Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை மக்களின் எஞ்சிய சொற்ப உரிமைகளும் புதைகுழிகளை நோக்கி – புதிய திருத்தச்சட்டம் : விஜய்

18 வது அரசியலமைப்புத் திருத்தம்

நாளைமறுதினம்; (08.09.2010 புதன்கிழமை) ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் 18வது அரசியலமைப்புத் திருத்தத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருக்கிறது. சமர்ப்பிக்கப்படவுள்ள உத்தேச அரசியலமைப்பு திருத்தங்கங்கள் தொடர்பாக அன்றைய தினமே விவாதத்தினை நடாத்தி வாக்கெடுப்பினையும் நடாத்த அரசாங்கம் திர்மானித்துள்ளது.

18 வது அரசியலமைப்புத் திருத்தத்தில் உள்ள திருத்த யோசனைகள் கடந்த மாதம் 29 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கப்பட்டது. 30 ஆம் திகதி விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு அமைச்சரவையின் அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது. அமைச்சரவையில் கடந்த 30 ஆம் திகதி உத்தேச அரசியலமைப்பு திருத்த யோசனைகளின் நகல் பிரதிகளை வழங்கிய ஜனாதிபதி , போரினால் பாதிக்கப்பட்;ட எமது நாட்டிற்கு போருக்குப் பின்னரான நிரந்தர அபிவிருத்தி தேவை. அதற்கு பலமான அரசாங்கமொன்று மிக அவசியமானது. நிலையான ஆட்சியாளர்களும் தேவை. இதனால் தான் அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்வதற்கு நாம் உத்தேசித்துள்ளோம் எனப் பேசியிருகக்றார். அமைச்சரவையில் அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு எதிர்ப்பக்கள முன்வைக்கப்படாததால் ஏகமனதாக அங்கீகரிப்பதாக ஜனாதிபதி அறிவித்தார். ஜனாதிபதி அவர்களுக்கு இத்திருத்ததினை முன்வைப்பதற்கு போரும் துணைபுரிந்திருக்கிறது!

31 ஆம் திகதி உயர் நீதிமன்றத்திற்கும் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. நீதியரசர் சிறியாணி பண்டாரநாயக்கா தலைமையிலான ஐந்து நீதியரசர்கள் கொண்ட குழு திருத்தங்கள் தொடர்பாக ஆராய்ந்து அதற்கான தீர்ப்பை 48 மணித்தியாலத்திற்குள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிற்கும் அறிவித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் முடிவு 8 ம் திகதி காலை பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக சபாநாயகர் அறிவிப்பார்.

பொதுமக்களுக்கு அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து முழுமையான விளக்கம் முன்வைக்கப்படவில்லை. ஆயினும் இந்த உத்தேச திருத்தச் சட்டமூலத்தின் மூலம்
ஜனாதிபதி பதவியை வகிக்கும் ஒருவர் இரண்டு முறைக்கு மேல் இப்பதவியை வகிக்ககூடாது என்ற விதிமுறைய அகற்றுதல்
17 வது திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட 10 பேர் கொண்ட அரசியலமைப்புப் பேரவையை 5 பேர் கொண்ட ஆலோசனைச் சபையாக மாற்றி அமைத்தல்
அரச சேவை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பிலான சுயாதீன ஆணைக்குழுக்களுக்களின் அங்கத்தவர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு மாத்திரம் வழங்குதல்
அரசாங்க திணைக்களத் தலைவர்களை நியமிக்கும் இடமாற்றம் செய்யும் நீக்கும் அதிகாரங்களை அமைச்சரவைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தல்
பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் பொலிஸ் மா அதிபருக்கு மாற்றல்
தேர்தல் ஆணையாளரின் அதிகாரங்கள் பலவற்றை இரத்துச் செய்தல்
தேர்தல் ஆணைக்குழு நியமி;க்கப்படும் வரை பதில் ஆணையாளரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படல் போன்ற திருத்தங்கள் கொண்டு வரப்படாலம் எனக்கூறப்படுகிறது.

இலங்கையின் பல தலைவர்களைப் போலவே ஜனாதிபதி ஆட்சி முறையை இல்லாதொழிக்கும் அரசியல் கோசத்துடன் ஜனாதிபதியானவர் மகிந்த ராஜபக்ஷ . 2005 ஆம் வருட ஜனாதிபதி தேர்தலின் போது முன்வைத்த மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் 84 வது பக்கத்தில் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ , ’18 வது அரசியலமைப்புத் திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன் நிறைவேற்றப்படும். இவ்வமைப்பு அமுல்படுத்தப்படுகையில் நாட்டின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்து விடும்’ என ஊவா மாகாண சபையின் அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே தெரிவித்திருக்கிறார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 59 வது நிறைவாண்டு விழாவில் பேசுகையில் உத்தேச அரசியலமைப்புப் திருத்தத்தில் பயங்கரம் எதுவுமில்லை. மக்கள் மயமான அரசியலமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு நாம் செயற்படுகின்றோம். எனது பதவிக்காலத்தை நீடிக்கவே நான் முயற்சிப்பதாக எதிர்க்கட்சியினர் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளனர். தேர்தலில் யார் போட்டியிட வேண்டும் என்பதை கட்சி தீர்மானிக்கும். யாரைத் தெரிவு செய்ய வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பர் எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஆயினும் தொடர்ந்து பேசுகையில் ஆசியாவிலே பலமான அரசாங்கமாக நாம் இருக்கின்றோம் . அதன் மூலம் நாட்டை முன்கொண்டு செல்லவேண்டும். நாட்டு மக்களின் தேவைகள் என்ன? இனங்களுக்கிடையிலான ஐக்கியம் மற்றும அபிவிருத்தி தொடர்பான விடயங்களுடன் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாம் தனியாக அரசியல் செய்யவில்லை. இடதுசாரிகளும் எம்முடன் இருக்கின்றனர் , தமிழ் தலைவர்களும் முஸ்லிம் தலைவர்களும் எம்முடன் இருக்கின்றனர். இவ்வாறானதொரு நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை ஒரு தேசியக் கட்சியாக மீண்டும் உருவாக்குவோம் எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி நாங்கள் நாட்டிற்காகவும் இனத்திற்காகவும் வேலைசெய்கின்றோம் எனவும் குறிப்பிட்டார்.
அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக ஜெஹான் பெரேரா குறிப்பிட்டுள்ள விடயங்கள் முக்கியமானவை. 1972 ஆம் ஆண்டின் யாப்பு தொல்குடி – மண்வாசனையுடன் அல்லது உள்நாட்டுக்கே உரிய பண்பினதான அரசியல் சட்டமாகப் பிரேரிக்கப்பட்டது ஒரு திருப்பு முனையாகும். அந்த யாப்பு அரசாங்கத்தின் நிறைவேற்றுப் பிரிவினரை உறுதியானதொரு ஆசனத்தில் அமர்த்தி நீதித்துறையினரையும் பொதுச்சேவைத்துறையினரையும் அதற்கு அடி பணிந்த நிலைக்குத் தள்ளிவிட்டிருந்தது. ஜனாதிபதியின் கையில் பெரும் அதிகாரத்தினைக் கொடுத்திருந்த யாப்பு விதிமுறைகளை மிகக் காலதாமதத்தின் பின்னரே அறிந்ததனால் 2001 ஆம் ஆண்டு 17வது திருத்தம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அதன் வாயிலாக நிறைவேற்றுப் பதவியிலிருப்பவர் சமநிலை தத்துவத்தைப் பேணும் ஏற்பாடு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் நீதித்துறை, பொதுச்சேவைகள், பொலிஸ், தேர்தல் ஆணைக்குழு என்பவற்றின் சுதந்திரமான செயற்பாடு உறுதிசெய்யப்பட்டிருந்தது.

17வது திருத்தம் 2003 ஆம் ஆண்டில் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாகவிருந்த போது கொண்டுவரப்பட்டதாயினும் அது முழுமையாக அமுலாக்கம் செய்யப்படவில்லை. பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் முழுமையாக நடைமுறைப்படுத்தபடவில்லை என்பதுடன் முற்றாக மீறபட்டுமிருந்தது.

தேசிய இன முரண்ப்பாடு குறித்த எதுவும் பேசாத இந்தத் திருத்தச் சட்டம் மகிந்த ராஜபக்ஷ குடும்ப அதிகாரத்தை அதிகரித்து நாட்டு மக்கள் மீது திணிப்பதாகவே காணப்படுகிறது.

18 வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்புகள்

ஐக்கிய தேசியக் கட்சி, 18 வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவளிக்கப்போவதில்லை என தொடர்ந்தும் கூறி வருகின்றது. தற்போது இவ்விடயம் தொடர்பாக மல்வத்தை மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து (05.09.2010 ஞாயிறு) கலந்துரையாடியுள்ளது. ஐ.தே.க. வின் பாராளுமன்ற உறுப்பினர் ருவான் விஜேவர்த்தன செய்தியாளர் மாநாட்டில் ( 03.09.2010) அரசியலமைப்பினால் ஏற்படவிருக்கும் அபாயத்தன்மையை மக்களிடம் தெளிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டங்களை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் , 18 வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவித்திருக்கின்றார். அவர் இவ்வாறானதொரு அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக அரசாங்கம் முன்னர் ஒருபோதும் தெரிவித்ததில்லை, மிகவும் சூட்சுமுமாக இதனை தயாரித்துள்ளது, இதன் பயங்கரத்தன்மையை பொதுமக்கள் உணராதிருக்கிறார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார்.

ஜே.வி.பி கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றது. அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்க ‘ எதிர்காலத்தில் சட்டம், ஒழுங்கு, நீதி, நியாயம் எதனையுமே எதிர்பார்க்க முடியாது, யுத்தத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியும் கௌரவமும் ஜனாதிபதியின் யோசனைகளால் குட்டிச்சுவராக்கப்படுகின்றது’ என வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருக்கிறார். சர்வ அதிகாரங்களையும் தனது கைகளுக்குள் கொண்டு வர முயற்சிக்கின்ற ஜனாதிபதி அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 17 வது திருத்தத்தினை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கிறார். இது எமது நாட்டின் ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் நல்லாட்சிக்கு பங்கம் ஏற்படுத்துவனவாகும். ஏனெனில் இதுவரை காலமும் பொய்யை மட்டுமே பேசி வந்த ஜனாதிபதி தனது யோசனைகள் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

18 வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான அமைப்பு, 8 ஆம் திகதியை கறுப்புத் தினமாகப் பிரகடனப்படுத்தியிருப்பதுடன், அன்றைய தினம் கொழும்பில் ராஜகிரிய ஆயுர்வேத வைத்தியசாலை சுற்று வட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவும் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது. ’18 வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான அமைப்பு’ 03.09.2010 வெள்ளிக்கிழமை நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் ஐ.தே.க., இடது சாரி முன்னணி, ஐக்கிய சோசலிசக் கட்சி , புதிய சிஹல உறுமய கட்சியினர் உள்ளிட் பலர் கலந்துகொண்டனர்.

இடது சாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண கருத்துத் தெரிவிக்கையில்;, 13 வது திருத்தச் சட்டம் பேசப்படா ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. 18வது திருத்த யோசனைகளில் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை, பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கூறப்படவில்லை. மாறாக 17வது திருத்தத்தை நாசம் செய்யும் வகையிலும் அதீத பலத்தைப் பெறும் வகையிலும் இந்த திருத்த யோசனைகள் அமைந்துள்ளன. இது பாரதூரமானது, மக்கள் துரோகமானது. எனவே இது தோற்கடிக்கப்பட வேண்டும். ஆதற்கு இந்நாட்டு மக்கள் சகலரும் ஒன்று திரள வேண்டியது அவசியமாகும் எனக்கூறியிருக்கிறார்.

ஐக்கிய சோசலிசக் கட்சி, அரசாங்கம் முன்வைத்துள்ள அரசியல் அமைப்புத் திருத்தங்கள் மிகவும் பயங்கரமானவை, சர்வாதிகார ஆட்சிமுறைக்கு வழியமைக்கும் ஒரு செயற்பாடாகும் . இதனை முறியடிக்கும் பொருட்டு அரசியல் கட்சிகள், தொழிற்சங்க அமைப்புக்கள், மாணவர் அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் எனக்கோரி அறிக்கையொன்றை விடுத்திருக்கின்றது. அக்கட்சியின் பிரதான செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய அறிக்கை விடுத்திருக்கின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதிர்வரும் திங்கட்கிழமை கூடி அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக ஆராயவுள்ளதாக அறிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் வீரகேசரிக்கு கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு கூறியிருக்கிறார். சுரேஷ் பிரேமச்சந்திர் மேலும் கூறுகையில் அரசியலமைப்புத் திருத்தம் என்பது ஜனாதிபதியின் பதவிக்கால நீடிப்பாக மட்டும் நாம் பேசாமல் இருந்து விடமுடியாது. தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரையிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியன. முக்கியமாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவை இல்லாமல் செய்தல் போன்ற விடயங்கள் குறித்து அதிகாரப் பகிர்வு விடயத்தில் ஏமாற்றத்தைத்தருவன எனக்குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி, திருத்தத்தில் காணப்படும் ஒவ்வொரு அம்சங்களும் இதுவரை மக்கள் அனுபவித்து வந்த அற்ப சொற்ப சுதந்திரங்களையும் ஜனநாயக உரிமைகளையும் குழிதோண்டிப் புதைப்பதாகவே அமையும் எனக்கண்டனம் தெரிவித்திருக்கிறது. கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச்செயலாளர் சி.க.செந்தில்வேல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வறிக்கையில், இந்த நாட்டின் உழகை;கும் மக்கள் மீதும் ஒடக்கப்படும் தேசிய இனங்கள் மீதும் அக்கறை உள்ள ஒவ்வொருவரும் இத்திருத்தத்தை எதிர்த்து நிற்கவேண்டும் . இன்றைய அரசியலமைப்பை முற்றாக மாற்றி அமைக்கும் பாதையில் ஜனநாயகத்தையும் மக்கள் நலனையும் வென்றெடுத்து பாதுகாக்கும் வயைகில் நேர்மையான இடதுசாரி, ஜனநாயக முற்போக்கு சாக்திகள் ஒன்றிணைந்து செயல்பட முன்வரல் வேண்டும் என்றும் தெரிவிக்க்பபட்டுள்ளது.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், சில தமிழ், முஸ்லிம் கட்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியலமைப்புத் திருத்ததால் தமிழ் பேசும் மக்களுக்குப் பாதிப்பில்லையென் கூறி 18 வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவளிக்க முனைவது அரசியல் மோசடி எனக்குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

த அலயன்ஸ் ஒவ் மீடியா எனப்படும் ஊடக கூட்டமைப்பும் 18 வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றது. மக்கள் மத்தியில் கலந்துரையாடலை மேற்கொண்டு திருத்தங்கள் பற்றி கருத்தொருமைப்பாடு கண்ட பின்னரே அரசியல் யாப்பில் திருத்தங்கள் செய்வது எனும்; ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறையை மீறி ஒரு அவசரகால சட்டமூலமாக அரசியல் யாப்பிற்கு திருத்தங்கள் கொண்டுவரப்படுவது அபயகராமான போக்காகும் என ஊடகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த திருத்தங்களுக்கான யோசனைகளை உன்னிப்பாகக் கவனத்தில் எடுத்து அவை ஜனநாயகத்திற்கும் நல்லாட்சிக்கும் அரசாங்க சேவையின் சுதந்திரத்திற்கும் இளைக்கக்கூடிய தீங்குகளை யதார்த்தமாக மதிப்பிட வேண்டும் என்றும் ஊடக கூட்டமைப்;பு மக்களை கேட்டிருப்பதுடன், மக்களது இணக்கப்பாடின்றி கொண்டுவரப்படும் ஜனநாயகத்திற்குப் புறம்பான யோசனைகளுக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும் என்றும் கோரியுள்ளது.

தேசிய பிக்கு முன்னணி, அரசாங்கத்தின் திருத்த யோசனைகள் நாட்டை சர்வாதிகாரத்திற்கும் தோல்வியுற்ற இராஜ்ஜியம் ஒன்றுக்குமே கொண்டு செல்லும், மக்களாட்சிக்கு எதிரான திருத்த யோசனைகளுக்கு எதிராக இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம் என அறிவித்துள்ளது.

தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் ஊவா மாகாண சபையின் உறுப்பினருமான கே.வேலாயுதம் இத்திருத்தினை தோற்கடிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுமாறு கோரியிருக்கிறார்.

தொழிற்புலமையாளர் சங்கமும் திருத்தம் குறித்து கவலை தெரிவித்திருப்பதுடன் அதனை முpளப்பரிசீலிக்குமாறு வேண்டுகோள் விடு;த்திருக்கிறது.
கொமும்பு பேராயர் டுலிப் டி சிக்கேராவும், 18 வது அரசியலமைப்புத் திருத்தத்தினை அரசாங்கம் மீளப்பெற வேண்டும் எனக் கோரிக்கை விடு;த்திருக்கிறார்.

18 வது அரசியலமைப்புத் திருத்தத்தினை நிறைவேற்றல்

அரசாங்கம் இப்போது ‘அதி உயர்ந்த பலத்துடனும் பிரபல்யத்துடனும்’ விளங்குவதால் விரைந்து செயற்பட்டு யாப்பு மாற்றங்களை கொண்டு வந்துவிடும் என கருதப்படுகிறது. அதற்குத்தேவையான பாராளுமன்ற மூன்றிலிரண்டு பெரும்பாண்மைப் பலத்தினை அராசங்கம் பெற்றிருக்கிறது.

முஸ்லிம் காங்கிரஸ், 18 வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவளிக்கும் முடிவை முன்னெடுத்திருக்கிறது. ஆரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த தீர்மானமானது, ஜனாதிபதிக்கும் முஸ்லிம் காங்கிரஸூக்கும் இடையில் ஐந்து வருடகாலமாக நிலவிய கடும் முரண்பாட்டையும் விரோதப் போக்கையும் எளிமைப்படுத்தும் நடவடிக்கையாக நோக்கப்படவேண்டும் என கூறப்படுகிறது. மேலும் முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் எம்.பி. யுமான பஷீர் சேகுதாவுத் கேசரிக்கு வழங்கிய பேட்டியில் ( 04.09.2010) ‘ஜனாதிபதியினுடைய எதிர்கால அரசியலுக்கும் அரசாங்கத்தின் எதிர்கால அரசியற் சுபீட்சத்திற்கும் தேவைப்படும் மூன்றிலிரண்டு பெரும்பாண்மையை முதன்முதலாக பெற்றுக்கொடுக்கும் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் வெளிக்காட்டப்பட்டிருப்பது அரசியலில் முக்கிய திருப்பமாக மாத்திரமன்றி முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் இத்தீர்மானம் மிக்க நன்மை பயக்கும் என்றே நான் நம்புகின்றேன்.’ எனக்குறிப்பிட்டிருக்கிறார்.

பஷீர் சேகுதாவுத் கேசரிக்கு வழங்கிய பேட்டியில், மையத்தேசிய வாதம் என்றழைக்கப்படக்கூடிய மோசமான அரசியற் போக்கை நிர்ணயிக்கின்ற நிலை நாட்டிலும் அரசாங்கத்திடமும் வளர்ந்து வந்திருக்கின்றது. இந்த மையத் தேசிய வாதம் எப்போதும் சிறுபாண்மையினருக்கு அநியாயம் இழைக்கக்கூடியது. மற்றயவர்களை அடிமைப்படுத்த்கூடியது. எனவே இந்த நிலையைத் தடுத்து நிறுத்த வேண்டிய தேவை என்பது சிறுபாண்மை இன அரசியலிலும் இடதுசாரி அரசியலிலும் மிக முக்கியமானது. மையத் தேசிய வாதத்தை நோக்கி நகருகின்ற சிங்கள பேரினவாதத்தின் ஒரு அடையாளமாகக் கூட இந்த அரசாங்கத்தை நாம் பார்க்கலாம். எனவே இந்த அரசை அதிலிருந்து தடுத்து நிறுத்த சிறுபாண்மையினருடைய ஆதரவை வழங்குவது என்ற அரசியல் வியூகம் முக்கியமானதாகும் எனத’ தெரிவித்திருக்கின்றார்.

ஐக்கிய தேசயிக் கட்சியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளனர். பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பிரான லஷ்மன் செனவிரத்தன, பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பிரான எ.பி.ஏர்ல்.குணசேகர, காலி மவாட்ட பாராளுமன்ற உறுப்பிரானமனுஷா நாணயக்கார ஆகியோரோ அரசாங்கத்தின் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவு வழங்க முன்வந்தள்ளனர். ஆரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தினால் நாட்டுக்கோ பொதுமக்களுக்கோ எவ்விதமான தீங்கும் ஏற்படப்போவதில்லை என அவர்கள் தொரிவித்திருக்கின்றனர்.

அரசாங்கத்தில் அங்கம் வகித்து வருகின்ற ஐக்கிய சோசலிச முன்னணியிலுள்ள பிரதான கட்சிகளான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமாசமாஜக் கட்சி, இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகள் 02.09.2010 விhழனன்று இவ்விடயம் தொடர்பாக கூடி ஆராய்ந்த போதும் எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொளள்வில்லை. ஆயினும் இக்கட்சிகள் இவ்விடயத்தில் விசனமடைந்திருப்பதாக கருதப்படுகிறது. இம்மூன்று கட்சிகளும் பாராளுமன்றத்தில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இக்கட்சிகள் தீர்மானத்தை மேற்கொள்ள எதிர்வரும் திங்கட்கிழமை சந்திக்கவுள்ளர்கள்.

ஜே.வி.பி யினர் அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர்கள் பலரும் இவ் அரசியலமைப்புத் திருத்தத்தினை வரவேற்கவில்லை எனவும் அவர்கள் இத்திருத்தினை எதிர்த்து செயற்படுவார்கள் எனவும் தெரிவித்திருக்கிறது.

மேலாக அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பிரசாரங்களை மேற்கொண்டு எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டங்களை தோற்கடிப்பதற்குரிய சகலவற்றையும் மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன ஆளும் கட்சி உறுப்பினர்களை வலியுறுத்தியிருக்கிறார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 59 வது நிறைவாண்டு விழாவில் பேசும்போது அவர் இதனைக்குறிப்பிட்டிருக்கிறார். அதே வேளை கம்பளையில் ஸ்ரீ10லங்கா சுதந்திரக் கட்சியினர் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவான பேரணியை நடாத்தியுமுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிய அரசாங்கத்தின் பாராளுமன்றக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே வேளை எதிர்க்கட்சிகளின் பாராளுமன்றக் கூட்டமங்கள் பாராளுமன்ற கட்டடித்தொகுதியிலும் நடைபெறவிருக்கின்றது.

எதிர்வரும் 09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இத்திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படலாம் என்றே கருதப்படுகிறது. அரசாங்கத்தின் உள்ளிருந்து எதிர்ப்பக்கள் மற்றும் மக்கள் மத்தியலான எதிர்ப்புக்கள் ஏற்படா வண்ணம் ஆளும்கட்சி காரியங்களை மேற்கொண்டு வருகின்றது. ஜனநாயகத்தைக் கோருகின்ற இலங்கை அரசியல் சக்திகள் உண்மையில் இவ்விடயத்தில் வெற்றி பெறுவார்களா அல்லது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு முடியாட்சிக்கு ஆட்சி முறையொன்று உருவாக்கப்படுமா?

இவ்வினாவிற்கப்பால் வேறு சில முக்கிய விடயங்கள் குறித்து நாம் கவனத்தைச் செலுத்த வேண்டியிருக்கிறது. இலங்கையின் அரசியல் நிலவரம் குறித்தும் அரசியல் பிரமுகர்கள் குறித்தும் நாம் பட்டறிவினைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இலங்கையில் கட்சி அரசியல் முறைமை இல்லாதொழிக்கப்பட்டிருக்கின்ற நிலைமை, தேசிய – இன வாதத்திற்காக அயராது பாடுபடும் தலைவர்கள் சர்வ அதிகாரங்களை கையகப்படு;திக் கொள்ள முனையும் போக்கு, சிங்கள – தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் பிளவுற்று நிற்கின்ற நிலை குறித்து நாம் கவனத்தைச் செலுத்த வேண்டியிருக்கிறது. இலங்கையில் முதலாளித்து ஜனாநாயக உரிமைகளைப் பெறுவதற்காக மக்கள் முதலாளித்துவ அரசியல் தலைமைகளின் கீழும் பிற்போக்குத் தலைமைகளின் கீழும் தான் அணிதிரள வேண்டியிருக்கிறது. இலங்கையில் முதலாளித்து ஜனாநாயக உரிமைகளைப் பெறுவதற்கான ஒரு அரசியல் தளம் பலம் பெற்று எழுமா என்பதனை நாம் மிக விரைவில் கண்டறியலாம்.

வன்னியில் யுத்தம் முடிவடைந்து ஒரு குறுகிய காலத்தினுள் தென்னிலங்கை மக்கள் தங்கள் சனநாயக உரிமைகளுக்கெதிரான ஒரு நெருக்கடி நிலையினை சந்திக்க வேண்டியிருக்கிறது. ஆட்சியாளர்கள் இனம், மதம், குழுக்கள் என்ற எந்த வகையிலாவது ஒடுக்குமுறைக்குள்ளாக்குகையில் அதனை தமது குறுகிய நலம் சார்ந்து ஆதரித்து நிற்பதுவும் கண்டும் காணமால் நிற்பதுவும் அடிப்படையில் ஒடுக்குமுறைகள் பரந்து பட்;டு வளர்ந்து செல்வதற்கு துணைபுரிந்து விடுகிறது என்பதை இலங்கை நிலவரம் மீண்டும் நிரூபித்திருக்கிறது. மேலாக ஒடுக்குமுறைக்கெதிராகப் போராடுகின்றவர்கள் குறுகிய நலம் சார்ந்து நின்று செயற்படுவதனால் பரந்து பட்ட மக்களை அணிதிரட்டி ஒரு பெரும் மக்கள் இயக்கத்தினை உருவாக்க முடியாமலும் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள மடியாமலும் போகவே துணைபுரியும். இலங்கையில் தோன்றியுள்ள சனநாயக மறுப்பிற்கான அரசியல் சக்திகள் அனைத்து மக்கள் நலன் சார்ந்தும் நின்று செயற்படத் தயங்கிவருகின்றன என்பதிலிருந்தே பிரச்சினைகள் தோன்றுகின்றன.

வடகிழக்கு தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பாரிய யுத்தம் ஏன் மேற்கொள்ளப்பட்டது, யுத்தத்தின் போது போர்க்கற்றங்கள் இழைக்கப்பட்டனவா என்பவை குறித்து சிங்கள அரசியல்;தலைவர்களும் மக்களும் சிந்திப்பதிலிருந்தே இலங்கையின் சனநாயக உரிமைகளுக்கான இயக்கத்தினை பெரும் சக்தியாக வளர்த்தெடுக்க முடியும்.
தமிழ்த் தலைவர்களும் மக்களும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்களில் பங்கேற்பதன் மூலமே தங்களுக்கான உரிமைகளைப் பெற முடியுமென்பதை உணரவேண்டும்.

Exit mobile version