Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை கூட்டுக் கொலை செய்யும் அரசு, இந்தியா மெல்லக் கொல்லும் அரசு : அருந்ததிராய்(இன்று ஜூன் 12, 2011 பொதுக்கூட்டம்)

பழங்குடி மக்கள் மீதான இந்திய அரசின் காட்டு வேட்டைப் போரைக் கண்டித்து சென்னையில் பிரமாண்டக் கூட்டம் நடந்தது. மூன்றாயிரம் பேர் வரைக் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததிராய், டில்லிப் பேராசிரியர் கீலானி, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் விடுதலை ராஜேந்திரன், தோழர் தியாகு, ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழத்தைச் சார்ந்த அமித் பாதுரி. பேராசிரியர் சாய்பாபா, உள்ளிட்டோ கலந்து கொண்டு பழங்குடி மக்கள் மீதான போருக்கு எதிராக தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
பழங்குடிகள், மாவோயிஸ்டுகள் மீது விமானத் தாக்குதல் நடத்துவதற்கான புறச்சூழலை ஊடகங்களின் உதவியுடன் உருவாக்கிக் கொண்டிருக்கும் முக்கியமான தருணத்தில் நடந்த கூட்டத்தின் பதிவுகள் இங்கே பகிரப்படுகிறது..முதலில் துவக்க உரையாற்றிய தோழர் விடுதலை ராஜேந்திரன்,
” ஒரு மாபெரும் மனிதப் பேரழிவை சந்தித்த தேசீய இனத்தைச் சார்ந்தவர்கள் நாம் என்கிற வகையில் மக்கள் விடுதலைக்காக போராடும் மாவோயிஸ்டுகளை ஆதரிக்க வேண்டும். ஈழ விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் சக்திகள் தண்டகாரண்யாவில் போராடும் பழங்குடி மக்கள் போராட்டங்களோடு தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.பொதுவாக போராடுகிறவர்களைப் பார்த்து காங்கிரஸ்காரர்கள் சொல்கிறார்கள். இவர்கள் தேச விரோதிகள் என்று யார் தேச விரோதி. உள்நாட்டு மக்களின் சொந்தக் குடிகளின் வளங்களை எடுத்து பன்னாட்டு நிறுவங்களுக்கு தாரை வார்க்கு சிதம்பரமும், மன்மோகனும்தான் தேச விரோதிகளே தவிற மண்ணைக் காக்க போராடுகிற மாவோயிஸ்டுகளும் பழங்குடிகளுமல்ல. அவர்கள் தேச பக்தர்கள். என்ன விதமான ஒடுக்குமுறைகளைச் சந்தித்தாலும் நாம் அவர்களை ஆதரிக்க வேண்டும்”” என்றார் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் விடுதலை ராஜேந்திரன்.
தியாகு:  “நம்முடைய சொந்த சகோதர்களான ஈழ மக்கள் சந்தித்த அழிவையே இப்போது பழங்குடி மக்களும் சந்திக்கிறார்கள். இந்த மக்களை எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள் என்றும் குடிமக்கள் என்றும் சொல்கிற அரசுகளோ மக்களைக் கொன்றொழிக்கிறது. இவர்களைத்தான் பாரத் தாய் என்று சொன்னார்கள். உண்மையில் பாரத்தாய் அல்ல பேய். பிள்ளைக்குப் பசித்தால் தாய் அழுவாள். பிள்ளைக்கு ஒரு ஆபத்து என்றால் தாய் பதறிப் போவாள். ஆனால் பாரத்தாயோ அழுத பிள்ளைக்கு விஷம் கொடுத்தாள். உயிர்காப்பாற்று என்று கதறிய குழந்தையை கொடூரமாகக் கொன்றாள். இது ஈழத்தில் நடந்தது. காஷ்மீரில் நடக்கிறது. தண்டகாரண்யாவில் நடக்கிறது. நாம் அழுகிற குழந்தைகளின் பக்கம் நிற்கிறோம். இந்தப் பேயின் கரங்களை எங்கள் காஷ்மீர் குழந்தைகள் வெட்டி வீசுவார்கள். போர் வெறி பிடித்த இந்தியப் பேயை எமது தண்டகாரண்யா போராளிகள் துண்டாடுவார்கள். எங்கள் மக்களை அழித்த இந்தியப் பேயை எமது ஈழத்துக் குழந்தைகள் கழுத்தை அறுத்துக் கொல்வார்கள்”” என்று பேசினார்.
பேராசிரியர் கீலானி : “சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகள் ஆகி விட்டது அப்போதெல்லாம் இவர்கள் வளர்ச்சி பற்றி பேசவில்லை. இப்போது பன்னாட்டு நிறுவனங்களைக் கொண்டு வந்து வளங்களை கொள்ளையடித்து அவர்களிடம் கொடுத்து விட்டு வளர்ச்சி பற்றிப் பேசுகிறார்கள். பெண்களை பாலியல் வன்முறை செய்வதும், கடத்துவதும், கொலை செய்வதும் கொள்ளையடிப்பதும்தான் வளர்ச்சியா? இந்த நாட்டின் பெரும்பலான மக்கள் ஏழைகள் அவர்கள் ஊட்ட்ச்சத்து மிக்க உணவு இல்லாமல் மடிந்து கொண்டிருக்கிறார்கள். அண்மையில் டில்லியில் தீர்ப்பாயம் ஒன்றுக்கு பழங்குடி மக்களை அழைத்து வந்தார்கள். அவர்களிடம் இந்திய உயர்பீடத்தினர் கேட்டார்கள். “மாவோயிஸ்டுகள் ஏன் பள்ளிகளையும் மருத்துவனமைகளையும் தகர்க்கிறார்கள். என்று?” அதற்கு பழங்குடி மக்கள் சொன்னார்கள். அது பள்ளியோ மருத்துவமனையோ அல்ல பள்ளி, மருத்துவமனையை ஆக்ரமித்து அவர்கள் இராணுவ முகாமாக்கி விடுகிறார்கள். ஆகவே மாவோயிஸ்டுகள் அல்ல நாங்கள்தான் அதைத் தகர்த்தோம் என்று. ஆக மக்களை ஆயுதங்களை நோக்கி நகர்த்துவதுதான் இந்திய அரசின் வேலையாக இருக்கிறது. அண்மையில் அருந்ததிராய் சொன்னது போல அங்கே தொண்ணூறு சதவீத பழங்குடிகளும் மாவோயிஸ்டுகள் அல்ல ஆனால் 99% மாவோயிஸ்டுகளும் பழங்குடிகளே என்றார். ஆமாம் அப்படித்தான் நிலைமை இருக்கிறது. போராடும் எல்லா இடங்களுக்கும் இது பொறுந்தும் இல்லையா? காஷ்மீர் சுயாட்சிக்காக நீண்ட காலம் அஹிம்சை வழியில் அமைதி வழியில் போராடினார்கள். பின்னர் வந்த இளைஞர்கள் ஆயுத மேந்தி வீட்டை விட்டு வெளியேறி ஆயுதமேந்திப் போராடுகிறார்கள்.
நீண்ட காலம் நீதி மறுக்கப்பட்ட நிலையில் காஷ்மீரிகளின் சுயாட்சிக் கோரிக்கை வன்முறை வடிவம் பெற்றது. ஒருவன் எப்போது ஆயுதமேந்துகிறானோ அப்போதே அவன் தன் உயிர் பறிக்கப்படுவது பற்றி கவலைப்படுவதில்லை. அதுதான் காஷ்மீரிலும், தண்டகாரண்யாவிலும் நடக்கிறது. அமைதி என்பது நீதியின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதுதான் நம் எல்லோரது விருப்பமும் உரிமை கேட்டுப் போராடும் மக்களுக்கு நியாயமான தீர்வுகளைத் தேடுவதன் மூலமே பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வர முடியும்” என்றார் பேராசியர் கீலானி.
அருந்ததிராய் :  ” பழங்குடி மக்கள் மீதான போருக்கு எதிரான இந்தக் கூட்டத்திற்கு இவ்வளவு பேர் திரளுவார்கள் என்பதை நான் எதிர்ப்பார்க்கவில்லை. இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமர் மன்மோகன் ஆட்சிக்கு வந்ததும் பன்னாட்டு நிறுவனங்களான வேதாந்தா, எஸ்ஸார் நிறுவனங்களுக்கு மாவோயிஸ்டுகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். என்றால் ஆந்திராவில் நக்சல்பாரிகள் அழித்தொழிக்கப்பட்டார்கள்.
பங்குச் சந்தையில் இந்த பன்னாட்டு நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன.நிறுவனங்களின் கைகளில் நிலங்கள் சென்றது மக்கள் சாவை நோக்கித் துரத்தப்பட்டனர். சுமார் 550 கிராமங்களில் இருந்து மக்கள் துரத்தப்பட்டனர் அந்த நிலங்களை இந்திய அரசு அபகரித்து பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கொடுத்து விட்டது. இதுதான் அம்மக்களின் அமைதியைக் குலைத்தது. தங்களின் பூர்வீக நிலங்களுக்காக அவர்கள் போராடுகிறார்கள்.
அவர்களை ஆதரிக்கிற என்னையும் மாவோயிஸ்டுகள் என்று ஊடகங்கள் சித்தரிக்கின்றன. நான் சொன்னதை திரித்து வெளியிடுகிறார்கள். எங்களை நீங்கள் ஆதரிக்க வில்லை என்றால் நீங்கள் அவர்களின் பக்கம் என்று அமெரிக்காவின் குரலை இங்கே சொல்கிறார்கள். நான் இப்போதும் சொல்கிறேன் மக்கள் கொலையை நான் ஆதரிக்கவில்லை.
ஆனால் வில்லும் அம்பும் வைத்திருக்கிற மக்களை கனரக ஆயுதங்களைக் கொண்டுக் கொல்கிறீர்களே நான் எப்படி உங்களின் பக்கம் நிற்க முடியும்? நான் கைது செய்யப்படுவதைப் பற்றி அஞ்ச வில்லை. நியாத்துக்காக போராடுகிறேன் நான். 2 லிருந்து மூன்று கோடி மக்கள் வரை காடுகளை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் அவர்கள் என்ன செய்வார்கள். நான் கூட முன்னர் பேசும் போது சொன்னேன் நான் உங்களுடன் இருக்கிறேன் உங்களைக் கொல்வதை இனி அனுமதிக்க மாட்டேன் என்றேன். ஆனால் என்ன நடந்தது அன்றாடம் கொல்கிறார்கள். நம்மால் என்ன செய்ய முடிந்தது. அவர்கள் கொன்று கொண்டே இருக்கிறார்கள். காங்கிரஸோ, பிஜேபியோ, அதிமுகவோ, திமுகவோ உங்களை ஆள்வதாக நீங்கள் நினைக்காதீர்கள். டாடாவும், எஸ்ஸாரும், வேதாந்தாவும்தான் உங்களை ஆள்கிறார்கள் இந்திய பெரு நிறுவனங்கள்தான் இனி ஈழ மக்களையும் ஆட்சி செய்வார்கள்.
இவர்களின் வர்த்தக நலனுக்காக ஈழ மக்கள் கொல்லப்பட்டார்கள். வெளிப்படையான போர் ஒன்றைத் தொடுத்து பெருந்தொகையான மக்களைக் கொன்றொழித்தது இலங்கை அரசு. அந்த இலங்கையை இந்தியா ஆதரிக்கிறது. கூட்டம் கூட்டமாக மக்களை வெகு வேகமாகக் கூட்டுக் கொலை செய்தது இலங்கை அரசு. ஆனால் இந்தியா அப்படிச் செய்யாது மக்களைக் கொல்ல இந்தியா தந்திரத்தைக் கையாள்கிறது. இலங்கை அரசு நடத்திய படுகொலையில் இருந்து படிப்பினையைப் பெற்று அதை வேறு வடிவத்தில் தண்டகாரண்யாவில் செயல்படுத்துகிறது இந்திய அரசு. இலங்கையில் நடந்த போரை தமிழக அரசியல்வாதிகள் நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும். ஆனால் நேர்மையாக இல்லாததால் இவர்கள் அதைச் செய்யவில்லை.
இவர்கள் மக்களையே பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிதான் இந்தியாவின் இன்றைய நிலைக்குக் காரணம் பாபர் மசூதியை இடித்துத் தரை மட்டம் ஆக்கியதும் இஸ்லாமிய அடிப்படைவாதம் இந்தியாவுக்கு வந்தது. தாராளமயக் கொள்கையை அறிமுகப்படுத்தி மக்கள் நிலங்களை கொள்ளையடிக்கத் துவங்கிய பின் மாவோயிட் தீவிரவாதம் வளர்ந்திருக்கிறது. இதற்கு இவர்கள்தான் பொறுப்பு” என்று பேசினார்.”
மறுபதிவு : 06/05/2010 at 5:37 pm
பொதுக்கூட்டம் – கலந்துரையாடல்
மத்திய இந்தியாவில் வாழும் பழங்குடி மக்கள் மீது இந்திய அரசு நடத்தி வரும் நிலத்துக்கான போர் குறித்து மனித நேயம் மிக்க எழுத்தாளர்கள் தங்கள் உணர்வு, அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.
அருந்ததி ராய் (Arundhati Roy), இந்திய எழுத்தாளர்
தோழர்களுடன் ஒரு பயணம்- Walking with the Comrades;
உடைந்த குடியரசு (Broken Republic) நூல் ஆசிரியர்
யேன் மிர்தால் (Jane Myrdal), சுவீடன் எழுத்தாளர்,
இந்தியா மீதொரு சிவப்பு நட்சத்திரம்- (Red Start over India) , நூல் ஆசிரியர்
வசந்த இந்திரா மோகன் (Basantha Indra Mohan),
இருபத்தியோராம் நூற்றாண்டில் பாட்டாளி வர்க்கப் புரட்சி-
(Imperialism and Proletarian Revolution 21st Century), நேபாள நூல் ஆசிரியர்
நிகழ்ச்சி:
ஞாயிறு ஜூன் 12, 2011
Sunday, June 12, 2011
பகல் 1:30 தொடங்கி மாலை 5.00 வரை
நிகழ்ச்சி அரங்கம்
பிரெண்ட்ஸ் ஹவுஸ்
Friends House, Main Hall, 173 Euston Road, London NW1 2BJ
நிகழ்ச்சி அமைப்பும் ஏற்பாடும்
இந்திய மக்கள் மீதான போருக்கு எதிரான சர்வதேச பரப்புரை இயக்கம் International Campaign Against War on People of India (ICAWPI) www.icawpi.org
இந்திய உழைப்பாளர் சங்கம் (Indian Workers Association, GB)
மேல் விவரங்களுக்கு: june12-London@icawpi.org

வருக !! ஆதரவு தருக !!
Exit mobile version