Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் பற்றிய எனது கணிப்பீடு – பின்னூட்டங்களுக்கான எதிர்வினை : பி.ஏ.காதர்

 எனது கட்டுரையின் பிரதான நோக்கம் ஜே.ஆரின் யாப்பு அறிமுகப்படுத்திய தேர்தல்முறையும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட் ஜனாதிபதி முறையும் சாசன சர்வாதிகாரத்திற்கு (constitutional dictatorship) நாட்டை இட்டுச்சென்றுள்ளது – இலங்கையின் தற்போது நடைமுறையிலுள்ள ஜனாதிபதி தேர்தல் முறை ஜனாதிபதியாக ஆட்சியிலிருப்பவருக்கே சாதகமாக உள்ளது – இத்தேர்தல்முறை பல்வேறு ஊழல்களுக்கும் மோசடிகளுக்கும் அப்பட்டமான ஜனநாயக அத்துமீறல்களுக்கும் ஊற்றுமூலமாயிருக்கிறது என்பதை கோடிட்டு காட்டுவதாகவே இருந்தது.

ஆகவே அக்கருத்தை வலியுறுத்துவதற்கும் நிருவுவதற்கும் தேவையான தரவுகளை அதன் எல்லைக்குட்பட்டு சுருக்கமாக மாத்திரமே என்னால் தரமுடிந்தது.

எனது கட்டுரை வெளிச்சம் போட்டு காட்டிய திசையை புரிந்து கொண்டு பலர் தங்கள் அபிப்பிராயங்களை மனம்விட்டு பேசியிருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றிகள்.

சிலர் மையக்கருவுக்கு அப்பால் சில தரவுகளையும் நான் வெளியிட்ட மேலதிக கருத்துகளையும் பற்றி விவாதித்திருக்கிறார்கள். இது கூட தவறில்லை. ஆனால் சிலர் மாளிகையை பற்றி பேசுவதற்கு பதில் அதில் வைக்கப்பட்ட பூந்தொட்டிகளில் குறைகாண முயன்றிருக்கிறார்கள். கருவை புறக்கணித்து விட்டு தரவுகளில் சில மயக்கங்களை ஏற்படுத்தி அதனை ஊதி பெருசாக்கி ஆரோக்யமான விவாதத்தையே திசை மாற்றி கடத்திச்செல்ல முயன்றிருக்கிறார்கள்.

நான் சிறுபான்மை மக்கள் குறிப்பாக மலையக தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்தால் ஏமாற்றமடைந்திருந்திருப்பதாக இருவர் எழுதியிருக்கிறார்கள்.

உண்மையில் நான் மகிந்த ராஜபக்ஷவின் குடும்ப சர்வாதிகார ஆட்சியை நேசிப்பவன் அல்ல. இத்தேர்தல் வெற்றி கொள்ளையடிக்கப்பட்ட வெற்றி என நான் கூறும் போது எனது நிலைப்பாட்டை புரிந்துக் கொண்டிருக்க வேண்டும். எனது ஆத்திரமெல்லாம் எமது தூரநோக்கற்ற அரசியலில் அன்றாடம் காய்ச்சிகளாக நாளைக்கழிக்க விரும்பும் எமது சிறுபான்மை சமூகத்தின் தலைவர்கள் மீதுதான். குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் தலைவர்களை நான் சாடுகிறேன்.

வடக்கு மக்களின் வாக்கை வேட்டையாடுவதற்காக இவர்கள் சிங்கள மக்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமான தமிழ் மக்களின் எதிரிகள் என தமிழ் மூழக்கம் செய்து கொண்டு மறுபுறத்தில் ஐ.தே கட்சியின் சிங்கள பேரினவாத தலைவர்களின் பாதங்களுக்கு பூஜை செய்த அந்த வங்குறோத்து அரசியலும் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவதற்கு ஒருகாரணமாய் அமைந்தது.

அதே தவறைத்தான் இப்போதும் இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஐதே கட்சியும் சுதந்திர கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வந்திருக்கின்றன. இதுவரை நாட்டில் ஏற்பட்ட உண்மையான மாற்றம்தான என்ன? மத்தியில் ஜனநாயகரீதியான மாற்று கட்சி ஒன்றை அமைப்பதைப்பற்றியும் அதன்மூலம் அடிப்படை ஜனநாயக உரிமைகளையாவது வென்றெடுப்பதைப்பற்றியும் இத்தனை அழிவுகளுக்கு பின்னரும் இவர்கள் சிந்திக்க வில்லையே. அதற்காக நான் ஆத்திரப்படுகிறேன். இன்று வடக்கின் பேரழிவால் ஏற்பட்டிருக்கும் அவலங்களுக்காகக் உரத்து குரல் எழுப்பி அதற்கான ஜனநாயகவரம்புக்குற்பட்ட போராட்டங்களையாவது நடத்தி மனிதநேயசக்திளை உசுப்புவதற்கு பதிலாக அரசியல் பிச்சை பாத்திரம் ஏந்தித் திரியும் இவர்களைப் பார்த்து ஆத்திரப்படுகிறேன். அவ்வளவுதான்.

மலையக மக்களின் நாடற்றவர் பிரச்சினை ஐ.தே கட்சி காலத்தில் தீர்க்கப்பட்ட பின்னணிபற்றியோ இம்மக்களின்; வாக்குரிமையையும் பிரஜா உரிமையையும் 1948ல் இதே ஐதே கட்சி பறித்ததைப் பற்றியோ இங்கு நான் ஆராயமுற்பட வில்லை. இக்கட்டுரையின் உள்ளடக்கத்திற்கு அப்பாற்பட்ட விடயங்கள் அவை.

யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் 1982 ல் போட்டியிட்ட கொப்பே கடுவ தோல்வியடைந்தார் என்பது சரியான கூற்றுதான். எனினும் இது ஒரு விதிவிலக்காக நடந்த விடயம் என்பதையும்; நான் முன்வைத்த கருத்தின் சாராம்சத்தை அது மாற்றிவிடவில்லை என்பதையும் பின்னர் நான் தரும் புள்ளி விபரங்களிலிருந்து தெரிந்து கொள்ள முடியும்.

எனது கருத்துகளோடு முரண்படுவதற்கு இவர்களுக்கு உரிமையிருக்கிறது. ஆயிரம் கருத்துகள் முட்டி மோதுவதை வரவேற்கிறேன். நான் உங்களது பல கருத்துகளோடு உடன்படாத போதும் நாகரிகமான முறையில் நீங்கள் உங்கள் கருத்துகளை முன்வைத்திருக்கிறீர்கள். அதற்காக நான் நன்றி கூறுகிறேன். அதேசமயம் எனது கட்டுரையின் அடிப்படை கருப்பொருளில் கூடுதலான கவனம் செலுத்தி அதில் உங்கள் கருத்துகளை என்னோடும் வாசகர்களோடும் பரிமாறிக்கொள்ளுங்கள் என வேண்டுகிறேன்.

அதேசமயம்…

ஒருவர் தானே அரசியல்மேதாவித்தனத்தின் ஏகபோக உரிமையாளன் – மற்றவர்கள் யாரும் வாய்திறந்தால் அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் – என்ற மனோபாவத்திலிருந்து கொண்டு நக்கல் பாணியில் ‘இது உண்மையில்லை’ ‘அது உண்மையில்லை’ என தன்னைத்தானே நீதிபதியாக நியமித்துக் கொண்டு தீர்ப்பு கூறி ‘இதற்கு என்ன அர்த்தம்?’ என கேள்வி வேறு கேட்டிருக்கிறார். அவருக்கு அவரது பாணியில் அர்த்தம் சொல்ல வேண்டாமா? ஒவ்வொன்றாக வருகிறேன்.

‘இருதடவைகள் ஆட்சியிலிருந்த சந்திரிகா மீண்டும் போட்டிபோடமுடியாத நிலையில் அப்போது நிலவிய புலிகளின் அச்சுறுத்தலின் மத்தியில் வேறு எவரும் போட்டியிட துணியாத வேளையில் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளரானார்.’ என்ற எனது கூற்றுக்கு அவர் பதில் கூற முன்னமே ‘இது உண்மையல்ல’ என அடித்து கூறிவிட்டு அவரது கூற்றை பின்வருமாறு நியாயம் கற்பிக்க முயல்கிறார்.

‘இரண்டு அரசியல் கட்சிகளிலுமே தலைமைத் தகுதி வாய்ந்த யாருமே இல்லாத அவவலம் அன்று நிலவியது. இன்றுந்தான்’ என அவர் கூறுகிறார். உண்மையில் அநுர பண்டாரநாயக்க டி.எம் ஜயரத்ன மங்கள சமரவீர நிமால் சிறிபால டி சில்வா சுசில் பிரேம்ஜயந்த் ரத்ணசிறி விக்ரமநாயக்க மைத்திரி சிறிசேன போன்ற பல கட்சி தலைவர்கள் சுதந்திர கட்சியிலும் கரு ஜயசூரிய ஜுனியர் பிரேமதாச போன்ற கட்சி தலைவர்கள் ஐதே கட்சியிலும் அன்றிருக்கவே செய்தனர்.

நாட்டுக்கொரு தகுதிவாய்ந்த தலைவரையல்ல ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறக்கூடிய ஒரு வேட்பாளரையே கட்சிகள் தேர்ந்தெடுத்தன என்பதே உண்மை.

மேலும் அவர் தொடர்கிறார்: ‘அனுரவுக்கு போட்டியிடும் ஆவல் இருந்தாலும் உடல்நலக்குறைவு உட்பட பல்வேறு குறைப்பாடுகள் இருந்தன.’ (பின்னர் அவர் அனுர தொடர்பான தனது கூற்றுக்கு மேலும் விளக்கம் தந்திருக்கிறார். அவருக்கு நியாயம் வழங்குவதற்காக அதையும் இங்கு சேர்த்துக் கொள்வோமே.) ‘காரணம் உடல்நலக்குறைவு மட்டுமென்று நான் கூறவில்லை. பல நடத்தைக் கோளாறுகளும் காரணமாயிருந்தன.’

அப்படியானால் இவரின் கூற்றுப்படி அநுர போட்டிபோடாததற்கு இரண்டு காரணங்களே இருந்தன: ஒன்று உடல்நலக் குறைவு மற்றது ‘பல நடத்தைக் கோளாறுகள்’ இதனை அன்றைய யதார்த்த நிலைமையோடு ஒப்பிட்டுப்பார்ப்போமே. 2005ல் அநுர பண்டாரநாயக்க நீண்டகாலம் நோயாளியாக இருந்தபோதும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி போட முடியாதளவுக்கு கடும்நோய்வாய்ப்பட்டிருக்கவில்லை.

2004ல் சுற்றுலாத் துறை கைத்தொழில் முதலீட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த அவர் லக்ஷ்மன் கதிர்காமரின் மறைவுக்குப்பின்னர் காலியான வெளிவிவகார அமைச்சார் பதவிக்கு 2005 ஆகஸ்ட் மாதந்தான்; நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு டெல்லிக்கும் பல்வேறு நாடுகளுக்கும் விஜயம் செய்தார். ஐநா வின் 60வது ஆண்டு பூர்த்தி விழாவிலும் கலந்து கொண்டார். பலநடத்தைக் கோளாறு இவரிடம் மாத்திரந்தான் இருந்தது என்றோ மகிந்த புனிதர் என்றோ எவராலும் வாதிட முடியாது. இதுவே உண்மை.

இன்னும் அவர் தனது வாதத்தை முடிக்கவில்லை. அவரது வாதத்தின் முக்கிய விடயமே அப்புறம்தான் முன்வைக்கப்படுகிறது – இவ்வாறு:

‘2005இல் தென்னிலங்கையில் சிங்கள அரசியல்வாதி யாரும் வெளியே நடமாட முடியாதளவுக்கு மோசமான நிலைமை இருந்ததாகவும் கூறமுடியாது. அப்போது விடுதலைப்புலிகளின் தாக்குதல் எந்த சிங்கள அரசியல்வாதியையும் (படையினரைக் கூட) இலக்கு வைக்கவில்லை.’

அப்போது ‘ரணில் – விடுதலைப்புலிகள்’ சமாதான ஒப்பந்தம் அமுலில் இருந்த காலம். ஐதே கட்சி தலைவர்களை விட சுதந்திரகட்சி தலைவர்கள் தமது பாதுகாப்பைப் பற்றி பெரிதும் அக்கறை கொண்டிருந்தனர் என்பதே உண்மை. இதை விபரமாக நீட்டி முழங்காமல் என்னிடம் ஆதரம் கேட்கும் இவருக்கு மறுக்க முடியாத ஒரு ஆதாரத்தை – உலகறிந்த செய்தியை – மாத்திரம் இங்கு தருகிறேன். ‘அப்போது விடுதலைப்புலிகளின் தாக்குதல் எந்த சிங்கள அரசியல்வாதியையும் (படையினரைக் கூட) இலக்கு வைக்கவில்லை.’ என்று அடித்துக்கூறும் இவர் 2005 ஆகஸ்ட் 12பத்திரிகைகளை பார்த்தால் போதும் என்னோடு விதண்டாவாதம் புரியத் தேவையில்லை.

அப்போது வெளியில் நடமாடுவதற்கு மாத்திரமல்ல தமது வீட்டுக்குள்ளேயே இருப்பதற்கு அஞ்ச வேண்டியிருந்தது என்பதே உண்மை. ஏனெனில் 2005 ஆகஸ்ட் 12 திகதி தனது வீட்டில் நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த அப்போதைய வெளிவிவகார அமைச்சரும் ஒரு சமயத்தில் இலங்கை பிரதமாராக நியமிக்கப்படவிருந்தவருமான லக்ஷ்மன் கதிர்காமர் புலிகளால் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அவசரகால சட்டம் மீண்டும் அமுலுக்கு வந்ததுடன் அரசாங்க அமைச்சர்களின் வீடுகளுக்குள்ளும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

அடுத்து அவர் முதலாவது ஜனாதிபதி தேர்தல் 20.10.1982 பற்றி அவர் மீண்டும் அவர் தீர்ப்பு கூறுகிறார்:

சு.க சார்பில் போட்டியிட்ட கொப்பேகடுவைக்கு தமிழ் வாக்குகள் கிடைக்கவில்லை’ என்ற எனது கூற்றிலுள்ள ஒரு சொல்லை தூக்கிப் பிடித்துக் கொண்டு ஒரு கிரிமினல் சட்டத்தரணியைப்போல – ‘இதுவும் உண்மையல்ல’ என முழங்கிவிட்டு,

‘ஏறத்தாழ முற்றாகத் தமிழரைக் கொண்ட யாழ் மாவட்டத்தில் யு.என்.பி. 44780 சு.க 77300 ஜே.வீ.பி. 3098 த.கா. 87263’ என புள்ளிவிபரத்தை தந்து விட்டு ‘இது என்ன கூறுகிறது?’ என கேட்கிறார்.

இதற்கு எனது பதில்: ‘இந்த கேள்வி ஒரு அறைவேக்காடு என்று கூறுகிறது’ என்பதாகும். ஒருவன் ‘பானையிலே சோறு இருக்கிறது. என்று கூறிய போது அங்கு சென்ற பண்டிதர் ஒருவன் பானையில் சோறோடு ஒரு அகப்பையும் இருப்பதைக் கண்டாராம். தனது பாண்டியத்தைக் காட்டுவதற்காக ‘பானையிலே இருப்பது சோறு என்றால் இது என்ன?’ என அகப்பையைக் காட்டி கேட்டாராம். அப்படியிருக்கிறது இவரது மேதாவித்தனம்.

உண்மையை சற்று கவனமாக ஆராய்வோமே. இதோ மேலும் சில புள்ளிவிபரங்கள்: 1982 ஜனாதிபதி தேர்தலில் நாடுமுழுவதும் போடப்பட்ட வாக்குகள் 81.06 சத வீதம். ஆனால் யாழ் மாவட்டத்தில் தான் இலங்கையிலேயே மிகக்குறைவான 228,613 (46.31%) வாக்குகள் போடப்பட்டன. யாழ் மாவட்டத்திலிருந்த 11 தேர்தல் தொகுதிகளில் யாழ்ப்பாணம் கைட்ஸ் நல்லூர் ஆகிய மூன்று தொகுதிகளில் ஐ.தே. கட்சியைச் சேர்ந்த ஜே ஆர் வெற்றி பெற்றார். ஏனைய 8 தொகுதிகளில் சு.க. சார்பில் பேட்டியிட்ட கொப்பேகடுவ வெற்றி பெற்றார். ஆனால் வேடிக்கை என்ன வென்றால் ஜே.ஆர் (44780 – 20.54 வீதம்)

கொப்பேகடுவ (77,300 – 35.46 வீதம்)ஆகிய இருவரும் எடுத்த வாக்குகளை விட ஏனைய அபேட்சகர்கள் எடுத்த வாக்குகள் அதிகம் 92,825 – 42.58 வீதம்.

தமிழ் மக்கள் கணிசமாக அல்லது பெரும்பான்மையாக வாழும் சகல மாவட்டங்களிலும் இவ்விருவரும் பெற்ற வாக்குகள் கீழே தரப்படுகிறது.

cellspacing=”1″ cellpadding=”1″>
1982   ஜனாதிபதித் தேர்தலில்  தமிழ்ப் பிரதேசங்களின் பெறுபேறுகள்.
  மாவட்டம்  ஜே.ஆர்.ஜேவர்த்தன % கொபேகடுவ %
1 கண்டி 289,621 59.80% 178,647 36.89%
2 மாத்தளை 94,031 58.11% 59,299 36.65%
3 நுவரெலிய 109,017 63.10% 57,093 33.05%
4 யாழ்ப்பாணம் 44,780 20.54% 77,300 35.46%
5 வன்னி 32,834 46.42% 23,221 32.83%
6 மட்டக்களப்பு 48,094 40.05% 21,688 18.06%
7 திகமடுகல்ல 90,772 56.39% 53,096 32.99%
8 திரிகோணமலை 45,522 48.64% 31,700 33.87%
9 புத்தளம் 128,877 59.12% 80,006 36.70%
10 பதுளை 141,062 58.67% 88,642 36.87%
11 இரத்தினபுரி 175,903 50.90% 152,506 44.13%
12 கேகாலை 195,444 57.02% 126,538 36.92%

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொப்பேகடுவைக்கு வெறுமனே 18.06 சத வீத வாக்குகளே விழுந்தன. கொப்பே கடுவ ஜனாதிபதி வேட்பாளரா நியமிக்கப்பட்டவுடன் குதூகலமடைந்த சௌ. தொண்டமான் ‘I have no fight in hand’ என்றாராம். கொப்பேகடுவ மலையகத்தில் அந்தளவுக்கு வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட ஒருவர். அன்றைய தேர்தலில் நாடு முழுவதும் அளிக்கப்பட்ட வாக்குகள 6,602,617 (81.06 வீதம்). அப்போது மலையக தமிழ் மக்களின் வாக்குகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. அதனைக் கருத்திற் கொண்டு அளிக்கப்பட்ட மொத்தவாக்குகளில் 25 சத வீதம் தமிழ் பேசும் மக்களுடையது என கணக்கிட்டாலும் அப்போதிருந்த தமிழ் வாக்குகள் 1650654எனக் கொள்ளலாம். அப்படியானால் யாழ்மாவட்டத்தில் கொப்பே கடுவ பெற்ற 77,300 வாக்குகள் 4.68 வீதம் மாத்திரமே. இதை வைத்துக் கொண்டு எந்த மேதாவியும் புள்ளிவிபர சாகசம் புரிய முடியாது.

‘இலங்கை எதிர்நோக்குவது கும்பல் ஆட்சி அது கொடிய அடக்குமுறை ஆட்சியாகவே இருக்கும் அதிலிருந்து நாட்டை மீட்க தேர்தல் அரசியல் உதவுமா? ஐயமே.’ என அவர் ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

 சமூக மாற்றத்தை பாராளுமன்றத்தினூடாக கொண்டு வர இயலாதுதான். ஆனால் தேர்தல் அரசியல் மூலம் அதிகாரத்திற்கு வந்த இக்கும்பல் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பாராளுமன்றத்திற்கு வெளியே நடத்தப்படும் போராட்டங்கள் கூட ஒரு தேர்தலில் முடிந்து யாப்பு சீர்த்தம் மூலம் தூக்கி எறியப்பட முடியும். புரட்சிக்கான சூழல் இல்லாத சமயங்களில் இத்தகைய போராட்டங்கள் மக்கள் ஜனநாயகத்துக்கான பேராட்டத்தின் ஒரு அம்சமாகவே கருதப்படவேண்டும்.

நான் இனி உதிரி விடயங்கள் தொடர்பான கருத்துகளுக்கு பதில் கூற மாட்டேன். எனது நேரத்தை அதில் விரயம் செய்ய முடியாது. எனது மையக்கருத்து சம்பந்தமான அபிப்பராயங்களை எதிர்பார்க்கிறேன்.

மூலக்கட்டுரை :  இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் பற்றிய எனது கணிப்பீடு

Exit mobile version