Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இன்னும் மௌனமாக .. : புதிய திசைகள்

ஈழப் போராட்டத்தை அடக்கி ஒடுக்கியிருப்பதன் மூலம் இலங்கை தீவு முழுவதும் தனது சர்வாதிகார ஆட்சியை நிலை நிறுத்தியுள்ளது ராஜபக்ச அரசு. சிங்கள பேரினவாதத்தின் வரலாற்றில் இக்காலகட்டத்தை மிக உயர்நிலை சகாப்தமாக பிரகடனப்படுத்தி தனது அடக்கு முறைகளை அனைத்துக் களங்களிலும் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது பேரினவாத அரசு.

இன்று இலங்கையில் நடப்பது இனச்சுத்திகரிப்பின் உச்சக்கட்டம் என்பது புரிந்து கொள்ளத்தக்கது. இலங்கைத்தமிழர் என்னும் இனத்தின் ஆணிவேரையே அறுத்தெறியும் நடவடிக்கை.எமது அரசியல் உரிமையை பறித்து, எமது பிரதேசங்களில் எம்மை சிறுபான்மையினராக்கி, ஆதிக்க மொழிமூலமே எமது வாழ்க்கையில் முன்னேற்றம் அடையமுடியும் என்ற சூழலை உருவாக்கி,எமது சமூகத்தை சீரழியவிட்டு எம்மை ஒரு அடிமை மனநிலைக்கு கொண்டு செல்வது என்பது பேரினவாத அரச அதிகாரத்தின் நோக்கங்களில் ஒன்று.

இலங்கைத் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரைப் புலம் பெயர் தமிழர்களிடமிருந்தும் தமிழ் நாட்டின் ஜனநாயக மனிதாபிமான சக்திகளிடமிருந்தும் தனிமைப்படுத்தும் இலங்கை அரச பாசிசத்தின் நிகழ்ச்சி நிரல் இங்கு முடுக்கிவிடப்பட்டுள்ளது.

ஐம்பதாயிரம் மக்களைக் கொன்று போட்ட அரசிற்கு எதிராகப் போராட முன்வரும் ஒவ்வொரு மனிதர்களின் மீதும் இலங்கை அரசின் உளவியல் யுத்தம் ஆரம்பமாகிவிட்டது. அப்பாவி மக்களை நாளாந்தம் அழிப்பவர்களை எதிர்த்துப் போராடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நிராகரிக்கக் கோருகிறார்கள்.

இலங்கையிலும் நாளை இந்தியாவிலும் இன்னொரு நாள் ஐரோப்பவிலும் கொத்துக் கொத்தாக மக்களை அழித்துவிட்டு ஆட்சி நடத்துவதற்கு இலங்கை ஒரு முன்னுதாரணமாகிவிடும் என்று அச்சப்படுகிறார்கள் உலகம் முழுதும் வாழும் மக்கள் குறித்து அக்கறையுள்ள மனிதர்கள்.

பலவகை ஒடுக்குமுறைகளையும் இன்று சந்தித்துவரும் முஸ்லிம் சமூகமும் மலையக சமூகமும் எதிர்கொள்ளவிருக்கும் பிரச்சனையும் இதுதான். ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சமூகங்களாகிய நாம் ஓரணியில் நின்று சிங்கள பேரினவாத அரசிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து செல்லும் அவசியத்தை இன்றைய காலம் வேண்டி நிற்கிறது.

தமிழீழ விடுதலை புலிகளை ஒடுக்குவது என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களையும் ஆயிரக்கணக்கான போராளிகளையும் உலகின் யுத்த விதிமுறைகள் அனைத்தையும் மீறி காட்டுமிராண்டித்தனமாக அழித்ததில் இருந்து, இலங்கை அரசானது ஒடுக்குமுறையின் முன்னுதாரணமாக, உலகத்திற்கு ஆலோசனை வழங்கும் அனுபவசாலியாகத் தன்னை பிரகடனப்படுத்தி கொள்கிறது. சிறுபான்மை தேசிய இனங்களை ஒடுக்கி வாழும் பெருந்தேசிய இனம் சுதந்திரமாக வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை; இருக்கப்போவதும் இல்லை. சிங்கள மக்களின் உரிமைகள் தமிழ் மக்களின் உயிர் பறிப்புடன் எப்படிக் கரைந்து போயின என்பதை சிங்கள மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.

இந்திய அரச பின்பலத்தில் இலங்கை அரசின் இருப்பு என்பது  தெற்காசிய ஜனநாயகத்திற்கு  விடுக்கப்பட்ட   அச்சுறுத்தல் என்பதை  தமிழ்  நாட்டில்  மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.   இலங்கை இனப்படுகொலையின் பின்னான அரசியல்  சார்புநிலை என்பது  எதிரிகளையும் நண்பர்களையும்  இனம் காண்பதற்கான உரைகல்.

இது யுத்த வெறிபிடித்து அலையும் ஓர் சர்வாதிகார அரசிற்கெதிரான போராட்ட கால கட்டம்.இலங்கைத்தீவிலும் புலம்பெயர் சூழலில் வாழும் அனைத்து மக்களும் தமது நிலை சார்ந்து போராடவேண்டிய தருணம் இது.சமூகத்தில் அடிப்படை ஜனநாயகம் இன்றி எந்தப்போராட்டமும் அடுத்த கட்டத்திற்கு நகர்வது சாத்தியமற்றது.
அனைத்து மக்களே, ராஜபக்ச அரசிற்கெதிரான போரில் ஒன்றிணைவோம்; போராட்ட சக்திகள் அனைவரும் பொது எதிரிக்கெதிராக ஒன்றிணைவோம். எம்மைப்போல் உலகின் ஒவ்வொரு மூலையிலும் உரிமைக்காக போராடும் சக்திகளுடன் கைகோர்ப்போம். எமது போராட்டம் உலக அரங்கில் நடைபெறும் உரிமைப்போரின் ஓர் அங்கமாக மாறட்டும்.

இலங்கை இனவெறி அரசே,
இன அழிப்பை நிறுத்து!
அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கானோரை விடுதலை செய்!
அரசியல் கைதிகளை சித்திரவதை செய்யாதே!
கடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் எங்கே?

லண்டனில் புதிய திசைகள் அமைப்பு இலங்கை அரசிற்கு எதிரான முழக்கங்களோடும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது. அதே நாளில் தமிழ் நாட்டில் மக்கள் கலை இலக்கியக் கழகம் தமிழ் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றது.

Exit mobile version