Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இன்னொரு போராட்டத்தின் முன் – மக்கள் போராட்டத்தை ஒழுங்கமைத்தல்(2) : சபா நாவலன்

ஈழம் – இன்னொரு போராட்டத்தின் முன் – மக்கள் யுத்தம் (1) என்ற பதிவின் இரண்டாம் பகுதியக ) இக் கட்டுரை எழுதப்படுகிறது.

முப்பது வருடங்களாக தமிழ்ப்பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் இடைக்கட்டம் ஒன்றில் மக்கள் போராட்டம் அதன் உண்மையான உள்ளர்த்ததோடு தோற்றம்பெறது. 86 ம் ஆண்டில் இலங்கை அரசினால் உயர் பாதுகாப்பு வலையங்கள் அறிவிக்கப்பட்டன. அந்த இடங்களிலெல்லாம் மக்கள் குடியிருப்புக்களை அகற்றுமாறு இலங்கை அரசு கட்டளையிட்டது. மனித நடமாற்றமற்ற பகுதியாக அவை அறிவிக்கப்பட்டன. இந்த அறிவிப்பு வெளிவந்த ஒரு சில நாட்களுக்குள்ளேயே யாழ்ப்பாணத்தில் மிகப்பெரும் மாணவர் போராட்டம் ஒன்றை இலங்கை அரசிற்கு எதிராக ஒழுங்கு படுத்தினோம்.

தேசிய மாணவர் மன்றம் என்ற அமைப்பே இந்தப் போராட்டத்தை ஒழுங்கு செய்தது. யாழ்ப்பாண நகரைச் சுற்றியுள்ள பெரும்பாலான உயர்தரப் பாடசாலைகளிலிருந்த மாணவர்கள் அனைவரும் ஒரு நாள் முன்னறிவிப்புடனேயே கலந்துகொண்டனர். இயக்கங்களும் ஆயுதங்களும் கோலோச்சிய காலத்தில் ஆரவாரமில்லாமல் நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டம் பலருக்கு வியப்பளித்தது. ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் ஒரு முனை யாழ்ப்பாண கச்சேரியிலும் மறு முனை யாழ்ப்பாண நகரத்தின் நடுப்பகுதியிலும் காணப்பட்டது. துண்டுப்பிரசுரங்களோ, விளம்பரங்களோ இன்றி ஒரு சிலரால் மட்டுமே ஒழுங்குபடுத்தப்பட்ட அந்த ஆர்ப்பாட்டத்திற்கு பலமான மக்கள் அமைப்பு ஒன்று தோற்றம் பெற்றிருந்தமையே காரணம்.

பாசறைக் குழு என்று அறியப்பட்ட அமைப்பின் வேலைத் திட்டத்தின் அடிப்படையில் அணிதிரட்டப்பட்ட மாணவர்களின் அமைப்பாக தேசிய மாணவர் மன்றம் திகழ்ந்தது. சுயாதீனமான மாணவர் அமைப்பிற்கு நேரடிக் கட்டுபாடுகள் இன்றி கொள்கைரீதியான தலைமையை பாசறைக் குழு வழங்கியது.

பாசறைக் குழு என்பது ஒரு நூல் வெளியீட்டு அமைப்பகவே அறியப்பட்டிருந்ததால் இவ்வாறன போராட்டங்களின் பின்புலத்தில் நாங்கள் செயற்பட்டோம் என்பது எம்மைத் தவிர யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

1983 ஆம் ஆண்டில் பாடசாலையில் உயர்தரக் கல்வி கற்றுக்கொண்டிருந்த போது ஏற்பட்ட தொடர்புகள் ஊடாக 1983 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட ஜூலை இனப்படுகொலையைத் தொடர்ந்து ரெலோ அமைப்பில் இணைந்து கொண்டேன். அந்த அமைப்பின் பிரச்சார வேலையை மேற்கொண்டிருந்த மனோ மாஸ்டர் என்பவருடனான நீண்ட உரையாடல்களின் பின்னர் நான் ஒரு பகுதி இயக்கங்க பிரச்சார வேலைகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தேன்.
ரெலோ மட்டுமல்ல ஏனைய அனைத்து இயக்கங்களுமே இந்திய உளவுத்துறையின் கட்டுப்பாட்டினுள்ளேயே இயங்கும் நிலை ஏற்பட்டிருந்ததால், எதிர்காலத்தில் பெரும் அழிவுகள் ஏற்படும் நிலை உருவாகும் என்பதை மனோ மாஸ்டர் ஆரம்ப உரையாடல்களின் போதே கூறினார். அவ்வாறான அழிவுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும், போராட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கும் மக்களை அணிதிரட்ட வேண்டும் என்று அவர் கூறியது எனக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

83 ஆம் ஆண்டின் இறுதியில் மனோ மாஸ்டர் ரெலோ இல் நடைபெற்ற உட்கட்சிப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக தமிழ் நாட்டிற்குச் சென்றிருந்த வேளையில், ஈ.பி.ஆர்.எல். உறுப்பினர் ஒருவர் ஊடாக கிராமிய உழைப்பாளர் முன்னணி* என்ற மக்கள் அமைப்புடன் தற்செயலாகத் தொடர்புகள் ஏற்பட்டன. தொடர்ச்சியாக அவர்களின் கிராமங்களுக்குச் சென்று அவர்களின் வேலை முறைகளோடு பங்கெடுக்கும் நிலை ஏற்பட்டது.

ஈ.பி.ஆர்.எல்.எப் தோழர் அந்த இயக்கத்தின் மத்திய குழு மட்டத்தைச் சார்ந்தவர் எனினும் ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தின் பிற்போக்கு சமரச வாதங்களுக்கு எதிரான உட்கட்சிப் போராட்டத்தை நடத்திவந்தார். இயக்கங்களுக்கு உள்ளே மக்கள் சார்ந்து போராடுகின்ற தனிநபர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்திற்கு நாங்கள் முன்வருகிறோம். அதன் பின்னர் கிராமிய உழைக்கும் மக்கள் முன்னணியைச்* சேர்ந்த தோழர்களோடு இணைந்து அவர்களின் கிராமம் ஒன்றில் சந்திப்புக்களை ஒழுங்குபடுத்திக்கொண்டோம்.

இதற்கிடையே ரெலோ இயகத்தினுள் நடைபெற்ற உட்கட்சிப் போராட்டத்தின் விளைவாக இலங்கையில் இயக்கப் பிரச்சார வேலைகளை மேற்கொண்டவ ஐந்து பேர் தமிழ் நாடு சென்றோம்.

அங்கு இயக்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட 26 பெண்கள் உபட பலர் தனியாக விலகியிருந்தனர். சிறீ சபாரத்தினத்தின் பாதுகாவலர்களால் இருவர் கடத்தப்பட்டிருந்தனர். அந்த உட்கட்சிப் போராட்டம் முடிவிற்கு வந்தபோது விலகியிருந்தவர்கள் இந்தியாவால் வளர்க்கப்பட்ட இயக்கங்களுக்கு அப்பால் புதிய அரசியலை முன்வைக்க விரும்பினர். இதற்கும் மேலாக விலகியிருந்த பெண்கள் உடனடியாக இலங்கை திரும்பினால் சமூகப் பிரச்சனையும் பாதுகாப்ப்பு சிக்கல்களும் ஏற்படும் என்பதால், இந்தியாவிலேயே சில காலங்கள் தங்கியிருக்க விரும்பினர்.

இந்த நிலையில் கிராமிய உழைப்பாளர் முன்னணி* உடனான எனது தொடர்புகள் குறித்து மனோ மாஸ்டரிடம் கூறினேன். பிரிந்திருந்தவர்களின் நாளாந்தச் செலவு கேள்விக்குள்ளான நிலையில் அவர்களை கிராமிய உழைப்பாளர் முன்னணி*யின் கிராமங்களில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கலாம் என்ற கருத்தையும் முன்வைத்தேன்.

இலங்கை திரும்பிய நான் கிராமிய உழைப்பாளர் முன்னணியோடு* பேச்சுக்களை நடத்தினேன். அவர்கள் உழைப்பாளர் முன்னணிக்கு அப்பால் ஒரு குழுவாக மாறியிருந்தனர். மலையகத்தைச் சேர்ந்த தோழர் அசோகனும்* உம் அவர்களுடன் இணைந்திருந்தார். ஈ.பி.ஆர்.எல்,எப் இன் இரண்டு பிதான தோழர்கள், கிராமிய உழைப்பாளர் முன்னணி இன் மூன்று தோழர்கள், மலையகத்தைச் சேர்ந்த தோழர் ஆகியவர்கள் இணைந்த தலைமறைவுக் கட்சியில் நானும் சேர்த்துக்கொள்ளப்பட்டேன்.

இதன் சில நாட்களின் பின்னர் மனோ மாஸ்டர் இலங்கைக்கு வந்தார். நாங்கள் மனோ மாஸ்டரைச் சந்திப்பதாகவும் அவரோடு இணைந்து புதிய வேலைத்திட்டம் ஒன்றை முன்வைக்கலாம் எனவும் தீர்மானித்திருந்தோம்.

அவர் இலங்கைக்கு வந்து மறு நாளே புலிகள் இயக்கத்தின் யாழ் மாவட்டப் பொறுப்பாளராகவிருந்த கிட்டு என்பவரால் பொலிகண்டி என்ற இடத்தில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.கொலைக்கான அடிப்படைக்காரணம் மனோ மாஸ்டர் புதிய அரசியல் இயக்கம் ஒன்றை உருவாக்கலாம் என்ற புலிகளுக்கு ஏற்பட்ட சந்தேகமே என பின்னதாக அறிந்துகொண்டோம்.

இதன் பின்னராக ரெலோவிலிருந்து பிரிவடைந்த பலரும் சிதைந்துவிட்டனர். சென்னையில் 20 இற்கும் மேற்பட்ட பெண்களும் சில ஆண்களும் தங்கியிருந்தனர். நாங்கள் தலைமறைவுக் கட்சியைக் கூடி இவை அனைத்தையும் விவாதிக்கிறோம். சென்னையில் தங்கியிருக்கும் பெண் போராளிகளை இலங்கைக்கு வருமாறும் கிராமிய உழைப்பாளர் முன்னணியின்* கிராமங்களில் பாதுகாப்புச் சிக்கல்கள் சுமூகமான நிலைக்கு வரும்வரை தங்கியிருக்குமாறு கோருவதாகவும் முடிவிற்கு வருகிறோம். அவர்களுக்கான கூட்டுப்பண்ணைத் திட்டம் ஒன்றையும் வரைந்துகொள்கிறோம்.

நான் மறுபடி சென்னைக்குச் சென்று அவர்களை இலங்கைக்கு வருமாறு கோருகிறேன். அவர்கள் அதற்கு சம்மதம் தெரிவிக்காமையால் மீண்டும் இலங்கைக்குத் திரும்பி கட்சி வேலைகளைத் தீவிரமாக்குகிறோம்.

அதே வேளை ரெலோ இயக்கத்தில் என்னோடு பிரசார வேலைகளில் ஈடுபட்ட பொறுப்பாளர்களில் ஐந்து பேர் கிராமிய உழைப்பாளர் முன்னணியோடு இணைந்து வேலைசெய்ய முன்வருகின்றனர்.

இயக்கங்களின் திடீர் இராணுவ வளர்ச்சியோடு தாக்குப் பிடிக்க முடியாத அந்த ஐந்துபேரும் சில நாட்களுக்கு உள்ளாகவே ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் அரசியல் தஞ்சமடைவதற்கான முடிவிற்கு வருகின்றனர். அவர்களின் ஒருவரின் குற்ற உணர்வு சென்னையில் வாழும் பெண்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று உறுத்துவதாகக் கூறினார். வறிய மக்கள் நாளந்த உணவுக்குத் தங்கியிருக்கும் ‘பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களை’ கொள்ளையடித்து சென்னையிலிருக்கும் பிரிந்து சென்றவர்களுக்குக் கொடுத்துவிட்டு, அதனிலும் அதிகமான பணத்தை முகவர்களுக்கு வழங்கி ஐரோப்பிய நாடு ஒன்றில் தஞ்சமடைந்தார்.

1984 ஆம் ஆண்டு மனோ மாஸ்டர் கொல்லப்பட்ட சில மாதங்களுக்கு உள்ளாகவே கிராமிய உழைப்பாளர் முன்னணியோடு இணைந்து கொண்டவர்கள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைய நான் முழு நேர உறுப்பினராக இணைந்து கொண்டேன்.
பெயரிடப்படாத எமது கட்சியில் இரண்டு ஈ.பி.ஆர்.எல்.எப் தோழர்களும், கிராமிய உழைப்பாளர் முன்னணியின் மூன்று தோழர்களும், மலையகத் தோழர் அசோகனும்* நானும் என எழு உறுப்பினர்கள் அங்கத்துவம் வகித்தோம். அனைத்து அரசியல் அமைப்புக்களும் ‘பெரிய’ இயக்கங்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளான நிலையில் நாம் கட்சியை தொடர்ந்தும் தலைமறைவானதாகவே வைத்திருக்க எண்ணினோம். கட்சி தோழர்கள் அனைவரும் மக்களை அணிதிரட்டும் வேலைகளில் ஈடுபடுவது என்றும் கட்சி வெளிப்படையானதாக் இயங்குவதில்லை என்பதையும் தீர்மானித்தோம்.

ரெலோ இயக்கத்திலிருந்து இணைந்து கொண்டவர்கள் வெளியேறிய மறுவாரத்தில் தேசிய விடுதலை இயக்கம் ஒன்றை உருவாக்குவதற்கான கோட்ப்பாடு முடிவிற்கு வருகிறோம்.

இலங்கையில் நான்கு தேசிய இனங்கள் என்பதையும் அவற்றுள் ஒடுக்கப்படும் தேசிய இனங்களாக மலையகத் தமிழ் , முஸ்லீம் தமிழ், வட-கிழக்கு தமிழ் தேசிய இனங்களை வரையறுத்துக்கொண்டோம்.

மலையகத் தமிழர் விடுதலை இயக்கம்(UTLO), பூர்வீகத் தமிழர் விடுதலை இயக்கம்(TTLO), முஸ்லிம் தமிழர் விடுதலை இயக்கம்(MTLO) ஆகியவற்றை கட்சியிலிருந்து சுயாதீனமானதாகத் தோற்றுவிப்பதென்றும் கட்சி அதற்கு தலைமை வழங்குவது என்றும் தீர்மானித்தோம். இந்திய உளவுத்துறையால் ஊதிப்பருத்த விடுதலை இயக்கங்களின் அச்சுறுத்தல் அதிகமாக இந்த விடுதலை இயக்கங்களின் பெயர்களையும், செயற்பாடுகளையும் கூட தலைமறைவானதாகவே முன்னெடுப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இதனிடையே தேசிய விடுதலை இயக்கங்கள் குறித்த எமது கருத்துக்களை மக்கள் மத்தியிலும் ஏனைய போராளிகள் மத்தியிலும் எடுத்துச் செல்வதற்காக ‘பாசறை வெளியீடு’ என்ற அமைப்பைத் தோற்றுவித்தோம். இதன் முதல் வெளியீடான மக்கள் யுத்தப் பாதையில் தமிழ்ப் பேசும் மக்கள் என்ற சிறிய கை நூல் நான் எழுதி வெளியானது. இதன் பின்னர் நாம் பாசறை குழுவாக ஏனையோரால் அடையாளப்படுத்தப்பட்டோம்.

சில நாட்களுக்கு உள்ளாகவே கிராமிய உழைப்பாளர் முன்னணி* என்ற மக்கள் அமைப்போடு, தேசிய மாணவர் மன்றம், மாதர் மறுமலர்ச்சிப் பேரணி ஆகிய மக்கள் அமைப்புக்களை தோற்றுவிப்பதாக முடிவெடுத்துச் செயற்பட்டோம்.

வட-கிழக்கு தமிழர்களின் தேசிய விடுதலை இயக்கத்திற்கும் மாணவர் அமைப்பான தேசிய மாணவர் மன்றத்திற்கும் நான் கட்சி சார்பில் செயற்பட, அசோகன்* மலையக மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் செயற்பட்டார்.

கிராமிய உழைப்பாளர் முன்னணியின் வேலைகள் ஏனைய கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டன. இந்த வேளைகளில் எல்லாம் கிராமங்களில் சிவில் நிர்வாகத்தைப் கையகப்படுத்த முனைந்த விடுதலை இயக்கங்களிடமிருந்து அச்சுறுத்தல்களை எதிர் நோக்கினோம்.விடுதலை இயக்கங்கள் கிராமங்களிலிருந்த தாதாக்களோடும், மேல் சாதியினரோடும், செல்வாக்குப் படைத்தவர்களோடும் உறவுகளை வளர்த்துக்கொண்டு கிராமங்களைக் கட்டுப்படுத்தின. இளைஞர்கள் ஒவ்வொரு இயக்கத்திலும் ஆதரவாளர்களாக இணைந்து கொண்டனர். இன்று ஈ.பி.டி.பி போலீசாரிடமும் இராணுவ உளவாளிகளிடமிருந்தும் வட கிழக்கு மக்கள் எதிர் நோக்கும் அச்சுறுத்தல்களை ஒத்த இயக்கங்களின் அச்சுறுத்தல் பெரும் தடையாக அமைந்தன.

சில நாட்களின் உள்ளாகவே இயக்கங்களின் அச்சுறுத்தல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கான நடைமுறைத் தந்திரோபாயத்தை வகுத்துக்கொண்டோம்.

கிராமங்கள் தோறும் சென்று அங்கு விழிப்புக் குழுக்களை உருவாக்கினோம். விழிப்புக் குழுக்களில் கிராமங்களிலிருந்த வெவ்வேறு இயக்க உறுப்பினர்களையும் செயற்பாட்டாளர்களாக இணைத்துக்கொண்டோம். இந்த விழிப்புக் குழுக்கள் கிராம மக்களால் தெரிவு செய்யப்பட்டது. கிராமத்தின் பிணக்குகளையும் சிவில் நிர்வாகத்தையும் அவர்களே கவனித்துக்கொண்டனர். நாம் அவர்களோடு இணைந்து செயற்பட்டோம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுக்கள் என்பதால் இயக்கங்களிடமிருந்து அச்சுறுத்தல்கள் குறைந்தன. இயக்கங்கள் தமது உறுப்பினர்களை விழிப்புக்குழுக்களுடன் இணைந்து தமது கருத்துக்களைக் கூறுமாறு கேட்டுக்கொண்டன. இவ்வாறு இயக்கங்களின் அச்சுறுத்தல் குறைந்த வேளையில் கிராமிய உழைப்பாளர் முன்னணியின் வேலைகளை ஏனைய கிராமங்களுக்கும் விரிவுபடுத்தினோம். மானிப்பாய் பகுதியைச் சார்ந்த கிராமங்களில் புதிய கிராமிய உழைப்பாளர் கிளைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதே வேளை விழிப்புக் குழுக்கள் உயர் சாதிக் கிராமங்களையும் சில நகர்ப்புறப் பகுதிகளை நோக்கியும் விரிவடைந்தன. கம்யூன்கள் போன்ற அமைப்பாக விழிப்புக்குழுக்கள் இயல்பாகவே விரிவடைய வெறும் நிர்வாக அமைப்புக்களாக அன்றி, கிராமங்களின் அரசியல் கூறுகளாக அவை பரிணாமம் பெற்றன. இன்றை பாசிசச் சூழலில் அரசியலை முன்னெடுப்பவர்களுக்கு விழிப்புக் குழுக்கள் முன் உதாரணமாக அமையலாம்.

அனைத்து இயக்கங்களும் புலிகளால அழித்துச் சிதைக்கப்பட போதிலும் பாசறை குழுவை அவர்களால் அழிக்க முடியாத அளவிற்கு மக்கள் பலம் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டது என்பது குறித்து அடுத்த பதிவில் காணலாம்.
இது சுயசரிதையோ வரலாறோ அல்ல. பாசறை குழு குறித்து எழுதும் போது என்னோடு இணைந்த பல சம்பவங்கள் பலவற்றை வெளிப்படுத்துவதற்காகவே எனது பெயரும் தொடர்பான சம்பவங்களும் பயன்படுத்தப்பட்டன. * குறியீட்டுக்கு அடியில் வரும் பெயர்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காக மாற்றப்பட்டுள்ளன.

இன்னும் வரும்..

முன்னைய பதிவு:

ஈழம் – இன்னொரு போராட்டத்தின் முன் – மக்கள் யுத்தம் : சபா நாவலன்
Exit mobile version