மீள் பதிவு: Published on: Oct 16, 2011 @ 21:32
பிரித்தானியாவில் உயர்கல்வி கற்கும் நோக்கோடு அங்கு செல்கின்ற இந்திய மாணர்வகளில் பலர் மேற்கு லண்டன் பகுதியிலுள்ள சீக்கியர்களின் கோவிலுக்கு உணவிற்காக வருகிறார்கள் என்ற செய்தி வெளியாகியிருந்தது. பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள வேலையில்லாத் திண்டாடம் காரணமாக அங்கு பகுதி நேர வேலை பெற்றுக்கொள்வது சாத்தியமற்ற நிலையில் மாணவர்கள் வெளி நாட்டு மாணவர்கள் நாளாந்த உணவிற்கா சீக்கியர்களின் கோவில் இலவச உணவைப் பெற்றுக்கொள்வதற்காக பல மைல் தொலைவிலிருந்து கூட வந்து சேர்வதாகத்ச் செய்திகள் வெளியாகியிருந்தன. 2009ம் ஆண்டு இறுதியில் இத்தகவல்கள் வெளியாகியிருந்தன. இன்று இரண்டு வருடங்களின் பின்னர் பிரித்தானியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் பல மடங்காக அதிகரித்துள்ளது.
குறிப்பாக 25 வயதிற்கு உட்பட்ட பிரித்தனியர்கள் கூட நிரந்தர வேலை பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலுல்ளனர்.
இந்த நிலையில் இலங்கையில் பேரினவாத ஒடுக்கு முறையில் கோரப்பிடியிலிருந்தும், பொருளாதார நெருக்கடியிலிருந்தும் தம்மை விடுவித்துக்கொண்டு வெளி நாட்டுக் கனவோடு பிரித்தானியக் கல்லுரிகளுக்கும் பல்கலைக் கழகங்களுக்கும் வரும் மாணவர்களின் அவலம் பேசப்படுவதில்லை.
பலர் நாளந்தத உணவிற்கே வழியற்ற நிலையில் காணப்படுகின்றனர். தங்குமிட வசதியின்றி தவிக்கின்றனர்.
லண்டனில் கற்பதற்கு அனுமதி பெற்றால் வேலைவாய்ப்புப் பெற்றுக்கொள்வது இலகுவானதென்றும் பகுதி நேர வேலைசெய்து கல்விக் கட்டணத்தையும் வாழ்க்கைச் செலவையும் சீர் செய்து விடலாம் என்றும் கூறப்படுகிறது. இலங்கையில் இங்குள்ள கல்விக் கூடங்களின் முகவர்கள் தமது வியாபாரத்தை நடத்துவதற்காக மிகப்படுத்தப்பட்ட தகவல்களை வழங்குகின்றனர்.
இப்போது பிரித்தானியாவிற்கு வருகின்ற மாணவர்களுக்கு 10 மணி நேரம் மட்டுமே வேலைசெய்வதற்கான சட்டரீதியான அனுமதி வழங்கப்படுகின்றது. 10 மணி நேர வேலையில் பெற்றுக்கொள்ளும் அடிப்படை ஊதியம் பிரையாணச் செலவுகளுக்கே போதுமானதல்ல.
இந்த நிலையில் சட்டவிரோதமாக வேலை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறனர்.
இந்த அவலத்தைப் பயன்படுத்திக் கொள்கின்ற பிரித்தானிய தமிழ் வியாபாரிகள் இங்கு வரும் தமிழ் மாணவர்களை அரசால் நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை ஊதியத் தொகையிலும் மூன்று மடங்கு குறைவான ஊதியத்தில் வேலைக்கு அமர்த்திக்கொள்கின்றனர்.
பொதுவாக தமிழர்கள் சொந்தமாக வைத்திருக்கும் உணவகங்களிலும், பலசரக்குக் கடைகளிலும் வேலைக்குச் சேர்ந்து கொள்ளும் மாணவர்கள் அங்கு அடிமைகள் போல நடத்தப்படுகின்றனர். பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இலங்கையில் கலாச்சாரம் சீர்ழிவதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் “தேசிய வியாபாரிகளும்” இதில் அடங்குவர் என்பது கோடிட்டுக் காட்டப்படவேண்டிய ஒன்று.
1) திருகோணமலையிலிருந்து கல்வி கற்கவந்த மாணவர் ஒருவரின் அனுபவம்:
நான் 2011 ஆரம்பத்தில் லண்டனில் ஆங்கிலம் கற்கும் கல்வி நிலையம் ஒன்றில் கற்பகற்கான அனுமதிக்கு இலங்கையிலுள்ள முகவர் ஊடாக விண்ணப்பித்திருந்தேன். லண்டனில் நீண்டகாலமாக வாழும் எனது உறவினர்களோடு தொடர்பு கொண்ட போது அவர்கள் தற்காலிகமாகத் தங்குமிட வசதியும் பயணச் செலவையும் ஏற்றுக்கொள்வதாகச் சொன்னார்கள். கல்வி நிலையக் கட்டணம் மற்றும் முகவர்ருக்கான செலவுத் தொகை என 7000 பிரித்தானிய பவுண்ஸ் வரை செலவு ஏற்பட்டது. அம்மாவிடம் இருந்த நகைகளை விற்றும் ஒரு பகுதிப் பணத்தை கடனாக வாங்கிக்கொண்டும் கனவுகளோடு லண்டனில் வந்திறங்கினேன்.
வசதிகளோடு மன்னர்கள் போல வாழ்வதாகச் சொன்ன எனது உறவினர்கள் வீட்டுக்குச் சென்ற போது அவர்கள் நாளாந்த வாழ்க்கைக்கே அல்லல் படுவதை உணரக்க்கூடியதாக இருந்தது. சில நாட்களுக்கு உள்ளாகவே இலங்கையில் வாழ்பவர்களுக்கு இங்குள்ள நிலைமைகலை மறைத்து வசதியாக வாழ்வது போல நாடகமாடுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. அவர்கள் தமது 13 வது மகனோடு சிறிய வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். நான் சென்றதும் அச்சிறுவனோடு அறையிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. லண்டனுக்கு வந்த முதலாவது நாளிலிருந்து வேலை தேடுவதற்கு ஆரம்பித்து நான்கு மாதங்கள் கடந்து போய்விட்ட்டன. நான் அவர்கள் வீட்ட்லில் வாழ்வதற்கும் வசதி இல்லாத நிலையில் எனது நண்பர்கள் சிலரின் உதவியோடு அவர்கள் தங்கியிருந்த வீட்டில் எனக்கும் தங்க இடம் தந்தனர்.
ஒரு சிறிய அறையில் ஏழு பேர் தங்கியிருந்தார்கள். நான் எட்டாவது. தமிழர் ஒருவர் தான் அந்த வீட்டின் சொந்தக்காரர். அவர்களின் உதவியோடு நாம் தங்கியிருந்த வீட்டிலிருந்து 2 மணி நேரப் பிரயாணம் செய்யும் தொலைவில் தமிழர் ஒருவரின் பலசரக்கு அங்காடி ஒன்றில் வேலை கிடைத்தது.
முதல் நாள் வேலைக்குச் சென்ற போது கடை உரிமையாளர் மூன்று வாரங்கள் பயிற்சி தருவதாகவும் அந்தக் காலப்பகுதியில் ஊதியம் எதுவும் தர முடியாது என்றும் சொன்னார்.
உணவிற்கே பணம் இல்லாத நிலையில் பிரையாணச் செலவிற்கு எங்கே போவது? எனது நண்பர்களின் உதவியால் சிறு தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்டேன்.
வேலை செய்ய ஆரம்பித்த முதல் நாளிலிருந்து நான் அனுபவிக்கும் வதைகளை இலங்கையில் கூட தொழிலாளர்கள் அனுபவிப்பார்களோ தெரியாது.
காலை எட்டு மணிக்கு வேலைக்குச் செல்ல வேண்டும். இரவு எட்டுமணி வரைக்கும் 12 மணி நேர வேலை. கடைகளில் சாமன்களை அடுக்குவதும், மூட்டை சுமப்பதும், சமான்களை விற்பதும் என்று ஓய்வற்ற வேலை. கடைக்குச் சென்ற உடனேயே கைத் தொலை பேசியை வாங்கி பூட்டி வைத்துவிடுவார்கள். யாரோடும் பேச முடியாது. கழிவறை வசதிகள் இல்லை. இவை எல்லாவற்றிற்கும் மேலாக உணவு அருந்துவதற்குக் கூட ஓய்வு தரப்படுவதில்லை. வேலையற்ற நேரங்களில் சக தொழிலாளர்களிடம் கூடப் பேசத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
கடையில் விற்பனை செய்யப்படுகின்ற சிறிய உணவுப் பண்டங்களை அங்கேயே வாங்கி உண்பதற்குத் தான் அனுமதி உண்டு.
இதெல்லாம் ஒரு புறமிருக்க பிரித்தானியாவில் அடிப்படை ஊதியம் மணிக்கு 6 பவுண்ஸ்கள். அங்கு வேலை செய்பவர்களுக்கு வழங்கப்படுவதோ மணிக்கு 2 பவுண்ஸ்கள் மட்டுமே. சராசரி மனிதனைப் போல் உணவருந்தினால் 6 பவுண்ஸ்கள் வரை தேவைப்படும். நாங்கள் பிஸ்கட்டுகளை மட்டுமே உணவாக உட்கொள்வோம்.
முன்று நாட்கள் வேலை. ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்தாலும் 8 மணி நேரக் கணக்குப்படி 16 பவுண்ஸ்கள் மட்டுமே வழங்கப்படும். 3 நாள் வேலைக்கு 48 பவுண்ஸ்கள் கிடைக்கும். தங்குமிடம், உணவு போன்ற அடிப்படைச் செலவுகளுக்கு வாரத்திற்கு 50 பவுண்ஸ்களுக்கு மேல் தேவைப்படுகிறது. பிரையாணச் செலவு குறைந்தது 25 பவுண்ஸ்கள் செலவாகும்.
எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இலங்கைக்குச் சென்று எனது பெற்றோருக்கு முன்னால் எப்படி நிற்பது. மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கே இந்த நிலை என்றால் மற்றவர்கள்?
நான்கு மாதங்கள் தீவிரமாகத் தேடிக் கிடைத்த வேலையை விட்டு விலக முடியாது. இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்.
2) நான்கு மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்து லண்டனுக்கு முகாமைத்துவ கற்கைக்காக வந்த பெண் ஒருவரின் அனுபவம்:
நான் வந்த நாளிலிருந்து எனது அடிப்படைச் செலவுகளுக்காக வேலை தேடிய அலையாத இடமே கிடையாது. தற்செயலாகச் சந்திக்கின்ற நிறுவனங்களில் வேலை கேட்டி திருப்பி அவமானப்பட்ட சம்பவங்களும் உண்டு. இறுதியில் நண்பர் ஒருவர் ஊடாக தமிழர் ஒருவரை உரிமையாளராகக் கொண்ட பாஸ்ட் பூட் ஒன்றில் வேலை கிடைத்திருந்தது. 2 வாரங்கள் பயிற்சி என்ற அடிப்படையில் ஊதியமின்றி வேலை செய்யச் சொன்னார்கள் இரண்டரை பவுண்ஸ்களே 2 வாரங்களின் பின்னர் தருவதாகச் சொன்னார்கள்.
அதற்கும் மேலான அதிர்ச்சியாக, 50 வயது மதிக்கத் தக்க உரிமையாளர் என்னுடன் தவறாக நடக்க முற்பட்ட போது நான் வேலையை விட்டு அன்றே வந்து விட்டேன். எனது பகுதி நேர வேலைதேடும் படலம் தொடர்கிறது.
இவை இரண்டு உதாரணங்கள் மட்டுமே. நூற்றுக் கணக்கில் தமிழ் வியாபாரிகளால் பாதிக்க்ப்பட்ட தமிழ் மாணவர்களின் அவலங்கள் அவமானகரமான பதிவுகளாக எம் முன்னே நீண்டு கிடக்கின்றன. இவற்றிற்கு எதிராகக் குரல் கொடுக்க தேசியம் குறித்தும் கலாச்சாரம் குறித்தும் பீற்றிக்கொள்ளும் பிரித்தானிய தமிழர் அமைப்புக்களும் ஊடகங்களும் தயாரில்லை. இவ்வமைப்புக்களும் தமிழ் வியாபாரிகளின் கைகளிலேயே முடங்கியுள்ளன என்பது தான் இதன் பின்புலத்தில் பொதிந்திருக்கும் உண்மை.