கொன்று போடப்பட்டவர்கள், சாம்பலாக்கப்பட்டவர்கள், விரட்டியடிக்கப்பட்டவர்கள், சிதைத்துச் சிதைது குடியேற்றப்பட்டவர்கள் என்று வடக்கும், கிழக்கும், மலையகமும் மறுபடி மறுபடி அவலங்களின் பூமியாக மாற்றப்பட்டுவிட்டது.
இவையெல்லாம் நேற்று ஆரம்பித்து இன்று முடிவடையும் சிவில் யுத்தமல்ல. பின் காலனியக் காலகட்டம் முழுவதுமே தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரின் அழிப்பிற்கான காலகட்டம் தான்.
மக்களின் குருதியறைந்து, கொலைகளுக்கு நியாயம் சொல்லுகின்ற ஒரு புதிய கூட்டம் மாரிகாலக் காளான்கள் போல கோரமாய்ப் பரவிக்கொண்டிருக்கும் இக்கட்டான உலக சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒரு புறத்தில் இராட்சத வியாபாரிகள் ஆயிரமாயிரமாய் கொலைகளை நிகழ்த்திவிட்டு “வீர சிம்மாசனத்தில்” வீற்றிருக்க அவர்களின் பின்னால் இன்னும் ஆயிரம் “புதிய நியாயங்களோடு” குட்டி வியாபாரிகள் மக்களைச் சூறையாட அணிவகுத்து நிற்கின்றனர்.
ராஜபக்சவைப் பிடித்துத் துவம்சம் செய்து விடுகிறோம் என்று மக்களை மாயவலைக்குள் வைத்திருக்கும் திருடர்கள் கூட்டம் அவலங்களின் மீது அரசியல் நடத்துகிறது.வட கிழக்கு பௌத்த சிங்கள மயமாவதற்குக் கூட இலங்கை அரசின் தமிழ் உளவாளிகளும் அரசின் புலம் பெயர் நீட்சிகளும் நியாயம் சொல்கின்றன. நாளாந்த உணவிற்காக, குழந்தை செத்துப் போகாமல் வளர்வதற்காக அநாகரிகமான இராணுவத்திற்கு உடலை விற்கும் தமிழ்ப் பெண்களின் சோக வரலாறுகள் நெஞ்சைப் பிழிகின்றன.
புலம் பெயர் அரசியல் பொழுது ஒன்றாய், ஒரு குடையின் கீழ் அணிதிரள்வோம் என்ற குரல்களோடு எழுகிறது. முள்ளிவாய்க்காலில் மகிந்த அரசும் பேரினவாதமும் மனிதப்பிணங்களைக் குவித்துக்கொண்டிருந்த வேளையில் புலம் பெயர் சூழலில் ஈழக் கனவிம் கருப்பைக்குள் நெருப்பைச் சுமந்துகொண்டு லட்சம் லட்சமாய் ஐரோப்பிய, அமரிக்கத் தெருக்களில் தமிழீழ முழக்கங்களோடு ஒரு குடையின் கீழ் ஒன்றிணைத்து பார்த்திருக்கிறோம்.
இரண்டு வருடங்கள் வெற்றுச் சுலோகங்களோடு கடந்துபோயின. அரச உளவாளிகள் புற்று நோய் போல புலம் பெயர் நாடுகளின் ஒவ்வொரு அங்கங்கங்ளுக்குள்ளும் தம்மைச் செருகிக்கொண்டுள்ளனர்.
அரச உளவாளிகள் தமக்கு மனிதாபிமான முலாம் பூசிக்கொள்கின்றனர். தமக்கு “வேறு எதிர்ப்பு அரசியல் உணர்ச்சியிருப்பதாக” விரல்களை நீட்டி முழக்கமிடுகின்றனர். ராஜ மரியாதையோடு, இலங்கை விமான நிலயத்தில் வந்திறங்கும் கே.பியின் முகவர்கள் கூட தமது இலட்சியம் தமிழீழம் தான் எனக் கூறுகின்றனர்.
வன்னிப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட வேளையில் இலட்சோப இலட்சமாய் ஐரோப்பியத் தெருக்களில் ஒன்றிணைந்தும் ஏன் இனப்படுகொலையை நிறுத்த முடியவில்லை?
மூன்று லட்சம் பொது மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டு, சிறுகச் சிறுக அழிக்கப்பட்ட போது ஏன் ஒன்றிணைவு மட்டும் பலனளிக்கவில்லை?
அமரிக்க சட்டலைட்டுகள் படம்பிடித்துக்கொண்டிருக்கும் போது நிகழ்த்தப்பட்ட அழிவுகள் இன்னும் ஏன் உலக மக்களின் கவனத்திற்கு வரவில்லை?
இன்றும் சூறையாடப்படும் வட-கிழக்கு மக்களின் அவலத்தை ஏன் நிறுத்த முடியவில்லை, குறைந்த பட்சம் அவர்களின் குரல் உலகிற்குக் கேட்கும் வண்ணம் எம்மை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை?
ஆக, “ஒரு குடையின் கீழ் இணைதல்” என்பது மட்டும் போதுமானதா?
சிங்கள மக்கள் மத்தியில் தமிழ்த் தேசிய இனத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான விழிப்புணர்வு இன்னும் ஏன் ஏற்படவில்லை?
அழிவுகளுக்குத் துணை சென்றவர்களும் கொலைகாரர்களும், திருடர்களும், வியாபாரிகளும் அரசியல் அதிகாரத்தில் இன்னமும் நிலைப்பது ஏன்?
முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் மரணித்த போது அஞ்சலி கூடச் செலுத்தாமல் அனாதைப் பிணமாக்கியவர்கள் யார்?
இந்தியா உட்பட அனைத்து ஏகபோக அரசுகளாலும் தேசிய விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்ட பின்னர் தமிழ் அரசியல் தலைமைகள் இந்த நாடுகளின் உளவுப்படை போல் தொழிற்படுவது ஏன்?
யார் காட்டிக் கொடுக்கிறார்கள்?
யார் உளவாளிகள்?
யார் சமூகப்பற்றுள்ளவர்கள்?
யாரோடு ஒன்றிணைய வேண்டும்?
யாரை நிராகரிக்க வேண்டும்?
இது ஒரு மீள் பதிவு : Published on: May 11, 2011 @ 0:08