Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையின் தேசிய இனச் சிக்கலும் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையும் : அஸ்வத்தாமா

(இலங்கையின் தேசிய முரண்பாடுகளை முன்னிறுத்தி)

அறிமுகம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறையின் தோல்வியுடன் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் பாரிய பின்னடைவை ஏதிர்நோக்கி இருக்கும் போரின் பின்னான இலங்கையின் அரசியற் போக்கு ஒரு புதிய திசையை நோக்கித் திரும்பியுள்ளது. இச் சூழலில் சிங்களப் பேரினவாத நாட்டுப்பற்றும் வேறுபாடான ஒரு உருவத்தை எடுத்து இலங்கையின் தேசியப் பிரச்சினைகளைச் சிக்கலறுப்பதில் புதிய முட்டுக்கட்டைகளையும் தடைகளையும் முன்வைக்கின்றது. இது பெரும்பாலும் உடனடித் தாக்கங்களாக வெளிப்படுகின்றது.

அண்மிய செயற்பாடுகளாக அரச சார்ப்பற்ற நிறுவனங்களும் (NGO) குடிசார் பேச்சாளர்களும் ‘அதிகாரப்பகிர்வற்ற அரசியலமைப்புச் சீர்திருத்தம்’ (Non-Devolutionary Constitutional Reform) பற்றிய கருத்தாக்கங்களை முன்வைக்கின்றன. புதுப்புதுப் புனைபதங்களை முன் வைத்து அரசாங்கத்தை அரசியலமைப்பு மாற்றத்துக்கு இணங்கவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றனவே ஒழிய, மக்களின் உரிமைகளும் வேணவாக்களும் பற்றிப் பெரிதாக எந்த முக்கியத் துவமும் கொடுக்கப்படுவதாகக் காணோம்.

இதன் மறுபக்கத்தில் புலம்பெயர்ந்த குறுகிய தமிழ்த் தேசியவாதிகள் இன்னமும் தமது கற்பனைக் கருத்தாக்கமான தனித் தமிழீழ அரசுதான் இலங்கைத் தமிழர்களுக்கு தீர்வாக அமையும் என்ற வரட்டுத்தனமான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை விடாப்பிடியாக வைத்துள்ளனர்.

இரு அணுகுமுறைகளும் குறுகிய வர்க்க நலன்களை பேணுவதில் அவரவர்களின் பங்கினை வெளிக்காட்டுகின்றன. முப்பதாண்டு உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டாலும் அதற்கு ஏதுவாக இருந்த முரண்பாடுகளின் மூலங்கள் பற்றி இன்னமும் கணக்கிலோ கருத்திலோ எடுக்கப்படாமை நோக்கற்பாலது.

 இலங்கையின் முரண்பாடுகளில் முக்கியமானதான தேசியப் பிரச்சினை இன்ன மும் தீர்க்கப்படாமலே இருக்கிறது. பேரினவாத ஒடுக்குமுறை, சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளின் மறுப்பு ஆதிய யாவும் இன்னமும் வலுவாக உள்ளன. இந்த ஒடுக்குமுறை இருநிலைப் பட்டது— அதாவது அரசியல், படைத்துறை வழி ஏற்படுத்தப்பட்டது.

ஓர் அரசியல் தீர்வுக்கு ஏதுவாக அரசாங்கம் எதையும் முன் மொழியத் தயங்குவதோ விரும்பாமையோ ஆழமான நீண்டகாலச் சிக்கல்களை உருவாக்கும். தேசியப் பிரச்சினைக்கு நேர்மையான தீர்வு என்பது, இலங்கையின் அனைத்துத் தேசிய இனக்கூறுகளினதும் சுயநிர்ணய உரிமை (தன்னாட்சி உறுதிப்பண்புரிமை) கொண்ட ஒரு அமைப்பை உறுதிப்படுத்தும் அடித்தளத்தை கொண்டதாக அமைய வேண்டும். ‘சுயநிர்ணய உரிமை’ என்பது வௌவேறு அரசியல் அரங்காடிகளால் தங்கள் குழு சார்ந்த நலன்கட்கான செய்நிரல்கட்கு ஏற்றவாறு காலத்துக்கு காலம் வௌவேறு விதங்களிற் விளங்கப் பட்டும் விளக்கப்பட்டும் வருகின்றது.

எனவே சுயநிர்ணய உரிமை என்ற கருத்துப்படிவம் இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு தீர்வுக்கு எவ்வாறு பயன்படலாம் என்பது ஆராயப்பட வேண்டியதாகிறது.

சுயநிர்ணய உரிமை

 சுயநிர்ணய உரிமை என்ற கருத்துப் படிவம் ரஷ்யப் புரட்சியில் தன் தோற்றுவாயை உடையது. 1922இல் சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தின் உருவாக்கம் மொழியாலும் பண்பாட்டாலும் வேறுபட்டோரும் ரஷ்யப் புரட்சியால் கவிழ்க்கப்பட்ட ரஷ்ய ‘ஸார்’ பேரரசினால் ஒடுக்கப்பட்டு வந்தோருமான 120க்கும் மேற்பட்ட இனப் பிரிவுகட்குரிய மக்களை ஒன்றிணைத்தது. இம் மாபெருஞ் சாதனை 1917 ஒக்டோபர் புரட்சியின் மூலம் இயலுமானது. அதைப் பற்றிப் பேசுகையில் லெனின், ‘தேசிய ஒடுக்குமுறையை அகற்றலும் தேசியப் பிரச்சினைக்கான சரியான நிலைப்பாட்டை அடைதலும் தேசிய இனங்களின் வீறார்ந்த போராட்டத்தின் வழியிலன்றி வேறு எவ்விதத்திலுமல்ல. சுயநிர்ணயம் பற்றி விளங்கிக் கொள்ள ‘ஐரிஷ்’ பிரச்சினை பற்றிய மார்க்ஸின் ஆய்வுத் தேற்றம் ஒரு முன்னோடிப் பங்களிப் பாகும்.

தொடக்கத்தில், ஐரிஷ் தேசம் தனது சுதந்திரத்தை தானே அடையும் ஆற்றல் உடையதோ அதற்காக தேவை உண்டோ என்பன பற்றி மார்க்ஸ் ஐயுறவு கொண்டார். ஆனாலும் ஐரிஷ் தேசமும் அதன் தொழிலாளி வர்க்கமும், ஆங்கிலத் தொழிலாளி வர்க்கமும் ஆங்கில முதலாளித்துவ அமைப்பைத் தூக்கி எறியும் போது விடுதலை பெறுவார்கள் என எதிர்பார்த்தார்.

அவரது எதிர்பார்ப்பு முன்னேறிய முதலாளித்துவ பிரித்தானியாவின் தொழிலாளர்கள் பிரித்தானியக் குடியேற்ற நாடுகளில் முதலாளித்துவத்தைக் கவிழ்த்துவிடும் நிலையில் உள்ளார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் தோன்றியதாகும். 1860களின் இறுதிப் பகுதியில் ஆங்கில நாட்டின் தொழிலாளர் மத்தியில் ஐரிஷ் மக்கள் மீது காட்டப்பட்ட நச்சு இனத் துவேஷமும் வெறித்தனமான ஓடுக்குமுறையும் பற்றிக் கண்டுணர்ந்து, ஐரிஷ் தேச விடுதலைக்கு ஐரிஷ் மக்கள் முதலாளித்துவத்துக்கு எதிராகப் போராட வேண்டும் என்பதை முன்னிறுத்தித் தன் ஆதரவை நல்கினார். அவர் ஆங்கிலத் தொழிலாளர்களை ஐரிஷ் விடுதலைக்காக முன்னிற்குமாறு தூண்டினார்.

மேலும் ஒடுக்கும் தேசத்தைப் பெயராண்மைப்படுத்தும் ஆங்கிலேயத் தொழிலாளர்கள் ஒடுக்கப்படும் தேசத்தின் விடுதலையை ஆதரிப்பது அவர்களுடைய தார்மீகக் கடப்பாடு என்று மார்க்ஸ் வாதிட்டார். இவ் உளப்பாங்கு, தேசிய பிரச்சினை சார்ந்து, ஒடுக்கப்படும்ஃஓடுக்கப்பட்ட தேசங்கள் தொடர்பான லெனினது நிலைப்பாட்டின் மைய நோக்காகும்.

 ‘மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோரின் ஐரிஷ் பிரச்சனை தொடர்பான கொள்கை ஒரு குறிப்பிட்ட எடுத்துக்காட்டாக, அதாவது ஒடுக்கப்படும் தேசத்தின் உழைக்கும் வர்க்கத்தின் உளப்பாங்கு தேசிய இயக்கச் செயற்பாட்டில் செலுத்தப்படவேண்டும். இவ்வகை நடைமுறை என்றும் தன் செயற்பாட்டு முக்கியத்துவத்தை இழந்ததில்லை’ என லெனின் எழுதுகிறார். மார்க்ஸின் அணுகுமுறையை முன்னிறுத்தித், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையைக் கொள்கை வழியில் எதிர்ப்பவர்கட்கு மாறாகத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் போரட வேண்டும் என்பது அவரது நிலைப்பாடாகும்.

‘தேசங்களின் சுயநிர்ணயத்துக்கான உரிமையானது, விடுதலைக் கான உரிமை, கட்டற்ற உரிமை ஒடுக்கும் தேசத்திலிருந்து அரசியல் ரீதியாகப் பிரிந்து செல்வதற்கு ஆதரவான கிளர்ச்சியை நடத்துவதற்கான கட்டற்றநிலை. பிரிந்து செல்வதா என்ற கேள்விக்கான தீர்வினை ஒப்பங்கோடல்ஃகுடியொப்பம் மூலம் முடிவு செய்யவேண்டிய சுதந்திரம் இருக்க வேண்டிய அதே வேளை இந்தக் கோரிக்கை, பிரிந்துசெல்ல, கூறுபடுத்த, அல்லது சிறு அரசை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ஒத்ததல்ல.

எந்த வடிவத்திலும் நடாத்தப்படும் தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை விளக்கவரும் நேர்மைப் பொருத்தமுடைய வெளிக்காட்டுகையே அது. அரசின் ஜனநாயக முறைமை பிரிந்து செல்வதற்கான முழுமையான நிலையை அண்மித்திருக்குமாயின், முழுமையாகப் பிரிந்து போகும் சுதந்திரத்தை வழங்கும்போது, மிக அருமையாக அல்லாது, வலுக் குறைந்த தேசிய இனக்கூறே செயலளவில் பிரிந்துபோகும். பொருளாதார முன்னேற்றம், மக்கள் நலன்களின் நோக்கில் தேசிய சுயநிர்ணய உரிமைசால் ஜனநாயக முறையைப் பேணும் பேரரசுகளுக்கு பல நன்மைகளை வழங்கும் என்பது ஜயத்துக்கிடமான தன்று.’ சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளல், கூட்டிணைப்புக் கொள்கையை உருவாக்குவது போன்றதல்ல. ஒருவர் இந்தக் கொள்கையையும் மத்தியில் ஜனநாயகம் மையப்படுத்தப் படுவதையும் சமரசமின்றி எதிர்க்கும் ஒருவர், தேசிய இனங்களின் சமனின்மைக்கு தீர்வுகாண முழுமையாக ஒன்றித்த கொள்கையின் கீழ்க் கூட்டிணைப்பை விரும்பலாம் என விளக்குகிறார் லெனின்.

லெனின் சுயநிர்ணய உரிமையை விளக்கி வரைவிலக்கணப் படுத்திய பின்பே பிறர், குறிப்பாக வூட்றோ வில்சன், சுயநிர்ணய உரிமை என்பது மக்கள் தங்களை தாங்களே ஆள்வதற்கான உரிமை என வரையறை செய்கிறார். சுயநிர்ணய உரிமை என்பது மக்களின் இணக்கப்பாடின்றி சட்டரீதியாக எவரும் ஆளமுடியாது என்ற பொருள் கோடலை உள்ளடக்கும். வில்சன் தனது ’14-அம்ச உரையில்’ சுயநிர்ணய உரிமையை பறைசாற்றியிருப்பது நோக்கற் பாலதே. அடிப்படையில் வில்சன், லெனின் இருவரிடையிலும், பின்னவர் பிரிந்து போகும் உரிமையை ஏற்றுள்ளார்.

ஒன்றாக இருப்பது முடியாமற் போனாற் சுயநிர்ணய உரிமையின்படி பிரிந்துபோக உரிமையுண்டே ஒழிய அதுவே பிரிவினையாக மாட்டாது. இதை லெனின் மணமுறிவு உரிமையை எடுத்துக்காட்டி ஒப்பிட்டு விளக்குகிறார். மணமுறிவு உரிமை என்பது மண உறவை முறிப்பதல்ல. ஆனால் ஒவ்வோர் ஆளும் மண ஒப்பந்தத்தினை ஏற்படுத்தும்போது பின்பயன் கருதி மணமுறிவு உரிமையையும் உறுதிசெய்வது போல மணமுறிவு உரிமை இல்லாமல் எந்த திருமணமும் நீடுநிலைப் பொறுப்புறுதி வழங்கமுடியாது. பிரிவதற்கான உரிமை உறவை சமமாக வைக்கவும் நிலைத்து நிற்கவும் செய்வதற்காகனது. ஆகவே ஓர் ஒன்றியத்தின் தேசிய இனங்களும் இனக் கூறுகளும் பிரிந்துபோவதற்கான உரிமை என்பது இணைந்து வாழ்வதற்காக சாத்தியங்களை துருவித் தேடலே என்பது லெனின் முன்வைக்கும் கருத்தாகும்.

பின்னைக் காலங்களிற் சுயநிர்ணய உரிமை என்பது அரசியற் சட்டமுறை விளக்கங்களைப் பெற்றுக்கொண்டது. அரசியல் கோட்பாட்டு வழியின் நோக்கெல்லையும் பரப்பெல்லையும் சட்டவழி முறைக்கும் அப்பாற் பரந்து விட்டன. சம உரிமையும் மக்களின் சுயநிர்ணய உரிமையையும் மதிக்கும் ஐ.நா. கொள்கையின் அடிப்படையின் தேசங்களுக்கிடை நட்புறவை மேம்படுத்தவும் உலக அமைதியை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கவும் என 1945இல் எழுதப்பட்ட ஐக்கிய நாடுகளின் பட்டயத்தின் சட்டவாக்கம் (2)இற் கூறப்பட்டுள்ளது. மேலும் பன்னாட்டுக் குடிசார், அரசியல் உரிமைகள் அவைக் கூட்டு (ICCPR), 1966இல் ஏற்படுத்தப்பட்ட பன்னாட்டுப் பொருளாதார, சமூக பண்பாட்டுரிமை அவைக்கூட்டு; (ICESOR) போன்றவற்றிலும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு பதியப்பட்டுள்ளது. இவ் அவைக் கூட்டுகள் சுயநிர்ணய உரிமை மக்களின் உரிமைகளில் ஒன்று என்று வலியுறுத்திக் கூறுவதுடன், பொருத்தனைச் சட்டங்கள் (Treaty) மூலம் பொறுப்புறுதி செய்துள்ளன. ஐ.நா. முறையேற்ற (UN Ratified) சுயநிர்ணய உரிமையின் தாக்கம், சட்டத்தினதை விட அதிகம். அரசியற் பாங்காக மட்டுமல்லாமல் அரசியற் காரணங் கட்காகவும் சுயநிர்ணய உரிமை என்பதன் பொருள் பலவாறாக வேறுபட்ட விளக்கங்களுக்கு; உட்படுகின்றது.

இலங்கையில் சுயநிர்ணய உரிமை

 

இலங்கையிலோ வெறெங்குமோ தேசியப் பிரச்சினை பற்றி மார்க்சிய லெனினியவாதிகளின் நிலைப்பாடு இரட்டுறல் தன்மையற்றது. அது வரலாற்று ரீதியாக இலங்கையின் பேரினவாதத்தின் கூர்ப்பையும் அதன் தொடர்ச்சியாகத் தேசிய ஒடுக்குமுறையையும் இனங்கண்டு, இலங்கையின் பிரதான முரண்பாடாகத் தேசிய முரண்பாட்டின் கூர்ப்பையும் ஒப்புக் கொண்டுள்ளது. மார்க்சிய லெனியவாதிகள் எல்லாத் தேசிய இனக் கூறுகளினதும் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் வழியே தான் தேசியப் பிரச்சினைக்கு முடிவு காண இயலும் என்பதை விடாது வலியுறுத்தி வருகின்றனர்.

தேசிய இனக் கூறுகளின் சுயநிர்ணய உரிமைகளைப் புறந்தள்ளிய தீர்வுக்கான முன்மொழிவுகள் ஐயத்துக்குரியன.

இலங்கையின் தேசியப் பிரச்சினையின் தொடர்பில், அதனுள் அடங்கிய வர்க்க, வர்க்கஞ்சார் நலன்களின் உள்ளியல்புகள் நேரடியாகப் புலப்படுவதில்லை. தற்போதுள்ள அரசியற் சட்டகம், நாடாளுமன்றத்தின் நிறைவேற்றும் அதன் சட்டவாக்கம் ஆகியவற்றுள் தீர்வுக்காக ஆய்வினை மட்டுப்படுத்திக் கொள்ளும் ஒருவரால் தேசியப் பிரச்சினைகள், தேசிய இன, வர்க்கப் பண்புக்கூறுகள், தேசிய இனக் கூறுகளின் சுயநிர்ணய உரிமை போன்றவற்றை இனங்காணுந் தேவையைச் செவ்வையாகக் கணிப்பிட முடியாது. ஆகவே, தற்போதுள்ள அரசியற் சட்டகத்துள் தீர்வைத் தேடும் முயற்சி, நிச்சயமாக, முரண்பாடுகளின் அரசியற் தொடர் விளைவுகட்கான அடிப்படைக் காரணங்களைக் கணக்கில் எடுக்கத் தவறிவிடும்.

கடந்த முப்பது ஆண்டுகளில் தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பிரதான முரண்பாடாக வளர்ச்சி பெற்றமையையும் எல்லாச் சமூகங் களையும் திருப்திப் படுத்தக்கூடிய வழிவகைகளையும் இனங்கண்டு அவற்றைக் கணக்கிலெடுத்தல் அவசியம்.

ஆகவே அரசுசார், குடிசார் பேச்சாளர்கள் அதிகாரப்பகிர்வற்ற அரசியற் சீர்த்திருத்தங்களைப் பற்றிக் கதைப்பதன் உட்கிடை, மக்களின் உரிமை என்பது தீர்வின் ஆதார நிலை என்பதை ஏற்றுக்கொள்ள விரும்பாமையே என்பது மார்க்சிய லெனினியவாதிகளின் நிலைப்பாடு. அது செம்மையானது என விளங்கிக்கொள்ள, உள்நாட்டு, வெளிநாட்டுச் சக்திகள் தேசிய ஒடுக்குமுறைக்குள் பங்கெடுத்துக் கொள்ளும் கட்டத்தில் நுழைந்துள் ளதையும் அதன் வழி தேசியப் பிரச்சினை எப்படி வளர்ச்சி பெறுகிறது என்பதையும் துல்லியமாக ஆராய வேண்டும். ஒரு தேசிய இனமோ ஒரு தேசிய இனக்கூறோ ஒரு சமுதாயமோ சமூகக்குழுவாக ஒடுக்கப் படும்போது, ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம் அதன் அடையாளத்தைச் சார்ந்திருக்கும். போராட்டத்தை மறுப்பது சமூக ஒடுக்குமுறையை ஆதரிப்பதாகும் என்பது மார்க்சிய லெனினியவாத நிலைப்பாடாகும். அந்த அடிப்படையிலேயே அவர்கள் கொலனி ஆதிக்க மறுப்பு விடுதலைப் போராட்டத்தையும் ஒடுக்கப்பட்ட தேசிய இனக் கூறுகளினதும் சமூகக் குழுக்களின் போராட்டத்தையும் ஆதரித்தனர்.

தமிழ்த் தேசியவாதம் அதன் எல்லா வடிவங்களிலும் அடையாளங் களிலும் ஓர் வரலாற்று ஆக்கப்பாடே. தமிழ் அடையாள மலர்ச்சி தமிழ்த் தேசிய அடையாளமாக மாறியதற்குப் பல்வேறு சமூக, பொருளாதார, வரலாற்றுக் காரணங்கள் உள்ளன. தமிழ்த் தேசிய அடையாளம் மாறிக் கொண்டே இருக்கிறது. இன்றையது அதற்கு முந்தையதை விடக் குறிப்பிடுமளவுக்கு வேறுபட்டது. 1970களில் தமிழ்த் தேசியத் தலைவர்கள் ‘தனித் தமிழீழ அரசு’ என்ற கருத்துப்பாங்கை முன்வைத்துக் கொள்கைப்பரப்புச் செய்தனர். 1976இல் சந்தர்ப்பவாத நாடளுமன்ற அரசியல் காரணங்களுக்காக வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். தமிழர் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வு இத் தீர்மானத்தின் அடிப்படையில் அமையாது. நேர்மையாக சொல்வதானால் தமிழர் சார்பாக முன் வைக்கப்படும் எத் தீர்மானமும் மற்றைய சிறுபான்மையினரின், குறிப்பாக முல்லிம்கள், மலையகத் தமிழர் போன்றோரின் உரிமைகளை முறையாக உள்வாங்கியதாக இருக்க வேண்டும்.

ஆனால் தனித் தமிழீழ அரசு என்ற வட்டுக்கோட்டைத் தீர்மானம், முஸ்லிம்களதும் மலையகத் தமிழர்களதும் அரசியற் பிரச்சனைகளைக் கருத்தில் கொள்ளவும் கணக்கெடுக்கவும் தவறியுள்ளது. குறிப்பிடும் படியாக, அண்மை வரை, தமிழ்த் தேசியக் கட்சிகள் எல்லா இனக் கூறுகளினதும் சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகளை விரும்பாதிருந்தமை கண்கூடு, சுயநிர்ணய உரிமை என்ற கருத்தாக்கம் முதலாளித்துவ ஜனநாயகத்தின் ஆக்கமல்ல. அது புரட்சிகரச் சிந்தனைப் பாங்கினையுடைய தொழிலாளி வர்க்கத்தினுடையது.

கொலனித்துவத்துக்குப் பிந்திய தேசியப் பிரச்சினை பண்பளவில் கொலனித்துவ காலத்தினின்றும் வேறுபடுகிறது. சுயநிர்ணயம் என்பதை 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திற் காணப்பட்ட ஒடுக்கும் தேசத்துக்கும் ஒடுக்கப்படும் தேசத்துக்கும் இடையிலான ஒன்றாக நோக்காமல், அதினும் பரந்தளவில் நோக்க வேண்டும். ஏகாதிபத்தியவாதிகள் தமது மேலாதிக்க நலன்களை முன்னெடுக்கப் பிரித்தாளும் சூழ்ச்சியை எவ்வாறு பயன்படுத்தினர் என்பதை ஒருவர் வரலாற்றுரீதியாக நோக்க வேண்டும். வெறுமனே சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரிவினை கோருவது, மேட்டுக்குடித் தமிழ்த் தேசியவாதிகள் ஏகாதிபத்தியவாதிகளின் செய்நிரலை அரவணைத்துத் தங்கள் நலன்களை பேணுவதற்கே. பிரிந்து போகும் உரிமையை ஏற்றுக் கொள்ளும் மார்க்சிய லெனினியவாதிகள் தேசிய முரண்பாடுகளுக்குப் பிரிவினை யே ஒரே அருமருந்தென ஏற்பதில்லை என்பதுடன் ஏகாதிபத்திய வாதிகள் பிரிவினையை தங்கள் நலன்களுக்குப் பயன்படுத்துவது குறித்தும்— எடுத்துக்காட்டாக அண்மையிற் கொசொவோ பிரிவினை —எச்சரித்து வந்தமை கவனிக்கத்தக்கது. (ஏகாதிபத்தியம் முதலில் யூகோஸ்லாவியாவைத் துண்டாக்கியது, பின்பு அதன் ஒரு துண்டாகிய சேர்பியாவில் இருந்து கொசொவோவைப் பிரித்தது).

ஆகவே இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு பிரிவினையே ஒரேவழி, அதுவே தீர்வைத் தரும் என்பது தேசிய இனக்கூறுகளின் நலனுக்கான தாகாது. (பிரிவினை மேலும் பிரிவினைக்கு இடமளிக்கலாம். இன்றய தமிழ்த் தேசியம் நாளைக்கு வடபுலத் தமிழ்த் தேசியம், கிழக்குத் தமிழ்த் தேசியம், வன்னித் தமிழ்த் தேசியம், மன்னார்த் தேசியம், யாழ்ப்பாணத் தேசியம், தீவுத் தேசியம், வட மராட்சித் தேசியம் எனவும் பின்னர் அது சாதிரீதியாக மேலும் பல கூறுகளாகவும் கிளை விடலாம். இவை ஒவ்வொன்றுக்கும் தேவை, தமக்கானதோர் அடையாளத்தை தோற்றுவிப்பதாகும்).

தற்போதைய தேவை யாதெனில் இலங்கையின் எல்லாத் தேசிய இனக் கூறுகளினதும் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துவதே. புலம்பெயர்ந்த தமிழரில் ஒரு சாராரும் தமிழ் ஊடகங்களும் சுயநிர்ணய உரிமை என்பது ஒரு வெறும் பிரிவினைக்கான உரிமை தான் எனப் பரப்புரை செய்கின்றன. இது தவறான வழிநடத்தலும் தீங்கான போக்குமாகும். சுயநிர்ணய உரிமை என்பது பிரிவினைக்கும் மேலானதாகும். தமிழ்த் தேசியவாதிகளும் சிங்களப் பேரினவாதிகளும் தொடர்ந்தும் சுயநிர்ணய உரிமை பற்றி மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். இவ்வேளை, சில தமிழ் நாடாளுமன்ற அரசியல் வாதிகள் புதிய புனைவொன்றாக ‘உள்ளக சுயநிர்ணய உரிமை’ என்ற பசப்புப் பதத்தை முன்மொழிந்து அதைத் தேசியப் பிரச்சினையின் தீர்வாகப் பேசுகின்றனர். (இணைப்பாட்சியில் தொடங்கிப் பிராந்திய சபை, மாவட்ட அபிவிருத்திச் சபை, தனி நாடு, மாகாண சபை, தமிழீழம், சுயநிர்ணய உரிமை, உள்ளக சுயநிர்ணய உரிமை என்று இவர்கள் மாறி மாறி மக்களைக் குழப்பி ஏமாற்றுகிறார்கள்).

உள்ளக சுயநிர்ணய உரிமை என்பது தேசிய இனக்கூறுகளின் சுயநிர்ணய உரிமையைச் சின்னாபின்னமாக்கி நாளடைவில் தேசிய இனக்கூறுகளின் உரிமைகளை ஒதுக்க்கிறதற்கான ஒரு முயற்சியே.

இந் நிலையில் மார்க்சிய லெனினியவாதிகள் பிரிவினைக்கெதிரான நிலைப்பாட்டை மீண்டும் அழுத்திச் சொல்வது முக்கியமாகிறது. பிரிவினை என்பது ஏகாதிபத்தியவாதிகள் பயன்படுத்தும் ஒரு கருவி. அது பிரிவினையை எதிர்ப்பதை உரிமையாக கொள்ளவில்லை. பிரிவினைக்கான உரிமை சுயநிர்ணய உரிமையின் பிரிக்கமுடியாத ஒரு பகுதியேயன்றிப் பிரிவினைக்கான உரிமமன்று. அத்துடன் தேசிய இனக் கூறுகளிடையே உள்ள முரண்பாடுகளைத் தீர்க்கவும் பிரிவினையைத் தடுக்கவும் உதவும் ஓர் மார்க்கமுமாகும்.

சிங்களப் பேரினவாதிகளும் குறுந் தமிழ்த் தேசியவாதிகளும் என்றுமே சமூக நீதிக்கான மக்களின் போராட்டத்தைக் கருத்தில் கொள்வதில்லை. இந் நடவடிக்கை, முன்புஞ் சரி தற்போதும் சரி, மக்களைப் பிரித்தும் தேசிய இனக் கூறுகளின் உரிமைகளை மறுத்தும் அரசியல் நடத்துவதற்கும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவுமே என்பது உறுதியாகிறது.

நிறைவாக

 

சுயநிர்ணய உரிமை என்பது கண்முடித்தனமாகவோ, தேச, தேசிய இனக் கூறுகளின்மேல் அல்லது இனக்குழுக்களின் மேல் அழுத்திச் சுமக்க வைக்கும் ஒன்றல்ல. ஒரு தேசிய இனக்கூற்றின் சுயநிர்ணய உரிமை என்பது, அதன் இருப்பும் உய்வும் அடையாளமும் அச்சுறுத்தப் படும்போது மட்டுமே, சுயநிர்ணய உரிமைக்கு அல்லது பிரிவினைக்கான போராட்டம் உருப்பெறுகிறது.

ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனக்கூறு;றுக்குரிய போராட்டம் சிக்கலானதும் தொடர் வளர்ச்சியுறுவதுமாகும். எந்த இரு போராட்டங்களும் ஒரே மாதிரி அமையமுடியாது. பல சந்தர்ப்ப் சூழ்நிலைகளில், இலங்கை உள்ளிட்ட நாடுகளில், மேலாண்மை உள்நோக்கத்தில் வழிநடத்தும் அந்நிய தலையீடுகளின் அரசியற் பின்விளைவுகள் மென்மேலும் சிக்கலான நிலைமைகட்கே வழி செய்துள்ளன.

இலங்கையின் இன்றைய நிலை கவலையளிக்கக் கூடியதாகவே உள்ளது. தேசிய இனக் கூறுகளின் உரிமைகள் புதிய அச்சுறுத்தல் கட்குள்ளகின்றன. சிறுபான்மையினரின் உரிமைகளை நிலைநிறுத்துவது முக்கியமான நடவடிக்கையாக உள்ளது. இது முற்போக்குச் சக்திகள் ஒன்றிணைந்து தேசிய இனக்கூறுகளின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடவேண்டிய காலம் மட்டுமல்ல. இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு நீதியான தீர்வை உறுதிப்படுத்த வேண்டிய காலமுமாகும்.

(நன்றி: தேடல் சிறப்பிதழ், கனடா, 2010 செப்ற்றெம்பர்)

செம்பதாகையிலிருந்து…

Exit mobile version