Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை : இராமேஸ்வரம் மீனவர் சந்திப்பு நடப்பது என்ன? – அகில்.

 

”அதிக பணத்துக்கு ஆசைப்படுகிற மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள்” என்று கருணாநிதியும். ”எல்லை தாண்டும் மீனவர்களைக் காப்பாற்ற முடியாது” என்று எஸ்.எம்.கிருஷ்ணாவும் சொன்னதன் பின்னணியில் இராமேஸ்வரத்தில் இலங்கை, தமிழக மீனவர்களின் பேச்சுவார்த்தை ஒன்று நடந்து முடிந்துள்ளது. கடந்த 17-08-2010 அன்று நடந்து முடிந்துள்ள பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து சென்னையில் இதே பேச்சுக்களைத் தொடரப்போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் நோக்கம் என்ன? என்ன விஷயங்கள் இரு தரப்பிலும் பேசப்பட்டது. என்கிற விஷயங்களை விசாரிக்கத் துவங்கினால் இராமேஸ்வரம் மீனவர்களை இந்திய அரசு கைவிட்டுள்ள நிலையில் இலங்கை அரசால் ஒரு விதமான அச்சத்திற்கு அவர்கள் ஆளாகி இருப்பது தெரிகிறது.

முதலில் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள், இலங்கையில் உள்ள சிங்கள, தமிழ் மீனவர்களின் பிரச்சனை என்ன வென்பதை நாம் பார்த்து விடுவது நல்லது. கச்சத்தீவை இந்தியா இலங்கைக்குக் கொடுத்த போது அந்த ஒப்பந்தத்தின் ஷரத்துக்களில் இந்திய மீனவர்களின் நலன்கள் எங்குமே பாதுகாக்கக்கப்படவில்லை. சுற்றுலாப்பயணிகள், திருவிழாவுக்குச் செல்லும் பகதர்கள் என்கிற அளவிலான சிறிய அளவு உரிமைகளை மேலோட்டமாக வைத்துக் கொண்ட இந்திய அரசு. தென்பிராந்திய மீனவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்தது. இலங்கை இந்திய இரு நாடுகளின் சர்வதேச எல்லையில் இடைப்பட்டுள்ள கச்சத்தீவு இப்போது முழுக்க முழுக்க இலங்கையின் இராணுவக் கேந்திர தலமாக விளங்குகிறது. இராமேஸ்வரத்தில் இருந்து ஏழு நாட்டிக்கல் மைல் தொலையில் உள்ள கொண்டைப் பாறை என்று சொல்லும் பகுதிக்கு அப்பால் இருந்து கச்சத்தீவு வரை தமிழக மீனவர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமை உண்டு. கொணடைப் பாறைக்கு இந்தப் பக்கம் வலை வீசி மீன் பிடிக்க முடியாத படி பாறைகளைக் கொண்ட கடல் பகுதி என்பதால் ஆழ்கடல் மீன்பிடிப்பு மட்டுமே இராமேஸ்வரம் மீனவர்களுக்குச் சாத்தியம். கட்டுமர மீன்பிடிப்பு என்பது வெகுவாகக் குறைந்து விட்ட நிலையில் மீன் பிடிப்படகுகள் மூலம் மீன் பிடிப்பதும் ஏழை கட்டுமர மீனவர்கள் படகுகளில் கூலிக்கு அல்லது பங்குக்கு வேலை செய்வதுமாகக் கழிகிறது இராமேஸ்வரம் மீனவர்கள் வாழ்வு. பெரும்பாலும் காஸ்டிலியான மீன்களைப் பிடிக்க இரட்டை மடி எனப்படும் மடியை சில மீனவர்கள் பயன்படுத்துகின்றனர். இது அரசால் தடை செய்யப்பட்ட மீன் வலையாகும். இதே வலையை இலங்கை சிங்கள மீனவர்களும் பயன்படுத்துகிறார்கள்.

மீனவர்கள் உண்மையான பிரச்சனையும் கட்டுக்கதையும்.

கடந்த முப்பதாண்டுகளாக இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.தாக்கப்பட்டிருக்கிறார்கள். மீன்பிடி வலைகள் சேதமாக்கப்பட்டுள்ளதோடு ஏரளமான மீனவர்கள் நிரந்தர உடல் ஊனத்தையும் பெற்றுள்ளனர். வெறுமனே இராமேஸ்வரம் மீனவர்கள் மட்டுமல்ல நாகை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, என ஐந்து மாவட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் நேரடியான பாதிப்புகளுக்குள்ளாகினர். இந்த முப்பது ஆண்டுகளில் இதுவரை சுமார் 400 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே எஸ்.எம்.கிருஷ்ணா சொல்வது போல சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டியவர்கள் அல்ல பல நேரங்களில் சிங்களக் கடற்படை இராமேஸ்வரம் மீனவ கிராமங்களுக்குள் கரையிறங்கி மீனவர்களைத் தாக்கி கொன்று கொள்ளையடித்துச் சென்றிருக்கிறது. ஆக தமிழக மீனவர்கள் குறிவைத்துத் தாக்கப்பட எல்லை தாண்டுவது ஒரு காரணமே அல்ல மாறாக அவர்கள் போராடிய புலிகளின் அனுதாபிகளாகவும் உதவும் சக்திகளாகவும் இருந்தார்கள் என்பதுதான் தமிழக மீனவர்களை இலங்கைப் படைகள் தாக்கக் காரணம். சர்வதேச கடல் எல்லையை இந்தியாவின் உதவியோடு இலங்கை இறுக்கக் கண்காணித்த போதும் முழுமையாக மீனவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் தமிழக மீனவர்களுக்கும் புலிகளுக்குமிடையில் ஒரு பிளவை ஏற்படுத்தியாக வேண்டிய நிலையில் இலங்கை தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்று விட்டு பழியை புலிகள் மீது போட்டது.

அப்படிக் கொல்லப்பட்டவர்கள்தான் 2008 ல் ஐந்து குமரி மாவட்ட மீனவர்கள். இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து கொல்லப்பட்ட போதும் அவர்கள் எப்போதும் இலங்கை அரசின் சூழ்ச்சிக்கு பலியானதில்லை. அதனால்தான் தேர்ந்தெடுத்து கிறிஸ்தவ மத நிறுவனத்திற்குள் அமைப்பாக இருக்கும் கன்னியாகுமரி மீனவர்களை இலங்கை இராணுவம் சுட்டுக் கொன்றது. இம்மாதிரியான ஒரு கலவரமான சூழலில் வன்னி மக்கள் மீதான் கொடூரமான இன அழிப்புப் போர் பல்லாயிரம் மக்களைக் கொன்றொழித்து முடிவுக்கு வந்தது. இலங்கையில் போர் இல்லை முன்னர் அவர்கள் புலிகளோடு போர் செய்தார்கள். கேட்பதற்கு நாதியற்ற நிலையில் மக்களும் நவீன அடிமைச் சின்னமாக மாற்றப்பட்டு விட்டார்கள். ஈழ நிலவரம் இவ்வாறு இருக்க எஞ்சியிருப்பது இராமேஸ்வரம் மீனவர்கள்தான். நீண்டகால அரசியல் நோக்கில் ஈழப் போராட்டத்தின் மிகப் பெரிய உந்து சக்தியாகவும் உதவும் சக்திகளாகவும் இருக்கும் இராமேஸ்வரம் மீனவர்களையும் ஈழத் தமிழ் மீனவர்களையும் பிளவு படுத்தும் நீண்டகால அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு. இராமேஸ்வரம் மீனவர் பிரச்சனை தொடர்பாக இந்திய இலங்கை அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள் ஒட்டு மொத்த தமிழக மீன் பிடிச் சமூகங்களின் வாழ்வுரிமையையும் பாதிக்கும் நடவடிக்கையாகும்.

பேச்சுவார்த்தையின் பெயரால்… 

சுமார் 21 பேர் இலங்கை மீனவர் சங்கத் தலைவர் என்று சொல்லப்படும் சூரியகுமாரன் தலைமையில் இலங்கை அரசின் தூதுவர்களாக இராமேஸ்வரம் வந்துள்ளனர். கடல் கடந்தும் தனது ஆதிக்க விரிவாக்கத்தை செயல்படுத்த நினைக்கும் இலங்கை அரசு கேரளத்தில் உள்ள தென்னிந்திய மீனவ சங்கங்கங்களின் சம்மேளனம் என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வரும் விவேகானந்தன் என்பவர் மூலமாகவும் அதன் சகோதர அமைப்பு என்று சொல்லப்படும் நிரபராதிகள் மீனவர் குழு அமைப்பின் மூலமாகவும் இந்தக் கலந்துரையாடலை அல்லது பேச்சுவார்த்தையை இராமேஸ்வரத்தில் நடத்தி பரிசோதனை முயர்ச்சியைத் துவங்கியுள்ளது. அங்குள்ள நமது மீனவ நண்பர்களிடம் இது பேச்சுவார்த்தையா? அல்லது கலந்துரையாடலா? என்று கேட்டால் தெரியவில்லை என்று இப்படி சொல்கிறார்கள். ” இலங்கைகாரங்க வர்றாங்க நாங்கள் போகிறோம். ஆனால் இது பற்றிய தகவல் எல்லா மீனவச் சங்கங்களுக்கோ எல்லா சமூகத் தலைவர்களுக்குமோ தெரிவிக்கப்படவில்லை. மிக முக்கியமாக அவர்கள் சொன்ன விஷயம் ஈழ விவகாரத்தில் திவீரமாக இருக்கும் சக்திகள் இதில் தலையிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்பதாக இருந்தது.

இத்தூதுக்குழு இராமேஸ்வரம் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மீனவர் தலைவர்கள் என்று சொல்லப்படும் சிலருடன் பேசியிருக்கிறது. இதில் கடலே வாழ்வாகக் கொண்ட பாரம்பரீய மீனவச் சங்க தலைவர்கள் குறைவு. அதிகம் பேர் தொழில் நிமித்தம் இராமேஸ்வரத்தில் குடியேறியவர்கள் இவர்களுக்கு எப்போதும் மீன் பிடித்தொழிலும் வருமானம் தொடர்பான வருத்தங்களோ கவலைகளோ இருக்குமே தவிற ஒடுக்கப்படும் பாரம்பரீய மீனவ மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் குறித்த உண்மையான அக்கரையோ கரிசனமோ இவர்களுக்கு எப்போதும் இருந்ததில்லை என்கிற நிலையில் இப்பேச்சுவார்த்தையில் இவர்கள் பாரம்பரீய மீனவ மக்களின் பிரதிநிதிகளாக கலந்து கொண்டிருக்கிறார்கள். இங்கே இன்னொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டும் மீனவ மக்களை பிரதிநிதுத்துவப் படுத்தும் அரசியல் தலைமைகளோ பிரதிநிதிகளோக் கூட மீனவ மக்களுக்குக் கிடையாது. உள்ளூர் புறங்களின் ஆதிக்கசாதி அதிகாரத்தை, பெரும்பான்மை சாதி ஓட்டு அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தும் திராவிட இயக்க அல்லது தேசிய இயக்கத் தலைவர்களே இவர்களின் தலைவர்கள்.

ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்கு வங்கியாக பயன்படுத்தப்படும் இம்மக்களின் பிரச்சனைகள் குறித்து உண்மையான அக்கறை இங்குள்ள அரசியல் தலைவர்களுக்கும் இல்லை.இத்தகைய சூழலில் இருந்துதான் இராமேஸ்வரம் மீனவர்கள் ஏமாற்றப்படும் சூழலையும் அதன் பின்னணியையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது இலங்கை அரசின் தூதுவர்களாக வந்திருப்பவர்களில் பேசாலை ஆயர் அகஸ்டின், மீன்வளத்துறை அதிகாரி சில்வா, பத்திரிகையாளர் நிரோசா மாலா என்று தெளிவான நிறுவனமயமாக்கப்பட்டக் குழுவாக வந்திருக்கின்றனர். வந்தவர்கள் ”கடந்த முப்பதாண்டுகளாக எமக்கு போர்ச்சூழல் காரணமாக மீன்பிடித்தொழில் இல்லை. போர் முடிவடைந்துள்ள நிலையில் இப்போதுதான் மீன் பிடிக்கத் துவங்கியிருக்கிறோம். ஆனால் நீண்டகாலமாக தமிழக மீனவர்களான நீங்கள் எங்கள் கடல் பகுதியில் மீன் பிடித்து வருகிறீர்கள். இரட்டை மடியைப்படுத்துவதாலும், ஒப்பீட்டளவில் டோலர் படகுகளைப் பயன்படுத்துவதாலும் எங்களின் மீன் வளம் கெடுகிறது.

ஆகவே நீங்கள் உங்களின் மீன் பிடி எல்லையைச் சுருக்கிக் கொள்ளுங்கள், இரட்டை மடி வலையைப் பயன்படுத்தாதீர்கள். அது போல எல்லை தாண்டும் மீனவர்களைத் தாக்குவதோ கொல்வதோ சரியில்லை அது பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சனை.” என்று இராமேஸ்வரத்தில் சூர்யகுமாரன் தெரிவித்துள்ளார். பின்னர் சென்னைக்கு வந்த குழுவினர் பெயர் குறிப்பிடப்படாமல் சென்னையில் பரங்கிமலையில் ஒரு ரகசிய இடத்தில் நடந்த பேச்சுவார்த்தைக்கு சென்னையில் பாரம்பரீய மீனவப் பிரதிநிகள் யாரும் அழைக்கப்பட வில்லை. ஏன் அழைக்கவில்லை என்று கேட்டால் இது இராமேஸ்வரத்தை ஒட்டிய மீனவர் பிரச்சனையாம் அதான் அழைப்பில்லை என்று சமாதானம் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் நாம் விசாரித்த வரையில் சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் இலங்கை அரசோடு அனுசரணைப் போக்கைக் கடை பிடிக்க நினைக்கும் சிலர் இதன் பின்னணியில் இருப்பதாகத் தெரிகிறது. பேச்சுவார்த்தை துவங்கும் முன்னரே சென்னை பிரஸ் கிளப்பில் பேட்டியளித்த மீனவர் குழுவினர் தெரிவித்த கருத்துக்களை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும். பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இலங்கை குழுவின் தலைவர் சூரியகுமாரன் கூறியதாவது:

” இலங்கையில் கடல் வளத்தை அழிக்கும் எந்தவிதமான தொழிலையும் நாங்கள் செய்வதில்லை என்று முடிவெடுத்து சில மாற்று முறைகளில் மீன் பிடித்து வருகிறோம். தமிழக மீனவர்களின் விசைப்படகும், அதில் பயன்படுத்தும் வலைகளும் கடல் வளத்தை அழிக்கக் கூடியது. எனவே இந்த பேச்சுவார்த்தையில் எங்கள் பகுதியில் தடை செய்யப்பட்ட தொழில்கள் எது? அதை எப்படி தடுப்பது? மேலும் இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து பேச இருக்கிறோம்.இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இதன் மூலம் எடுக்கப்படவுள்ள பரிந்துரைகளை இரு நாட்டு அரசுக்கும் தெரிவிக்க இருக்கிறோம். இரு நாட்டு அரசுகளும் எடுக்கின்ற முடிவில் தான் எங்கள் முடிவும் சார்ந்திருக்கிறது. அதற்கு முன் எங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது. கடல் எல்லையை இலங்கை அரசு நிர்ணயம் செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடிப்பதை நாம் தடுக்க முடியாது. அதை தடுப்பது இலங்கை அரசு தான். கடல் தான் எங்களை பிரிக்கிறது, எங்கள் உறவு முறையில் பிரிவு இல்லை. எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை சுடுவதை நிறுத்துங்கள், அவர்களை சட்டரீதியாக நீதிமன்றம் முன் நிறுத்துங்கள் என்றும் நாங்கள் பரிந்துரைக்க முடிவு செய்துள்ளோம்.கச்சத்தீவு முன்பு இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்பு ஏற்பட்ட ஒரு ஒப்பந்தம் மூலம் இலங்கைக்குக் கொடுத்திருக்கிறார்கள்.

இதனால் தமிழக மீனவர்கள் கச்சத்தீவை பயன்படுத்த முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கவும், வலைகளை காயவைக்கவும், ஓய்வு எடுக்கவும் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அதை அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும்.

இந்திய மீனவர்களை எல்லை தாண்டி வாருங்கள் என்று நாங்கள் அழைக்க முடியாது. மீன் பிடிக்கும் முறை தான், குறிப்பாக விசைப்படகும், அவர்கள் பயன்படுத்தும் வலைகளும் தான் முறையற்றது. அதற்கு இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது. ” என்று தந்திரமாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியது போல விஷயத்தை ஏற்றுகிறார் சூர்யகுமாரன்.

நீங்கள் எங்கள் கடல்பகுதிக்குள் வரக்கூடாது, இரட்டை மடியைப் பயன்படுத்தக் கூடாது என்று சொன்ன இலங்கை அரசு குழுவினர். இங்கே கொல்லப்பட்ட மீனவர்கள் குறித்தோ, எல்லை தாண்டும் இயற்கை இடர்பாடுகள் குறித்தோ வாயே திறக்கவில்லை.தவிறவும் இலங்கை மீனவர்கள் தொழிலில் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்கிறார்களாம். தமிழக மீனவர்கள்தான் இரட்டைமடி, டோலர் படகுகளைப் பயன்படுத்துகிறார்களாம். மேலும் கச்சத்தீவு இந்தியாவிடம் இந்ததாம்.அதை இலங்கை அரசிடம் கொடுத்து விட்ட காரணத்தால் தமிழக மீனவர்கள் அதைப் பயன்படுத்த முடியவில்லையாம்.

ஆகவே கச்சத்தீவுக்கு மீன் பிடிக்க வரக்கூடாது என்று நாங்கள் சொல்ல முடியாது. அதை அரசுதான் சொல்ல வேண்டும். அப்படி வருகிறவர்களைச் சுட்டுக் கொல்லக் கூடாது நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று சூர்யகுமாரன் சொல்கிறார். சூர்யகுமாரனின் இந்தக் கருத்து ஈழத் தமிழ் மீனவர்களின் கருத்தா? அல்லது இலங்கை அரசின் கருத்தா? வந்திருப்பவர்கள் உண்மையிலேயே மீன் பிடித்தொழில் நேரடியாக ஈடுபடுவர்களாக இருந்திருந்தால் எல்லை தாண்டும் இயர்க்கை இடர்பாடு குறித்து அவர்களே நேர்மையாகப் பேசியிருப்பார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் சொன்னதெல்லாம் எங்கள் பகுதிக்குள் வராதீர்கள் என்பதுதான். ஆக எஸ்.எம்.கிருஷ்ணா பாராளுமன்றத்தில் என்ன சொன்னாரோ, இங்கு ஒருவர் அதிக ஆசைப்பட்டு எல்லை தாண்டுகிறார்கள் என்று சொன்னாரோ அதையே ஒரு குழுவை அனுப்பி இலங்கையும் சொல்லியிருக்கிறது.

மிகவும் தந்திரமாகப் பேசும் சூர்யகுமாரன் எல்லை தாண்டி மீன்பிடிப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் இது குறித்து இலங்கை அரசிடம் கேட்டால் இது இரு நாட்டு அரசுகளின் எல்லை தொடர்பான பிரச்சனை இதில் நீங்கள் தலையிட வேண்டாம் என்கிறார்கள். ஆக இது தொடர்பாக இரு நாட்டு அரசுகளும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு. என்று தந்திரமாக நழுவி விட்டு இரட்டைமடி, எல்லை தாண்டுதலை குற்றச்சாட்டுகளாக தமிழக மீனவர்கள் மீது வைக்கும் அதே நேரம் தாங்கள் குற்றமற்றவர்கள் என்றும் நிரூபித்துக் கொள்கிறார். இந்த அயோக்கியத்தனத்தை பேச்சுவார்த்தை என்று அழைக்கிறார்கள். எப்படியாவது பிரச்சனை தீர்ந்து விடும் என்ற நம்பிக்கையில் இதன் பின்னால் உள்ள சூழ்ச்சி தெரியாமல் இராமேஸ்வரம் மீனவப் பிரதிநிதிகள் இதில் பொறுப்பாளிகளாக பங்கேற்கிறார்கள்.

இந்தக் குழுவினர் இந்தியா வருவதற்கு சில நாட்களுக்கு முன்னர் இந்திய மீன்பிடிப்படகுகள் வடமராச்சி பகுதியில் அத்து மீறி மீன் பிடிப்பதாக வடமராட்சி மீனவர் ஒன்றியம் குற்றம் சாட்டியதை இங்கே நாம் சூழலோடு பொறுத்திப் பார்க்க முடியும். வருவதற்கு முன்னால் இப்படியான குற்றச்சாட்டுகளை தமிழக மீனவர்கள் மீது சுமத்தியவர்கள் யார் ஒரு வேளை அது சூர்யகுமாரன் தானோ? என்ற சந்தேகம் வலுத்துள்ள நிலையில் இந்தியப் படகுகள் இப்படி மீன் பிடிப்பதால் தங்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதாக வடமராச்சி மீன் பிடிச்சங்கம் குற்றம் சுமத்தியது. அதற்கு முன்னரே இலங்கை அரசின் ஆதரவாளராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவும் இப்படியான குற்றச்சாட்டைக் கூறியிருந்ததோடு நடந்து முடிந்த கச்சத்தீவு அந்தோனியார் கோவில் திருவிழா தலத்தில் இரு நாட்டு மீனவர்களும் சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாட்டை செய்திருந்ததாகவும் கடைசியில் தமிழக மீனவர்கள் வரவில்லை என்றும் குறைபட்டுக் கொண்டார். இந்நிலையில்தான் தன்னார்வக்குழுக்களின் ஏற்பாட்டின் படி இச்சந்திப்பு நடந்துள்ளது. போருக்குப் பின்னர் இலங்கை இராணுவத்தின் கெடுபிடி காரணமாக இந்தப் பிராந்தியத்தில் ஈழத் தமிழ் மீனவர்கள் எப்போதும் மீன் பிடியில் ஈடுபட்டதில்லை. போருக்குப் பின்னர் ஈழத் தமிழர்களின் பாரம்பரீய மீன்பிடி வலையமாக இருந்த மன்னார் பகுதிக்குள் தென்பகுதி சிங்கள மீனவர்கள் வந்து மீன்பிடிப்பதும்.

வடபகுதி , கிழக்கு மாகாண தமிழ் மீனவர்களைத் தாக்கி மீன்களை கொள்ளையடித்துச் செல்வதும் மீன்பிடியில் தமிழ் மீனவர்களுக்கு கட்டுப்பாடுகளும் சிங்கள மீனவர்களுக்கு கட்டற்ற சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ள நிலையில் யாழ்பாண மீனவர்களின் மீன்பிடித் தொழில் தமிழக மீனவர்களால் பாதிக்கப்படுகிறது என்று இலங்கை அரசு சொல்கிற குற்றச்சாட்டின் நோக்கம்தான் என்ன? உண்மையிலேயே வடக்குக் கிழக்கில் உள்ள மீனவர்களுக்கும் தமிழ் மீனவர்களுக்கும் பிரச்சனைகள் இருந்ததா? என்றால் புலிகளின் போராட்டம் வலுப்பெற்ற காலங்களில் தமிழக மீனவர்களுக்கு புலிகள் எவ்விதமான தொல்லைகளும் கொடுத்ததில்லை. தங்களின் போராட்டத்திற்கு வலுவான பின் தளமாக உள்ள மீனவர்களுடன் அவர்கள் நல்லுறவு பேணினார்கள். அதற்கு முந்தைய காலங்களில் யாழ்பாண மீனவர்கள் தமிழக மீனவர்களை மேலாதிக்கம் செய்தாலும் காலப்போக்கில் இது இல்லாது போயிருந்தது. புலிகள் அரசியல் நலனை கருத்தில் கொண்டு இந்த முரண்பாடுகளைக் களைவதில் பெரும்பங்காற்றினார்கள்.

எல்லை தாண்டுவது?

பழவேற்காட்டில் தொடங்கி குமரி மாவட்டத்தின் கேரள எல்லையான நீரோடி வரைக்கும் சுமார் 1026 கிலோ மீட்டர் நீளமுடையது நமது தமிழக கடற்கரை. பொதுவாக கடலாக இருந்தாலும் நிலமாக இருந்தாலும் ஒரு குடிமகன் காணாமல் போய் ஏழு ஆண்டுகளுக்குள் அவர் மீண்டு வர வில்லை என்றால் அவரை இறந்து போனவராக கருதி உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்கிறது அரசு விதி. நிலப்பகுதியில் வாழ்ந்து காணாமல் போவோரையும் கடலுக்குள் காணாமல் போவோரையும் எப்படி ஒன்றாக கருத முடியும். ஆனால் அரசு விதிகள் அப்படித்தான் இருக்கிறது. இதனாலேயே இருபது ஆண்டுகள் ஆகியும் காணாமல் போன மீனவர் உயிரோடு இருக்கிறாரா இல்லை இறந்து போனாரா என்பது கூடத் தெரியாமல் இன்னும் பல நூறு குடும்பங்கள் ஏக்கத்தோடு கடலைப் பார்த்த படி வாழ்கிறார்கள். இப்படிக் காணாமல் போனவர்கள், சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் அனைவருமே ஆபத்தான ஆழ்கடல் மீன் பிடியில் ஈடுபட்டவர்கள்.

கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் மீன் பிடி உரிமையை இன்று வரை இந்தியா உறுதிப்படுத்தாத நிலையில் கச்சத்தீவிற்குச் செல்வதும் எல்லை தாண்டும் குற்றம் என்றே எடுத்துக் கொள்கிறது இரு நாட்டு கடற்படைகளும். மீன் பிடித்த் தொழில் அதுவும் கட்டுமர மீன்பிடித் தொழில் முன்பு போல வருமானம் ஈட்டும் தொழிலாக இல்லாத நிலையில் பெரும்பலான மீனவர்கள் விசைப்படகுகளுக்கு மாறி விட்டார்கள். வலைகளை கடலில் வீசி விட்டு குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னர் வலைகளை இழுத்து மீன் பிடிப்பார்கள். மிகவும் சிரமமான தொழில் இது. இதை தங்கு தொழில் என்றும் மீனவர்கள் சொல்வதுண்டு. 15 நாள் கடலில் தங்கியிருப்பார்கள். மீனவர்கள் கடலில் வீசுகிற வலைகளை கடல் தன் நீரோட்டத்திற்கு ஏற்ப பல நாட்டிக்கல் மைல் காற்றின் திசை வழியே இழுத்துச் சென்று விடும். எஸ்.எம். கிருஷ்ணா ஒரு மீன் பிடிப்பாளராக இருந்திருந்தால் இது தெரியும். நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்படும் வலைகளை எடுத்தோம் கவிழ்த்தோம் என்றெல்லாம் இழுக்க முடியாது நீரோட்டத்தின் போக்கில் போய்தான் வலையை எடுக்க முடியும். பருவநிலைக்கு ஏற்ப மாறும் இந்த நீரோட்டம்தான் இராமேஸ்வரத்தில் மட்டுமல்ல உலங்கெங்கிலும் உள்ள மீனவர்களை எல்லை தாண்டும் குற்றவாளியாக்கி விட்டது.

முதலில் இவர்கள் தடை போட வேண்டியது நீரோட்டத்திற்குத்தான். இந்திய நீரோட்டம் இலங்கைக்கு எல்லைச் செல்லக் கூடாது என்று சோனியாவும், மன்மோகனும், கிருஷ்ணாவும் நடுக்கடலில் போய் நின்று தடுத்தால் தமிழக மீனவர்களும் அங்கு செல்ல மாட்டார்கள்.

இராமேஸ்வரம் மீனவர்கள் குற்றவாளிகள் ஆக்கப்பட்டு விட்டார்கள்.

நீண்டகாலமாக இராமேஸ்வரம் மீனவர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். இப்போதும் கொல்லப்படுகிறார்கள் போனமாதம் கூட செல்லப்பன் என்கிற மீனவர் கொல்லப்பட்டார். இலங்கையில் வன்னி மக்களுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் அதன் பின்னர் இராமேஸ்வரம் மீனவர் பிரச்சனை இந்திய இலங்கை அரசுகளுக்கு தலைவலியான ஒன்றாக மாறி வருகிறது. இலங்கை அறிவிக்கப்படாத போர் ஒன்றை இராமேஸ்வரத்தில் நடத்த வேண்டிய தேவை இருக்கிறது. எதிர்காலத்தில் இலங்கையில் தமிழர்கள் தொடர்பான அரசியல் அதிகாரம் எதுவும் உருவாகி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிற பேரினவாத இலங்கை அரசு வடக்கில் தமிழர்களை விட சிங்களர்களின் எண்ணிக்கையை அதிகரித்து நிரந்தரமாக அவர்களின் பாரம்பரீய வதிவிடங்களை பிடுங்கிக் கொள்ள நினைக்கிறது. தவிறவும் துவக்கத்தில் நான் சொன்னது போல தமிழர்களிடம் எதிர்ப்பியக்கம் ஒன்று தோன்றும் என்றால் அது புவியியல் ரீதியாக இராமேஸ்வரம் மீனவர்களின் துணையின்றி வெற்றியளிக்க வாய்ப்பில்லை. இது இந்தியா, இலங்கை இரு நாடுகளுக்குமே அச்சுறுத்தலான ஒன்றாக மாறியுள்ள நிலையில் இராமேஸ்வரம் மீனவர்களை தொழில் ரிதியாக முடக்கி அல்லது இலங்கை, இந்திய எல்லையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பகுதியை முழுக்க இராணுவ மயமாக்க தமிழக மீனவர்களுக்கும் ஈழத் தமிழ் மீனவர்களுக்குமிடையில் நிரந்தரமான மோதல் ஒன்றை உருவாக்கினால் மட்டுமே தாங்கள் நினைத்த மாதிரியான நீண்ட கால பலன் இருக்கும் என்பதால் வெவ்வேறு வழிகள் யுத்திகளைக் கையாழ்கிறது இலங்கை அரசு.அதற்குத்தான் தன்னார்வக்குழுக்களின் உதவியை நாடியிருக்கிறார்கள்.

இப்போது நினைத்துப் பாருங்கள் வந்திருக்கும் குழுவினர்கள் தமிழக மீனவர்களைப் பார்த்து என்ன சொன்னார்கள். எங்கள் பகுதிக்குள் வராதீர்கள். இரட்டை மடியைப் பயன்படுத்தாதீர்கள். எல்லை தாண்டாதீர்கள் என்றார்கள். எல்லை தாண்டும் சட்டவிரோத மனிதர்கள் என்று இராமேஸ்வரத்திற்கு வந்தே சொல்லி விட்டுச் சென்றால் எஸ்,எம்.கிருஷ்ணா எப்படி பாராளுமன்றத்தில் அதையே சொல்லாமல் இருப்பார். மும்முனைகளிலும் ஒலிக்கும் இந்தக் குரலை புரிந்து கொள்ளக் கூடிய அரசியல் விழிப்புணர்வுதான் அந்த மக்களிடம் இல்லை. கடைசியாக, இலங்கை அரசின் குழுவினராக இங்கெ வந்து தமிழக மீனவர்களை பழி சுமத்திக் கொண்டிருக்கும் இக்குழுவினர் குமரன்பத்மநாபன் எனப்படும் கே.பி, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் திட்டமிடலுடனும் இலங்கை இந்திய அரசுகளின் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் குழுவினர் என்கிற சந்தேகங்கள் பரவியிருக்கும் நிலையில் இந்தப் திணிக்கப்பட்ட பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் கேரளாவைச் சார்ந்த விவேகானந்தன் என்பவரையே நாம் பொறுப்பாளியாக்க வேண்டும்.

இந்த விவேகானந்தன் மீது சுனாமி நிதி கையாடல் தொடர்பான ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில் தென்னிந்திய மீனவ சங்கங்களின் சம்மேளனம் என்னும் தன்னார்வக்குழுவை நடத்தும் கேரளாவைச் சேர்ந்த் விவேகானந்தன் அவர்கள்தான் நடந்து கொண்டிருக்கும் இச்சமபங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும். நாளை இராமேஸ்வரம் மீனவர்கள் கொல்லப்பட்டால் மிக நாசூக்காக தமிழக மீனவர்கள் இதை எல்லாம் ஏற்றுக் கொண்டார்கள் என்று பழியை எங்கள் மக்கள் மீது போட்டால் விவேகானந்தன்தான் பொறுப்பாளி.

Exit mobile version