Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈழத்தில் ஜாக்சன் துரை…

தற்கால ஜாக்சன் துரை சுவாமிநாதனும் வீரபாண்டிய ஈழத் தமிழனும் சந்தித்தால் எப்படி பேசியிருப்பார்கள்? (disclaimer : இது நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது மற்றப்படி எந்த ஒரு தனிநபரையும் சுட்டிக் காட்டாது, யாவும் கற்பனை )

காட்சி: தமிழர்களின் நிலங்களை விடுவிப்பதற்கு படையினருக்கு பணம் செலுத்துவது தொடர்பாக ஜாக்சன் துரையும், வீரபாண்டியனும் காரசாரமாக வார்த்தை மோதல் வசனங்கள்

கதாபாத்திரங்கள்: வீரபாண்டிய ஈழத் தமிழன் , ஜாக்சன் துரை சுவாமிநாதன்

இடம்: கோப்பாபிலவு மற்றும் தமிழருக்கு சொந்தமான விடுவிக்கப்படாத நிலங்கள்

ஜாக்சன் துரை: ம், நீர் தான் வீரபாண்டிய ஈழத்தமிழனோ ?
வீரபாண்டிய ஈழத் தமிழன்: நீர் தான் ஜாக்சன் துரை சுவாமிநாதன் என்பவரோ?
ஜாக்சன் துரை: ஏது, வெகுதூரம் வந்துவிட்டீர்?
வீரபாண்டிய ஈழத் தமிழன் : நான் எனது சொந்த மண்ணில் பிறந்து வளர்ந்த நிலத்தில் தான் நிற்கிறேன். நீர் தான் அரசியல் இலாபம் கருதி இங்கு வந்து எமது ஆதரவை விரும்பி அழைத்ததாக அறிகிறேன்.

ஜாக்சன் துரை: உமது ஆதரவு வேண்டும், ஆனால் அதற்கேற்ற நடத்தை இல்லை உம்மிடம்.
வீரபாண்டியன் : கற்றுக்கொடுக்கும் இனம் தமிழ் இனம். நீர் கற்றுக்கொடுக்க முயற்சிப்பது அறிவீனம்.
ஜாக்சன் துரை: படையினருடன் நாட்டுரிமை பெற்றிருப்பது நாங்கள். நீயாக ஏன் ஆதரவு தேடி காண வரவில்லை?
வீரபாண்டியன்: ஹா…! ஹா…! ஆதரவு கொடுப்பவர் நாங்கள். இல்லாவிட்டால் நீ அமைச்சராக இந்த நாட்டுக்குள்ளே நுழைந்திருக்க முடியாது.
ஜாக்சன் துரை: இறுமாப்பு இன்னும் ஒழியவில்லை உன்னிடம்.
வீரபாண்டியன்: எல்லாம் உடன்பிறந்தவை, ஒழியாது.
ஜாக்சன் துரை: உன் மீது குற்றம் சுமத்துகிறேன்.
வீரபாண்டியன்: என்னவென்று?
ஜாக்சன் துரை: எடுத்துரைத்தால் கணக்கில் அடங்காது.
வீரபாண்டியன்: எண்ணிக்கை தெரியாத குற்றம்.
ஜாக்சன் துரை: எனக்கா எண்ணிக்கை தெரியாது? அகம் பிடித்தவனே, சொல்கிறேன் கேள். உன் நிலத்தில் படையினர் செய்து விளையும் விளைச்சலுக்கு நீ கிஸ்தி கொடுக்கவில்லை. உன் நிலத்தை திருப்பி தருவதற்கு திறைப்பணம் செலுத்தவில்லை. வெகுகாலமாக வரிப்பணம் வந்து சேரவில்லை. இந்த பாக்கிக்கெல்லாம் வட்டியும் செலுத்தவில்லை.

வீரபாண்டியன்: ஹா ஹா ஹா ஹா. கிஸ்தி, திறை, வரி, வட்டி. வானம் பொழிகிறது, எமது பூமி விளைகிறது, அதை திருப்பி எடுப்பது எங்களது உரிமை. உனக்கேன் கொடுப்பது கிஸ்தி? எங்களோடு ஷெல்லடி நடக்கும் போது உயிருக்கு அஞ்சி ஓடினாயா? அல்லது வருடக் கணக்கில் எந்தக் குற்றமும் புரியாது அகதி முகாமிலும் சிறையிலும் எங்களோடு அடைபட்டு கிடந்தாயா ? உணவுத் தடையினால் ஆயிரக் கணக்கில் நாங்கள் பட்டினியால் மடிந்து கொண்டிருந்தபோது எங்களுக்கு ஒரு கவளம் சோறு தந்தாயா ? அல்லது நீ மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே! எதற்க்குக் கேட்கிறாய் பணம் , யாரைக் கேட்கிறாய் வரி? இதுவரை காலம் எமது நிலத்தில் விளைந்த விளைச்சலை அடாத்தாக எடுத்த கயவர்களை கேள் நீதிக்காக அதை திருப்பி தருமாறு. வீட்டையும் நிலத்தையும் பறிகொடுத்து வாழ வருமானமும் இன்றி தவிக்கிறோம். நியாயமாக கேள் எமக்கு நட்டஈடு வழங்குமாறு . சட்டம் படித்து தொழில் செய்யும் உனக்கு தெரியாததா உண்மையான நீதி எதுவென்று ? எதற்கு இந்த மானம் கெட்ட அரசியல் நாடகம் ? வீழ்ந்தாலும் மீண்டும் எழுந்து வருவோம் ஜாக்கிரதை.

ஜாக்சன் துரை: Shut up. அதிகார முத்திரையிட்டு உன்னை பணத்தை செலுத்தி நிலத்தை பெற்றுக் கொள்ள கையோடு அழைத்து வர ஆள் அனுப்பினேனே?

வீரபாண்டியன்: அப்படியா? ஹா…ஹா…ஹா…ஹா… பலே, நீ அனுப்பிய ஆள் மிகவும் புத்திசாலி. என்னை அழைத்து வரும் நோக்கத்தோடு எவனும் தலைகாட்டியதில்லை இந்தப்பக்கம். எங்களுடைய பெருமை தெரிந்தவன் அவன். ஆனால், இது போன்ற ஒரு ஈனச் செயலை செய்ய இதுவரை எவனுக்கும் துணிவு பிறந்ததில்லை. எமது நிலத்துக்கே நாம் பணம் செலுத்தவேண்டும் என்று என் முன்னே கூறிய உன்னை, இனியும் விட்டுவைப்பது என் குற்றம். துடிக்கிறது மீசை, அடக்கு, அடக்கு என்று எமது ஆதரவை நாடி வந்த உறவு முறை தடுக்கிறது.

ஜாக்சன் துரை: என்ன? மீசையை முறுக்குகிறாயா? அது ஆபத்தின் அறிகுறி. உன்னை சிறைபிடிக்க உத்தரவிடுகிறேன்.
வீரபாண்டியன்: என்ன? வரச்சொல் பார்க்கலாம். ஆ..! மானம் அழிந்துவிடவில்லையடா மறத்தமிழனுக்கு. வீடு இல்லாமல் திறந்த சிறையில் தானே வைத்திருந்தாய் எங்களை . பொருத்து வீடு தருகிறோம் என்று இன்னொரு நாடகம் ஆடினாய். எங்கள் மடியிலே கை வைத்த உன் தலை அடுத்த தேர்தலில் உருண்டு போகட்டும்…!

ஆக்கம்: வைத்திய நிபுணர், வைத்தியக் கலாநிதி முரளி வல்லிபுரநாதன்

Exit mobile version