Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இரட்டைத் தேசியம் : லெனின் மதிவானம்

இன்றைய சூழலில் இலங்கையின் அரசியல் மார்க்கத்தை வரையறுத்துக் கொள்வதற்காக இரட்டைத் தேசியம் குறித்த தெளிவு அவசியமானதாகும். அரசியல் தேசியம், தேசிய இனங்கள் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை உடையன என வலியுறுத்தும். அவ்வாறு தேசிய இனங்கள் பிரிந்து செல்வதை அங்கீகரித்திருப்பனும் குறிப்பட்ட தேசிய இனம் பிரிவினை கொள்ளாமல் சுயாட்சி அமைப்பில் தனக்கான அரசியல் சுதந்திரத்துடன் திகழ முடியும். அத்தகைய சுயாட்சி உரிமையையோ, பிரிந்து செல்வதையோ ஏற்றுக் கொள்ளாத நிலையில் கலாசார தேசியம் பற்றிப் பேசினர். ஒரு தேசிய இனத்துக்கு ஒரே கலாசாரம் கிடையாது. சுரண்டுகிறவர்களதும் சுரண்டப்படுகிறவர்களதும் என இரட்டைக் கலாசாரம் இருக்கும் என லெனின் சொன்னார். இந்தியச் சூழலில் கலாசாரத் தளத்தில் மட்டுமல்ல அரசியல் அரங்கிலும் இரட்டைத் தேசியம் இருந்தது. என்பதுதான் பிரச்சனை.( இரவீந்திரன் ந. (2003) இந்துத்துவம் இந்துசமயம் சமூக மாற்றங்கள்இ சவுத் விஷன்இ சென்னை. ப. 285.)

இந்திய சமூகவமைப்பில் சாதி என்பது முக்கிய கூறாக காணப்பட்டமையினால் தேசிய விடுதலைப் போராட்டத்தில் அதன் தாக்கத்தை காணக்கூடியதாக இருந்தது. காங்கிரஸ் இயக்கம் அன்று ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை கொண்டிருந்த அதேசமயம்இ பிராமணியர் சார்ந்ததாகவும் சில சமயங்களில் தமிழகத்தில் பிராமணர்- வெள்ளாளர் சார்ந்த கூட்டாகவும் அமைந்திருந்தது. இது குறித்து ஆனந்த் டெல்டும்ப்டே அவர்களின் பின்வரும் கூற்று முக்கியமானது ;

இந்தியாவிலுள்ள இடதுசாரி இயக்கதால் வழிநடத்தப்படும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் பலவீனங்களிலொன்று,  ஏகாதிபத்தியத்துடன் உள்ளார்ந்த முரண்பாட்டைக் கொண்டுள்ள அனைத்து மக்களையும் அடையாளம் கண்டு அவர்களை இந்த இயக்கத்திற்குள் கொண்டு வரவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை அவர்கள் உள்ளத்தில் ஊட்டவும் அதற்கு இயலாமற் போனதேயாகும். ஏகாதிபத்திய எதிர்ப்பின் முன்னணியில் இருக்கக்கூடிய பெருமளவிலான மக்கள் அதிலிருந்து விலக்கியே வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதுவே இந்த இயக்கத்திற்கு அளவு வகையிலும் பண்புவகையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு விலக்கிவைக்கப் பட்டவர்களில் குறிப்படத்தக்க பகுதியினர் தலித்துகளாவர். இவர்கள் இந்திய நாட்டின் மக்கள் தொகையில் இருபத்தைந்து விழுக்காட்டினர். ஏகாதிபத்தியத்துக்கு எதிரானவையாக உலகெங்கும் கருதப்படும் வர்க்கங்களான விவசாயிகளிலும் தொழிலாளர்களிலும் தனிச்சிறப்பான பகுதியாக இருப்பவர்கள். தலித்துகள்தான் இந்தியாவின் அடிப்படைப் பாட்டளிவர்க்கமாகக் கருதப்பட்டிருக்க வேண்டும். ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்திலிருந்து தலித்துகள் விலக்கப்பட்டிருப்பது ஒருபுறமிருக்க, பிற மக்களிடமும் கூட பொதுவாக ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு காணப்படுவதில்லை. இதற்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் பலவீனம் காரணமா அல்லது இது அந்தப் பலகீனத்தின் விளைவா என்பது ஆராயப்பட வேண்டும். ஆனந்த் (டெல்டும்ப்டே இ தமிழில் எஸ்.வி ராஜதுரைஇ(2006)இ ஏகாதிபத்திய எதிர்ப்பும்இ சாதி ஒழிப்பும்இ புத்தா வெளியீட்டகம் கோயபுத்தூர். ப .03.)

இரத்தினச் சுருக்கமான இக்கூற்று சற்று நீண்டிருந்தாலும் தேசியவாத விடுதலை இயக்கப் போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களைப் புறக்கணித்தது எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தி யிருந்தது என்பதனை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

மறுபுறத்தில்இ பிராமண எதிர்ப்பை கொண்டிருந்த ஜோதிராவ் பூலே, அம்பேத்கர் மற்றும் தமிழகத்தில் அயோத்திதாசர் முதலானோர் ஆங்கில ஏகாதிபத்தியத்துடன் கூட்டுசேர்ந்து ஒத்துழைப்பதன் மூலமாக தமது மக்களுக்கான சலுகைகளைப் பெற முடியும் என நம்பி அப்படியே செயற்பட்டனர். (அவ்வப்போது ஆங்கில ஏகாதிபத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நிர்ப்பந்தம் இருந்த போதிலும், அவர்கள் தலித் மக்களது விடுதலைக்கு காத்திரமான எந்த பங்களிப்பையும் நல்கவில்லை என அம்பேத்கர் குறிப்பிடத்தவறவில்லை). இந்த போக்கு இன்று சாதியை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவோர்களுக்கும் குறுகிய நோக்கத்தில் அதனை பாவிப்பவர்களுக்கும் சாதகமாக அமைந்துள்ளது.

இது தொடர்பில் கலாநிதி ந. இரவீந்திரனின் பின்வரும் கூற்று முக்கியமானதாகும் :
எல்லாப் பழியும் பிராமணர் அல்லது உயர்சாதியினர் தலைமேல், எனப் பொய்யான கோசங்களை முன்வைத்து தலித் மக்களை அவர்களுக்கான வரலாற்றுக் கடமையைச் செய்யவொட்டாமல் தடுத்துக் கையேந்தும்படி செய்யும் எத்தர்கள் துரத்தப்பட வேண்டும். பாட்டாளி வர்க்கத்தின் பெரும்பான்மையினர் தலித்கள் என்பதோடு வரலாற்றுக் காரணியாலும் மக்கள் விடுதலைப் போராட்டத்தில் தலித் மக்களில் அறுதிப் பெரும்பான்மையினர் தலைமை சக்திகளா யுள்ளனர். அவ்வாறான தமது தலைமைப் பாத்திரம் தலித் மக்களால் உணரப்படும் வகையிலான சரியான வேலைத்திட்டம் வகுக்கப்பட்டு, அதனடிப் படையில் பரந்துபட்ட வெகுஜனங்களை அணிதிரட்டும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் .

யாவரும் கேளிர் ஆகும்படி இரத்த உறவு இனக்குழு வரையறை தகர்க்கப்பட ஏற்றதாக அந்த வேலைத்திட்டம் அமையவேண்டும். ஒன்று கலக்கத் தடையான இந்தச் சாதிய உணர்வு கடக்கப்படவில்லை யெனில் இரட்டைத் தேசியப் பிரச்சனை மட்டுமல்ல அனைத்துப் பிரச்சனைகளும் தீர்க்கப்பட முடியாதனவாகும். மக்கள் விடுதலை எட்டாத் தொலைவுக்குரியதாகும். (இரவீந்திரன்.ந. இந்துத்துவம்இ இந்துசமயம், சமூகமாற்றங்கள்இ பக் .168.)
இடதுசாரி இயக்கத்தின் சகலவிதமான பின்னடைவுகளுக்கும் தோல்விகளுக்கும் பிராமணர் அல்லது உயர்சாதியினர் தான் காரணமென்பது சுத்த அபத்தமாகும். உழைக்கும் வர்க்கத்தில் பெரும்பாண்மையினர் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் அதன் யதார்த்த சூழலைக் கவனத்திலெடுத்து நீண்ட கால குறுகிய கால தந்திரோபாய திட்டங்களின் அடிப்படையில் வெகுசனங்களை திரட்டி போராட்டங்களை முன்னெடுத் திருப்பாகளாயின் அது வெற்றி பெற்றிருக்கும்.

அத்துடன் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தோற்றம் பெற்ற இயக்கங்களின் தலைவர்கள் தமது சுயநலத்திற்காக இவ்வியக்கங்களைப் பயன்படுத்திக் கொண்டதுடன்இ இவர்கள் எதிரிகளிடம்இ ஒடுக்கப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கைகளை விலை பேசி விற்றனர். இவ்வியக்கங்கள் குறித்து தாழ்த்தப்பட்ட மக்கள் விழிப்படைந்த போதினும் மாற்று அரசியலோ இ இயக்கங்களோ இன்றி அவர்கள் மீண்டும் மீண்டும் அவ்வியக்கங்களில் சரணடைகின்றனர். இடதுசாரி இயக்கங்கள் ஆங்காங்கே விட்ட தவறுகளையும் சாதிய ஒடுக்கு முறையின் கொடூரங்களையும் தூக்கிப் பிடித்துஇ ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களான அம்பேத்கர், அயோத்திதாச பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் முதலானோரின் பெயர்களையும் உச்சரித்து கூப்பாடு எழுப்புகின்ற போது இவர்களின் வரவு நல்வரவாகவும் அர்த்தமுள்ளதாகவும் தோன்றும். சற்று ஆழமாக நோக்கினால் தான் அதன் பின்னணியில் ஒரு நலனை பிறிதொரு நலனில் துõக்கி வீசும் வர்க்க நலன் மறைந்திருப்பதை அவதானிக்கலாம்.

இந்திய வாழ்முறையின் சுரண்டலுக்கான ஏற்றத்தாழ்வுடைய சமூகவமைப்பு (மாற்று வடிவம்) சாதி என்பதை புரிந்து கொள்ளல் அவசியமாகும். தலித்தியம் எனும் அடையாள அரசியலானது மேல் சாதியினரை தமது வர்க்க எதிரியாக நோக்குகின்ற தன்மையிலேயே வளர்த்தெடுக்கப் படுகின்றது.

சமூகமாற்றச் செயற்பாட்டாளர்கள் இந்த முரண்பாட்டைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. இங்கு ஏகாதி பத்தியத்திற்கு எதிரான போராட்டமும் இதன் முக்கிய அங்கமாக திகழக்கூடிய சாதி எதிர்ப்பு போராட்டமும் இங்கு பிளவுபட்ட தேசியமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இந்த முரண்பாட்டை பாரதி முறையாக இனங்கண்டமையினாலேயே தன் காலகட்டத்து உயிர்நாடிகளை புரிந்து கொண்ட சமூக செயற்பாட்டாளராக அவரால் மிளிர முடிந்தது.

இலங்கையை பொறுத்தமட்டில் அறுபதுகளில் இடதுசாரிகள் சாதிய எதிர்ப்பு போராட்டத்தில் கவன மடுத்தளவிற்கு எழுபதுகளில் முனைப்புற்ற இனவொடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தில் உடனடிக் காலப் பொருத்தத்துடன் கவனமெடுக்க தவறிவிட்டனர். இந்த முரண்பாட்டை சரியாக கையாளத் தவறியதன் விளைவாக தமிழ் தேசியவாத போராட்டமானது முற்று முழுதாக இனவாதத்தினுள் மூழ்கி செல்வதாக அமைந்தது. மறுபுறத்தில்இ இடதுசாரிகள் இது தொடர்பிலான கவன மெடுத்திருப்பின் தமிழ் தேசியவாதப் போராட்ட அழிவின் ஒரு பகுதியை தடுத்திருக்க முடியும் என்பதை இன்று நேர்மைமிக்க இடதுசாரிகள் சுயவிமர்சனம் செய்து வருகின்றனர்.
இவ்வாறாக தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை பிழையானதோர் அரசியல் பின்னணியில்இ தமிழ் குறுந்தேசியவாதிகள் கையேற்றதனால் அது ஒரு இனவாத யுத்தமாக முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டமானது முழுமக்களின் உரிமைகளையும் வென்றெடுப்பதற்கான போராட்டமாக அமையவில்லை.

இந்நாட்டில் வாழுகின்ற சிங்களஇமுஸ்லிம் மக்களை புறக்கணித்ததுடன் அவர்களை எதிரியாக கருதியது இப்போராட்டத்தின் பிறிதொரு பலவீனமாகும். அதன் உச்ச வளர்ச்சியே தமிழ் ஜனநாயக சக்திகளையும்இ கம்யூனிஸ்டுக்களையும் படுகொலை செய்யும் அளவுக்கு தமிழ் குறுந் தேசியவாத போராளிகள் வளர்ந்திருந்தார்கள்.

தமிழ் தேசிய ஜனநாயக முற்போக்கு சக்திகளிலிருந்தும் ஆக ஒட்டு மொத்தமாக மக்களிடமிருந்தும் பிரிந்த போராட்டமாக தமிழ்த் தேசியவாத போராட்டம் அமைந்திருந்ததுடன்இ இறுதியில் படுதோல்வியும் அடைந்தது. இப்போராட்டத்தை இப்போக்கில் வளர்த்தெடுத்த அமெரிக்க அரசியல் தமிழ் மக்களின் வாழ்க்கையை நடுத்தெருவிற்கே கொண்டு வந்தது.

இன்று தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பது மாறி மாறி வருகின்ற அரசாங்கங்களால் புறக்கணிக்கப்பட்டே வரப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய முடியாத அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்து பேரம் பேசுகின்ற அரசியல் நடவடிக்கைகளால் எதையும் சாதிக்க முடியாது என்பதை கடந்த கால அரசியல் செயற்பாடுகள் எமக்கு எடுத்துக் காட்டியுள்ளன. இது பேரம் பேசும் அரசியலுக்கு கிடைத்த தோல்வியாகும்.

இலங்கையில் இடதுசாரிகள் சாதிய எதிர்ப்பு போராட்டத்தில் காட்டிய தீவிரத்தை தமிழ் இனவிடுதலைப் போராட்டத்தில் காட்டியிருப்பின் ஜனநாயக சக்திகளின் ஒரு பகுதியினரை வென்றெடுத்திருக்கலாம். இலங்கையில் இரட்டைத் தேசியத்தில் ஒன்றிலே மாத்திரம் கம்யூனிஸ்ட்டுகள் கவனம் செலுத்திய போதிலும் இன ஒடுக்குமறை தீவிரமான சந்தர்ப்பத்தில் தமது தவறைத் திருத்திக் கொண்டு அதற்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருந்தனர்.

இன்று சாதி மறைந்துவிட்டது எனவும்இ அதனை முறியடித்தவர்கள் தமிழ் இன விடுதலைப் போராளிகள் எனவும் மிக அண்மைக்காலம் வரை கருத்துக் கூறப்பட்டு வந்துள்ளதை நாம் அறிவோம். ஒரு அன்பர் குறிப்பட்டது போல சாதி என்பது துப்பாக்கியின் நிழலில் மறைந்து கிடக்கின்றதே தவிர மரித்துவிடவில்லை.

அவ்வகையில் இன்னும் சாதியத்தின் கொடூரம் பல வழிகளில் வெளிப்பட்டு நிற்கின்றது. இன்று இனவாதம் பல வழிகளில் திரை மறைவில் வளர்க்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு சாதியத் தகர்வின் அவசியத்தை உணரமறுக்கும் தமிழ்த் தேசிய நிலைப்பாடு இரட்டைத் தேசியப் பிளவில் ஒன்றில் காலூன்றி நின்று மற்றதை எதிர்ப்பதாகவே இன்னமும் இருக்கின்றது என்பதையே காட்டுகின்றது. எனவே இங்கு இரட்டைதேசியம் என்ற யதார்த்தத்தை விளங்கிக்கொண்டு நமது சமூகமாற்றப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அப்போராட்டமானது வர்க்க முரண்பாடுகள்இ இன முரண்பாடுகள், சாதி முரண்பாடுகள், பாலின முரண்பாடுகள்இ மத முரண்பாடுகள் ஆகியவற்றையும் கவனத்திலெடுத்தே முன்னெடுக்கப்படல் வேண்டும்.

Exit mobile version