Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையின் அரசியல் நிலைவரம் – பேரினாவாதத்திற்கு மக்கள் செலுத்தும் விலை : விஜய்

மிகைப்படுத்தல்களும் – குறை மதிப்பிடுகளும் இன்றி நிலைமைகளைச் புரிந்து கொள்ளல் என்பதிலிருந்து முன்னேற்றங்கள் எட்டப்படுகின்றன. அந்த வகையில் இலங்கையின் அரசியல் நிலைமைகளை இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.

அஷ்ரப் அலியின் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. தங்காலை நகரசபையில் ஆளும் கட்சியின் 2 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தமையாலும் மாத்தறை பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்களில் 6 பேர் சமூகமளிக்காத நிலையாலும் இவ்விரு பிரதேச சபைகளின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.

இது முக்கியமானதொரு செய்தி என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். தற்போது மற்றொரு உள்ளுராட்சி சபையின் வரவு செலவுத் திட்டமும் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியும் வெளிவந்துள்ளது. கொஸ்பாவே தேர்தல் தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதவரவாளர்கள் 21 பேர் மேல் மாகாண சபை உறுப்பினர் தலைமையில் ஐ.தே.க. உடன் அணைந்து கொண்டுள்ளனர். மக்கள் பிரதிநிதிகளை தம்வசப்படுத்தி ஆட்சியதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் ஆட்சியாளர்களின் தந்திரத்திற்கு இது பெருத்த சவால்.

வன்னி யுத்தம் முடிவுற்றதும் அவசரமாக நடாத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் சரத் பென்சேகா வின் செல்வாக்குப் பலம் பெற்றிருந்து. அப்போது தோற்றுவிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பலையை (குடும்ப அதிகாரத்திற்கு எதிரானது) ஐ.தே.க.யும் ஜே.வி.பி.யும் மக்கள் விடுதலைக்குரியதாக மாற்றியமைக்கத் தவறியதுவும் அவர்களால் ஆளும் கட்சியின் அதிகாரத்திற்கு ஈடுகொடுக்கக் கூடிய தேர்தல் வலையமைப்பை உருவாக்க முடியாதிருந்ததுவும் ஐ.ம.சு.மு. வின் வெற்றிக்கு சாதகமாக அமைந்திருந்தன. தேர்தல் முடிவகள் வெளிவரும் வரை வெற்றி நிலை குறித்து எதுவும் குறிப்பிட முடியாத சமபல நிலையில் சரத் இருந்து வந்தார். சரத் தேர்தலில் தோற்றிருப்பினும் இருப்பினும் சரத் பொன்சேகா பெற்ற ஆதரவு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்று. குடும்ப அதிகாரத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்பாக இவ்வெதிர்ப்பலை இனங்காணப்படுகிறது.

அண்மைக்காலத் தேர்தல்களில் வட-கிழக்குத் தமிழர்களும் முஸ்லிம்களும் மலையகத் தமிழர்களும் ஐ.ம.சு.மு.க்கு எதிராக வாக்களித்திருந்தமையும் குறிப்பாக வன்னியில் முகாம்களில்; இருந்த மக்கள் எதிர்த்து வாக்களித்திருந்தமையும் கவனிப்பிற்குரிய விடயமே. அந்த வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சிறுபாண்மையின மக்கள் புறக்கணித்திருந்தார்கள். இந்த சிங்கள பேரினவாதத்திற்கு எதிரான எதிர்ப்புணர்வு கடந்த அறுபதாண்டுகாளக தென்னிலங்கை சிங்களப் பேரினவாத அரசியல் தலைவர்காளல் ஊட்டம் பெற்று வளர்ந்து செல்கிறது. தற்போது சிங்களத்தில் மாத்திரம் தேசிய கீதத்தினை பாடவேண்டும் எனும் தீர்மானம் (இன்று அதற்கான அழைமச்சரவை அங்கீகாரம் கிடைக்குமென நம்பப்படுகிறது) மேலும் மேலும் சிங்களப் பேரினவாதத்திற்கெதிரான எதிர்ப்புணர்வை ஏற்படுத்தும்.

தென்னிலங்கையில் ஊடகங்களுக்கும் புத்தி ஜீவிகளுக்கும் எதிரான வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக சுதந்திரமாக செயற்பட விரும்பிய ஊடகங்கள் அரசாங்கத்தின் அடக்கு முறைக்கும் வன்முறைக்கும் உள்ளாக்கப்பட்டன. ஒரு கட்டத்தில் அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் ஊடகம் அரசாங்க அமைச்சருக்கெதிராக செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டது. தொடர்ந்தும் சுதந்திரமான ஊடகவியலாளர்களுக்கு எதிரான போக்கு நிலவி வருகிறது. இந்த செயல்கள் அரசாங்கத்தின் சனநாயக விரோத செயற்பாடுகளுக்கான எதிர்ப்பை வளர்த்துச் செல்கிறது.

தற்போது தென்னிலங்கiயில் தொழிற்சங்கங்களினதும் பல்கலைக்கழ மாணவர்களினதும் போராட்டங்கள் அதிகரித்துள்ளதனையும் அரசாங்கம் அவற்றை அடக்குமுறையைப் பயன்படுத்தி தணிக்கச் செய்திருப்பதனையும் காண்கிறோம். ஆனால் இதன் பின்னணியில் ஜே.வி.பி. இருந்து செயற்பட்டு வருகிறது. அண்மைக்கால தேர்தல்களில் பின்னடைவுகளைச் சந்தித்திருக்கிற போதும் இன்று ஆளும் அரசாங்கத்திற்கெதிரான பலமான எதிர்ப்பரசியல் சக்தியாக ஜே.வி.பி. மாறியிருக்கிறது.

அதே வேளை சம்பள உயர்வுகள் மற்றும் சலுகைகளைக் கோரிய அரச ஊழியர்களின் போராட்டங்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு அடக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அரச ஊழியர்களின் நலன்களுக்கெதிரான ஒரு அரசாங்கமாக இந்த அரசாங்கம் கருதப்படுகிற நிலைமையும் அதற்கெதிரான போராட்டங்களை நடாத்த வேண்டி நிலையில் அரச ஊழியர்கள் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதனையும் காணமுடிகிறது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் பெருமளவு மக்கள் துன்பங்களைச் சந்திக்க நேரிட வேண்டியுள்ளது. யுத்தத்தின் போது வயிற்றைக்கட்டி வாழ்ந்த மக்கள் யுத்தமுடிவில் தமக்கு நிவாரணம் கிடைக்கும் என நம்பியிருந்தனர்.

விலைகள் கட்டுப்படுத்தப்படும் – குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் அரச ஊழியர்களுக்கு ஆகக்குறைந்தது 2500 சம்பள உயர்வு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்திருக்கிற நிலையில் அதெற்கெதிரான எதிர்ப்புகள் வெளிப்படத் தொடங்கியுள்ளது. அரசாங்கம் கூறுவது போல இதுவரை மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி செயற்றிட்டங்களால் மக்கள் நன்மைகளைப் பெறமுயடிவில்லை. இன்று அபிவிருத்தியைக் காரணங் காட்டி மக்கள் தமது வயிறுகளைக் கட்டிப்போட முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் மக்கள் நலனுக்கு எதிரான அரசாங்கமாகவே இந்த அரசாங்கம் இருந்து வருகிறது. இதனால் மக்கள் எதிர்ப்பும் வளர்கிறது.

ஆக சிங்களப் பேரிவனவாத – மக்கள் அதிகாரத்தை இல்லாதொழித்து குடும்ப அதிகாரத்தினை நிலைநாட்ட முயற்சிக்கிற – சனநாயக விரோதமான – அரச ஊழியர் மற்றும் தொழிலாளர் விரோதமான – மக்கள் நலன்களுக்கெதிரான ஒரு சக்தியாகவே ஐ.ம.சு.மு. இருந்து வருகிறது. இன்று ஐ.ம.சு.மு. யினரிடமிருந்து அதிகாரங்களைப் பறித்து ஒரு சிறு அதிகாரக்குழுவாகவாக மகிந்த ராஜபக்ஷ குழு பரிணமித்துள்ளது.
இதற்கப்பாற்பட்ட பல்வேறு சமூக பொருளாதார அரசியல் பிரச்சினைகளுடன் ஆடச்யிதிகாரத்தை மேற்கொள்ள வேண்டியதொரு நிலையிலேயே தென்னிலங்கை அரசியல் வாதிகள் இருந்து வருகிறார்கள்.

இது வரைக்கும் புலிப்பயங்கரவாதம் உண்மையில் தமிழ் தேசிய வாதம் எனும் பூச்சாண்டியைக் காட்டி தென்னிலங்கைச் சிங்கள மக்களை இலகுவாக ஆட்சி செய்த நிலை தற்போது மாறிவருகிறது.

தென்னிலங்கையில் ராஜபக்ஷ அதிகாரக்குழு, தென்னிலங்கையில் பரந்து பட்ட மககளுக்கெதிரானதாக மாற்றம் பெற்றிருக்கிறது. அரசாங்கத்திற்கெதிரான எதிர்ப்புகள் அதிகரித்து வருவதனையும் ஒடுக்குமுறை அமைப்புக்களைக் கொண்டே ஆட்சியினை நடாத்த வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருப்பதனையும் ஒரு சிறந்த சூழலாகக் கருத முடியாது.

மற்றொரு புறம் இலங்கையின் சர்வதேச உறவுகளும் அரசாங்கம் குறிப்பிடுவது போல சீரானது என மக்கள் நம்ப மறுக்கும் நிலைமைகள் தோன்றியிருக்கிறது. இலங்கை – இந்திய – சீன உறவுகள் சீரானதொரு நிலையில் காணப்படவில்லை. யுத்தத்திற்கு வழங்கிய ஆதரவிற்காகவும் பின்னரான ஆதவரவிற்காகவும் பல நாடுகளுக்கு இலங்கை அதிக சலுகைகளை வழங்க வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. தென்னிலங்கையில் இப்போது இந்திய-சீனா ஆக்கிரமிப்புப் பற்றிக் கதைக்கப்படுகிறது. ஆயினும் மேற்கதையை நாடுகளுடனான உறவுகளில் ஏற்பட்டுள்ள சீரின்மை காரணமாகவும் யுத்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கும் ‘இறைமையை” இந்த நாடுகளுக்கு அடகு வைக்க வேண்டியதைத் தவிர வேறு மார்க்கம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த நிலைமையால் அதிகாரக் கும்பலின் “சிங்கள தேசத்தின் விடுதலை” – “நாட்டின் இறைமையை விட்டுக்கொடோம்” என்ற கோசம் போலியானது என்பதை தென்னிலங்கையில் சிலர் உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.

லண்டனில் புலம் பெயர் தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தின் போலிப் பிரச்சாரங்களை அம்பலப்படுத்தியருக்கிறது. அந்த ஆர்ப்பாட்டத்தினை புலிப்பயங்கரவாதச் செய்றபாடாக மாற்ற முயற்சித்த போதும் பிரச்சினைகள் இருப்பதனை மக்கள் உணரத்தொடங்கியிருக்கிறார்கள். சர்வதேச ரீதியாக போர்க்குற்றங்கள் தொடர்பாக காட்டப்பட்டு வரும் கரிசனை அரசாங்கத்திற்கு மற்றொரு பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. தொடர்ந்தும் ஜனநாயக அரசு என்ற போலி முகத்திரையினுள் ஆட்சி செய்ய முடியாது நிலை ஏற்படத் தொடங்கியிருக்கிறது. அந்த வகையில் சர்வதேச ரீதியாக குறிப்பாக மேலைத் தேசத்தில் தனிமைப்படுத்தப்படும் நிலையும் தோன்றியிருக்கிறது.

இந்தியாவில் புலிகள் ஆதரவுத் தளம் புலிகளின் அழிவின் பின் திசை மாற்றம் பெற்றிருக்கிற போதும், தமிழ் மக்களுக்கான ஆதரவுத் தளம் அங்கு உருவாக்கப்பட்டு வருகிறதுடன் ஆளும் அதிகாரக் கும்பலிற்கேதிராக குரல் கொடுக்கவும் தொடங்கியிருக்கிறார்கள். காங்கிரஸ் மற்றும் கருணாநிதி ஆதரவுகளால் தங்களை காப்பாற்றிக் கொள்ளலாம் என நினைத்த அதிகாரக்கும்பல் அங்கும் அம்பலப்படுத்ப்பட்டுள்ளது.

புலிகளை அழிப்பதற்கான யுத்தம் பேரினவெறியைச் சாரம்சமாகக் கொண்டதன் காரணமாக பேரினவெறியாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்: பெரு நன்மைகளைப் பெற்றிருக்கிறார்கள். பௌத்த சிங்கள மக்கள் என்ன நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடிந்தது என்பதை பேரின் பின்னரான 18 மாதங்கள் நன்கு கற்றுரண வைத்திருக்கிறது.

மறுவழமாக பல்லின சமூகத்தினை ஒன்றிணைத்துச் செல்லும் தேவையுள்ள இலங்கைத் தேசிய வாதம் தோல்வியைத் தழுவியிருக்கிறது. சிங்கள பேரினவாதிகளும் – தமிழ் பேரினவாதிகளும் – ஏன் சில புலியிச ஆதரவு சக்திகளும் வன்னி யுத்த முடிவைப் பெரும் வெற்றியாகவும் இராஜதந்திர யுக்தியாகவும் கருதி வருவதில் எந்த உண்மையும் கிடையாது. இதனை 18 மாதகால அனுபவங்கள் உணர்த்தியிருக்கிறது. உண்மையில் இலங்கையில் எந்த மக்களுக்குமான வெற்றியை அந்த யுத்தம் பெற்றுத்தரவில்லை. நாட்டின் இறைமை மீட்கப்படவில்லை. பௌத்த சிங்கள மக்கள் பெருவாழ்வு ஒன்றினைப் பெற முடியவில்லை.

சிங்களப் பேரினவாதத்தில் கட்டுண்ட தென்னிலங்கைச் சிங்கள மக்கள் சிங்களப் பேரினவாதக் கும்பலின் தமிழ் மக்களுக்கெதிரான யுத்தத்திற்கு செலுத்தியுள்ள விலை அதிகம். இறுதியாக இறைமையுமின்றி, பல்லின மக்களும் இணைந்து வாழும் இலங்கைத் தேசம் என்ற ஒரு தேசமும் இன்றி, அதிகாரக் கும்பல் கூறிவருகிற சமாதானமும் இன்றி தமது வாழ்வினைத் தொடர் வேண்டி நிலைக்குத் தள்ளப்பட்டடுள்ளார்கள். அத்தோடு தமது வயிற்றையும் கட்டிப் போட்டு வாழும் நிலைக்கும் இது வரை இருந்து வந்த வரையறுக்கப்பட்ட சனநாயக உரிமைகளையும் ஆளும் கும்பலிடம் பறிகொடுத்து அடக்கு முறைக்குள் வாழும் நிலைக்கும், வாக்குரிமையையும் பறிகொடுத்து விட்டு வாழும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலைமைகள் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டுள்ள அதிகாரக் கும்பலானது சிங்கள – தமிழ் – இஸ்லாமிய – மலையக பரந்து பட்ட மக்களுக்கும் மற்றும் சனநாயகத்தை விரும்பும் சமூகத்திற்கும் உண்மையில் அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்த ஒரு சுதந்திரமான தேசத்தை உருவாக்கும் தேவையுடைய மக்களுக்கும் எதிரானது என்பதனை எடுத்துரைக்கிறது. இந்த அதிகாரக் கும்பல் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள நாட்டின் இறைமையை அடகு வைக்கத் தயங்காத ஒரு கும்பல்.

பரந்து பட்ட மக்களுக்கு எதிரான ஆளும் அதிகாரக்கு கும்பல் தொடர்ந்தும் தமது ஆட்சியதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளப் போலிப் பிரச்சாரங்களையும் அடக்கு முறைக் கருவிகளையும் எவ்வளவு காலத்திற்குத் தான் துணையாகக் கொள்ள முடியும்?
எனவே அரசாங்கம் ஆட்டம் கண்டு வருகிறது என்பதுவும் அடக்குமுறைகள் மூலமே தனது இருப்பை தக்கவைத்துக் கொண்டு வருகிறது என்பதுவும். சர்வதேச ரீதியாக அரசாங்கத்தின் ஜனநாயக முகத்திரை அகற்றப்பட்டு வரும் நிலை இருந்து வருவதனையும் இன்று காணமுடிகிறது.

இதற்கு மாறாக ஆட்சியதிகாரத்தைப் பகிர்ந்து கொள்கிற சக்திகள் தொடர்ந்தும் அரசாங்கத்தின் நிலைத்திருப்பிற்கு அரும் பாடுபட்டு வருகிறது. அவற்றிலும் தற்போது அதிகார நுகர்ச்சிக்கான சந்தர்ப்பம் வழங்கப்படாது ஒதுக்கப்பட்டவர்கள் மத்தியில் அதிருப்திகள் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இணக்க அரசியல் பேசுகிற தமிழ்த் தலைவர்கள் தொடர்ந்தும் அரசாங்கத்தின் மீதான தமது வலுவான பாசத்தினை காட்டியே வருகிறார்கள். அவர்களுக்கு வேறு மாற்று வழியில்லை. தற்போதும் இனிமேலும் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்துடன் இணைந்து வாழ வேண்டி நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு தனது ஆதரவினை வழங்கியதுவும் , தமிழத் தேசியக் கூட்டமைப்பு தனது ஒத்துழைப்பை வெளிக்காட்டியிருப்பதுவும் அரசாங்கத்தினை தூக்கி நிறுத்த ஓரளவிற்கே உதவும். புதிதாகப் பலர் அரசாங்கத்தில் ஒட்டிக் கொள்ளவும் தங்கள் விசவாசத்தை காட்டிக்கொள்ளவும் முனைகிறார்கள். இதன் மூலம் இந்த அதிகாரக் கம்பல் பரந்து பட்ட ஆதரவுத் தள்ளதினைப் பெற்றள்ளது என்ற மாயை உருவாக்கப்படுகிறது.

ஒரு பலமான எதிர்ப்பரசியலை உருவாக்கும் வல்லமையை ஐ.தே.க. பெறமுடியாமலிருப்பதுவும் அதிகம் பேசப்படுகிற விடயமாகும். பலமான எதிர்க்கட்சியின்மையால் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் அதிகரிக்கவும் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்பட வழிவகுப்பதாகவும் கருதப்படுகிறது. யுத்தயுத்த காலத்தில் ஜே.வி.பி.யின் அரசாங்கத்தின் சிங்களப் பேரின வாதத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கியமையும் முக்கியமான விடயமாகும். தற்போது ஜே.வி.பி. அரசுக்கெதிரான சக்திகளை அணிதிரட்டி தன்னை வலுப்படுத்திக் கொள்ள அயராத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

யுத்தம் முடிவுற்று 18 மாதங்களின் பின்னர் மாற்றமுற்றுள்ள இந்த நிலைமைகள் பற்றிப் புரிந்து கொள்ள முனைய வேண்டும்.
யுத்தத்தின் விளைவுகள் தற்போது வெளித்தெரிய வருகின்றன. சிங்கள பௌத்த பேரினவாதக் கும்பலின் சுயரூபத்தினையும் மக்கள் உணரத் தொடங்கிகுகிறார்கள். யுத்தத்திற்கு தமிழ் மக்கள் கொடுத்த விலை அதிகம். சிங்கள மற்றும் சிறுபாண்மை இனத்தவர்களும் சனநாயக சமூகமும் கொடுத்துள்ள விலையும் அதிகம். இந்த அநியாயங்கள் இனவாதப் பசப்பு வார்த்தைகளில் கட்டுண்டு கிடந்தமைக்கான விலை என்பது சிங்கள சமூகத்தினருக்கு மட்டுமல்ல தமிழ்ச் சமூகத்தினருக்கும் பொருந்தும்.

Exit mobile version