்க்கக்கூடியதாக இருந்தது. தலித் என்ற சொல்லை எப்ப கீரன் கண்டுபிடித்தவர் என்று சிலர் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டனர்.

அரச எதிர்ப்புக் கலைஞர்கள் மேல் குற்றச் சாட்டுகள் வாரிக்கொட்டப்பட்டது. உரத்து நடந்த உரையாடலில் ஒவ்வொருவரையும் சுற்றி நின்று விதண்டாவாதத்தை ஏற்கும் படி அழுத்தம் கொடுக்கப்பட்டது. படங்கள் எடுக்கப்பட்டது. அதிகாரங்களுக்கு எதிராக என்று தொடங்கி இலக்கிய சந்திப்பு தளம் எவ்வாறு அதிகாரங்கள் கொக்கரிக்கும் தளமாக சிலரால் மாற்றப்பட்டிருக்கிறது என்பதை தெளிவாக பார்க்கக்கூடியதாக இருந்தது. அவர்கள் வெற்றிபெற்றதாக நினைத்துக்கொண்டு சென்றார்கள். தனி ஒரு மனிதன் இருக்கும் வரையும் உங்களின் வெற்றி வெற்றியல்ல என்று மற்றவர்கள் துக்கத்துடன் கலைந்தார்கள்.

8.

யாரிந்த அரச ஆதரவாளர்கள்?

தேவதாஸ், அசுரா போன்றவர்கள் தலித்துகளின் பெயரால் மகிந்த அரசின் புகழ் பாடுபவர்கள். யுத்தத்தை நிறுத்திய செயலுக்காக மகிந்த அரசுக்கு பகிரங்கமாக நன்றி தெரிவித்தவர்கள். மகிந்த அரசை முற்றாக எதிர்ப்பது தவறு என்று பகிரங்கமாக பேசி வருபவர்கள். இவர்களுக்காவது எதிர்ப்பரசியல் செய்த பழைய வரலாறுண்டு. புலி எதிர்ப்பு தவிர வேறு அரசியல் தெரியாதவர் ராகவன். புலி எதிர்ப்பு ஒன்றை மட்டுமே அரசியலாக வைத்து இயங்கும் ராகவன், நிர்மலா போன்றவர்கள் அண்மைக்காலமாகத்தான் சந்திப்புடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டவர்கள். தம்மை எதிர்ப்போரை கேவ‌லமான முறையில் மட்டம் தட்டி மற்றையவர்களையும் அவர்களுக்கு எதிராக திருப்பி உடைக்கும் வேலிச் சண்டை அரசியல்தான் இவர்கள் அரசியல். இவனுக்கென்ன தெரியும் என்று தன்னை நிர்மலா மட்டம் தட்டியதை ராஜா பதிவு செய்திருந்தார்.

இவர்கள் புலி எதிர்ப்பு என்ற ஒன்றை முன்வைத்தே தமது முடிவுகளுக்கு தாவுகிறார்கள். வன்னி மவுஸ் என்ற குறுந்திரைப்படம் விம்பம் விருதுக்கு தகுதியானதாக இருந்தபோதும் அந்தப்படம் ‘புலிப்பொடியனால்’ எடுக்கப்பட்டது என்பதால் அதற்கு விருது கொடுக்கப்படக்கூடாது என்று ராகவன் வாதித்ததை ராஜா பதிவு செய்திருந்தார். இவர்களின் இந்த வக்கிர அரசியல் லண்டன் வாழ் கலைஞர்கள் பலருக்கும் தெரிந்ததே. புலிகள் கொல்லப்பட்டது பிரச்சினையில்லை; மக்கள் கொல்லப்பட்டதுதான் பிரச்சினை என்று கொலைக்கு வக்கால‌த்து வாங்குபவர் சோபாசக்தி. இயக்கத்தில் இருந்த ஆயிரக்கணக்கான தலித்துகள், பெண்கள், குழந்தைகள் இலங்கை இராணுவத்தால் வேட்டையாடப்பட்டதை அது பிரச்சினையில்லை என்று ஒதுக்கிக்கொண்டு தலித் அரசியல் முத்திரை கேட்டு அலையும் கேவலத்தை என்ன சொல்வது? இந்த அரசுசார் தரப்பினரின் செயற்பாடுகள் நன்கு பதியப்பட்டிருக்கிறது.

9.

அதிகார‌த்தை எதிர்ப்பார்களா?

முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைக்கு எதிராகப் பேசிய தோழர் தான் லண்டனிற் பேசுவதைக்கூட அளந்துதான் பேசவேண்டியிருக்கு என்று பச்சையாக போட்டுடைத்திருந்தார். இதே கூட்டத்திற் கலந்துகொண்டிருந்த ஒருவர் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட கிராமங்களை முன்னேற்றுவதற்கு தனது வாழ்க்கையை அர்ப்பணித்து போராடி வருபவர். அவர் அதிகாரங்களுக்கும் எதிராக இருக்கிறார் என்பதால் அவரது புகைப்படம் எடுக்கப்பட்டது பற்றி நமக்கு பயம் உண்டாகியிருக்கிறது.

இவர்களின் அரசுசார் அரசியற் பின்னணியைத் தெரிந்த பின்பும் இவர்கள் அதிகார எதிர்ப்பு செய்யப் போகிறார்கள் என்று நம்ப முடியுமா? என்னே வேடிக்கை. யாழ்பாணச் சந்திப்பின்போது பொலிசை வைத்து கைதாகி வெளியாகும் ஸ்டண்டை உருவாக்கக்கூட உங்களுக்கு சக்தியிருக்கிறது. எமது அழுத்தம் காரனமாக டக்ள‌சுக்கு மாலைபோட்டு கூட்டம் தொடங்குவதை நீங்கள் தவிர்க்கலாம் – அதைக்காட்டி உங்கள் அவியலில் வேகச் சொல்லி எங்களைக் கேட்காதீர்கள்.

அரச வாகனங்களிற் பயணிக்கும் அவர்கள், கூட்டம் போட்டு அது அரச எதிர்ப்புக் காட்டும் என்கிறார்கள் – அதை நாம் நம்பவேண்டுமாம். எப்படியாவது மகிந்த அரசுக்கெதிரான எதிர்ப்புகளை மழுங்கடிப்பது என்பது இவர்கள் தலையாய குறிக்கோளாக இருக்கிறது. அதற்காக இவர்கள் தலித்துகள், முஸ்லிம்கள் என்று எந்த ஒடுக்கப்பட்ட சிறுபான்மையையும் பாவித்துக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். தலித் மக்களின் பெயரில் நீங்கள் செய்யும் அநியாயத்தை நாம் முடிந்தளவு அம்பலப்படுத்துவோம். அதிகார சக்திகள் எத்தகைய முகமூடிகளைப் போட்டிருந்தாலும் அது கிழித்துக் காட்டப்படுவது வரலாற்றில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

இவர்கள் கூட்டம் போடுவார்கள்; கூத்தடிப்பார்கள். அதற்காக அவர்களுக்கு இருக்கும் உரிமைக்கும் சேர்த்துத்தான் நாம் போராடுகிறோம். ஆனால் நீங்கள் அதிகாரத்தை எதிர்க்கிறீர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கதைக்கிறீர்கள் என்ற பம்மாத்துகளுக்கு நாம் எடுபடமுடியாது.

10.

காந்தியக் காய்சல்

இந்த அரச ஆதரவாளர்களிற் பலர் காந்தியவாதிகளாகவும் தங்களை அறிவித்துக் கொள்கிறார்கள். அடிபட்டது போதும் இனி இணக்கமாக வாழவேண்டும் என்று காந்திய ஆலோசனை வழங்குகிறார்கள். இதில் பலர் சொந்த வீடு- குடும்பம் ‍வள‌ர்ந்து ‘நல்லாவரும்’ குழந்தை குட்டிகள் என்ற ‘நல்’ வாழ்க்கை வாழ்பவர்கள். இவர்களுக்கு இணக்கம் சாத்தியப்படலாம். நித்தம் வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தினமும் இராணுவத்தினரால் வன்பாலுறவுக்குள்ளாக்கப்படுபவர்களுக்கு இந்த இணக்கம் எப்படிச் சாத்தியம்? இவர்கள் புறவய காரணிகளை கண்டுகொள்ள மறுக்கிறார்கள் என்று நாம் சுட்டிக் காட்டினால் காரசாரமாக இடதுசாரிய மறுப்பு – மார்க்சிய மறுப்பு வாதிகளாக தம்மை மாற்றிக் கொண்டு வாதத்தை புறந்தள்ள முயற்சிக்கிறார்கள். இவர்களில் யாரும் இன்று வரைக்கும் தாம் சொல்லும் காந்தியம் என்ன என்றோ அல்லது தாம் தற்போதைய சமூக-அரசியல் நிலவரத்தை எவ்வாறு அணுகுகிறார்கள் என்றோ எதையும் எழுதியதில்லை என்பதையும் இங்கு பதியவேண்டும். ஏனென்றால் இது ஏதோ அவர்கள் தத்துவார்த்த முறையில் எடுத்த முடிவு என்ற பிழையான முடிவுக்கு நீங்கள் தாவி விடக்கூடாது. அவர்கள் தமது ஸ்டண்டுகளுக்காக அவ்வப்போது எடுக்கும் ஆயுதங்களில் ஒன்று இது.

11.

வளரும் குற்றச் சாட்டுகள்.

பானுபாரதி, மலர் பத்மநாதன் போன்றோர் சாஸ்திரி என்ற எழுத்தாளர் லண்டன் சந்திப்பில் கலந்துகொண்டமையைக் காரசாரமாக விமர்சித்து வருகிறார்கள். சாஸ்திரி பல மோசமான எழுத்துக்களை எழுதியிருக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்ததே. இன்று படுகொலை அரசின் ஆதரவு சக்திகளுடன் சேர்ந்து கூக்குரலிடுவதுதான் வேடிக்கையான விசயம். ‘புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களை தமிழ்ச் சமூகம் ஏற்றுக்கொள்ள தயங்குகிறது என்ற கருத்து பரவலாக உள்ளது அதுதானா இது’ என்று சாதாரண‌ கேள்வியைக் கேட்ட யோ.கர்ணணுக்கும் அடி விழுகிறது. கருத்துச் சுதந்திரத்தின் எல்லைகளை இவர்கள் எவ்வாறு வகுத்துக் கொள்கிறார்கள் என்று பாருங்கள்.

12.

இனி…

யாழ்ப்பாண‌ இலக்கியச் சந்திப்பு அரசியலுக்கு மறுப்பைக் கடுமையாக பதிவு செய்ய வேண்டும் என்பதில் பலரும் உறுதியாக இருக்கிறார்கள். இலக்கியச் சந்திப்பு இவர்கள் கைகளுக்குள் நிரந்தரமாக போய்விடக்கூடாது என்பதற்காக ஜேர்மனியில் அடுத்த சந்திப்பு நிகழவேண்டும் என்றும் கோரப்படுகிறது. எதிர்ப்பிலக்கியவாதிகள் ஓய்ந்து போய்விடப் போவதில்லை. ஏதோ ஒரு வழியில் அவர்கள் தமது இருத்தலைக்கூடி பதிவு செய்த வண்ணம்தான் இருப்பர்.

அரச ஆதரவாளர்களுக்கு பரந்த எதிர்ப்பை பதிவது இன்று அவசியம். தயவு செய்து தொடர்பு கொண்டு உங்கள் ஆதரவை வழங்குங்கள்.

– சேனன், 0044 7908050217 ( senann@hotmail.com)

Exit mobile version