Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கைத் தேர்தல் – silent protest : டி.அருள் எழிலன்.

தற்காலத்தில் தமிழர்கள் தங்களுடைய தலைமையாக பேரம் பேசும் சக்திகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்று நமது நண்பர்கள் சிலர் கூறியிருந்தார்கள்.
 தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர்கள் தொடர்பாக சரத்பொன்சேகாவுடன் பேசிய பேரத்திற்கான? சம்மட்டியடியை சிங்கள மக்களும், டக்ளஸ், கருணா, பிள்ளையான், சித்தார்தன், இன்னமுள்ள புலம் பெயர் தன்னார்வக்குழுக்கள் ராஜாபட்சேவுடன் தமிழர்கள் தொடர்பாக பேசிய பேரத்திற்கான சம்மட்டியடியை வடக்கு, கிழக்கு தமிழ் மக்களும் இப்போது தேர்தல் மூலம் வழங்கியிருக்கிறார்கள். தமிழர்களுக்கு பேரம் பேசும் என்ற ஒரு வரியே கிடையாது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது சிங்கள பேரினவாதம்.

நடந்து முடிந்துள்ள இலங்கையின் ஆறாவது அதிபர் தேர்தல் முடிவுகள் குரித்து பலவாரான கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. இதை சிலர் நேர்மையான தேர்தல் இல்லை எனவும் ராஜபட்சே குடும்பத்தினர் ஏற்கனவே முடிவு செய்த தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையரை நிர்பந்தித்து வெளியிட்டுள்ளார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் தீவு முழுக்க வாழும் வடக்கு தமிழ் மக்கள், கிழக்கு முஸ்லீம் மக்கள், ம்லையகத் தமிழர்கள் என சிறுபான்மை இனத்தின் இம்மூன்று சமூகங்களிடமும் ஒரு விதமான அச்ச உணர்வு படர்ந்திருப்பதை நாம் காண முடிகிறது. ஆனால் இலங்கை வாக்காளர்கள் இன ரீதியாக பிளவு பட்டிருக்கிறார்கள் என்று சொல்பவர்களை சிறந்த நகைச்சுவையாளர்கள் என்று வேண்டுமென்றால் சொல்லலாம் இன ரீதியாக பிளவு பட்ட ஒரு சமூகம் இப்படியான ஒரு வெளிப்பாட்டை கொண்டிப்பதன் நியாத்தை இவர்கள் அங்கீகரித்தத் தவறுகிறார்கள். நீண்ட கால இலங்கையின் இன முரண்களை மறைத்து முப்பதாண்டுகால புலிகளின் ஆயுதப் போராட்டத்தை வைத்தே இனமுரணிற்கான தீர்ப்பெழுதிய இவர்கள் இப்போது புலிகள் இல்லாதொழிக்கப்பட்டுள்ளார்கள் என்று சொல்லப்படுகிற நிலையில், சிறுபான்மை மக்களினங்கள் அரசியல் ரீதியாக ஒரு நிலைப்பாடு எடுத்திருப்பதை கண் கொண்டு காணத் தவறுகிறார்கள்.

இலங்கை இரண்டு தேசிய இனங்கள் வாழும் முரண்பட்ட ,  பிளவுண்ட ஒரு தீவு இத்தீவில் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் சேர்ந்து வாழும் சாத்தியப்படுகள் முழுக்க அறுந்து விட்டதாக நான் தொடர்ந்து எழுதிய போது அதை இனவாதம் என்றவர்கள். தமிழ் ம்ககளின் பிரச்சனைகளை புலிகளின் போராட்டத்தோடு சேர்த்து மணல் மூடிப் புதைக்க முயர்ச்சித்தனர். இப்போது தெற்கு வடக்காக நாடு பிள்வு பட்டிருப்பது தெரியவருகிறது. இப்போது இரு சமூகங்களுமே இன ரீதியாக தங்களின் விருப்புகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்கிறார்கள்.

தமிழ் ம்ககளின் இத்தேர்தல் விருப்புகளை நான் இன ரீதியான வெளிப்பாடாக நான் காணவில்லை. பெரும்பான்மை வாதமும் பேரினவாதத் தீயும் சிங்கள மக்களையே பற்றிப் படர்ந்திருக்கிறது. அவர்கள் கடந்த எட்டு மாதங்களாக வெற்றிக் களிப்பில் மிதந்தார்கள். இப்போது மீண்டும் ஒரு வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். தமிழ் மக்களோ தோற்றுப் போனதான உணர்வோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தோற்றுப் போனது அவர்களின் அரசியல் உரிமைகள் மட்டுமல்ல குடிமைச் சமூகங்களின் வாழ்வுக்கு அடிப்படையான சிவில் உரிகளையும் இழந்திருக்கிறார்கள். முகாம்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் எவராவது இல்லங்களுக்கு திரும்பினார்களா என்றால் இல்லை அவர்கள் இன்னும் வனாந்தரங்களில் கூடாரம் அமைத்து நாடோடிக் கூட்டங்களைப் போல வாழ்கிறார்கள். சிங்களர்க்ளுக்கு இணையான அல்லது சிங்களர்களை விட நீண்ட கால வரலாறு கொண்டதுமான பழங்குடி சமூகமான தமிழ் மக்கள் இன்று அவர்களின் பாரம்பரீய நிலங்களை இழந்து நிற்கிறார்கள்.
வீட்டிற்கு ஒருவரை இழந்திருப்பது , கணவனை இழந்த கைம்பெண்கள், ஊனமுற்றோர். மனச்சிதைவு அடைந்தோர் என இதுதான் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் மன நிலை. இதே காலக்கட்டத்தில் வீட்டிற்கு ஒருவரை போரில் இழந்து அன்றாடம் தன் பிள்ளையின் உடல் இராணுவ டிரக் வாகனங்களில் கொண்டு வந்து இறக்கப்படுமோ என்கிற அச்சம் சிங்களர்களிடம். இருந்தது. போர் முடிவுக்கு வந்த பின்னர் அதுவே பெரும்பான்மை வாதமாக மாற்றப்பட்டது அந்த பெரும்பான்மை வாதத்தை குறிவைத்தே ராஜபட்சே அதிபர் பதவிக்காலம் முடிவதற்கு முன்னரே தேர்தலை அறிவித்தார். ஒரு சிறுபான்மை இனச் சமூகத்தை வதைப்பதன் மூலம் பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்தும் தந்திரத்தை மகிந்த கையாண்டார். உலகெங்கிலும் தற்காலிக வெற்றியை ஈட்டுவரும் பெரும்பான்மைவாதமும் இதற்கு துணை நின்றது.

மிகவும் கவனமாக சிறுபான்மை மக்கள், அரசியல் கைதிகள், முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்ட ம்க்கள் என்று எந்த விதத்திலும் சிங்கள மக்களின் மனங்களில் தோன்றியுள்ள உற்சாகத்தை குலைக்கும் விதமான எந்த நடவடிக்கையிலும் ராஜபட்சே ஈடுபடவில்லை. அவர் நினைத்த மாதிரியான பலனும் அவருக்குக் கிடைத்தது. பெரும்பாலான சிங்கள மக்கள் ராஜபட்சேவுக்கு வாக்களித்திருக்கும் அதே வேளையில் தமிழ் மக்கள் ராஜபட்சேவுக்கு எதிராக சரத்பொன்சேகாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.

 ஆனால் சரத்பொன்சேகாவோ போரின் வெற்றியில் ராஜபட்சேவை விட நேரடியாக களத்தில் நின்ற இராணுவத்தின் தலைமைத் தளபதியாக பணியாற்றிய தனக்கே சிங்கள மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்பினார். ஏனைய எதிர்கட்சிகளுக்கோ வெற்றியின் பயனை ராஜபட்சே குடும்பம் மட்டுமே அனுபவிக்கிறதே என்கிற வருத்தமும் அதிகார வெறியுமே அவர்களை சரத்பொன்சேகாவை பொதுவேட்பாளராக ஏற்றுக் கொள்ள வைத்தது.

 தமிழ் மக்களுக்கோ இந்தத் தேர்தலில் வாக்களிக்க ஆர்வமில்லை கோவணமே இல்லாத நாட்டில் தேசியக் கொடி கிடைத்தால் ஒரு மனிதன் என்ன செய்வானோ அந்த நிலையில்தான் இலங்கையில் தமிழ் மக்கள் உள்ளனர். சிங்கள மக்களிடம் இயல்பான உணர்வாக கட்டி எழுப்பபட்டிருக்கும் தேசிய வெறி ஒரு பக்கம். துண்டாடப்பட்டு வாழ்விழ்ந்து நிற்கும் தமிழ் மக்களின் கையாலாகத்தனம் இன்னொரு பக்கம் என தமிழ் மக்களின் ஆற்றாமைகளை அறுவடை செய்ய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் துணையோடு களமிரங்கி மக்களின் இயல்பான உணர்வை இத்தேர்தலில் தோல்வியுற்ற வேட்பாளர் அறுவடை செய்திருக்கிறார். அவர் எப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேரம் பேசினாரோ அப்போதே சிங்கள மக்களிடம் அவர் தோற்றுப் போனார். தவிறவும் எதிர்கட்சிகளின் அணியில் நின்ற ஜே.வி.பி, சரத்பொன்சேகா, ரணில், சந்திரிகா என இவர்கள் அனைவருமே நேற்றுவரை இனவாதம் பேசியவர்கள்தான்.

 ஈழ மக்களின் படுகொலையை ஆதரித்து நின்ற ஜே.வி.பி கிளிநொச்சி வீழ்ச்சியை ஒட்டி இனிப்புக் கொடுத்து அதை கொண்டாடியதோடு ” தமிழ் மக்களுக்கு இனி அரசியல் தீர்வு அவசியம் இல்லை ” என்று வெளிப்படையாகவே அறிவித்தது. இப்படியான பழைய பாசிஸ்டுகளோடுதான் தமிழ் தேசியக் கூட்டணி பேரம் பேசியது.

ஆனால் தமிழ் மக்களோ மிகவும் தெளிவாக நாங்கள் பிளவுபட்டிருக்கிறோம் நீங்கள் பெரும்பான்மையானவர்கள் என்றால் நாங்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் இறையாண்மை கொண்ட சிறுபான்மை ம்ககள் என்பதைத் தெளிவு படுத்தியிருக்கிறார்கள். இதைத்தான் வக்காளர்கள் இன ரீதியாக பிளவுண்டிப்பதாக இலங்கை முஸ்லீம் காங்கிரசும் இன்னும் சிலக் கட்சிகளும் அடையாளம் கண்டு சொல்கின்றன. என்னைப் பொறுத்தவரை இத்தேர்தல் முடிவுகள் பெரும்பான்மை வெறிக்கு எதிரான சிறுபான்மை மக்களின் அமைதியான எதிப்பு ‘’silent protest” ஆமாம் பேச முடியாத நிலையில் மௌனிகளாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் அமைதியான முறையில் தங்களின் எதிர்ப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

என்னைக் கேட்டால் தமிழ் மக்கள் பேரினவாதிகளுக்கு வழங்கியுள்ள தீர்ப்பு இதுதான். வக்காளர்கள் இன ரீதியாக பிளவுண்டிருப்பதை அரிய பல கண்டுபிடிப்புகள் மூலம் பதறிப் போய் நிறுவ முயலும் இவர்கள் சிறுபான்மை மக்களினங்கள் மீது ஏவப்பட்ட இனவெறி போக்கை கடந்த காலங்களின் கண்டுணர்ந்தார்களா? என்று தெரியவில்லை. இலங்கையைப் பொறுத்தவரையில் இந்தப் பிளவு அவசியமானது. அதே சமயம் சிறுபான்மை முஸ்லீம்கள், மலையக மக்கள், தமிழ் மக்கள் இணைந்து செயல்பட்டு தங்களுக்கான அரசியல் உரிமைகளை வென்றெடுக்க நீண்ட கால எதிர்ப்பியக்கங்களை கட்டு எழுப்புவதற்கான சாத்தியங்களையும் இத்தேர்தல் முடிவுகள் உணர்த்தி நிற்கினறன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் புலிகளுக்குப் பிறகு தாங்கள்தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற அங்கீகாரமாக இதை எடுத்துக் கொள்ளவதற்கான வாய்ப்பு ஒன்று கூட்டமைப்புக்கு உருவாகியுள்ளது.
 ஆனால் பேரம் பேசும் நலன் என்ற ஒற்றை வரியை வைத்துக் கொண்டு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை சிங்களர்களிடம் அடகு வைத்தால் இப்போது சிங்களர்கள் சரத் பொன்சேகாவிற்கு என்ன விதமான பதிலைக் கொடுத்திருக்கிறார்களோ அதே விதமான பதிலை நாளை தமிழ் மக்கள் கூட்டமைப்பிற்கு வழங்குவார்கள்.மக்களுக்கு அடிப்படைத் தேவை என்று அவர்கள் முன் எழுந்து நிற்கிற சிவில் உரிமைகள் சரி செய்யப்படும் அதே வேளையில் தீவின் அரசியல் முரணிற்கான தீர்வுகள் களையப்பட வேண்டும்.

கூட்டமைப்போ இன்னமும் இந்தியாவிடமும், எதிர்தரப்பிடமும் கெஞ்சிக் கொண்டிருக்கிறது. வன்னி மக்களின் நிலங்கள் பறிபோவதையோ, இன்னும் அதிகமான சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்பட இறுப்பதையோ கூட்டமைப்பால் தடுத்து நிறுத்த முடியுமா? என்பதும் தெரியவில்லை. பேரம் பேசி எதையும் வாங்கலாம் என்ற நம்பிக்கை கூட்டமைப்பிற்கு இருக்கலாம்.

ஆனால் பேரம் பேசி தமிழ் மக்களுக்கு எதையும் விட்டுக் கொடுக்கும் நிலையில் பேரினவாதிகள் இல்லை. ஒரு வேளை தமிழ் மக்களுக்கு அவர்கள் ஏதேனும் சலுகை காட்டினார்கள் என்றால் சிங்கள மக்களுக்கு பேரினவாதிகள் ஏற்றிய போதை தெளிய வாய்ப்பிருக்கிறது. அதுவே ராஜபட்சேவுக்கு எதிர் அலையாக உருவாகும். இதைச் சரியாக புரிந்து கொண்ட ராஜபட்சே ‘’பிரபாகரனின் பெற்றோரிடம் இருந்து ஒரு ரூபாய் கூட பெற்றுக் கொள்ள மாட்டேன் ” என்று சிங்களர்களை குஷிப்படுத்தினார். அந்த உற்சாகமூட்டலுக்கு சிங்கள மக்கள் வழங்கியுள்ள பரிசுதான் இது.

அய்யா இலங்கை பிளவுண்டிருக்கிறது. ஆமாம் முப்பதாண்டுகால ஆயுதப் போராட்டத்தை முடித்து வைத்து விட்டதற்காக பெருமைப்பட்ட பின்னரும் இலங்கை இரண்டு தேசிய இனங்களால் பிளவுண்டிருக்கிறது.ஒன்று ஒடுக்கும் தேசிய இனம். இன்னொன்று ஒடுக்கப்படும் தேசிய இனம். மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப எதிர்ப்பியங்களை வலுப்படுத்துவதற்கான காலமாக இது உருவாக வேண்டும் என்பதே என் ஆசை.அதை இந்தியா நினைத்தாலும் தடுக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்வோம். இலங்கைக்குள் ஒன்றை ஒன்று துறுத்திக் கொண்டிருப்பது இரண்டு பன்மைத் தன்மை கொண்ட தேசிய இனங்கள். இதைப் புரிந்து கொள்வது நல்லது.

Exit mobile version