ஆனால், இப்பயணம் பற்றியும், இப்பயணத்திற்கு முன்னதாகத் தேசியப் பாதுகாப்புச் செயலர் சிவசங்கர் மேனன் தமிழக முதல்வர் ஜெயாவைச் சந்தித்துவிட்டுச் சென்றது பற்றியும் தமிழகப் பத்திரிகைகள், “தமிழக மீனவர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இலங்கை அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உயர் அதிகாரிகள் குழு இலங்கை செல்வதாகவும், அது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காகதான் சிவசங்கர் மேனன் தமிழக முதல்வர் ஜெயாவைச் சந்தித்துவிட்டுப் போனதாகவும்” புளுகித் தள்ளின.
நான்காவது ஈழப் போர் தொடங்கியதிலிருந்தே இந்தியக் குழுக்கள் அடிக்கடி இலங்கை சென்று திரும்புகின்றன. கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் ஈழப் போர் அதன் இறுதிக் கட்டத்தில் இருந்த நேரத்தில், போரை நிறுத்தவும், போரில் சிக்குண்ட ஈழத் தமிழர்களைக் காக்கவும்தான் இந்தியக் குழு இலங்கைக்குச் செல்வதாக, பொய்ப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. போர் முடிந்த பிறகோ, ஈழத் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு, மறுவாழ்வு குறித்தும், தமிழக மீனவர்களின் பிரச்சினை குறித்தும் பேச இந்தியக் குழு செல்வதாக பொய்ப் பிரச்சாரம் நடத்தப்படுகிறது.
முன்பு, பிரணாப் முகர்ஜியோ, எம்.கே. நாராயணனனோ சென்னைக்கு வந்து தமிழக முதல்வராக இருந்த மு.க.வைச் சந்தித்துவிட்டு இலங்கைக்குச் சென்றார்கள். இப்பொழுது, சிவசங்கர் மேனன் ஜெயாவைச் சந்தித்துவிட்டுச் சென்றிருக்கிறார். ஆட்களும், ஆட்சியும் மாறிவிட்டாலும், இப்பொய்ப் பிரச்சாரம் மட்டும் எவ்வித மாற்றமும் இன்றித் தமிழகத்தை ஆளும் ஓட்டுக்கட்சியாலும், தமிழகப் பத்திரிகைகளாலும் தொடர்ந்து நடத்தப்படுகிறது.
நான்காவது ஈழப் போரை இந்தியாதான் வழிகாட்டி நடத்தியது. இந்தியா இலங்கை இராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்கள், பயிற்சிகளை மட்டும் வழங்கவில்லை. இந்திய இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகள் போர்க் களத்தில் இறங்கி நேரடியாகவே போரை வழிநடத்திச் சென்றனர். இப்படி போரை வழிநடத்திய இந்தியா, போர் நிறுத்தம் குறித்துப் பேசவா தனது அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி வைத்திருக்கும்? அச்சமயத்தில் பிரணாப் முகர்ஜி அல்லது எம்.கே.நாராயணன் தலைமையில் சென்ற இந்தியக் குழுக்கள், விடுதலைப் புலிகளை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவது, அதன் தலைவர் பிரபாகரனையும் மற்ற தலைவர்களையும் சுற்றிவளைத்துப் பிடித்துக் கொல்வது, விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கிடைக்காமல் தடுப்பது போன்ற போர் உத்திகளைக் குறித்துப் பேசி முடிவெடுக்கதான் சென்றனர் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள் நடக்கவிருந்த சமயத்தில் பிரணாப் முகர்ஜி இலங்கைக்குச் சென்றபொழுது, அவர், “விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்குதான் சென்றிருப்பதாக” மு.க., ப.சி. உள்ளிட்டோர் தமிழகத்தில் பிரச்சாரம் செய்தனர். ஆனால், இலங்கைக்கான இந்தியத் துணை தூதரக அதிகாரி விக்ரம் மிஸ்ரி, “இலங்கை அரசின் இராணுவரீதியான வெற்றிதான் வடக்கு மாகாணத்தில் மட்டுமல்ல, இலங்கை முழுமைக்கும் அமைதியை ஏற்படுத்தும்; இராசபக்சேவின் கருத்தும் அதுதான்” எனத் தன்னிடம் பிரணாப் முகர்ஜி கூறியதாக, அமெரிக்கத் தூதரகத் துணையதிகாரியிடம் தெரிவித்திருக்கிறார். இந்த உண்மையை விக்கிலீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்தியிருக்கிறது.
முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்த இரண்டொரு நாட்களிலேயே, அப்பொழுது தேசியப் பாதுகாப்புச் செயலராக இருந்த எம்.கே. நாராயணனும், வெளியுறவுத் துறை செயலராக இருந்த சிவசங்கர் மேனனும் இலங்கைக்குச் சென்றதை, “போர் முடிவுக்கு வந்துவிட்டதால், அரசியல் தீர்வு குறித்துப் பேசச் செல்வதாக’’த் தமிழகத்தில் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால், அவர்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தும் நோக்கத்திற்காகதான் சென்றிருந்தனர்.
இவர்களையடுத்து பிரதமர் மன்மோகன் சிங்கின் சிறப்புத் தூதராக, அவரது முதன்மைச் செயலராக இருந்த டி.கே.ஏ.நாயர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் அதிகாரப் பரவல் குறித்துப் பேசுவதற்காகதான் சென்றிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அவரோ இலங்கையிலுள்ள புகழ்வாய்ந்த புத்த மடாலயங்களுக்குச் சுற்றுலா சென்றுவிட்டுத் திரும்பினார். அவர், அரசு நிர்வாக முறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிப் போக்குகள் குறித்துப் பேசுவதற்குதான் இலங்கைக்கு வந்ததாக, ராஜபக்சே அரசு உண்மையைப் போட்டு உடைத்தது.
நான்காம் கட்ட ஈழப் போர் முடிவுக்கு வந்தவுடனேயே இந்திய அரசு போரினால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக 500 கோடி ரூபாய் நிதியளித்திருப்பதாகப் பெருமையடித்துக் கொண்டது. ஆனால், அந்நிதி, இனப்படுகொலையை நடத்திய இலங்கை அரசுக்கு அளிக்கப்பட்ட பொருளாதார உதவி தவிர வேறில்லை. போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு 50,000 வீடுகள் கட்டித் தரப்போவதாக இந்திய அரசு தம்பட்டம் அடித்து வருகிறது. ஆனால், போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகும் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கு ஒரு வீடுகூட இந்திய அரசால் கட்டித் தரப்படவில்லை. ஈழத் தமிழ் மக்களின் மறுவாழ்வு குறித்து இந்திய அரசு அக்கறை கொண்டிருப்பதாகக் கூறப்படுவதெல்லாம் பச்சைப் பொய் என்பதற்கு இவை போன்று பல ஆதாரங்களை எடுத்துக் காட்டலாம்.
கடந்த ஜூன் 11 அன்று இலங்கைக்குப் போன சிவசங்கர் மேனன் குழு, “தமிழர் பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வு காண இலங்கையிடம் வலியுறுத்தியதாக’’த் தமிழகப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகும் வடக்கு மாகாணத்திற்குத் தேர்தல் நடத்தாமல் இருப்பது குறித்தும், போலீசு நிர்வாகம் உள்ளிட்ட அதிகாரப் பரவலை வழங்குவதற்காகக் கொண்டு வரப்பட்ட 13ஆவது அரசியல் சாசனச் சட்டத் திருத்தம் இலங்கையில் சர்ச்சைக்கு உள்ளாகியிருப்பது குறித்தும் பத்திரிகையாளர்கள் சிவசங்கர் மேனனி டம் கேட்ட பொழுது, அவர், “இப்பிரச்சினைகளை இலங்கை அரசு தன் சொந்த விருப்பப்படி தீர்த்துக் கொள்ள வேண்டும் ” எனப் பதில் அளித்தார். ஈழத் தமிழர்களின் மறுவாழ்வு குறித்தோ, அவர்களின் அரசியல் உரிமைகள் குறித்தோ இந்தக் குழுவிற்கு மட்டுமல்ல, இந்திய அரசிற்கும் அக்கறை கிடையாது என்பதுதான் இதன் பொருள்.
இலங்கைக்கு கச்சா எண்ணெய் மற்றும் மின்சாரம் விற்பது, ரயில் பாதைகள் அமைத்துக் கொடுப்பது, காங்கேசன் துறைமுகத்தை நவீனப்படுத்திக் கொடுக்கும் குத்தகை உள்ளிட்டு அந்நாட்டின் பல்வேறு துறைகளில் இந்திய அரசும், இந்தியத் தரகு முதலாளிகளும் முதலீடுகளைக் குவித்து வருகின்றனர். இன்னொருபுறம் இலங்கை இராணுவத்துக்குத் தேவைப்படும் இராணுவத் தளவாடங்களை விற்பது, இராணுவப் பயிற்சிகளில் சேர்ந்து ஈடுபடுவது என இலங்கையோடு நெருக்கமான இராணவரீதியான உறவுகளையும் வளர்த்து வருகிறது, இந்திய அரசு. ராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக அறிவித்துத் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் வேளையில், அவரை விசாரணையிலிருந்து பாதுகாக்கும் பொறுப்பையும் இந்திய அரசுதான் ஏற்றுக் கொண்டுள்ளது.
இவை தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வது, புதிய முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களைப் போடுவது, தெற்காசியக் கூட்டமைப்பில் இருக்கும் இலங்கையை, இப்பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளும் நண்பனாக வைத்துக் கொள்வது ஆகிய நோக்கங்களுக்குத்தான் இந்தியக் குழுக்கள் அடிக்கடி இலங்கைக்குச் சென்று திரும்புகின்றன. மன்மோகன் சிங் விரைவில் இலங்கைக்குச் செல்ல ஏற்பாடுகள் நடைபெறுவதுகூட இந்த நோக்கங்களுக்காகதான். ஆனால், தமிழக ஓட்டுக்கட்சிகளும், தமிழகப் பத்திரிகைகளும் கூட்டணி அமைத்துக்கொண்டு, மோசடிப் பிரச்சாரத்தின் மூலம் இந்த உண்மைகளைத் தமிழக மக்களிடமிருந்து மறைத்துவிட்டு, இந்திய அரசைத் தேவதூதனைப் போலக் காட்டிவிட முயலுகின்றன.
நன்றி : புதியஜனநாயகம்