Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை இந்திய அரசுகளின் அடியாள் விக்கியையும் தேர்தலையும் புறக்கணிப்போம் : ஜவாகர் (வவுனியா)

i2சகல சுகபோகங்களுடனும் பேரினவாதத்தால் பாதிகப்படாத, சிங்கள மேட்டுக்குடிகளின் நண்பர்களான தமிழர்களை வாடகைக்கு அமர்த்துவது சம்பந்தன் குழுவிற்கு இது முதல் அனுபவமல்ல. திருச்செல்வம் குடும்பம், ஜிஜி பொன்னம்பலம் போன்ற மேட்டுக்குடித் தமிழர்கள் கொழும்பிலிருந்து ‘ஏவுகணை’ அரசியல் நடத்தியதற்கு பின்புலத்தில் எப்போதுமே இலங்கை இந்திய அரசுகள் தமது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்கின்றன. தேவையேற்படும் போது இனவாதம். தேசியம் போன்ற எல்லாவற்றையும் பேசக் கற்றுக்கொள்ளும் இந்த மேட்டுக்குடி அரசியல் கோமாளிகள் இந்திய அரசியல் வாதிகளைவிடக் கேவலமானவர்கள்.

வாக்குகளைப் பெற்று சட்டரீதியாக ஆங்கிலம் பேசி வென்று தருவோம், மக்கள் அசையக்கூட வேண்டாம் எனப் பார்வையாளர்களாக்கும் அரசியலின் ஆயுதத் தொடர்ச்சி கூட அப்படித்தான் அமைந்தது. இந்திய அரசு வீங்கவைத்து வளர்த்த இயக்கங்களின் அதிகாரத்தின் கீழ் மக்கள் மீண்டும் பார்வையாளர்களானார்கள். புலிகளின் அரசியல் மக்களைப் பார்வையாளர்களாக்கும் உச்சபட்ச எல்லைவரை சென்றது.

மக்களைப் பார்வையாளர்களாக்கி மக்கள் அமைப்புக்கள் அனைத்தையும் புலிகள் தடை செய்ததன் பலன் இன்று வடக்கிலும் கிழக்கிலும் இரண்டுக்கு மேற்பட்டவர்கள் இணைந்து விளையாட்டுப் போட்டிகூட நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுள்ளனர்.

எங்காவது இடைவெளி ஏற்படும் போதெல்லாம் மக்களைப் பார்வையாளர்களாக்கி சில கனவான்களினதும், ஒளிவட்டம் கட்டிய தனிநபர்களதும் கைகளில் அரசியலை ஒப்படைக்கும் அதிகாரவர்க்கம் ஒவ்வொரு திரும்பல் புள்ளிகளிலும் படுகொலைகளைக் கட்டவிழ்த்துவிடுகின்றன.

விக்னேஸ்வரன் என்ற இந்துக் கனவானின் புதிய வருகை வரலாறு மீண்டும் மறு சுற்றுக்கு வந்திருப்ப்பதை நிருபணம் செய்கிறது. இதுவரை காலமும் தோற்றுப்போன அதே வழிமுறைகளை, சாத்தியமற்ற வழிமுறைகளை மக்களை அழிக்கும் நோக்குடனேயே அதிகாரவர்க்கம் முன்வைக்கிறது.

சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையைச் சிதைக்கும் நோக்கில் இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு மாகானசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. 13 வது திருத்தச்சட்டம் என்ற அரசியலமைப்புச் சட்டத்தை பேரினவாதிகளின் நலன்களுக்காக இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கை அரசு நிறைவேற்றியது. இந்தச் சட்டம் கூட இன்று வலுவிழந்து மரணித்துப் போய்விட்டது.

தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசமாக வடக்கையும் கிழக்கையும் ஏற்றுக்கொள்வதால் இச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளலாம் என்கிறார்கள். இலங்கை என்ற இனக் கொலையாளிகளின் அதிகாரத்திலிருக்கும் நாட்டின் பெயர் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு.

இலங்கை என்பது மனிதர்களின் கசாப்புக் கடை. அங்கு ஜனநாயகமும் இல்லை சோசலிசமும் இல்லை. இந்த நிலையில் பாரம்பரிய பிரதேசங்கள் என்று காகிதத்தில் எழுதிவைத்துவிட்டு இந்திய, ஐரோப்பிய அமரிக்க, சீன பல்தேசிய நிறுவனங்களும் சிங்களைக் குடியேற்றங்களும் பாரம்பரியத்தைத் துவைத்து நார்நாராகக் கிழித்துவிடுகின்றன.

காணி போலிஸ் அதிகாரங்களை மாகான சபைக்குக் கொடுத்தால் போதுமானது என்பது இந்தியாவினதும் விக்கியினதும் நிலைப்பாடு. பாசிச அரச ஆட்சியில் முழுத் தமிழ்ப் பிரதேசங்களும் இராணுவமயமான நிலையில் காணி போலிஸ் அதிகாரங்கள் என்ன இராணுவ அதிகாரம் கூட எந்தச் செயற்பாடுகளும் அற்றதாகவே இருக்கும்.

விக்கியின் வழிமுறைகள் முன்னமே பரீட்சித்துப் பார்க்கப்பட்டுத் தோற்றுப் போனவை. அதும் இலங்கையில் பிரித்தானியா ‘ஒட்டவைத்த’ ஜனநாயகத்தின் கூறுகள் ஆங்காங்கே வெளித்தெரிந்த காலத்திலேயே தோற்றுப்போய் மண்கவ்விய அரசியல்!

பாசிச அரசாட்சியின் இடுக்குக்களுக்குள் வாக்குப் பொறுக்கி அழிவுகளை ஏற்படுத்திய அதே வழிமுறைகளை மீண்டும் தமிழ் மேட்டுக்குடி முன்வைக்கிறது.

தமிழ் மேட்டுக்குடிகள் தேர்தலில் விக்கியை நிறுத்தி வாக்குப்பொறுக்க வந்திருப்பதனூடாக பின்வரும் முடிவுகளுக்கு மக்களைக் இழுத்துவருகிறது.

1. சுய நிர்ணய உரிமைக் கோரிக்கை தேவையற்றது.

2. பாசிச அரசோடு பேச்சு நடத்தி பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ளலாம்.

3. வடக்கும் கிழக்கும் பிரித்து வைக்கப்படுவதை அங்கிகரிக்கிறோம்.

4. வடக்கிலும் கிழக்கிலும் நடத்தப்படும் இராணுவ ஆட்சிக்குள்ளும் ஜனநாயகம் நிலவுகிறது.

5. இந்திய அதிகார வர்க்கமே மீண்டும் எமது எஜமானர்கள்.

இன்று நேற்றல்ல வன்னிப் படுகொலைகளுக்கு நீண்டகாலத்தின் முன்னரேயே திட்டமிடப்பட்ட இந்த நிகழ்ச்சி நிரலை வெற்றிகரமாக ஒரளவேனும் நகர்த்திய பெருமை விக்கியையே சாரும். இந்திய இலங்கை அதிராக வர்க்கங்களதும் பேரினவாதத்தினதும் அடியாளாகச் செயற்பட விக்கியைத் தவிர வேறு சிறந்த தெரிவு அவர்களுக்குக் கிடையாது.

தவிர, இன்று எந்தச் செயற்பாடும் அற்று வெறுமனே தெரிவு செய்யப்பட்டவர்கள் தண்ணீர்ப் போத்தல்களைத் தமக்குள் வீசி விளையாடுவதற்குரிய இடமான உள்ளூராட்சித் சபைகள் போன்றே மாகாணசபையும் செயற்படும் என்பதில் சட்டம்படித்த விக்கிக்கோ அல்லது அவரைத் தெரிவுசெய்த கொழும்பு சார் மேட்டுக்குடிகளுக்கோ தெரியாதது ஒன்றல்ல.

இன்று வடக்கிலும் கிழக்கிலும் தடையின்றி இனச் சுத்திகரிப்பு நடத்தப்படுவதற்கு விக்கியின் தேவை அவசியமானது. அவர் ஏற்கனவே கூறியது போல தமிழ் நாட்டிலிருந்து ஈழத்தமிழர்கள் தொடர்பாக யாரும் மூச்சுக்கூட விட முடியாது என்கிறார்.
தமிழ் நாட்டில் மாணவர் எழுச்சிகள் ஏற்படுத்திய அதிர்வலைகளால் மிரண்டு போன இந்திய அதிகாரவர்க்கத்திற்கு ஈழத்திலிருந்து தமிழ் நாட்டுத் தமிழர்களை ‘வாயைமூடு’ என்று சொல்வதற்கு ஒருவர் தேவைப்படுகிறார்.

தமிழ் நாட்டில் ஈழத் தமிழர்களின் அழிவிற்குக் காரணமான கட்சி காங்கிரஸ் என்று மக்களின் ஒரு பகுதியினர் நம்பியிருக்கிறார்கள். இவர்களை அண்மையில் நடைபெறவிருக்கும் தேர்தலில் திருப்திப்படுத்த சுதர்சன நாச்சியபன் முதல் விக்கி வரை செயற்படுகிறார்கள். விக்கி முதலமைச்சரானால் அதுவும் வடக்கில் மக்களின் ஏகோபித்த வாக்குப்பலத்துடன் வெற்றிபெற்றால், தமிழ் நாட்டில் கூட யாரும் ஈழத்தமிழர் பிரச்சனை குறித்துப் பேச முடியாத நிலையை ஏற்படுத்துவார்.

*இலங்கை அரசின் புலம் பெயர் அடியாட்களான சாதிக்குழுக்கள், துணை இராணுவக் குழுக்கள், கிழக்குப் பிரிவினைக் குழுக்கள், ஒட்டுக் கட்சிகள் போன்றன ஏற்படுத்தாத வெற்றியை இலங்கை இந்திய அரசுகளுக்கு விக்கி மக்களின் அங்கீகாரத்தோடு ஏற்படுத்திக்கொடுப்பார்.

இப்போது, விக்கியை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள் என்ற கருத்தை இலங்கை இந்திய அரசுகளின் அடிவருடிகள் ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டனர். சரி, அழிவுகளை ஏற்படுத்தும் விக்கியை ஏன் விடக்கூடாது என்பது அவர்கள் தங்களைத் தாங்களே கேட்கவேண்டிய கேள்வி.

உலகத்திலேயே அதிகமாக இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது கஷ்மீரில் தான். அந்த இராணுவ ஆட்சியின் காலடிலிருந்தே மக்கள் போராடுகிறார்கள்.

சாட்சியின்றி நடத்தப்பட்ட மிகப்பெரிய வன்னிப் படுகொலைகளின் கோர நினைவுகளிலிருந்த மக்கள் சிறிது சிறிதான விடுபட்டுக்கொண்டு தம்மைச் சுதாகரித்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

தமிழ் நாட்டில் புரட்சிகர அமைப்புக்களின் ஈழ ஆதரவு மக்கள் போராட்டங்களிலிருந்து கற்றுக்கொண்டு ஈழத்தில் ஆங்காங்கு மக்கள் தம்மை ஒருங்கிணைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கூட்டங்களும் உரையாடல்களும் ஆங்காங்கே ஆரம்பித்துள்ளன. மக்கள் நிறையவே கற்றுக்கொண்டுள்ளார்கள். சிங்கள மக்கள் மத்தியில் பாசிச ஒடுக்கு முறையையும் மீறி ஆங்காங்கு எதிர்ப்புக்குரல்கள் எழுகின்றன. அழிவுகளைத் தவிர்த்து பேரினவாதப் ஒடுக்கு முறைக்கு எதிராக சுய நிர்ணய உரிமைக்காக மக்கள் போராடுவார்கள். அது தவிர்க்க முடியாதது. இவை அனத்தையும் ஒடுக்குவதற்காக அதிராகவர்க்கமும் அரச பாசிசமும் நடத்தும் நாடகம் நிராகரிக்கப்பட வேண்டும்.

விக்னேஸ்வரனையும் தேர்தலையும் மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும். இலங்கை அரச துணைக் குழுக்களுக்கோ, இலங்கை இந்திய அரசுகளின் அடியாட்களுக்கோ வடக்குக் கிழக்கில் வாக்குப் பொறுக்கிக்கொண்டு கொழும்பில் போய் மண்டையோடுகளுக்கு மத்தியில் அமர்ந்துகொள்ள உரிமை இல்லை என மக்கள் உரக்கச் சொல்லவேண்டும்.

*பேரினவாத பாசிச ஒடுக்கு முறைக்கு எதிராக தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தை வடக்கிலிருந்து ஆரம்பித்தால் அது இலங்கை முழுவதும் பரவ வாய்ப்புண்டு. இலங்கை அரசாங்கத்தினதும் வாக்குப் பொறுக்கும் தமிழ் மேட்டுக்குடிக்ளதும் முகத்தில் அறைந்து மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்.

பாசிச சூழலில் மக்களை அணிதிரட்டுவதற்கும் போராடுவதற்குமான வழிமுறைகளைக் கண்டறிதலும் செயற்படுத்தலுமே இன்று அவசியமானது. அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போன்ற ஏகாதிபத்திய அடியாள் அமைப்புக்களுக்கு அப்பால் நடைபெற வேண்டும். அதன் முதற்கட்டம் தேர்தலை முற்றாகப் புறக்கணிப்பதிலிருந்தே ஆரம்பமாகலாம்.
சிங்கள பாசிச அரசினதும், சிங்கள் தமிழ் மேட்டுக்குடி அதிகாரவர்க்கதினதும் பிடியிலிருத்து விடுவிப்பதற்கான போராட்டமாக தேர்தல் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெறட்டும்.

தேர்தல் நாளில் பிணங்கள் விழுந்து இரத்தம் உறையாத வடக்கு மண்ணில் மயான அமைதி நிலவட்டும். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசல்ல இனக்கொலையாளிகளின் கூடாரம் என உலக்கிற்கு மக்கள் சொல்லட்டும்.

* இனியொருவால் சேர்க்கப்பட்டவை

Exit mobile version