Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய மனம்….. எவளவு உயர்வானது? : பொன்னிலா

இது தன்மானம் உள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் கொதிப்பை ஏற்படுத்துகிற ஈகோவாகி விட்டது. இந்தியன் ஒருவன் வெளிநாட்டில் தாக்கபப்ட்டால் அதை இந்திய தேசத்திற்கு நேர்ந்த அவமானமாகக் கருதுகிறது இந்திய மேல் மத்தியதரவர்க்கம். பி.ஜே.பி. காங்கிரஸ் எல்லோருமே ஆஸ்திரேலியாவில் தாக்கப்படும் மாணவர்களுக்காக போராடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் இன்னும் சில ஆண்டுகள் போனால் திமுக, அதிமுக கூட வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக போராடும் சூழல் வரலாம். தேசிய அரசியலை நோக்கி வெகுவேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் திராவிட இயக்கம் இம்மாதிரியாக தன் முகத்தை சீரமைத்துக் கொள்வதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. பல ஆயிரம் மைல்களுக்காப்பால் தாக்கப்படும் என்.ஆர்.ஐ – களுக்காக அழுது புரளும் ஊடகங்கள் தண்டகாரண்யாவிலோ, விதர்பாவிலோ, இராமேஸ்வரத்திலோ, கொல்லப்படும் உள்ளூர் இந்தியனுக்காக வருந்துவதில்லை. இவர்களின் மொழியில் சொன்னால் உள்ளூரில் கொல்லப்படுகிறவர்கள் வளர்ச்சிக்குத் தடையானவர்கள், எழில் மிகு சென்னைக்கு தடையானவர்கள், நவீனமயத்திற்கு எதிரானவார்கள், பேராசை கொண்டவர்கள்…..இப்படிதான் மத்தியதர வர்க்கத்து இந்தியனின் தேசீய உணர்வின் வெண்மை பளிச்சிடுகிறது.

ஏன் நீங்க இந்தியன் ஒருவன் வெளிநாட்டில் தாக்கப்பட்டால் அது பற்றி பேசவோ எழுதவோ மட்டேங்குறீங்க என்று நண்பர் ஒருவர் கேட்டார்…… எழுதாமல் என்ன? எழுதிவிட்டால் போகிறது என்பதால் உருவானதே இக்கட்டுரை. ஆனால் இத்தாக்குதல்கள் மகிழ்ச்சி எதையும் கொடுக்காவிட்டாலும் கவலைகள் எதையும் கொண்டுவரவில்லை. இதில் கவலைப்பட என்ன இருக்கிறது என்பதையும் என் முட்டாள் மூளைக்குப் பட்டவரை புரிபடவும் இல்லை. என்னுடைய கவலை எல்லாம் இந்த வெள்ளைத் தோல் இந்தியனிடம் சிக்கிக் கொண்டு அவனது கலாசாரத்தைப் பேண முடியாத ஆஸ்திரேலியாக்கரனைக் குறித்துத்தானே தவிற இந்தியனைப் பற்றியல்ல. தாந்தேவாடாவிலும், காஷ்மீரிலும், லால்கரிலும் கொல்லப்படும் பழங்குடி பற்றித்தான் நமது கவலைகளே தவிற நமது வரிப்பணத்தில் ஐ.ஐ.டியில் படித்துவிட்டு அமெரிக்காக்காரனுக்கு ஆய் கழுவும் வெள்ளைத் தோலர்களுக்காக அல்ல, ஆனால் பாருங்கள் பாவம் இரண்டு மூன்று பேர் வரை ஆஸ்திரேலியாவில் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

சுமார் 1400 வழக்குகள் வரை பதிவாகியிருப்பதாகத் தெரிகிறது. எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை என்றாலும் சம்பவம் உண்மைதான். ஏழைகளைப் போல நடிக்கத் தெரியாதவர்கள் அங்குள்ள ஏழைகளிடம் சிக்கிக் கொள்கிறார்கள். ஆஸ்திரேலியப் பிரதமர்தான் சொன்னார். “ நீங்கள் ஏழைகளைப் போக நடியுங்கள்” என்று அட்வைஸ் பண்ணினார். ஆனால் ஏழைகளைப் போல நடிப்பது மேட்டுக்குடி இந்தியர்களுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.

இதோ ஆஸ்திரேலியாவின் ரிங்வுட் நகரில் பார்ட்டைம் வேலை பார்த்துக் கொண்டிருந்தவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் தாக்கியிருக்கிறது. சிறுகாயங்களோடு தப்பி விட்டார். ஆனால் நினைத்துப்பாருங்கள் பெரும் ஆயுத பலத்தோடு பழங்குடி கிராமம் ஒன்றினுள் இறக்கப்படும் சல்வார்ஜூடும் எத்தனை எத்தனை பழங்குடிப்பெண்களை வன்முறையாகப் புணர்கிறார்கள்.

பிஞ்சுக் குழந்தைகளின் கட்டை விரலை வெட்டுகிறார்கள். ஏன் இவர்கள் இப்படி விரலை வெட்ட வேண்டும் என்று யோசித்த போதுதான் நமது தலைமுறையில் ஏகலைவனின் வெட்டப்பட்ட கட்டை விரலில் இருந்து இன்னமும் வழிந்து கொண்டிருக்கிற ரத்தத்தின் மிச்சங்கள்தான் இது என்பது புரிகிறது.

பிறப்பால் வேடனான பழங்குடி ஏகலைவன் துரோணாச்சாரியான் என்னும் பார்ப்பானிடம் வில் வித்தை கற்கச் சென்றதாகவும். அவன் கற்றுக் கொடுக்க மறுக்க அவனையே நினைத்து ஏகலைவன் வில் வித்தையைக் சுயமாகக் கற்றுத் தேர்ந்து விட்டு அவனிடம் சென்ற போது அந்த பார்ப்பன குருநாதனோ ஏகலைவனின் கட்டை விரலை வெட்டிக் கேட்க இந்த பழங்குடி வீரனான ஏகலைவனும் கட்டைவிரலை வெட்டிக் கொடுத்தனாம். மண்ணுக்குள் புதைந்திருக்கும் பாக்ஸைட், இல்மனைட் கனிமங்களை கொள்ளையடித்து அந்நிய ஏகபோக முதலாளிகளுக்குத் தாரை வார்க்கவும் அதற்கு இடையூராக இருக்கும் காட்டின் மக்களை வனங்களிலிருந்து துரத்தியடிக்கும் துரோணன்களின் யுத்தத்தில் மண்ணின் காவலர்களாக பழங்குடி மக்கள் நிற்கிறார்கள் கட்டைவிரலால் அழுத்திய வில்களோடு. அவர்களுக்காக மாவோயிஸ்ட் தோழர்கள் களத்தில் நிற்கிறார்கள்.

நவீன ரக ஆள்கொல்லி ஆயுதங்கள், ஆளில்லா விமானங்கள், கிளஸ்டர், பாஸ்பரஸ் குண்டுகளை ஏவக் காத்திருக்கும் சிதம்பரத்தின் படைகளை எதிர்த்து வில்லும் அம்பும் ஏந்தி எங்கள் பழங்குடித் தாய் நிற்கிறாள். பின்னே அவளது குழந்தையும் நிற்கிறாள். வில்லேந்தியிருக்கும் அந்தக் கைகளும் அம்பை அழுத்திப் பிடித்திருக்கும் கட்டைவிரலும் யாருடையது? ஏகலைவனை சூதில் வென்ற துரோணனின் வாரிசுகள் நவீன ஆயுதங்களைக் கொண்டு குழந்தைகளின் விரல்களை வெட்டி தீயில் இடுகிறது. மத்திய இந்தியாவின் காடுகளில் இருந்து மூன்று கோடி மக்களை காடுகளை விட்டு அகற்றி விட்டீர்கள். நானூறு மீனவர்களை இராமேஸ்வரத்தில் கொல்லக் கொடுத்திருக்கிறீர்கள். சுமார் இரண்டு லட்சம் விவசாயிகள் விதர்பாவில் தற்கொலை செய்திருக்கிறார்கள். இவர்கள் பற்றி எல்லாம் இந்திய மேட்டுக்குடி மனம் கலங்கியதில்லை. ஆக உங்களுக்கு இந்த மக்கள் மீது துளி அளவேனும் அக்கறை வராத போது அதே அக்கரையை ஆஸ்திரேலியாவில் தாக்கப்படும் மேல் தட்டு இளைஞனுக்காக எம்மிடம் மட்டும் எதிர்பார்ப்பதுதான் ஏனென்று தெரியவில்லை.

ஆஸ்திரேலியா அபாராஜினல்களின் ரத்தம்

 

ஆஸ்திரேலியாவும் ஒரு பழங்குடிகளின் தேசம்தான். அவர்களை வேட்டையாடியே இன்றைய ஆஸ்திரேலியா கட்டி எழுப்பபட்டுள்ளது. இனவிருத்தி கூட தடை செய்யப்பட்டு திருச்சபைகளால் பிடித்துச் செல்லப்பட்ட அபாராஜினல் குழந்தைகளை தேவனின் பிள்ளைகளாக சலவை செய்து கத்தரித்து விடும் கொடூரத்தை பழங்குடிகள் மீது இன்றுவரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது கிறிஸ்தவ திருச்சபை. அபராஜினல்களின் ரத்தத்தில் இருந்து உருவான வெள்ளை தேசத்தில் லட்சம் லட்சமாய் சம்பாதித்து அங்கேயே குடியேறும் கனவுகளோடு சென்றவர்கள்தான் அங்கே உதைவாங்கிக் கொண்டிருக்கும் இந்திய மேட்டுக் குடி இளைஞர்கள்.

வளைகுடாவில் மீன்பிடித்தல், கக்கூஸ் கழுவுதல்,எண்ணெய் கிணறுகளில் வேலை எனப் போன இந்திய அடித்தட்டு வர்க்க ஏழைகள் பற்றி எஸ்.எம்.கிருஷ்ணாக்களுக்கோ, வயலார் ரவிகளுக்கோ என்றாவது அக்கரை இந்ததுண்டா, மலேஷியாவின் கரும்புத் தோட்டங்களில் மட்டையாய் மடிகிற கூலிகள் குறித்தோ, மலையகத்தில் வதைபடும் இந்திய வம்சாவளிகள் குறித்தோ எப்போதாவது இந்த கிருஷ்ணாக்கள் வருந்தியதுண்டா? வன்னிக் கொலைகளின் போது நீங்கள் காத்த அட்ர்ந்த மௌனத்தின் பொருளிலிருந்தே ஆஸ்திரேலியாவில் உதைபடும் உங்களின் வாரிசுகள் குறித்தும் நாங்கள் அக்கறை கொள்ள முடியும்.

பங்கஜ் ஆஸ்வால் ஆஸ்திரேலியாவின் இந்திய முகம்.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் 315 கோடி ரூபாய் செலவில் ஆடம்பர பிரமாண்ட வீடு ஒன்றைக் கட்டிக் கொண்டிருக்கிறார் பங்கஜ் ஆஸ்வால் என்ற இந்தியக் கோடீஸ்வரர். விரைவாக கட்டி முடிக்கும் போது இதுதான் ஆஸ்திரேலியாவிலேயே பெரியதும் பிரமாண்டமானதுமான வீடாகவும் இருக்குமாம். இந்த வீடு கட்டுவதற்காக தொழிலாளர்கள் பல மாதங்களாக இரவு பகலாக உழைத்து வருகின்றனர். பங்கஜ் ஆஸ்வாலும் அவரது மனைவி ராதிகாவும் பார்ப்பனர்கள். வருண தர்மத்தின் படி வாழ்பவர்கள். ஆகவே தங்கள் வீட்டில் கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்கள் எவரும் கட்டிட வேலை நடைபெறும் இடத்திற்குள் அசைவ உணவு வகைகளை எடுத்து வரவோ வேலை நேரத்தில் அசைவ உணவு சாப்பிடவோக் கூடாது என்று தடை விதித்தனர்.

தொழிலதிபர் ஆஸ்வாலும் அவரது மனைவியான ராதிகாவுமே இபப்டியான கட்டுப்பாட்டை கொண்டு வந்திருக்கிறார்கள். இத்தகைய காட்டுமிராண்டித்தனமான கட்டுப்பாட்டிற்கு மேற்கு ஆஸ்திரேலிய கட்டுமான சங்கத்தின் தலைவர் ஜோ மெக்டொனால்ட் கடும் கண்டம் தெரிவித்து தொழிலாளர்களைத் திரட்டி போராட்டம் ஒன்றயும் நடத்தினார். ‘’ ஏனைய மக்களின் மத உணர்வுகளையும் கலாசார பழக்கங்களையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால் இவர்கள் முதலாளிகள் என்பதாலேயே உடலுழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் சைவ உணவை அருந்த வேண்டும் என்று சொல்ல இவர்கள் யார்? “ என்று கேள்வி எழுப்புகிறார் ஜோ. தங்களுக்கு பழக்கமான உணவை இன்னொரு உணவுப் பழக்கம் உள்ள மக்கள் மீது திணிக்கிற இந்திய, இந்து மனநிலையை அவர் கண்டித்திருக்கிறார்.

இப்போது பிரமாண்டமான பங்கஜ் ஆஸ்வாலின் வீட்டில் திமிரான அந்த பணக்கார இளம் ஜோடிகள் குடியேறி வாழத் துவங்கிவிட்டனர். இப்போது சொல்லுங்கள் இந்த வீட்டைத் தாக்கி கொள்ளை அடிப்பது நியாயமா? அல்லது கொள்ளையடிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுதான் நியாயமா?

உள்ளூரில் தன்னை விடக் கருப்பாக இருக்கிற சூத்திரசாதி மக்களைப் பார்த்து ஏளனம் செய்கிற வெள்ளைத் தோல் இந்திய மனம் கடல் தாண்டிச் செல்லும் போது தன்னை விட வெள்ளையாக இருக்கிற இன்னொருவனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இவர்கள் ஆஸ்திரேலியாவை ஒரு இந்தியாவாக மாற்ற முனைகிறார்கள். அங்குள்ள கலாசாரத்தோடு ஒன்றூ கலந்து வாழ்வதை ஈன கலாசாராமாக கருதும் சைவ, பார்ப்பன மனம். அங்குள்ள ஏழை தொழிலாளிகளைச் சுரண்டுவதோடு அவர்களின் கலாசாரத்தையும் இவர்கள் கட்டுப்படுத்துகிறார்கள்.

அவர்கள் உதைத்து இவர்களிடன் கொள்ளையடித்து தங்களிடம் இல்லாத ஒன்றை எடுத்துக் கொள்ளும் போது அய்யோ……இனவெறி இனவெறி என்று கூச்சல் போடுகிறார்கள்.
இதை எழுதி முடிக்கும் போது காஷ்மீரில் நிலைகளைப் பாருங்கள். கடந்த மூன்று வாரங்களில் மட்டும் பதினைந்திற்கும் மேற்பட்ட ஆர்ப்பட்டக்கரார்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பள்ளத்தாக்கு முழுக்க மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளார்கள்.

 

கடந்த பதினைந்து நாட்களாக எந்த செல்பேசிகளும் வேலைசெய்யவில்லை. மேலதிக இராணுவத்தை கொண்டு போய் காஷ்மீரில் கொட்டுகிற இந்தியா அங்கே இராணுவ நடவடிக்கை மக்களுடன் இல்லை என்று பொய் சொல்கிறது. ஆனால் விழுகிற பிணங்களை எடுத்து ஊர்வலம் செல்கிறவர்களை மீண்டும் மீண்டும் சுட்டுக் கொல்கிறது. மேலதிக படைகளை அனுப்புங்கள் என்று கூச்சலிடுகிறது இந்திய மனம். படைகளை அனுப்பாதே என்று கூச்சல் போட்டோம் நாம்………இந்திய மேல் மத்திய தர வர்க்க ஆங்கிலக் கனவான்களின் மனநிலைதான். இந்தியாவை ஆள்வோரின் மனநிலையை விட ஆபத்தானதாக இருக்கிறது. படித்தவர்கள் அல்லவா அப்படித்தான் இருப்பார்கள்.

Exit mobile version