அத்தகைய மானிடப்பிறவிகளை பச்சாத்தாபத்தோடு நடத்துவதற்கு மாறாக எங்களது சமூகம் விதவைகளை அதிருஸ்டம் கெட்டவர்களாகத் தரம்தாழ்த்திப் பார்ப்பதுடன் சமூகச் சடங்குகளில் அவர்கள் கடைசி இருக்கையில்தான் இருக்கவேண்டும் என நினைக்கிறது.விழாக்களில் அவர்கள் எளிமையாகத்தான் ஆடைகளை அணியவேண்டும்,அழகூட்டும் எதனையும் அணியக்கூடாது என்றும் எதிர்பார்க்கிறது.
காலாவதியான எங்களது கலாச்சார நடைமுறைகள் இந்தப் பெண்களுக்கு ஒரு சாபமாக உள்ளது. உடைந்துபோன பாத்திரங்களைப் போல அவர்கள் ஒதுக்கப்படுவது மடடுமல்ல,அவர்கள் வசிக்குமிடத்திலுள்ள குடும்பங்களிலுள்ள கணவன்மார்களையும் வசியப்படுத்தி மயக்கக் கூடியவர்கள் எனவும் கருதப்படுகிறார்கள்.அதன் விளைவாக அநேகமான மனைவிமார்கள் இந்த விதவைகளுடன் கூடியிருக்கும் சந்தர்ப்பங்களில் தங்கள் கணவன்மார்கள்மீது எப்போதும் ஒரு எச்சரிக்கைக் கண் வைத்தபடியே இருக்கிறார்கள். இவைகள் எல்லாவற்றையும் ஒரு வரம்புக்குள் கொண்டு வந்தாலும்கூட எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஒரு விதவை மறுமணம் செய்வதற்கு நமது கலாச்சாரம் அனுமதிப்பதில்லை.இப்படியான கலாச்சாரத் தடைகளின் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது,இந்த விதவைகள் ஒரு நரக வாழ்க்கை வாழ்வதற்கே விதிக்கப்பட்டுள்ளார்கள்.
சமூகத்திலுள்ள ஆண்கள் இறந்துபோனது,இளம் பெண்களுக்கே கணவன்மார்களைத் தேடுவதைக் கடினமாக்கியுள்ளபோது,ஒரு இளம் விதவைக்கு மனைவி இறந்துபோன ஒருவரைக்கூட திருமணம் செய்யத் தேடுவது மிகவும் கடினம்.இந்த விதவைகளின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விடயத்தில் தீவிர சிந்தனைகளை வழங்குதல், மற்றும் இந்தப் பிரச்சனை பற்றிய எங்கள் கலாச்சார அணுகுமுறைகளில் ஒரு மாற்றத்தை உருவாக்க எண்ணுதல் மற்றும் சமூகத்தில் இந்த விதவைகளுக்கு நல்ல ஒரு அந்தஸ்தை வழங்குதல் போன்றவை எமது சமூகத்திடமே விடப்பட்டுள்ளது.
வடக்கிலுள்ள யுத்த விதவைகள் அரசியல் முக்கியத்துவம் பெற்ற ஒரு குழுவினரல்ல என்பதைத் தெளிவு படுத்த வேண்டியது அவசியம்.மேலும் இதிலுள்ள யதார்த்தம் என்னவென்றால் இந்த விதவைகளின் பரிதாப நிலை வடக்கிலுள்ள தமிழர்களுக்கோ அல்லது அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல்வாதிகளுக்கோ முன்னுரிமை அளிக்கப் படவேண்டிய ஒரு விடயமாகத் தோன்றவில்லை.பொதுவாகத் தமிழர்களிடத்து வேகமாக மாறிவரும் சூழ்நிலைகளின் காரணத்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய வேறு பல விடயங்கள் இருக்கின்றன.
இந்த விதவைகளின் மனிதாபிமான தேவைகளை அடிப்படையாகக் கொண்டு தேசிய கொள்கை ஆவணமொன்றைத் தயாரிக்குமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்தை அநேகர் வலியுறுத்திய போதும், இந்த விடயம் அரசாங்கத்தின் உரிய கவனத்தைப் பெற்றதாகத் தெரியவில்லை.
தவிரவும் ஸ்ரீலங்காவில் உள்ள மனிதாபிமான மற்றும் அது தொடர்பான சட்டங்கள் யாவும் ஆண்களை மையப்படுத்தியதாகவே உள்ளன.பெண்கள் தொடாபான மனிதாபிமான விடயங்களில் தனித்தன்மையான ஆறுதல் வழங்கும் நோக்கோடு தயாரிக்கப்பட்ட எந்த ஒரு சட்டமாவது உள்ளவதாகத் தோன்றவில்லை. விதவைகளுக்கு சட்டப+ர்வமான அங்கீகாரத்தை பெறும் வழியில் தடைக்கல்லாக நிற்பது இதுதான்.சட்டவாக்கலில் பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லாமலிருப்பது போர்விதவைகள் தொடர்பான விடயங்கள் அதற்குரிய கவனத்தை ஏன் பெறவில்லை என்பதற்கான மற்றொரு காரணம்.
சட்டமியற்றலில் பங்கு கொள்ளும் ஒரு சில பெண்களும் உரிய சூழ்நிலைகளில் யுத்த விதவைகளைப்பற்றி பாராளுமன்றத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கு போதிய சக்தி படைத்தவர்கள் போலத் தோன்றவில்லை. இப்படியான சந்தர்ப்பத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள்,யாராலுமே கவனிக்கப்படாத இந்தப் போர் விதவைகளுக்கு முடிந்தளவு சாத்தியமான உதவிகளை வழங்க முன்வரவேண்டி உள்ளது மிகவும் அவசியம் ஆகிறது. எப்படியாயினும் இந்த விதவைகளின் நிலையை நன்கு அறிந்த உள்நாட்டுத் தொண்டு நிறுவனங்கள் இந்த விதவைகள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளில் போதியளவு அக்கறை காட்டவில்லை என்றே தெரிகிறது ஸ்ரீலங்காவிலுள்ள தொண்டு நிறுவனங்களிலுள் பெண் தலைவர்கள் இந்தப் பிரச்சினையை ஓரளவுக்கு சமூகப் பிரச்சனையாகப் பார்க்கிறார்கள். அவர்கள் ஒன்றுசேர்ந்து இந்த விதவைகளின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பதற்கு இதுதான் சரியான நேரம்.
மாறாக நாட்டிலுள்ள அரசியற் காலநிலை அப்படியான விடயங்களை எழுப்புவதற்கு உகந்ததாகவில்லை என எண்ணி சிலவேளைகளில் இந்தத் தலைவர்கள் மௌனம் சாதிக்கக் கூடும்.மக்களின் பிரச்சினைகளுக்கு வெளிப்படையாகக் குரல்கொடுத்த ஊடகவியலாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஏற்பட்ட அதே பின்விளைவுகள் தங்களையும் தாக்கலாம் என்றுகூட அவர்கள் அச்சமடையலாம்.
நான் நினைவுபடுத்துவது, எப்படி 1995ல் கல்முனை பிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றிலிருந்த 56 விதவைகள் ஒன்றுகூடி ஒரு அழுத்தக் குழுவை அமைத்தார்கள் என்பதையும் அது சர்வதேச தொண்டு நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்து அவர்கள் முன்வந்து அந்த விதவைகள் தங்கள் சொந்தக் காலில் நிற்பதற்குத் தக்கவகையில் தேவையான கருத்துள்ள உதவிகளைச் செய்தார்கள் என்பதையும்.துரதிருஷ்டவசமாக வடக்கிலுள்ள அரசியற் சூழ்நிலைகள் அங்குள்ள விதவைகள் ஒன்றுகூடி தங்களுக்குள் ஒரு குழுவை அமைப்பதற்கோ,வேறுவழியில் தங்கள் குரலைக் கேட்கச் செய்வதற்கோ உகந்ததாக இல்லாமலிருக்கிறது.
எனினும் அரசாங்கத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புகளைக் கொண்டிருக்கும் ஒரு சில தொண்டு நிறுவனங்களுக்கு அரசாங்கத்தால் விதிக்கப்பட்டு நடைமுறையிலுள்ள விதிகளின் கட்டமைப்புக்குள் இந்த விதவைகளின் நலன்கருதி திட்டங்களைக் கையாள்வதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது என்பது ஒரு உண்மையாகும்.இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று போரினால் ஏற்பட்ட பாதிப்புக்களை தனது நிகழ்ச்சித் திட்டத்தில் கொண்டுள்ள புதிய அமைப்புக்களை பதிவு செய்வதற்கு தற்போதைய சூழ்நிலைகளில் அரசாங்கம் தயக்கம் காட்டி வருகிறது என்பதை.
இத்தகைய சூழ்நிலைகளில் தொண்டு நிறுவனங்களுக்கோ அல்லது தமிழ் புலம் பெயர் சமூகத்திலுள்ளவர்களுக்கோ போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு உதவுவதற்கு கிடைத்திருக்கும் ஒரே சாத்தியமான தெரிவு வடக்கில் பணியாற்ற அனுமதிக்கப் பட்டுள்ள ஸ்ரீலங்காவிலுள்ள அரசு சாரா அமைப்புகள் ஏதாவது ஒன்றுடன் ஒன்றிணைந்து செயற்படுவதே ஆகும்.
அத்தகைய ஒருங்கிணைப்பு, ஒன்றில் தற்போது அரசு சாரா அமைப்பு ஒன்றிடமுள்ள திட்டமொன்றுக்கு நிதியுதவி அளிப்பதோ, அல்லது விதவைகளின் நலன்களுக்கு உதவக்கூடிய சாத்தியமான திட்டப்பணி ஒன்றைத் தயாரித்து அதைத் தெரிவு செய்யப்பட்ட அரசு சாரா அமைப்பு ஒன்றுக்கு விற்று அதனுடன் ஒருங்கிணைப்பு தேடுவதோ ஆகும்.
யாழ்ப்பாணம் நல்ல நிலமையிலிருந்தபோது அங்கு வாழ்ந்த எங்களில் பலருக்கு அதிக எண்ணிக்கையிலான சிக்கன மற்றும் கடனுதவி கூட்டுறவுச் சங்கங்கள் அநேகமாக குடாநாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் இயங்கி வந்தது தெரியும்.அந்த நாட்களில் இந்தச் சங்கங்கள் சிக்கனத்தையும் சேமிப்பையும் மட்டும் முன்னேற்றாது அவை ஒரு சிறிய வங்கிபோல அபிவிருத்தியாகி செயற்பட்டு வந்ததுடன் அதன் அங்கத்தவர்கள் அதனிடமிருந்து சுலப தவணை முறையில் பிரசவச் செலவு,நீரிறைக்கும் இயந்திரம் போன்ற விவசாய உபகரணங்களின் கொள்வனவு,சுயதொழில் முயற்சிகள் போன்ற தங்களின் அவசரத் தேவைகளுக்கு கடன் பெற்று வந்ததையும் நாமறிவோம்.
சமீபத்தைய யுத்தம் இந்தச் சங்கங்களின் செயற்பாடுகளைச சீரழித்து விட்ட போதிலும், அநேகமானவை பிழைத்திருந்து தற்போது செயற்பாட்டில் இருக்கக்கூடும். நாங்கள் விரைவான ஒரு ஆய்வை நடத்தி விதவைகளை அங்கத்தவர்களாக கொண்ட சங்கங்கள் எவை எனக் கண்டறிந்து அவைகளுக்கு விசேட உதவிகளை வழங்குவதன் மூலம் அதன் அங்கத்தவர்களான போர் விதவைகளுக்கு உதவி வழங்க முடியும்.
இந்த சிக்கன மற்றும் கடனுதவி கூட்டுறவுச் சங்கங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட அங்கங்களாக உள்ளபடியால்,அவை கூட்டுறவுச் சங்கத் திணைக்களத்தின் மேற்பார்வையிலும் வழிகாட்டலிலும் வங்கிகளில் கணக்குகளை வைத்திருக்கும்.இந்தச் சந்தர்ப்பத்தில் இது புலம் பெயர் சமூகத்தவருக்கு வடக்கிலுள்ள யுத்த விதவைகளுக்கு உதவி செய்யக் கூடிய மற்றுமொரு தெரிவாகும்.
இதில் அவதானிக்க வேண்டியது என்னவென்றால் விதவைகளின் நலன்கருதி உருவாக்கப்படும் எந்தத் திட்டமும் விதவைகளைத் தரமுயர்த்தி அவர்கள் தங்கள் சொந்தக் கால்களில் நிற்கக்கூடியதை முகக்குவியமாக கொண்டிருக்க வேண்டுமே தவிர அவர்களுக்குப் பாவனைப் பொருட்களை வழங்கும் திட்டமாக இருக்கக்கூடாது,ஒரு திட்டம் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதை மட்டுமே கருதி உருவாக்கப்பட்டால் அது மிக மோசமான தவறாகும்,ஏனெனில் அது அந்த விதவைகளை வாழ்நாள் முழுவதும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வாழும் நிலைக்குத் தள்ளி விடும்.
செயல்படுத்தப் படுவதற்காக திட்டப் பணிகளை அடையாளம் காண்பதற்கு,அந்தத் திட்டம் செயல்முறையில் சாத்தியமானதா என அவதானமாக பரிசோதிக்க வேண்டும்.புலம் பெயர் சமூகத்திலுள்ளவர்கள் தையல் இயந்திரங்களையும், கோழிப்பண்ணை, ஆடு மாடுகள்,வளர்த்தல் போன்ற கால்நடை உற்பத்தியிலும் உதவிகளை வழங்க விரும்பும் சந்தர்ப்பங்களை நான் கண்டுள்ளேன்,இவைகள் அவர்களின் உற்பத்திகளைச் சந்தைப்படுத்தி அத்தகைய முயற்சிகள் மூலம் தங்களின் வாழ்க்கையை கொண்டு நடத்த இயலுமா என்பதைப்பற்றி சிறிதுகூட ஆய்வு செய்யாமல் மேற்கொள்ளப்படும் திட்டங்கள்.
தவிரவும் இந்த விதவைகளுக்கு அத்தகைய முயற்சிகளுக்கான போதிய முன் அனுபவம் கூட இல்லை, மற்றும் தையல் இயந்திரங்களை அல்லது கால்நடைகளை இங்கு அதிகரித்து காணப்படும் திருடர்களிடமிருந்து பத்திரமாகப் பாதுகாத்து வைப்பதற்கான தகுந்த இடம்கூட அவர்களிடம் இல்லை. எனவே அத்தகைய திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கு முன்னர் வழங்குபவர்கள் எதிர்பார்க்கும் குறிக்கோளை அடைய வேண்டுமானால், திறமைகள், தேவைகள், மற்றும் விதவைகளின் உற்பத்திக்கான சந்தை வாய்ப்பு என்பன பற்றி ஒரு ஆய்வு மேற்கொள்ளப் படவேண்டும்.
கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றுமொரு தெரிவாக உள்ளது,இந்த யுத்த விதவைகள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் கிராமங்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது.அவர்கள் ஒரு பொதுக் கிணறு ஒன்றைக் கட்டிக் கொடுப்பார்களானால் அது பல குடும்பங்களுக்கு பயன் தருவதாக இருக்கும். அல்லது போரினால் சிதைவடைந்து போயுள்ள சிறிய பாடசாலைக்கு ஒரு கட்டடத்தை அமைத்துத் தருவார்களானால் அது இந்த விதவைகளின் பிள்ளைகள் கல்வி கற்பதற்கான ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தும்.
போரின் தாக்கத்தால் அநேக விதவைகள் கால்கள் துண்டிக்கப் பட்டதாலோ அல்லது முடமாக்கப் பட்டதாலோ நடமாடும் சக்தியற்றவர்களாக உள்ளார்கள் என்பதை நாம் மறந்து விடலாகாது, அதேபோல ஒரு கையையோ அல்லது இரண்டு கைகளையுமோ இழந்தவர்களும் இருக்கிறார்கள்.
இதற்காக ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர்கள் சாதாரணமாக நகருவதற்கான இயக்க உதவிகளை மட்டுமல்லாது,ஏதாவது ஒரு வழியில் அவர்கள் வாழ்க்கையை கொண்டு நடத்தும் பெரும் முயற்சிக்குத் துணையாக இருக்கக்கூடியவற்றையும் கண்டறிந்து,அதற்கு வேண்டியவற்றை வழங்குவதற்கு வேண்டிய தீவிர அக்கறைகளை மேற்கொள்ள வேண்டும்.
நான் இங்கு குறிப்பிட விரும்பும் மற்றுமொரு விடயம், நாங்கள் செய்யும் உதவிகள் ஏற்கனவே வழங்கப்பட்டதனால் இரட்டையாகி விட்டதோ என்பதை நாங்கள் உறுதிப் படுத்த வேண்டியது மிகவும் அவசியம். பிரதான வீதிக்கு அண்மையில் இருக்கும் கிராமங்களிலுள்ள விதவைகளை அணுகுவதைக் காட்டிலும் வெகு தொலைவில் கிராமத்தின் உட்பகுதியில் உள்ள விதவைகளை நாம் அணுகவேண்டும்.
தஙகளின் கிராமங்களை அணுகுவதற்கு வழித்தடங்கள் அற்றிருப்பதனால் எந்தவிதமான உதவிகளையும் வெகு குறைவாகவே பெறும் அத்தகைய விதவைகளுக்கு நாம் கூடியளவு முன்னுரிமை வழங்க வேண்டும்.புலம் பெயர் சமூகத்தினர் ஏற்கனவே விதவைகளின் குடும்பங்களைத் தத்தெடுத்து மற்றும் தங்கள் வளர்ப்பு குடும்ப அங்கத்தவர்களுக்கு நேரடியாகவே உதவிகளை வழங்கி வருவதை நான் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். இந்த முறை அத்தகைய குடும்பங்களுக்கு சில உடனடி நலன்களை வழங்கிய போதிலும், அதில் அவர்கள் தொடர்ந்தும் தங்கள் புலம்பெயர் நலன் வழங்குபவரிலேயே தங்கியிருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதுடன் தங்கள் சொந்தக்காலில் நிற்கும் முயற்சிகளை மேற்கொள்ளுவதற்கான வாய்ப்புகளைக் குறைவாகவே முன்னெடுப்பார்கள்.
ஆனால் மிகவும் உண்மையாக தமிழ் பெண்கள் அபிவிருத்தி முன்னணி (ரி.டபிள்யு.டி.எப்) போன்ற அமைப்புகளும் மற்றும் பலவும் எற்கனவே பல்வேறு வழிகளில் வடக்கிலுள்ள யுத்த விதவைகளுக்கு உதவக்கூடிய பல திட்டங்களை ஆரம்பித்துள்ளார்கள்,அது இந்த விதவைகள் யாரும் மறந்து விடவில்லை என்பதற்கு ஒரு அடையாளமாகும், விசேடமாக புலம் பெயர் சமூகத்திலுள்ளவர்கள்.பாதகமான அரசியல் காலநிலை இருந்தும்கூட,பல்வேறு அமைப்புகளாலும், மற்றும் தனி நபர்களாலும் இந்த விதவைகளுக்கு உதவி வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் இன்னும் அதிகமான பணிகள் நிறைவேற்றப் படவேண்டியுள்ளன.மிகவும் அவசிய தேவைகளை வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்,அதேவேளை பலமற்றவர்களுக்கும் மற்றும் நிலையற்றவர்களுக்குமான உதவிகளின் பங்கை அவர்கள் அடைய வேண்டும்.
எந்த வகையான திட்டங்களோ அல்லது உதவிகளோ இந்த விதவைகளுக்கு வேண்டி எற்படுத்தப் பட்டாலும் அந்தத் திட்டப்பணிகளின் செயற்பாடுகள் குறிப்பிட்ட திட்ட இலக்கோடு ஒத்துள்ளதா என்பதைக் கண்காணிப்பதற்காக திறமையான மேற்பார்வைப் பொறிமுறை இருக்க வேண்டும். இந்தத் திட்டங்களில் வரக்கூடிய தடைகளை முறியடிக்கத் தக்க விதத்தில் மாற்றங்களை எற்படுத்த இயலத் தக்க விதத்தில் இந்தத் திட்டப் பணிகளில் ஒரு நெகிழ்வுத் தன்மை இருப்பதும் அவசியம்.நிதிகளைச் செலவிடுவது தவறான பயன்பாடுகளைக் குறைக்கத் தக்க விதத்தில் ஒழுங்காக நிர்வகிக்கப் படவேண்டும்.திட்டங்களைப் பற்றி ஒழுங்கான இடைவெளிகளில் மதிப்பீடு செய்வதற்காக ஒழுங்கு விதிகள் அமைக்கப் படவேண்டும்.
என்னுடைய விளக்கத் தரவுகளில் குறிப்பிட்டுள்ள அனைத்து விடயங்களையும் தமிழ் பெண்கள் அபிவிருத்தி முன்னணியினால்(ரி.டபிள்யு.டி.எப்) கவனத்தில் கொள்ள முடியும் என நான் நம்புகிறேன்,அத்தோடு அவதானமாகத் தயாரிக்கப்பட்ட திட்டமொன்றை விரைவிலேயே ஆரம்பித்து இந்த விதவைகளை எங்கள் சமூகத்தின் பிரதான நீரோட்டத்துக்குள் சாத்தியமான வேகத்தில் கொண்டு வருவார்கள் என்றும் நம்புகிறேன்.
(இதன் எழுத்தாளர் ஒரு சுயாதீன ஆய்வாளரும் மற்றும் பயிற்சி ஆலோசகருமாவார். இந்தக் கட்டுரை காணப்பட்ட இணையத்தளம் This appeared in freemalaysiatoday.com)
தமிழில். எஸ்.குமார்
நன்றி : தேனீ இணையம்