புலிகள் நிகழ்த்திய வன்முறைத் தர்ப்பாருக்குள் பதுங்கியிருந்த விசமிகள் கூட்டம் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஆழப்படுத்தி அழிவுகளின் இடுக்கில் வடியும் குருதியைச் சுவைப்பதற்காக தெருவிற்கு வந்திருக்கிறார்கள். அதுவும் வஞ்சம் புகுந்த மார்பை நிமிர்த்தி மக்கள் மத்தியில் நச்சை விதைக்கிறார்கள். புற்று நோய் போன்று சமூகத்தின் ஒவ்வோர் அங்கங்களிலும் நச்சை விதைக்கிறார்கள்.
மனித குலத்தின் அரசியல் அறம் என்பதை கொலைகளால் அழித்துச் சுவைத்தவர்கள் தொழிலாளர் தினத்தைக்கூடக் கொச்சைப்படுத்த தவறவில்லை.
பிள்ளையானும் கருணாவும் புரிந்த போர்க்குற்றங்களின் பின்னணியில் செயலாற்றிய பிள்ளையானின் அரசியல் ஆலோசகர் எம்.ஆர்.ஸ்டாலினின் அடையாள அரசியல் பரிஸ் வீதிகளில் சிவப்புக் கொடியோடு மேதின இரத்தம் கேட்டது.
இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் அடையாளம் தெரியாமல் அழிக்கப்படும் போது இந்த அடையாள அசிங்கங்கள் சுய நிர்ணய உரிமைக்கு எதிராக சம உரிமை இயக்கத்தோடும் முன்னிலை சோசலிசக் கட்சியோடும் கைகோர்த்துக்கொள்கிறார்கள்.
பிள்ளையானின் கிழக்கு அடையாளத்திற்கு மக்கள் செருப்படி வழங்கிய கதையையெல்லாம் இவர்கள் கண்டுகொள்வதில்லை. காலகாலமாக வடக்கிலும் கிழக்கிலும் ஒடுக்கப்படும் தலித்துக்கள்இவர்களின் தலித் கதையாடலுக்கும் கூறுபோடுதலுக்கும் பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டார்கள்.
அழிக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களை எங்காவது ஒரு இடத்தில் கூறுபோட முடியுமானால் அங்கே இந்தக் கும்பல் தனது கைவரிசையை ஆரம்பித்துவிடும்.
பாசிசத்தின் தொங்குதசைகளான இந்தக் கும்பல் சம உரிமைக்காக கிளம்பியிருப்பது வியபுக்குரியதல்ல. சுயநிர்ணய உரிமை என்றாலே தீண்டாப் பொருள் என்று பதைபதைக்கும் முன்னிலை சோசலிசக் கட்சி தோற்றுவித்த சம உரிமை இயக்கம் எம்.ஆர்.ஸ்டாலின் அல்லது சின்ன மாஸ்டர் என்ற பிள்ளையானின் ஆலோசகரோடும் இலங்கை அரச ஆதரவு தலித் முன்னணியோடும் இவர்களின் ஜால்ராக்களோடும் ஐக்கிய முன்னணி கட்டியிருப்பது தற்செயலானதல்ல.
மே தினத்தன்று பாரிஸ் நகரில் இக் குழுக்களுன் ஒன்றுகூடலில் “அராஜகத்தை அழிப்போம், அமைதி வேண்டி அராஜகம் அழிப்போம், இனங்களுக்கு சம உரிமை, வேற்றுமையைக் கடந்து ஐக்கியப்படுவோம்” போன்ற சுலோகங்கள் முன்வைக்கப்பட்டன.
இலங்கை என்ற நாட்டினுள் பாலும் தேனும் ஒடுவது போன்றும் யாரோ இனம் தெரியாத பூதங்கள் அராஜகம் புரிந்து வருகின்றன என்பது போலவும் சுலோகங்களை முன்வைத்தார்கள். இன அழிப்பு என்பது இவர்களது கண்ணுக்கு அராஜகமாகத் தெரிகிறது போலும்.
யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவத்தில் இணைந்து இனச் சுத்திகரிப்பில் ஈடுபடும் இந்தக் கும்பலின் ‘இராணுவத்தலைவன்’ கீரனின் அராஜகம் சமாதானத்துக்கானதாக தெரிகிறது போலும்.
இலங்கையில் காணாமல் போய் விடுபட்டுக்கொண்ட பிரேம்குமார் குணரத்தினத்தின் பாரிஸ் ஏகப் பிரதிநிதியான ரயாகரனும் இந்த அரச ஆதரவுக் கும்பலோடு இணைந்து இடது பாட்டாளி வர்க்கப் புரட்சியை மே தினத்தன்று நடத்தினார்.
இவர்களின் வன்மம் அழிக்கப்பட வேண்டியது. மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கும் ஒவோருவரும் இவர்கள் தொடர்பாக எச்சரிக்கையடைய வேண்டும்,
இவர்கள் இலங்கை அமைதியாக இருக்கின்றது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முனைகிறார்கள். அங்கு பேரினவாதம் இல்லை சுய நிணய உரிமை என்ற ‘இனவாதக் ‘ கோஷமே பிரச்சனையானது என்று போலிப் பிரச்சாரம் செய்கிறார்கள். இலங்கை அரச தொங்குதசைகளான இந்தக் கும்பலின் அரஜகம் அழிக்கப்படுவது மக்களின் சமாதனத்திற்கு அவசியமானது.