Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை அரசிற்கு எதிராகப் போராடாதீர்கள் – உளவியல் யுத்தம் : சபா நாவலன்

இலங்கைப் அரசு தமிழ்ப் பேசும் மக்கள் மீது நிகழ்த்திய இனப்படுகொலையின் பின்னான அரசியல் பல அரசியல் பிரச்சனைகளுக்கான உரைகல். புதிய முகாம்கள், புதிய சார்பு நிலைகள் என்று ஒவ்வொரு அரசியல் மனிதனும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மிகக் குறிப்பான காலகட்டம் ஒன்றில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நினைத்துப் பார்க்க முடியத அழிவுகள். அதிர்ச்சியூட்டும் அணி சேர்க்கைகள! இவற்றின் பின்புலத்தில் உருவமைக்கப்படும் சமூகப் பொதுப்புத்தி என்பது அழிவுகளை அங்கீகரிக்கக் கோருகிறது. இதற்காக அதிகார வர்க்கம் செயலாற்றும் வழி முறை அதன் செல் நெறி என்ப்னவெல்லாம் மிகுந்த சமூகத்தின் கீழ் நிலையிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவிற்கு மிகுந்த அச்சதை ஊட்டுகின்ற எச்சரிக்கைகள்.

முள்ளிவாய்க்கலிலிருந்து ஆரம்பிக்கும் அழிவிற்கான நிகழ்ச்சித் திட்டம்

 

முள்ளி வாய்க்கால் அழிவுகளின் பின்னர், உலகம் ஆயிரமாயிரமாய் மனிதப் படுகொலைகளை மௌனமாய் அங்கீகரித்த பின்னர் வெளிப்படையான அழிப்பு நடவடிக்கை தெற்காசியாவிலிருந்து ஆரம்பிக்கிறது.

1. நந்திக் கடலோரம் இரத்தத்தால் குளிப்பாட்டப்படுகிறது.

2. இலங்கையில் பயங்கரவாதம் அழிக்கப்பட்டுவிட்டதாக பிரச்சாரம் முடுக்கிவிடப்படுகிறது.

3. உலகம் முழுவதும் பரந்திருந்த மனிதாபிமானிகள், ஜனநாயகவாதிகள், தேசியவாதிகள், சீர்திருத்தவாதிகள் புதிய சார்புநிலைக்குள் உள்வாங்கபடுகின்றனர்.

4. இதுவரைக்கும் எதேச்சதிகாரத்திற்குத் துணை போவதற்குப் பின்நின்ற வெனிசூலா, கியூபா போன்ற நாடுகள் இலங்கைப் பிரச்சனையில் எதிர்பாராத புதிய அணிசேர்க்கையை மேற்கொள்கின்றன.

5. வன்னிப் படுகொலைகளின் தொடர்ச்சியாக உலகின் சித்திரவதை முகாம்கள் நிறுவப்படுகின்றன. மூன்று லட்சம் மக்கள் சாட்சியின்றிச் சிறைவைக்கப்படுகின்றனர்.

6. தமிழ் நாட்டிலும் புலம் பெயர் நாடுகளிலும் மிகத் தந்திரமாக இலங்கை – இந்திய அரசுகள் தமக்கு எதிரான எதிர்பியக்கங்களை எதிர்கொள்கின்றன.

7. இலங்கையை முன்வைத்து இனிமேல் எதிர்ப்பியகங்களும் “எதிர்ப்பரசியலும்” சாத்தியமில்லை என்ற சிந்தனை உருவமைக்கப்படுகிறது.

8. அமரிக்கக் கப்பல் வருகிறது, செஞ்சிலுவைச் சங்கம் நந்திக்கடலை ஆட்கொள்கிறது, ஐக்கிய நாடுகள் பார்த்துக்கொண்டிராது என்று வழங்கப்பட்ட நம்பிக்கை பல அழிவுகளை ஏற்படுத்தியது.

இவை எல்லாவற்றினதும் பின்புலத்தில் ஒரு பிரதானமான உளவியல் போர் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இதன் தாக்கத்திற்கு உள்ளான ஒரு பகுதியினர் நேர்மையாகவே போராடாதீர்கள் அழிந்துபோய்விடுவோம் என்கிறார்கள், இன்னொரு பகுதியினர் உளவியல் போரின் தெரிந்தெடுக்கப்பட்ட வியாபார முகவர்கள் போல் தொழிற்படுகிறார்கள். பயன்படுத்தப்படுபவர்கள் பயன்படுபவர்கள் என்ற இரண்டு ஆபத்தான பகுதியினரை இப்போர் உருவாக்கியுள்ளது. உரிமை கேட்பவர்களின் மீதும், அழிவுகளை எதிர்ப்பவர்கள் மீதும் நிகழ்த்தப்படும் இந்த யுத்தத்தின் கோட்பாட்டுத்தளம் மனிதாபிமான முன்னறிவிப்புகளூடாக விரிவுபடுத்தப்படுகிறது. அது மனிதாபிமானிகளின் “குற்ற உணர்விற்குத்” தீனி போடும் தந்திரோபாயத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

எதிர்ப்பியங்களுக்கு எதிரான உளவியல் யுத்ததின் மனிதாபிமான முகம்(a) – இதன் எதிர்விளைவுகள்(b)

 

1a. செத்தவர்கள் செத்துப் போய்விட்டார்கள் எஞ்சியவர்களைக் காப்பாற்ற வேண்டும் – போராடாமல் உதவி செய்யுங்கள்.

1(b). நாளை தமிழ் நாட்டில், ஆபிரிக்காவில், ஐரோப்பாவில் அல்லது இலங்கையின் முள்ளிவாய்க்கால் போன்ற இன்னொரு மூலையில் இன்னும் பல்லாயிரம் மனிதர்களைக் கொன்று குவித்துவிட்டு செத்தவர்கள் போக எஞ்சியிருப்பவர்களுக்கு உதவுங்கள் என்ற குரல் மனிதப்ப்பண்பாக மாறிவிடும்.

2a. போரால் நாடு அழிந்து போயிருக்கிறது நாம் கட்டியெழுப்புவோம் – போராட்டமல் அபிவிருத்திசெய்யுங்கள்.

2(b). நூறு வருடங்கள் பேரினவாதப் போரால் நாட்டைக் குட்டிச்சுவராக்கியவர்கள் அதே பேரினவாதத்திற்கு எந்த அரசியல் தீர்வையையும் முன்வைக்காமல், பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் மேல் குந்தியிருந்துகொண்டு அபிவிருத்திசெய்ய அழைக்கிறார்கள்.

3a. இலங்கையில் மக்கள் போராடவில்லை அவர்களுக்காகப் போராடுவதாகக் கூறி மக்களை அழித்துவிடாதீர்கள்.

3(b). இலங்கையில் மக்கள் போராடவில்லை என்கிறார்கள். அவர்கள் நம்பிக்கையிழந்து அனாதரவான நிலையில் நிற்கிறார்கள். அவர்களுக்காகக் குரலெழுப்ப யாரும் இல்லை. அந்த உளவியல் நம்பிக்கை உருவாக்கப்படும் வரை அவர்கள் அழிக்கப்படுவது தொடரும்.

4a. புலிகள் போன்ற “மெகா” அமைப்பாலேயே வெல்ல முடியவில்லை. நீங்கள் ஒன்றும் சாதித்துவிட முடியாது.

4(b). புலிகளின் தவறாக வழி நடத்தப்பட்ட அழிவு யுத்ததம் தான் போராட்டம் என்ற மாயை ஒரு புறத்தில் இலங்கை இந்திய அரசுகளாலும் மறுபுறத்தில் புலிகளின் ஆதரவாளர்களாலும் கட்டமைக்கப்படுகிறது. இதன் எதிர் விளைவாகப் புதிய எதிர்ப்பியக்கம் சாத்தியமற்றது என்ற கருத்து உருவாக்கப்படுகிறது.

5a. இலங்கை அரசோடு சமரசம் செய்துகொண்டால் குறைந்தபட்ச உரிமைகளையாவது பெற்றுக்கொள்ளலாம்.

5(b). இன்றிருப்பதை விட வன்மம் குறைந்த பேரினவாத அரசுகளோடு சமரசம் செய்துகொண்ட வரலாறு தமிழ்ப் பேசும் மக்களின் எதிர்ப்பியக்கங்களுக்கு உண்டு. 1956 இலிருந்து உரிமைகள் பறிக்கப்படுவது தான் வரலாறு. எதுவும் வழங்கப்பட்டதில்லை.

6a. மௌனமாயிருங்கள் ஒபாமாவும், ஐக்கிய நாடுகளும், ஐரோப்பாவும் இலங்கையைக் குறிவைத்துள்ளன. ஒன்றில் அவர்களிடம் மன்றாடுங்கள் அல்லது அவர்களைக் குழப்பிவிடாதீர்கள்.

6(b). கிளிநொச்சியில் போர் ஆரம்பித்த நாட்களுக்கு முன்பிருந்தே ஐக்கிய நாடுகளையும், அமரிக்காவையும் நம்புமாறு தமிழ்ப் பேசும் மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். போராடும் சக்திகளை நம்பவைத்துப் எதிர்ப்பியக்கங்களை மட்டுப்படுத்தும் திட்டமிட்ட செயன்முறை தான் இது. தமது வர்த்த நலன்களை முன்னிறுத்து மட்டுமே செயற்படும் இவர்களுக்கு எதிர்ப்பியக்கங்கள் எதிரிகள்.

7a. பிரபாகரன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். அவரது துப்பாக்கி இன்னும் சூடாறிவிடவில்லை. திடுமென வந்து தமிழர்களை மீட்டெடுப்பார்.. போராடுவதை நிறுத்துங்கள்.

7(b). அமரிக்காவும், இந்தியாவும் எவ்வளவு ஆபத்தானவர்களோ அதே அளவில் பிரபாகரன் வாழ்கிறார் பேர்வழிகளும் ஆபத்தானவர்கள். மறைமுகமாக அவர்கள் சொல்வதெல்லாம் போராடாதீர்கள் பிரபாகரன் வருவார் என்பதே. முள்ளிவாய்காலின் பின்னான காலப்பகுதியில் எதிர்ப்பியக்கங்களை மட்டுப்படுத்த இது பெரும் பங்கு வகித்திருக்கிறது.

இவை அனைத்தினதும் மையமான முழக்கமாக அமைந்திருப்பது, செத்துப் போனவர்களுக்காகவும், சாகடிக்கப்படுபவர்களுக்காகவும் குரலெழுப்ப வேண்டாம் என்பது மட்டும்தான்.

இலங்கை அரசின் மனிதப்படுகொலைகளுக்கு எதிரான எதிர்ப்பியக்கங்கள் அழிக்கப்படுமானால் அல்லது மட்டுப்படுத்தபடுமானால் உலகின் அனைத்து அதிகாரவர்க்கமும் அதே உதாரணத்தை முன்வைத்து கட்டற்ற மனிதப்படுகொலைகளை மேற்கொள்ளலாம் என்ற குறைந்தபட்ச உண்மையைக் கூடப் புரிந்துகொள்ள முடியாத பலரின் சமூகவிரோத நிலைப்பாடு தெருவிற்கிழுத்து அம்ப்பலப்படுத்தப்பட வேண்டும். இவற்றிற்குப் பலியானவர்களின் மௌனம் எதிர்கால சமூகத்திற்கு எச்சரிகைவிடுக்கிறது.

இலங்கை அரசிற்கு எதிரான அரசியலும் அழுத்தமும் மட்டுப்படுத்தப்படதன் எதிர் விளைவுகள்.

1. இந்தியா உட்பட பல நாடுகள் இலங்கை இனப்படுகொலையை முன்னுதாரணமாகக் கொண்டு தமது மக்களை அழிக்க ஆரம்பித்துள்ளன.

2. இலங்கை எந்த எதிர்ப்புமின்றி தனது இனப்படுகொலையையும் இனச் சுத்திகரிப்பையும் தொடர்கிறது.

3. சிங்கள பௌத்த சோவனிசத்தின் மேலும் வளத்தெடுக்கும் இலங்கை அரசு அதனை அடிப்படையாகக் கொண்டு தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரின் அடயாளத்தை அழித்துவருகிறது.

4. மக்கள் மீதான இராணுவ உளவியல் யுத்ததினூடாக தனது அழிப்பிற்கு எதிரான போராட்டச் சூழலை நிர்மூலமாக்கியுள்ளது.

5. இலங்கை முழுவதையும் இந்தியா ஈறான பன்னாட்டு வியாபார்களுக்கு விற்பனை செய்து வருகிறது.

6. முகாம்களில் அடைத்துவைகப்பட்டுள்ளவர்களும் அரசியல் கைதிகளும் எப்போது வேண்டுமானாலும் அழிக்கப்படும் சூழல் காணப்படுகிறது.

7. மீள் குடியேற்றம் என்ற பெயரில் தெருக்களில் வீசியெறியப்படும் குழந்தைகளதும் குடும்பங்களதும் அவலம் தொடர்கிறது.

முழு உலகினதும் அதிகார மையங்களின் ஆதரவோடு அவற்றின் முகவர்களின் துணையோடு அழிக்கப்பட்ட மக்களின் அழுகுரல்கள் உலகில் எதிரொலிக்காவிட்டால் அழிவுகள் தொடரும். இன்னும் சிறுகச் சிறுகக் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் மக்கள் தனியானவர்கள் அல்ல என்ற உணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அவர்கள் மீதான உளவியல் யுத்ததை தற்காலிகமாகவேனும் எதிர்கொள்ளும் சாத்தியத்தை இலங்கைக்கு வெளியிலுள்ள போராடும் சக்திகள் கொண்டிருக்கின்றன. பேரினவாத அரசு தண்டிக்கப்படாவிட்டால் இதே அழிப்புக்கள் தொடரும் என்ற உளவியல் பொதுச் சிந்தனையை உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள், ஜனநாயகசக்திகள், மனிதாபிமானிகள், போராடுவோர் மத்தியில் உருவாக்கவேண்டும். தமிழ்ப் பேசும் மக்களை அழிப்பதற்கு துணைபோன அதிகாரவர்க்கத்தோடு கைகோர்த்துக்கொள்ளும் அழிவரசியலான குறுந்தேசிய மனோபாவத்திற்கு வெளியில் தான் இதனை முன்னெடுக்க முடியும்.

இலங்கை அரசினதும் அதன் பின்னணியில் செயலாற்றும் அரச அதிகாரங்களதும் உளவியல் யுத்தத்திற்கு எதிராகன பொதுச் சிந்தனையைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டை ஒவ்வொரு சமூகப் பிரக்ஞையுள்ள மனிதனும் முன்னெடுக்கவேண்டும். இதனால் மட்டுமே தமிழர்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும், ஐரோப்பியர்களும், ஆபிரிக்கர்களும், முஸ்லீம்களும் இன்னும் ஆயிரமாயிரம் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்கள் கூட்டங்கள் தமது எதிர்கள் யார் நண்பர்கள் யார் என இனம்கண்டு கொள்வர்.

Exit mobile version