Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இறால் போட்டுச் சுறா பிடிக்கும் இந்திய மேலாதிக்கம் : மோகன்

சனாதிபதி மகிந்த ராஜபக்ச டில்லி சென்று ஏழு உடன்படிக்கைகளைச் செய்து மீண்டு வந்திருக்கிறார். அவற்றில் முக்கியமானவை ‘வடக்கிற்கான புகையிரதப் பாதையின் மீளமைப்பு, மீள்குடியேற்றத்திற்கான வீடுகள், சம்பூரில் அனல் மின் நிலையத்துக்கு மேலதிக நிதி ஆகியன’ என்றும் அவற்றைக் குறைந்த வட்டியிலான கடனில் வழங்கவுள்ளதாகவும் ஒரு பேரினவாத ஏட்டிற் கூறப்பட்டுள்ளது.

உடன்படிக்கைகளின் விபரங்கள் முழுமையாகத் தெரிவிக்கப்படவில்லை. அவற்றால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பொருளாதார நன்மைகள் பற்றிய ஐயங்கள் ஒருபுறமிருக்க பெருந்தொகையான கடனுக்கும் மேலான கணிசமான நன்கொடை என்ன நோக்கத்தை மனதிற் கொண்டு வழங்கப்படவுள்ளது என்பது கவனத்துக்குரியது. ஏலவே இந்திய இலங்கை வர்த்தக ஒப்பந்தம் இலங்கைக்குப் பாதமாகவே செயற்பட்டு வந்துள்ளது என்ற முறைப்பாடு சகல மட்டங்களிலும் எழுந்துள்ள ஒன்று. எனவே இம்முறை சனாதிபதி ராஜபக்ச டில்லிக்குப் புறப்படு முன்னமே அடுத்து ஏற்படுத்தப்படவுள்ள சீபா  என்ற பொருளாதார உடன்படிக்கை பற்றிய எதிர்ப்புக் குரல்கள் எழத் தொடங்கிவிட்டன.

அரசாங்கத்திற்கு ஆதரவான தனியார் ஊடகங்களும் இந்திய நோக்கங்கள் பற்றியும் அரசாங்கம் இந்தியாவிற்குப் பணிந்து போவது பற்றியும் எழுதத் தொடங்கிவிட்டன. எனவே சீபா உடன்படிக்கையைக் கொண்டுவருவதற்கு முதல் இலங்கையில் ஒரு சாதகமான சூழலை உருவாக்குவதற்கான தேவை ஏற்பட்டது. அதைவிடவும், சீனாவுடனான இலங்கையின் உறவு இந்திய மேலாதிக்க நோக்கங்கட்டுத் தடையாகத் தெரிவதால் இந்தியச் செல்வாக்கை வலுப்படுத்தும் நோக்கமும் இந்த ‘உதவிக்குப்’ பின்னால் உள்ளது.

இலங்கைப் பொருளாதாரத்தின் மீது இந்திய மூலதனத்தின் பிடி கடந்த இருபது ஆண்டுகட்கும் மேலாக இறுகிக் கொண்டே வந்துள்ளது. விடுதலைப் புலிகட்கு எதிரான போரில் ராஜபக்ச ஆட்சிக்குத் தூண்டுதலும் துணையும் வழிகாட்டலும் வழங்கியதோடு ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் ராஜபக்ச ஆட்சிக்குச் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கப் பல வழிகளிலும் உதவியதன் மூலம் இலங்கை மீது தனது அரசியல் ஆதிக்கத்தையும் வலுப்படுத்த இந்தியா முயலுகிறது. இதன் ஒரு பகுதியாக வடக்கில் இருந்து வந்த விசா விண்ணப்பக் கையேற்பு அலுவலகத்தின் இடத்தில் ஒரு துணைத் தூதரகமும் போதாதற்கு அம்பாந்தோட்டையில் இன்னொரு துணைத் தூதரகமும் நிறுவப்பட உள்ளன. இவை இங்கு செயற்படும் இந்திய முகவர்களின் பணிகட்கு உகந்தவையாகவே இருக்கும்.

இந்தியா இன்று இலங்கையின் இறக்குமதிகளில் 20 சதவீதத்திற்கும் மேலான பகுதியைக் கொண்டுள்ளது. ஏற்றுமதிகளோ அதில் ஐந்திலொரு பங்கு தேறா. இந்தச் சமமின்மையை மேலும் மோசமாக்கும் விதமாகவே ‘சீபா’ உடன்படிக்கை அமையும். இந்தியாவுக்குக் கணிசமான அளவு பின்னால் நிற்கும் சீனாவும் இலங்கையில் தனது வணிகத்தை வளர்த்து வருகிறது. எனினும் சீனாவும் பிற உலக நாடுகளும் இந்தியாவைப் போல சமனற்ற வர்த்தக உடன்படிக்கைகள் மூலம் தனது ஏற்றுமதிகளை இலங்கை மீது திணிக்க முயலவில்லை.

இலங்கையில் இன்று அதிமுக்கியமான அந்நிய முதலீட்டாளர்களாக இந்தியக் கம்பனிகளே உள்ளன. மேலும் மூலதனம் இங்கு வருவதற்கு வசதியாகவே இந்தியாவின் ‘உதவிகள்’ அமையும். புகையிரதப்பாதை விருத்தி இந்தியப் பண்டங்களை தலைமன்னார் வழியாகக் கொண்டு வருகிற நோக்கத்தையுடையது. அத்தனை முதலீடுகளையும் மூலதனத்தையும் காப்பாற்ற இந்தியா தனது அரசியல் செல்வாக்கையும் அவசியமான இடத்து இராணுவக் குறுக்கீட்டையும் பயன்படுத்தக் கூசாது.

இந்தப் பின்னணியிலேயே இந்திய அரசு தேசிய இனப் பிரச்சினையில் இலங்கை அரசாங்கத்தை எவ்வளவு தூரம் வற்புறுத்தத் துணியும் என்ற கேள்வி வருகிறது. தமிழகத்திலிருந்து மத்திய அரசுக்குப் பாரிய அளவில் நெருக்குவாரம் வராது என்பதை இந்திய ஆட்சியாளர்கள் அறிவார்கள். எனவே கண்துடைப்பாக எதுவும் நடந்தாலே பெருங் காரியமாயிருக்கும். அதற்கெல்லாம் சப்பைக்கட்டுக் கட்ட வசதியாக இந்திய அடிமைகளாக ஒரு தமிழ் அரசியற் கூட்டமைப்பும் இருக்கிறது. இந்தியா, ‘சிபா’ உடன்படிக்கையை இவ்வாண்டு முடிவிற்குள் செயற்படுத்த அக்கறையுடன் உள்ளது.

இலங்கை அரசாங்கம் மக்களிடையே எதிர்ப்பு வலுப்பட முன்னரே அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தி ராஜபக்ச குடும்ப ஆட்சியை நீடித்து சிறுபான்மைத் தேசிய இனங்களின் அரசியல் வலிமையைப் பலவீனப்படுத்துவதுடன் அரச அடக்கு முறை இயந்திரத்தை — நாட்டின் பாதுகாப்பு வெளியிலிருந்து விடுதலைப் புலிகளின் மிரட்டல் என்று காரணங்காட்டி — வலுப்படுத்தி வருகிறது. இது யாருக்காக என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் இந்தியக் கனவுகளிலிருந்து பெருமளவும் மீண்டாலும் இந்திய ஆபத்துப் பற்றிப் போதியளவுக்கு விளங்கிக் கொள்ளவில்லை. சீனப் பூச்சாண்டி காட்டி இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கையில் அகலக் கால் வைக்க வசதியான காய் நகர்த்தல்கள் நடந்து வருகின்றன.

நாம், சீனா உட்பட, எந்த அந்நிய நாட்டினதும் பொருளாதார ஊடுருவலை உறுதியாக எதிர்க்க வேண்டும். தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பல் என்பது இந்த நாட்டின் அனைத்து மக்களதும் மீட்சிக்கும் உயர்வுக்கும் உரிய ஒரு அரசியற் பாதைக்கு முக்கியமானது. அதனை விடுத்து அந்நிய பொருளாதார ஊடுருவலுக்கு வழி வகுப்பது நாட்டின் பொருளாதாரத்திற்கும் இறைமைக்கும் நாசத்தையே ஏற்படுத்தும்.

Exit mobile version