குறிப்பாக புகுஷிமாவில் ஏற்பட்ட பேரழிவுகளின் பின்னர் உலகம் முழுவதும் அணு மின் நிலையங்கள் மூடப்படுவதாக முடிவு செய்யப்பட்டது. அனைத்து நாடுகளுமே மாற்று வழிகளைத் தெரிவு செய்துகொண்டன.
இந்த நிலையில் கோரமான கோமாளிகளின் அரசான இந்திய அரசு கூடங்குளத்தில் மக்கள் குடியிருப்புக்களுக்கு அருகாமையில் இலங்கையிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் அணு உலை ஒன்றைத் திறப்பதற்கு முடிவு செய்தது.
ஜப்பானில் அணு உலை கட்டப்பட்டபோது அது மிகவும் பாதுகாப்பானது என்றும் எந்தக் காரணங்களைக்யிட்டும்
விபத்துக்கள் ஏற்படாது என்றும் தொடர்சியான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. புகுஷிமா பேரழிவு ஏற்பட்ட பின்னர் ‘அணு உலை பாதுகாப்பானது என பிரச்சாரம் செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட ஐதீகங்களால் நாமும் பாதிக்கப்பட்டிருந்தோம்’ என ஜப்பானிய பிரதமர் யுகொஷிகோ நோட்டா தெரிவித்திருந்தார்.
அணு உலையில் தொழில் நுட்பத்தில் முதலிடம் வகிக்கும் நாடுகளின் ஒன்றான ஒழுங்கமைக்கப்பட்ட
தொழிற்துறைகளைக் கொண்ட நாடான ஜப்பான் எங்கே பட்டாசு தொழிற்சாலையைக் கூட ஒழுங்கமைக்க முடியாத இந்திய அரசு எங்கே?
இந்தியாவின் வியாபாரத் தலைநகரர் என்று மார்தட்டிக்கொள்ளும் மும்பாயின் குப்பை மேடுகள் இந்திய அரசின் உலகச் சின்னம். இது ஒன்றே இந்தியா அதிகாரவர்க்கத்தின் அசாத்தியத் திறமையை அளவிடப்போதுமானது,
இதையெல்லாம் அறிந்திருக்கும் இந்தியாவின் பணவெறிகொண்ட அதிகாரவர்க்கம், பல்தேசிய முதலாளிகள் அவற்றின் அடியாட்களாகத் தொழிற்படும் மத்திய மாநில அரசுகள் ஆகியன கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது எனப் பிரச்சாரம் செய்துவருகின்றன. கூடங்குளத்தில் மின் உலை வெடித்து மக்கள் மாண்டு போனால் ஜப்பானியப் பிரதமர் போல இவர்கள் எல்லாம் மன்னிப்புக் கூட கோரமாட்டார்கள். வேறு எந்த மாநிலத்திலாவது மக்கள் குடியிருப்புக்கள் மத்தியில் அணு மின் நிலையம் என்ற அணுகுண்டை தயாரிப்பதற்கு அத்திவாரமிட்டுக்கொண்டிருப்பார்கள்.
போபலில் இந்திய சமூகத்தின் ஒரு பகுதிய அழித்து ஊனாமக்கிய யூனியன் காபைட் நிறுவனத்திற்கு எதிராக முப்பது வருடமாகியும் மூச்சுக்கூட விடமுடியாத இந்திய அரசிடம் இதைத் தவிர எதனை எதிர்பார்க்க முடியும்? இலங்கை அரசோடு இணைந்து வன்னியில் இனப்படுகொலை நடத்திமுடித்துவிட்டு எஞ்சியவர்களை இனச்சுத்கரிப்புக்கு உள்ளாக்கும் கொடிய விலங்குகளிடம் மனிதாபிமானத்தையா எதிர்பார்க்க முடியும்??
இவற்றை எல்லாம் அறிந்து வைத்திருக்கும் மக்கள் தம்மையும் தமது சந்தியையும் அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக அணு உலைக்கு எதிரான இடைவிடாத போராட்டத்தை கூடங்குளத்தில் ஆரம்பித்தார்கள். கூடங்குளத்தில் கட்டப்பட்டிருக்கும் இந்த மனிதக் கொல்லி நிலையம் இலங்கையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
மக்களின் இடைவிடாத எதிர்ப்புப் போராட்டங்களையும் பொருட்படுத்தாமல் கூடங்குளத்தில் அணு மின் உற்பத்தியை ஆரம்பிப்பதற்கான உத்தரவை இந்திய மத்திய அரசு வழங்கியிருந்தது. அதனை தொடர்ந்து ஜெயலலிதா தலைமயிலான மாநில அரசு அதற்கான அனைத்து ஆதரவையும் வழங்கியதுடன் தனது ஒடுக்குமுறைக் கருவிகளையும் தயார்படுத்திக்கொண்டது.
முதலில் பொய்ப்பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்ட ஜெயலலிதவின் பாசிச அரசும் மத்திய அரசும் மக்களின் போராடும் உறுதியக்கண்டு அஞ்சின. பின்னதாக மக்களைப் சாதிரீதியாகவும் பின்னர் மதரீதியாகவும் பிளவுபடுத்தும்
தந்திரோபாயத்தைக் கையாண்டன. பின்னதாக மக்கள் மீது பயங்கரவாதத் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டன. இறுதியாக திட்டமிட்ட உளவியல் பயங்கரவாத யுத்ததைப் போராடும் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
ஜெயலலிதா போலிஸ் படையின் தாக்குதலுக்கு அஞ்சி கூடங்குளம் கிராமத்திலிருந்து ஆண்கள் அனைவரும் வெளியேறியுள்ளனர். பலர் சித்திரவதை செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற விபரம் தெரியாது.
ஆண்கள் வீடுகளை விட்டு வெளியேறித் தலைமறைவானதும் வீடுகளில் உட்புகுந்த போலிஸ் படை பெரும் சூறையாடலை நடத்தியிருக்கிறது. வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திவிட்டு மக்கள் மீது பழியைப் போட்டுள்ளது.
போலீஸ் நடத்திய தர்பாரில் ஒரு பச்சிழம் குழந்தை பலியாகியுள்ளது. பெருமளவில் ஆயுதங்களுடன் உட்புகுந்த போலிஸ் நடத்திய சூறையாடலில் பொதுவாக அனைத்து வீடுகளுமே சேதப்படுத்தப்பட்டுள்ளன. கூடங்குளம் இடிந்தகரை ஆகியபகுதிகள் யுத்தகளம் போன்று காட்சி தருகின்றன எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆண்கள் இல்லாத நிலையில் அனேகமாக எல்லாவீடுகளிம் உட்புகுந்த போலிஸ் படை சிறுவர்களையும் பெண்களையும் சித்திரவதை செய்துள்ளதாக தமிழ் நாடு மனித உரிமைப் பாதுகாப்பு மையம் பதிவு செய்துள்ளது. கூடங்குளத்திற்குச் சென்ற மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த பத்து வழக்குரைஞர்களும் விரைவில் அறிக்கை ஒன்றை வெளியிடுவதாகக் கூறியுள்ளனர்.
யுத்த களத்தில் கொலைவெறி இராணுவம் நடந்து கொண்டதைப் போன்று ஜெயலலிதா அரசின் பாசிசப் போலிஸ் படை நடந்துகொண்டதை எந்த அரசியல் கட்சிகளும் வெளியிடத் தயாரில்லை.
அரசியல் கட்சிகள் அங்கே வரவேண்டாம் என மக்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.
ஜெயலலிதா பாசிச அரசு அரசமைத்துக்கொண்ட போது புலம் பெயர் நாடுகளில் இருந்து வாழ்த்துச் செய்தி அனுப்பிய புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கண்துடைப்பிற்காவது ஒரு அறிக்கை விடவில்லை. இவர்கள் இன்னமும் ஜெயலலிதாவை, சீமானோடு இணைந்து ‘ஈழத்தாய்’ என புகழ்ந்துகொண்டிருப்பார்கள். இது இவர்களின் முட்டாள்தனம் மட்டுமல்ல வியாபார அரசியல் நலன் சார்ந்ததுமாகும்.
மன்மோகன் சிங் அமரிக்காவோடு அணுசக்தி ஒப்பந்தம் போட்ட காலத்திலிருந்தே மௌனம் சாதித்த தமிழகத்தின் இனவாதக் கட்சிகள் கூடங்குளத்திற்கு குரல்கொடுப்பதான தோற்றப்பாட்டை ஏற்படுத்தியது அப்பட்டமான பொய் என மக்களின் வாக்குமூலத்திலிருந்து தெரிகிறது.
நிலா பிடிப்பது போல ஈழம் பிடித்த்துத் தரலாம் என முழக்கமிடும் இந்த வேடதாரிகளை உணர்வுபூர்வமான போராட்டங்களை புலம் பெயர்ந்த தேசங்களில் நடத்திய சாதாரண தமிழர்கள் புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் கூடங்குளம் மக்களுக்காகப் போராடவேண்டியமைக்கு பல காரணங்கள் காணப்படுகின்றன.
கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் இலங்கையின் வடபுலத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் அணுகுண்டு வெடித்தது போன்ற பாதிப்புக்கள் ஏற்படும்.
எல்லாவற்றையும் விட ஈழத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடுவதாக வேடமிடும் புலம்பெயர் அமைப்புக்கள் ஈழத்தமிழர்களை அழித்துப் போடும் அபாயம்கொண்ட கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராட மறுப்பதன் பின்னணி என்ன?
அணு மின் நிலையம் தமிழ் நாட்டுத் தமிழர்களின் வாழ்க்கையைக் கதிர்வீச்சு அபாயத்திற்குள் தள்ளியிருப்பது மட்டுமல்ல ஈழத்தமிழர்களின் வாழ்வாதப் பிரச்சனையாகவும் மாறியுள்ளது.
சுடுகாட்டிலா இவர்கள் ஈழம் பெற்றுக்கொடுக்கப் போகிறர்கள்?
தவிர போர் அபாயங்கள் நிறைந்ததாக மாறிவரும் தெற்காசியப் பிராந்தியங்களில் கூடங்குளத்தின் அழிவு இலங்கையில் இன்னொரு இனப்படுகொலையை ஏற்படுத்தும்.
1981 இல் ஈராக் அணு மின் நிலையத்தில் இஸ்ரேல் விமானக் குண்டுகளைப் போட்டிருக்கிறது. 1984.1987 இல் ஈரான் அணு உலையின் மீது ஈராக் குண்டுபோட்டிருக்கிறது. 1991 இல் மூன்று ஈராக் அணு உலைகளில் அமரிக்க ஆக்கிரமிப்பு இராணுவம் குண்டுபோட்டிருக்கிறது. 2007ம் ஆண்டு சிரிய அணு சக்தி நிலையத்தின் மீது இஸ்ரேல் குண்டுபோட்டிருக்கிறது.
கூடங்குளம் போன்ற பாரிய அணு மின்னிலையத்தின் மீது இவ்வாறான தாக்குதல் நிகழுமானால் புகுஷிமாவை விட அதிக பாதிப்புக்கள் ஏற்படலாம். பல்தேசிய நிறுவனங்களின் பண வெறிக்காக எவ்வாறு வன்னிப்படுகொலைகள் நடைபெற்றனவோ அதே வெறியோடு கூடங்குளத்தில் அணு மின்னிலையத்தை ஆரம்பிக்க முற்படுகின்றது இந்திய அரசு.
வன்னிப்படுகொலைகளின் பின்னர் போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்கப்போவதாக்கூறி இறுதியில் ராஜபக்சவுடன் சமரசம் செய்துகொண்டன அன்னிய நிதியில் இயங்கும் தன்னார்வ நிறுவனங்கள். கூடங்குளம் மக்களின் உறுதி இவை அனைத்தையும் எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்றது. கூடங்குளத்தில் யார் என்னவானாலும் போராடியே தீருவோம் என மக்கள் உறுத்தியாக உள்ளனர். இந்தியாவில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தின் மாற்றப் புள்ளியாக கூடங்குளம் மக்களின் வீரம்செறிந்த போராட்டம் அமைய வாய்ப்புக்கள் உண்டு.
தனிமைப்படுத்தப்பட்டு போலீசாரால் சூறையாடப்பட்ட அந்தமக்களின் உறுதி அணு சக்தியைவிட ஆயிரம்மடங்கு வலிமையானது.