Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கைக்கு கை கொடுக்குமா சுற்றுலா பயணத்துறை? : இதயச்சந்திரன்

பிரித்தானிய மகாராணியாரின் வைர விழாவிற்கு வருகை தந்த இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக, லண்டனில் வாழும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களினால் தொடர் எதிர்ப்புப் போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

மான்சன் ஹவுஸில் பொதுநலவாய நாடுகளின் பொருண்மியப் பேரவையில் அவர் நிகழ்த்தவிருந்த உரை, கடும் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டது.
சிங்கக் கொடியோடு வாகனத்தில் பவனி வர முடியாதவாறு பல முற்றுகைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
ஜனாதிபதியின் கொடும்பாவியோடு இலங்கை அரசியல் யாப்பும், நடு வீதியில் வைத்து எரிக்கப்பட்டது.

அவர் தங்கியிருந்த விடுதியும், வந்திறங்கிய ஹீத்ரூ விமான நிலையமும், உரை நிகழ்த்தவிருந்த மாநாட்டு மண்டபமும், பல்லாயிரக்கணக்கான பல்லின மக்களால் சூழப்பட்டதால் மஹிந்த ராஜபக்ஷவின் பயணம் பெரும் நெருக்கடியை தோற்றுவித்திருப்பதாக லண்டனிலுள்ள மைய நீரோட்ட ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.

பிரித்தானிய தமிழர் பேரவையும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் இணைந்து நடத்திய இத் தொடர் போராட்டங்களில் ஏனைய தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் அபிவிருத்திக்காக, வெளிநாட்டு நேரடி முதலீடுகளை வரவழைக்கும் இலங்கை அரசின் திட்டம், லண்டன் பயணத்தில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்று கணிப்பிடலாம்.

குறிப்பாக சுற்றுலா பயணத்துறையை ஊக்குவிக்கும் அரசின் திட்டத்தின் ஓர் அங்கமாகவும், மேற்குலகின் அதிருப்தியை சீர் செய்யவும் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டதாக ஊகிக்கலாம்.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம் மார்ச் மாதத்திற்கான ஏற்றுமதி 10.2 சதவீதம் வீழ்ச்சியடைந்து 835.70 மில்லியன் டொலராகக் குறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இறக்குமதி 3.9 வீதமாக அதிகரித்து சென்மதி நிலுவையில் நெருக்கடியை உருவாக்குகின்றது.
இவ்வருட முதல் காலாண்டில் மட்டும் வர்த்தகப் பற்றாக்குறை 2.5 பில்லியன் டொலர்களாகும்.

கைத்தொழில் சார்ந்த ஏற்றுமதி 10.9 சதவீதமாகவும், ஆடை ஏற்றுமதி 11.7 சதவீதமாகவும், விவசாய உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி 10.1 சதவீதமாகவும், குறிப்பாக தேயிலை ஏற்றுமதி 12.3 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இவ்வருடத்தில் இலங்கை ரூபாய் நாணயத்தின் பெறுமதி 13.7 சதவீதமாக தேய்வடைந்ததோடு பண்டங்களின் விலையேற்றத்தால் என்றுமில்லாதவாறு இலங்கையின் பண வீக்கம் 7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதேவேளை, இந்த மாதம் கிடைக்கும் அனைத்துலக நாணய நிதியத்தின் இறுதிக் கொடுப்பனவோடு, வாங்கிய மொத்த கடன் 2.6 பில்லியன் டொலர்களாக இருக்கும் அதேவேளை, மேலதிகமாக 500 மில்லியன் டொலர்களை நாணய நிதியத்திடமிருந்து பெறுவதற்கு
அரசு முனைவதாகக் கூறப்படுகிறது.
அதாவது சர்வதேசச் சந்தைகளில் எண்ணெய் மற்றும் உற்பத்திப் பண்டங்களின் விலை உயர்வதால் இக்கடனை அரசு பெற முயல்வதாகச் சொல்லப்படுவதோடு, தவணைக் கொடுப்பனவுகளைத் தவறாமல் செலுத்துவதால் 500 மில்லியன் கிடைக்குமென அரசு நம்பிக்கை தெரிவிக்கின்றது.

இந்தக் கடன் வெளிநாட்டு நாணயக் கையிருப்பை அதிகரிக்க உதவுமென மத்திய வங்கி நியாயப்படுத்தினாலும் ,வாங்கிய கடனிற்கு வட்டியைச் செலுத்த முடியாமல் அரசு திண்டாடுகிறது என்பதுதான் இதிலிருந்து அறியப்படும் உண்மை.

வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்களால் கிடைக்கும் வருவாய் கடந்த காலாண்டில் 1.5 பில்லியன் டொலர்கள். அதேபோன்று சுற்றுலா பயணத் துறையால் பெறப்படும் வருவாய் 268 மில்லியன் டொலர்கள்.

ஆகவே சுற்றுலா பயணத்துறையில் முதலீடு செய்ய விரும்பும் நிதி நிறுவனங்களை அனுமதித்து, அதனூடாக பெறப்படும் வருமானத்தை அதிகரிக்க வேண்டுமென்கிற திட்டத்தோடு அரசு தீவிரமாகச் செயற்படுவது போல் தெரிகிறது.

கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இவ்வருட முதல் காலாண்டிற்கான வெளிநாட்டு நேரடி முதலீடு [FDI] 23 மில்லியன் டொலர்களால் அதிகரித்துள்ளது.
அரசு எதிர்பார்த்த அளவிற்கு இம் முதலீட்டுத் தொகை இல்லை என்பதால், சுற்றுலா விடுதிகளை நிர்மாணிக்க வாருங்கள் என்கிற புதிய நகர்வோடு, பல அரச உயர் அமைப்புகள் களமிறங்கியுள்ளதைக் காணலாம்.

கடன் பொறிக்குள் மூழ்கும் இலங்கை, அதிலிருந்து வெளியேற, சுற்றுலாப் பயணத் துறையைத்தான் அதிகம் நம்பியிருப்பது போலுள்ளது.

2007இல் 494,008 ஆக விருந்த சுற்றுலா பயணிகளின் வருகை, 2011 இல் 855, 975 ஆக அதிகரித்துள்ளது.
அதில் 315, 210 பேர் மேற்கு ஐரோப்பாவிலிருந்தும் 49,249 பேர் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் வருகை தந்துள்ளார்கள்.
இவை தவிர ஆசிய நாடுகளிலிருந்து 333, 841 பயணிகள் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.

இருப்பினும் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் தற்போது உருவாகியுள்ள பொருளாதார வளர்ச்சி குன்றும் நிலை, இலங்கையின் சுற்றுலா பயணத் துறையின் வருவாயில் சரிவை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது.

பாரிய தொழிற்சாலை நிர்மாணிப்பிற்கான முதலீடுகளைச் செய்ய பன்னாட்டு நிறுவனங்கள் பின்னடிக்கும் நிலையில், சுற்றுலா பயணத் துறையோடு சேர்த்து, சேவைத் துறையையும் அபிவிருத்தி செய்வதே தமது எதிர்கால பொருண்மிய வளர்ச்சிக்கு உதவுமென்கிற நிலைப்பாட்டில் அரசு உள்ளது.

அத்தோடு பொது நிதியத்தை விழுங்கும் அரசுடமையான நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டிய அவசியம் உண்டென, திறைசேரிச் செயலர் பீ.பி. ஜயசுந்தர விடுக்கும் எச்சரிக்கை கலந்த ஆலோசனையையும் இங்கு கவனிக்க வேண்டும்.
நட்டத்தில் இயங்கும் இந் நிறுவனங்களுக்கு 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் திறைசேரியிலிருந்து 102 பில்லியன் ரூபாய்கள் உட்செலுத்தப்பட்டதாக அவர் கூறுகின்றார் .

ஆகவே வர்த்தகப் பற்றாக்குறை [TD], வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் [FDI] வீழ்ச்சி, சென்மதி நிலுவை[BOP] நெருக்கடி என்பவற்றை எதிர்கொள்ள வேண்டுமாயின், புதிய அணுகு முறையொன்றினை அறிமுகப்படுத்த வேண்டுமென்பதே ஜயசுந்தரவின் ஆலோசனையாக அமைகின்றது.

இவை தவிர சீனாவின் பணத்தில் பிரமாண்டமாகக் கட்டப்பட்ட அம்பாந்தோட்டைத் துறைமுகத்திலிருந்தும் வருவாய் வருவதாகத் தெரியவில்லை.

இவ்வருட ஆரம்பத்திலிருந்து கடல் வணிகத்திற்கான சரக்குக் கப்பல்களின் கட்டணம், கொள்கலன் (Container) ஒன்றிற்கு 700 டொலராக அதிகரித்து, அரசின் ஏற்றுமதி செலவீனத்தை காலாண்டிற்கு 150 மில்லியன் டொலர்களாக உயர்த்தி இருப்பதாக கணிப்பிடப்படுகிறது.

துறைமுக அபிவிருத்தி, மன்னார் எண்ணெய் அகழ்வு, சுற்றுலா பயணத் துறைக்கான நட்சத்திர விடுதிகள், எண்ணெய் சேமிப்பு குத நிர்மாணிப்பு என்பவற்றினூடாக, நாட்டின் திறைசேரியை ஓரளவிற்காவது நிரப்பி விடலாமென்று அரசு திட்டமிட்டாலும் பிராந்திய அரசியலில் வல்லரசாளர்களுக்கிடையே எழும் ஆதிக்கப் போட்டி, அரசின் மூலோபாயத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக அமைவதையும் காணலாம்.

முன்மொழியப்பட்ட மத்தள சர்வதேச விமான நிலைய வளாகத்தில் எண்ணெய் சேமிப்பு குத நிர்மாணிப்பிற்கான ஒப்பந்த ஒதுக்கீட்டில் சிக்கல் எழுந்துள்ள விவகாரம் நல்ல உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.

உமா ஓயா திட்டத்தில் பங்கேற்கும் ஜொன்டிசாபுர் மற்றும் ஓமான் மரூன் கொன்சோட்டியம் (Jondishapur & Oman Maroon Consortium of Iran) என்கிற ஈரான் நிறுவனம் முன் வைத்த ஏலத் தொகை 24.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
ஆனால் இதனைவிட அதிகமான நிர்மாணிப்புத் தொகையை (35.9 மில்லியன் டொலர்) முன் வைத்த அமனா பைப்லைன் கொன்ஸ்ரக்சன் (Amana Pipeline Construction) என்கிற ஐக்கிய அரபுக் குடியரசுக் கம்பனிக்கே இவ்வொப்பந்தம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் 50 சதவீத பங்கைக் கொண்ட, IOT Skytanking Consortium of India என்கிற இந்திய நிறுவனம் 27.6 மில்லியன் டொலரை கட்டுமானச் செலவாக முன் வைத்தும் அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

அதேவேளை, ஈரானிலிருந்து 93 சதவீத எண்ணெயை இறக்குமதி செய்து சுத்திகரிக்கும் சப்புகஸ்கந்த நிலையத்தை தரமுயர்த்தும் திட்டமும், இன்னமும எந்த உடன்பாட்டிற்கும் எவரோடும் வரவில்லை.

நாட்டின் மொத்த இறக்குமதியில் 55 சதவீதத்தை மசகு எண்ணெய் கொண்டுள்ள நிலையில், ரூபாவின் மதிப்பு டொலர் ஒன்றிற்கு 145 ஆக உயர்ந்தால், திறைசேரியின் கையிருப்பு இன்னமும் கீழிறங்கும் வாய்ப்பு இருப்பதாக பொருளியல் நிபுணர்கள் எச்சரிப்பதை அவதானிக்க வேண்டும்.

அத்தோடு சீனாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைவதோடு ஏற்றுமதி வர்த்தகம் பலவீனமாவதால் சீன முதலீட்டு வங்கிகளும் பாரிய தொழில் நிறுவனங்களும் இலங்கையில் முதலீடு செய்வதை தவிர்த்து அந் நிதியினை மூலவளம் அதிகமுடைய ஆப்கானிஸ்தானிலும் மியன்மாரிலும் திருப்பிவிடக் கூடிய ஏது நிலைகளும் காணப்படுகின்றன.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் அதற்கான அடிக்கல்லை சீனா நாட்டி விட்டதைப் பார்க்கலாம்.

இந்நிலையில், இலங்கை வர்த்தக வங்கிகள், 500 மில்லியன் டொலர் சர்வதேச முறிகளை விற்று அதனூடாக வெளிநாட்டுக் கடனை வரவழைப்பது, நீண்ட கால கடனாக 353 மில்லியனையும் குறுங்காலக் கடனாக 414 மில்லியன் டொலர்களைப் பெறுவது, திறைசேரி உண்டியலில் அரச பிணையங்கள் மற்றும் முறிகள் ஊடாக 406 மில்லியன் டொலரை வெளிநாட்டு முதலீடாகப் பெறுவது போன்ற நகர்வுகள், பொருளாதாரப் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வாக அமையாது என்பது உண்மை.

மொத்த உள்ளூர் உற்பத்தி (GDP) 55 பில்லியன் டொலராகவுள்ள இலங்கையின் பொதுக் கடன் (Public Debt) 41 பில்லியன்களாகும்.
குடிமகன் அல்லது குடிமகள் ஒருவரின் தலையில் சுமத்தப்பட்டுள்ள பொதுக் கடன் 2023.80 டொலர்கள்.
அத்தோடு பொதுக் கடனானது மொத்த உள்ளூர் உற்பத்தியின் 88 சதவீதமாகும்.

உலகளாவிய நடப்பு மொத்த கடன் 39.5 ரில்லியன் டொலர்கள் என்பது பெருங்கதை. அதில் முன்னணியில் இருக்கும் கடனாளி அமெரிக்கா என்பது பலருக்குத் தெரியாது.
கடந்த மாதம் சைனா டெய்லி (China Daily) இணையத்தில் வெளிவந்த தகவலொன்று ஆச்சரியமானது.
சீன அரசின் மொத்தக் கடன் 2.78 ரில்லியன் அமெரிக்க டொலர்கள். அது மொத்த உள்ளூர் உற்பத்தியின் 43 சதவீதம் .
இத்தகவலை வெளியிட்டவர், சீன வங்கியின் கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரிவின் தலைவர் யாங் காய்செங்.

ஆகவே உலகப் பொருளாதாரம், நவதாராண்மைவாத உலகமயமாக்கலின் [Neoliberal Globalization] கறுப்புக் பக்கங்களைத் தரிசிக்க ஆரம்பித்த இவ் வேளையில், இலங்கை அரசின் பொருளாதார மேதைகள் புதிய பாதைகளைத் தேடுகின்றார்கள்.

இறுதிப் போரில் நிகழ்ந்த படுகொலைகள், போர்க்குற்ற விசாரணைகளாக அச்சுறுத்தி வரும் அதேவேளை, பேரினவாத கடும் போக்காளர்களின் மேற்குலக எதிர்ப்பு ஆட்சியாளர்களின் நிலையை மேலும் சிக்கலாக்குகிறது.

அதேவேளை, திறைசேரியின் செயலாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முதன்மைச் செயலாளருமாகிய கலாநிதி பீ.பி. ஜயசுந்தரவின் பிரத்தியேக குழுவினரிற்கும், மத்திய வங்கியின் முதலீட்டு ஊக்குவிப்புக் குழுவினருக்குமிடையே, வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக் கொண்டு வருவதில் பனிப் போரொன்று உருவாகியுள்ளதாக செய்திகள் கசிகின்றன.

2009 இல் போர் முடிவடைந்ததும் இலங்கைக்குள் வந்த வெளிநாட்டு நேரடி முதலீட்டின் கணிசமான தொகை, சங்கிரிலா (Sahngri La) என்கிற பன்னாட்டு நிறுவனமூடாக, சுற்றுலா விடுதிகளை நிர்மாணிப்பதற்கு நாட்டினுள் வந்ததாக திறைசேரிச் செயலர் குறிப்பிடுகின்றார்.

தற்போது நாடு பூராவும் நட்சத்திர விடுதிகள் கட்டும் பணியும் புதிய ஒப்பந்தங்களும் உருவாகிக் கொண்டிருக்கின்றன.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் ஆடம்பர விடுதி ஒன்றினை சீன ஹாபர் கூட்டுத்தாபனம் கட்டப் போவதாக தெரிய வருகிறது.
இருப்பினும் நாடு முழுவதும் சுற்றுலா விடுதிகளை நிர்மாணித்தாலும், அதற்கு ஏதுவாக அதிவேக விரைவுச் சாலைகளை கடன் வாங்கி அமைத்தாலும், சுற்றுலா பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்தால் முதலிற்கே மோசமாக முடிந்துவிடும்.

தற்போது ஐரோப்பாவின் பொருளாதார நெருக்கடி ஆசியாவையும் கடிக்க ஆரம்பித்துள்ளது.
இந்தியாவும் அதற்கு விதி விலக்கல்ல. அதன் பண வீக்கமும், ரூபாய் நாணயத்தின் வீழ்ச்சியும் பொருளாதார வளர்ச்சியில் தேக்க நிலையை உருவாக்குகிறது.
இந்நிலையில் இலங்கையின் சுற்றுலா பயணத் துறையின் எதிர்பார்ப்புக்கள், நிறைவேறக் கூடிய சாத்தியப்பாடுகள் மிக அரிதாகவே தென்படுகின்றன.

2015 இல் தலைக்குரிய வருமானத்தை 4000 டொலர்களாக அதிகரிப்போமென அறை கூவல் விடுக்கும் அரசு, தலைக்குரிய பொதுக்கடன் 2023 டொலராகவிருப்பதை மக்களுக்குச் சொல்வதில்லை.

அத்தோடு இன்னமும் 500 மில்லியன் டொலர்களை அøனத்துலக நாணய நிதியத்திடமிருந்து ஏன் கடனாகப் பெறப் போகிறோம் என்பதையும் சொல்லப்போவதில்லை.

வட கிழக்கில் பொருளாதார வளர்ச்சி 22 சதவீதமென்று எதனடிப்படையில் கூறுகிறார்களென்றும் புரியவில்லை.

நாட்டின் பொருண்மிய வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கையில், போரினால் பாதிப்புற்ற வடகிழக்கின் வளர்ச்சி 22 சதவீதமாக இருந்தால், அங்கு வாழும் மக்களின் தலைக்குரிய வருமானம் நிச்சயம் 4000 டொலர்களைத் தாண்டும்.
நம்பத் தகுந்த புள்ளி விபரமா இது?

Exit mobile version