அதனால் உற்பத்தியான பொருட்கள் முழுமையாக விற்பனை ஆகாத நிலையில் மறு உற்பத்தி செய்ய முடியாமல் போகிறது. இது தான் முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி எனப்படுகிறது. இதனால் உழைக்கும் மக்கள் தங்கள் வேலையை இழக்க, நெருக்கடி மேலும் இறுகுகிறது. இந்நெருக்கடியைத் தீர்க்க முதலாளிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வேறு இடங்களில் சந்தைப் படுத்த முனைகின்றனர்.
இவ்வவாறு வெவ்வேறு நாடுகளில் உள்ள முதலாளிகள் வேறு இடங்களில் சந்தைகளைப் பிடிக்க முயலும் போது போர்கள் தவிர்க்க முடியாமல் போகின்றன. இப்போர்களில் நேரிடும் அழிவுகளை நிரப்பத் தேவைப்படும் பொருட்களை உற்பத்தி செய்ய வாய்ப்பு கிடைத்து, மீண்டும் உற்பத்திச் சக்கரம் சுழல ஆரம்பிக்கிறது. மீண்டும் நெருக்கடி; மீண்டும் போர்; மீண்டும் அழிவு; மீண்டும் உற்பத்தி
இவ்வாறு அமைதியற்ற முறையிலேயே உற்பத்தி நடக்க வேண்டும் என்பது முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத நியதியாய் இருப்பதை எடுத்துக் காட்டிய கார்ல் மார்க்ஸ், இந்நெருக்கடி தீர்க்க முடியாத அளவிற்கு வளர்ந்து, முதலாளித்துவ அமைப்பு வெடித்துச் சிதறி, சமதர்ம (சோஷலிச) சமூகம் தவிர்க்க முடியாதபடி அமையும் என்றும் நிறுவினார். இந்நெருக்கடிகள் உலகளாவிய அளவில் நிகழ்வதால் உலக முழுமைக்கும் ஒரே காலத்தில் சமதர்ம சமூகம் அமையும் என்று மார்க்சும் எங்கெல்சும் கணித்தனர்.
ஆனால் முதலாளித்துவப் பொருளாதார வளர்ச்சி வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாகவும், வெவ்வேறு வீச்சிலும் நடந்து கொண்டு இருப்பதைக் கண்ட லெனின், இருபதாம் நூற்றாண்டில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி, சந்தைகளைப் பிடிப்பதோடு மட்டும் அல்லாமல், மூலதனத்தை ஏற்றுமதி செய்வதன் மூலமும் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள முயல்வதைப் புள்ளி விவரங்களுடன் எடுத்துக் காட்டினார். இக்காலகட்டத்தை “ஏகாதிபத்தியம் – மரணப்படுக்கையில் உள்ள முதலாளித்துவம்” (Imperialism – Moribund Capitalism) என்று அழைத்தார். மேலும் முதலாளித்துவ வளர்ச்சி வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாக இருப்பதால், தனியொரு நாட்டில் சமதர்ம சமூகத்தை அமைக்க முடியும் என்றும், பொருளாதார நெருக்கடி அதிகமாக அதிகமாக மற்ற நாடுகளும் முதலாளித்துவத்தை உதறி விட்டு, சமதர்மத்தை ஏற்கும் என்றும் கூறினார்.
லெனின் கூறியது போலவே, பொருளாதார நெருக்கடியின் காரணமாகத் தோன்றிய முதல் உலகப் போரின் போது, உலகிலேயே முதன் முதலாக சோவியத் நாட்டில் சமதர்ம அரசு அமைக்கப்பட்டது. இரண்டாவது உலகப் போரின் போது கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சமதர்ம அரசுகள் அமைக்கப்பட்டன.
மார்க்சிய தத்துவம் மக்களிடையே வரவேற்பு பெறுவதைக் கண்ட முதலாளிகளுக்குக் கிலி பிடித்து விட்டது. மக்கள் மார்க்சியத்தின் பால் ஈர்க்கப்படாமல் இருக்க ஏதாவது செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் அவர்களுக்கு ஏறபட்டது. உடனே மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை முதலாளித்துவ நாடுகளில் அமல் படுத்த முனைந்தனர். அவ்வாறு செயல்படுத்தப்பட்ட ஒரு திட்டம் தான் பிரிட்டனில் இன்றும் நடைமுறையில் இருக்கும் தேசிய சுகாதாரத் திட்டம் (National Health Service). அதாவது நாட்டு மக்கள் அனைவரும் கருவறையில் இருந்து கல்லறை வரைக்கும் இலவசமாக உயர்தர மருத்துவம் பெறும் உரிமை இத்தகைய கிலியில் அறிமுகப்பட்டது தான். இது போல் பல நாடுகளில் பல மக்கள் நலத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட்டு, மக்கள் மார்க்சியத்தின் பால் ஈர்க்கப்படுவதைத் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் மின்னணுத் (Electronics) துறையின் வளர்ச்சி மக்களின் வர்க்கப் பிரிவினையில் மாற்றத்தைக் கொணர்ந்தது. இதற்கு முன் நடுத்தர வர்க்கத்தினர் மிகச் சிலராகவும், அவர்களும் தேய்ந்து தொழிலாளர் வர்க்கத்திற்குத் தள்ளப்படும் நிலையும் இருந்தது. மின்னணுத் துறையின் வளர்ச்சி நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கையைப் பெருக்கியது. ஊசலாட்ட மனப்பான்மை கொண்ட நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை பெருகப் பெருக, புரட்சிகர உணர்வின் கூர்மை சிறிது சிறிதாக மழுங்கத் தொடங்கியது.
மேலும் உலக அளவிலும் பொதுவுடைமைவாதிகள் திருத்தல் வாத மயக்கத்தில் வீழ்ந்தனர். புரட்சிகரப் போராட்டங்கள் இல்லாமல், தேர்தல் மூலமாகவே சமதர்ம சமூகத்தை அமைக்க முடியும் என்று வாதிடத் தொடங்கினர். இதன் விளைவாகவும் புரட்சிகர எண்ணங்கள் மேலும் வலுவிழந்தது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி ‘புரட்சி ஒத்திப் போடப்பட்ட யுகமோ’ என்ற உணர்வு தோன்றியது. இந்தத் திருத்தல் வாதம் ஏற்புடையது அல்ல என்று சிலியில், அலண்டே தேர்தலில் வெற்றி பெற்ற போது அவரைச் செயல் பட விடாமல் படுகொலை செய்த நிகழ்வினால் மெய்ப்பிக்கப் பட்ட பிறகும், புரட்சிகர உணர்வு மழுங்கிய நிலையிலேயே இருந்தது.
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பிய நாடுககளின் வீழ்ச்சி, புரட்சிகர சக்திகளை மேலும் பின் தள்ளியது. சமதர்ம அரசுகள் உள்ள வரையிலும், தன் கோர முகத்தை முழு வீச்சில் காட்ட முடியாமல் அடங்கி இருந்த முதலாளித்துவம், இப்பொழுது மிகவும் கேராமான தாண்டவம் ஆடத் தொடங்கியது. மார்க்சியம் தோற்றுப் போன தத்துவம் என்றும், அது இனி மேல் தலை தூக்க முடியாது என்றும் வலுவாகப் பரப்புரை செய்யப்பட்டது.
இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில், முதலாளிகள் மார்க்சியம் பற்றி அஞ்சத் தேவை இல்லை; அதைப் பற்றி நினைக்கவே தேவை இல்லை என்று மகிழும் அளவிற்கு, மக்களிடையே புரட்சிகர எண்ணம் மழுங்கடிக்கப் பட்டு விட்டது. ஆனால் புரட்சிகர எண்ணங்களுக்கான புறச் சூழல்களை முதலாளித்துவம் தவிர்க்க முடியாதபடி வளர்த்துக் கொண்டே வந்தது / வருகிறது.
உயர் வருவாய் அளிக்கும் கணினி / தகவல் தொழில் நுட்ப வேலைகளைச் செய்பவர்கள், அதிகமான பணிப் பளுவினால் மன அழுத்த நோய்க்கு ஆட்பட்டு, மிகப் பலர் தற்கொலை வரையிலும் செல்கின்றனர். அவர்களை மன அழுத்தத்தில் இருந்து மீட்க, அதிக எண்ணிக்கையில் ஆட்களை வேலைக்கு அமர்த்தி, பணிப் பளுவைக் குறைக்கலாம். ஆனால் அப்படிச் செய்தால் முதலீட்டிற்குக் கிடைக்கும் இலாப விகிதம் குறைந்து விடும். ஆகவே முதலாளித்துவம் அதற்கு முன் வருவது இல்லை. பாதிக்கப்பட்ட ஆட்களுக்குப் பதிலாக, சந்தையில் இருக்கும் வேலை இல்லாப் பட்டாளத்தில் இருந்து, புதிதாக வேலைக்கு ஆட்களை எடுத்துக் கொள்ளும் உத்தியைக் கடைப்பிடித்து, இலாப வேட்டைக்குக் குந்தகம் விளையாமல் பார்த்துக் கொள்வதிலேயே முதலாளித்துவம் முனைகிறது. ஆனால் மக்கள் மன அழுத்தத்திற்கு ஆட்படாமல் இருக்க வேண்டும் என்றால், அதிக இலாபம் கிடைக்கும் என்பதற்காக வேலை செய்பவர்களின் பணிப் பளுவைக் கூட்டும் முதலாளித்துவத்தைக் காவு கொடுத்து விட்டு, உழைக்கும் மக்களின் நலன்களையே முன்னுரிமையாகக் கொள்ளும் சமதர்ம அமைப்பை ஏற்க வேண்டும்.
சில்லரை வணிகம் மற்றும் சிறு தொழில்கள் செய்யும் குட்டி முதலாளிகள், இன்று பெரு முதலாளிகளின் தாக்குதலுக்கு உட்பட்டு இருக்கிறார்கள். பொருளாதார நெருக்கடி காரணமாகத் தங்கள் மூலதனத்தை இலாபகரமாக முதலீடு செய்ய வழி கிடைக்காமல் தவித்துக் கொண்டு இருக்கும் பெரு முதலாளிகள் தங்கள் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள, குட்டி முதலாளிகளை விழுங்கும் செயலில் ஈடுபட்டு உள்ளனர். முதலாளித்துவ அமைப்பைக் கட்டிக் காத்துக் கொண்டு, குட்டி முதலாளிகள் பெரு முதலாளிகளைத் தடுத்து நிறுத்தி விட முடியாது. குட்டி முதலாளிகள் சமதர்ம அமைப்பை ஏற்றுக் கொண்டால், உடனடியாகத் தங்களைப் பெரு முதலாளிகளிடம் இருந்து காத்துக் கொள்ள முடியும். முதலாளித்துவத்தில் இருந்து சமதர்மத்திற்குச் செல்லும் மாறுதல் கால கட்டத்தில் குட்டி முதலாளிகள் தங்கள் வாழ்க்கையை இப்போது போலவே தொடர முடியும். ஒரு தலைமுறை முடிவில் புதிய சமூக அமைப்புக்கு எவ்வித வலியும் இன்றித் தங்களைத் தகவமைத்துக் கொள்ள முடியும். ஆகவே குட்டி முதலாளிகளின் பிரச்சினைகளுக்கும் சமதர்மமே தீர்வாக உள்ளது.
மருத்துவத் துறையில் இன்று நோய்க்குத் தேவைப்படும் சிகிச்சையை அளிக்காமல், ஒருவருடைய கையில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப, சிகிச்சை அளிக்கும் பண்பாடு வளர்ந்து உள்ளது; மேலும் வளர்ந்து கொண்டும் உள்ளது. இப்பண்பாடு மனித குலத்திற்கு நல்லது அல்ல என்று கடைந்து எடுத்த அறிவிலிகளாலும் புரிந்து கொள்ள முடியும். இதற்குத் தீர்வு மருத்துவம் இலவசமாக இருக்க வேண்டும்; இலவசமாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது தான். ஆனால் இலவச மருத்துவத்தைக் கொண்டு வர வேண்டும் என்றால், இன்று மருத்துவத் துறையில் ஈடுபடுத்தப் பட்டு உள்ள மூலதனத்தை வேறு துறைகளுக்கு மாற்றிக் கொண்டு செல்ல வேண்டும். ஆனால் பொருளாதார நெருக்கடியினால் ஏற்கனவே மூலதனத்தை ஈடுபடுத்தும் களம் கிடைக்காமல் தவித்துக் கொண்டு இருக்கும் முதலாளிகள் இதற்கு ஒப்ப மாட்டார்கள். ஆகவே இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரே வழி முதலாளித்துவத்தைக் காவு கொடுத்து, சமதர்மத்தை ஏற்பதே ஆகும்.
இவற்றைப் போல் மக்கள் இன்று படும் எல்லாவிதமான துயரங்களுக்கும் முதலாளித்துவ அமைப்பே காரணமாகவும், சமதர்ம அமைப்பே தீர்வாகவும் உள்ளது.
இவை மட்டும் அல்லாமல், இன்று இப்புவிக் கோளை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் மிகப் பெரிய பிரச்சினையான புவி வெப்ப உயர்வுக்கும், சூழ்நிலைக் கேட்டுக்கும் சமதர்மமே தீர்வாக உள்ளது. முதலாளித்துவ உற்பத்தி முறையில் இலாபம் தரும் பொருட்களையே உற்பத்தி செய்ய முடியும். ஆனால் இலாபம் தரும் பொருட்கள் அனைத்தும் புவி வெப்பத்தை உயர்த்துவனவாகவே உள்ளன. அது மட்டும் அல்லாமல் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் விதமாக உற்பத்தியை வைத்துக் கொண்டால் தான் இலாபம் கிடைப்பதாகவும், சுற்றுச் சூழல் மாசு படக் கூடாது என்று நடவடிக்கை எடுத்தால் இலாப விகிதம் குறைவதாகவும் உள்ளது. ஆகவே முதலாளித்துவ உற்பத்தி முறை தொடரும் வரையில், புவி வெப்பம் மேலும் மேலும் உயர்வதையும், சுற்றுச் சூழல் மேலும் மேலும் மாசு படுவதையும் தடுக்க முடியாது; இவ்வுலகை அழிவில் இருந்து காக்க முடியாது. இதைத் தடுத்து உலகை அழிவில் இருந்து காக்க வேண்டும் என்றால், முதலாளித்துவ உற்பத்தி முறையைக் காவு கொடுத்து விட்டு, சமதர்ம உற்பத்தி முறையைக் கைக்கொள்ள வேண்டும்.
இது வரைக்கும் கூறப்பட்டவை எல்லாம், உழைக்கும் மக்களின் விடுதலையைக் கணக்கில் கொள்ளாமலேயே கூறப்பட்டவை ஆகும். மார்க்சியம் என்பது உழைக்கும் மக்களின் விடுதலைக்கான மெய்ஞ் ஞானமாகும். சமதர்ம உலகில் உழைக்கும் மக்களின்அடிமைத் தளைகள் நொறுக்கப்பட்டு விடுதலை கிடைக்கும் என்பதற்காகவே, அவர்கள் ஒன்றிணைந்து போராடுகின்றனர். ஆனால் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக மட்டும் அல்ல; சாதாரணமாக வாழ்வதற்கே சமதர்மமே தீர்வு என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. அது மட்டும் அல்ல; இப்பூலகில் உயிரினங்கள் தொடர்ந்து வாழ வேண்டும் என்றாலே அதற்கு ஒரே தீர்வு சமதர்மம் என்ற நிலையும் ஏற்பட்டு உள்ளது.
ஆனால் மக்களிடையே இப்புரிதல் உணர்வு மிகக் குறைவாக உள்ளது. ‘முதலாளித்துவத்தின் கோரமான வளர்சசியையும், மக்களின் அரசியல் பக்குவம் இன்மையையும் காணும் போது இவ்வுலகை அழிவில் இருந்த காப்பது கடினமாகத் தோன்றுகிறது’ என்ற புரட்சி வீரர் ஃபிடல் காஸ்ட்ரோவின் அச்சம் உண்மையாகி விடக்கூடாது. உலகத் தொழிலாளர்களே! ஒன்று சேருங்கள். நல்லுள்ளம் கொண்ட மக்களே! உழைக்கும் மக்களுடன் உறுதியாக நின்று சமதர்ம உலகைப் படைக்க முன்வாருங்கள்.
(இக்கட்டுரை 2015 ஆம் ஆண்டு சிந்தனையாளன் பொங்கல் மலரில் வெளியானது.)