Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை தேசிய கீதம்: இழந்து போன வசந்தத்தின் குறியீடு : T.சௌந்தர்

ananda1இலங்கை பாராளுமன்றத்தில் இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியுடன் தமிழையும் இணைக்க வாசுதேவ நாணயக்காராவால் கொண்டு வரப்பட்ட கோரிக்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சயால் நிராகரிக்கப்பட்டது.

“ஒரு நாட்டின் தேசிய கீதம் எனபது ஒரு மொழியில் தான் பாடப்படுகிறது .இரு மொழியில் பாடப்படும் ஒரு நாட்டைத் தமக்குக் காட்டும்படி ” கேட்டு நாணயக்காராவின் “நாணய”த்தையும் பரிசோதித்திருக்கிறார். ஜனாதிபதி கேட்ட கேள்விக்கு நாணயக்காரா என்ன பதிலி றுத்தார் என்பது எந்த ஊடகங்களிலும் வெளியாகவில்லை.அல்லது பதிலளிக்க முடியாத நாணயக்காரா , ஜனாதிபதியின் உள்நோக்கத்தை அறிந்து ” நாணயமாக ” பதிலளிக்காமல் விட்டாரா என்பதை “பத்திரிகாதர்மத்திடம்” விட்டு விடுவோம்.

ஒரு நாட்டின் தேசிய கீதம் என்பது எல்லா நாடுகளிலும் ஒரு மொழியில் மட்டும் தான் பாடப் படுகிறதா ? இல்லை என்ற பதில் சொல்லி பல நாடுகளை உதாரணம் காட்டலாம் .

சுவிஸ் ,கனடா ,தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுகின்றன.

ஒரு நாட்டின் இன , மத நல்லிணக்கத்தை அரசே ஏற்ப்படுத்த வேண்டும்.ஆனால் வலிந்து ஒரு மொழியை நீக்குவது பல்லின மக்களிடையே முரண்பாடுகளை வளர்க்கவே உதவும்.ஆட்சியாளர்களின் நோக்கம் அதுவே என்பதை சமீபத்திய சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன.அதில் ஒரு அங்கமாகவே தேசிய கீத விவகாரம் பயன்பட்டுள்ளது.ஆனால் இந்த தேசிய கீதம் பிறந்த பொழுதிலிருந்து பல நெருக்கடிகளை சந்தித்ததுடன் அரசியல்வாதிகளின் தலையீடுகளால் தொந்தரவுக்கும் ஆளாகியே வந்துள்ளது.

அவர்களின் அளவுக்கதிகமான தலையீடு இலங்கை தேசிய கீதத்தை எழுதிய இசைக்கலைஞரான ஆனந்த சமரக்கோன் [ 13.01.1911 – 05.04.1962 ] அவர்களின் மரணத்திற்கும் காரணமாகியது.

” நமோ நமோ மாதா ” என்று ஆனந்த சமரக்கோன் எழுதிய வரிகள் ” ந ” என்ற எழுத்தில் ஆரம்பிப்பதால் நாட்டிற்கே துரதிஸ்டம்,அமங்கலம் என்ற சாஸ்த்திர நம்பிக்கையின் அடிப்படையில் ” நமோ ” என்பதற்குப் பதிலாக ” ஸ்ரீ லங்கா மாதா “என்று ஆனந்த சமரக்கோன் அவர்களின் ஒப்புதல் இல்லாமலேயே மாற்றினார்கள்…இந்த சம்பவம் அவரது மரணத்திற்கும் காரணமாகியது எனலாம்.

இதனால் மனமுடைந்த அவர் அளவுக்கு அதிகமான தூக்கமாத்திரைகளை உட் கொண்டு மரணமடைந்தார்.இறப்பதற்கு முன் அவர் டட்லி சேனாநாயக்காவுக்கு எழுதிய கடிதத்தில்

” என்னுடைய குரலை நசுக்கி விட்டார்கள்.என்னுடைய மரணம் மட்டுமே என் வேதனையைப் போக்கும் ” என்று எழுதினார்.

” அரசும் ,அரசு சார்ந்த பண்டிதர்களும் சமரக்கோனைக் கொன்று விட்டார்கள் ” என்று சிங்களப் பத்திரிகைகள் எழுதின.

ஆனந்த சமரக்கோன் எழுதிய இலங்கைத் தேசிய கீதம் எந்த இனத்தையும் புகழாலாமல் ,இனவாத கருத்துக்களை விதைக்காமல் எழுதப்பட்டமை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.சாந்திநிகேதனம் என்கிற தாகூரின் கலை கல்லூரியில் கலை பயின்ற ஆனந்த சமரகோனிடம் தாகூரின் தாக்கம் இருந்தது.

தாகூரின் ” ஜன கண மன ” என்ற இந்திய தேசிய கீதத்தின் சாயல் இலங்கை தேசிய கீதத்தில் கடுமையாகத் தெரிவதை நாம் காணலாம்.எனினும் இந்திய தேசிய கீதத்தை விட இனிமையானது இலங்கைத் தேசிய கீதம் என்பது மறுக்க முடியாத உணமையாகும்.

இந்தியாவெங்கும் ஒலிக்ககூடிய ராகமான பிலகரி ராகத்தில் இந்திய தேசிய கீதத்தை தாகூர் அமைத்தார்.வட இந்தியாவில் இந்த ராகத்தை பிலவால் என்று அழைப்பர்.தமிழ் செவ்வியல் இசையில் இந்த ராகம் [ பிலகரி ] வசந்த காலத்திற்கு உரிய ராகமாக போற்றப்படுகின்றது.இருந்தாலும் வங்காள நாட்டுப்புற இசையிலும் மிக அதிகமான அளவில் பயன்படுகின்ற ராகம் என்பதால் தான் தாகூர் இதைப் பயன்படுத்தியிருக்கின்றார்.

வசந்தத்தை எதிர் பார்க்கும் ஒரு வறிய குடும்பத்தின் கதையைச் சொன்ன சத்யஜித்ரே அவர்களின் படமான ” பாதர் பாஞ்சாலி ” என்ற கிராமிய படத்தின் பிரதான இசையாக [Theme Music ] இந்த பிலகரி ராகத்தையே , பல் வேறு சூழ் நிலைகளுக்குப் பொருத்தமாக அந்த படத்தின் இசையமைப்பாளர் இசைமேதை ரவிசங்கர் அமைத்திருப்பார்.

தமிழ் படத்திலும் இந்த ராகத்தின் ரீங்காரத்தை , கிராமப்புற அழகின் பின்னணியில் புல்லாங்குழல் இசையாக கவிக்குயில் படத்தில் இளையராஜா பயன்படுத்தியிருப்பார்.

தெலுங்கு விவசாயிகளின் அவல நிலையைஉண்மையாகப் படம் பிடித்துக்க் காட்டிய படமான ” மாபூமி “[ 1979 ] [எங்க நிலம் ] என்ற கிராமிய படத்தில் Title பாடலான ” பல்லே தூரி பில்ல காடா ” என்ற சோகம் ததும்பும் பாடலும் பிலகரி ராகத்திலேயே அமைக்கப்பட்டது.அந்த படத்தின் இசையமைப்பாளர்களில் ஒருவரான Goutam Ghosh என்பவர் வங்காளத்தைச் சேர்ந்தவர்.

இனிமையும் ,சோகமும் ,அழகும் ததும்பும் ஓர் அருமையான ராகத்தில் அமைந்த இனிய இசை கொண்டது இலங்கை தேசிய கீதம்.

இன்று தமிழ் மக்களின் இழந்து போன வசந்தத்தின் குறியீடாக இலங்கையின் தேசிய கீதமும் அமைந்து விட்டது.

Exit mobile version