அமெரிக்க அணியின் கொலைவெறி உலகம் முழுவதையும் தின்று தொலைத்துக்கொண்டிருக்கின்றது. ஆசியாவில் இரத்தகளரியை ஏற்படுத்த அமெரிக்க ஏகாதிபத்தியம் நிலைகொண்ட நாளிலிருந்து இலங்கை இரத்தமும் சதையுமாய் மனிதப் பிணங்களில் காடாகிப் போனது. எல்லா முனைகளிலும் திட்டமிட்டு ஒரு முகப்படுத்தப்பட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை, மேற்கு ஏகாதிபத்தியங்களின் தலையீட்டிற்கு அகலக் கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது.
அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய நாடுகளின் அணி தெற்காசியாவைக் குறிவைத்து நடத்தும் கொள்ளையை ஆசிய மையம்(Asia Pivot) எனப் பெயரிட்டுள்ளன. ஆசிய மையத்தின் பிரதான தளங்களில் ஒன்றாக இலங்கை அமைகிறது.
மத்திய கிழக்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈராக் எப்படி பிரதான புள்ளியாக அமைந்ததோ, அதே போல தெற்காசியாவில் நடத்தப்படும் தாக்குதலுக்கு இலங்கை.
ஈராகின் ஊடாக நடத்தப்பட்ட அழிவுகள் அளவிற்கு இலங்கையில் நீண்டகாலம் பிடிக்கவில்லை. ஒரு பக்கத்தில் ராஜபக்ச அரசு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திட்டஙகளை நிறைவேற்ற அதி வேகமாகச் செயற்படுகிறது. மறுபக்கத்தில் அமெரிக்க அரசின் அடிமைகளாகவே தமிழர் அரசியல் தலைமைகள் செயற்படுகின்றன. ஆக, எல்லாமே ஒரு நேர்கோட்டில் பயணிக்கும் மக்கள் விரோத அழிவுசக்திகளே இன்றை அரசியலைக் கையகப்படுத்தியுள்ள்ன.
அமெரிக்க அரசு ஈராக்கை மனிதர்கள் வாழ முடியாத பிரதேசமாக்கியது போன்றே இலங்கயை மாற்றி வருகிறது.
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.ஏஸ் Islamic State of Iraq and the Levant (Isis) பயங்கரவாதிகள் கடந்தவாரம் இஸ்லாமியர்களின் புனித நாளான ரம்ழான் தினத்தன்று இஸ்லாமிய அரசான கலீபாவைப் பிரகடனப்படுத்தியுள்ளனர். சி.ஐ.ஏ, சவுதி அரேபிய அரசுகள் போன்றவை ஆதரவு வழங்க, பென்டகனால் பயிற்றுவிக்கப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள், உலகம் முழுவதும் வாழும் 1.6 பில்லியன் முஸ்லிம்கள் தங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளனர். இவர்களுக்கு எதிரான ஈராக்கிய அரசிற்கும் அமெரிக்க அரசே பணம் மற்றும் ஆயுத பலம் உட்பட முழுப்பலத்தையும் வழங்கியுள்ளது.
இப்படி அமெரிக்க அரசும் அதிகாரவர்க்கமும் இணைந்து ஈராக்கை முடிவற்ற பிணக்காடாக மாற்ற, ஈராக் நிலைமைகள் தொடர்பாக ஒபாமா துயரடைந்திருப்பதாக மேற்கின் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன, இவ்வாறான செய்திகளை நடுநிலமை என்று வேறு அறிவித்துகொள்கின்றனர்.
இதற்குச் சமாந்தரமான நிலைமைகளையே இலங்கையில் காணலாம். அமெரிக்க அரசு பொது பல சேனாவிற்குப் பின்புலத்தில் செயற்படுகிறது, இலங்கை அரசின் ஒடுக்கு முறைக்கு அத்தனை பலத்தையும் வழங்கி முறுக்கேற்றி வருகிறது. மறு புறத்தில் இலங்கை அரசிற்கு எதிரானவர்களும் அமெரிக்க ஏகாதிபத்திய அணியின் கட்டுப்பாட்டிலேயே உள்ளனர். ஆக, தேவையான போது தேவையான அணியைப் பயன்படுத்த அவற்றைத் தயார் நிலையில் வைத்துள்ளது அமெரிக்க ஏகாதிபத்திய அணி.
அமெரிக்க அரசு தெற்காசியாவை ஒட்டச் சுரண்டவும் இலங்கையில் வடகிழக்கு முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மைத் தேசிய இனங்களை அழிக்கவும் நடத்துகின்ற நாடகம், ஐ.நா விசாரணை என்ற தலையங்கத்தில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது.
வெற்றுத் தீர்மானங்களை விடுத்து வெளியில் செயற்பாடு என்று வந்தால் அமரிக்க ஏகாதிபத்தியத்தின் அணியில் காணப்படும் அத்தனை உறுப்பு நாடுகளும் இலங்கை அரசின் நட்பு சக்திகள் போன்றே செயற்படுகின்றன.
அவுஸ்திரேலியா அமெரிக்க அணியின் முக்கிய உறுப்பு நாடுகளில் ஒன்று. அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடு. சர்வதேசச் சட்டங்களுக்கு முரணாக 153 அகதிகளை அவுஸ்திரேலியாவின் கொந்தளிக்கும் கடல்பரப்பில் வைத்துக் கைது செய்து இலங்கை அரசிடம் ஒப்படைக்கிறது.
உலக நாடுகளின் மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஐக்கிய நாடுகள் சபை அகதிகளைப் பொறுப்பேற்பதற்கும், அகதிகளின் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதற்கும் எந்தத் தடையும் காணப்படவில்லை. இன்று அவர்களுக்கு இவையெல்லாம் தேவையற்றவை. ஏதாவது நடவடிக்கை எடுக்கவேண்டிய சந்தர்பங்களில் நழுவிக்கொள்வதும், காலத்தைக் கடத்துவதற்காக இலங்கையில் விசாரணை, பொருளாதாரத் தடை, தண்டனை எனப் பேசுவதும் அவர்களின் இன்றைய தேவை.
இலங்கயில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தன் வீட்டில் நாய் குரைத்தாலே அமெரிகக்கா உட்பட்ட நாடுகள் அறிக்கை விடுகின்ற நிலையில் அவுஸ்திரேலியாவிலிருந்து இனப்படுகொலை அரசிடம் ஒப்படைக்கப்படும் அகதிகள் குறித்து மௌனம் சாதிக்கிறது. இது இலங்கையில் என்ன நடக்கிறது என்பதன் அடையாளம்.
ராஜபக்ச அரசுடன் இணைந்து அமெரிக்கா நடத்துகின்ற நாடகம் இலங்கையில் பெரும் இரத்தக்களரியை ஏற்படுத்தும். மக்கள் தங்களை அணிதிரட்டிக்கொள்ளவும், புதிய தந்திரோபாயங்கள் ஊடாக தற்காப்புப் போராட்டத்திற்குத் தயாராகவும் தவறினால் இலங்கை சிதைத்துச் சீரழிக்கப்படுவதும், சிறுபான்மைத் தேசிய இனங்கள் அழிக்கப்படுவதும் தவிர்க்க முடியாதது.
மக்கள் போராடக் கூடாது, இலங்கை அரசிற்கு எதிராக அணிதிரளக் கூடாது என்றும் எல்லாவற்றையும் அமெரிக்காவோ நாட்டுக்கு வெளியிலிருக்கும் ‘மெத்தப்படித்தவர்களோ’ பார்த்துக்கொள்வார்கள் என்றும் கூறுபவர்கள் ராஜபக்சவின் நண்பர்கள். தற்செயலாகவேனும் மக்கள் மத்தியிலிருந்து ராஜபக்ச அரசைப் பலவீனப்படுத்தும் போராட்டங்கள் தோன்றிவிடக்கூடாது என்றும், மக்கள் அணிதிரட்டப்படக் கூடாது என்றும் உறுதியாகச் செயற்படும் இவர்களை வேறு எப்படி அழைப்பது?