Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழக்கிறார்களா?

டெல்லியில் நிலவும்  கடுங்குளிர் விவ்சாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் என மோடி அரசு எதிர்பார்த்தது.கடும் பனியும் குளிர்காலமும் இரண்டாம் உலகப் போரில் முக்கிய துருப்பாக இருந்தது. உலகிலேயே அதைச் சரியாக கணித்து ரஷ்ய படைகள் முன்னேறியதால்தான் பாசிசம் வீழ்த்தப்பட்டது. இதோ கொடிய குளிர்காலத்தை உயிர்த்தியாகத்தோடு  விவசாயிகள் கடந்து விட்டார்கள். இனி குளிர் குறையத் துவங்கி விடும்.

மோடி அரசு இதுவரை தோற்று விட்டது. பொங்கல் முடிந்தால் குளிர் குறையும் மேலும் விவசாயிகள் டெல்லிக்கு வருவார்கள். அதற்குள் போராட்டத்தை முடிக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவை இப்படித்தான் விவசாயிகள் பார்க்கிறார்கள்.மேலும், நீதிமன்ற உத்தரவை விவசாயிகள்,பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே சந்தேகத்தோடு பார்க்கிறார்கள்.

இப்படி ஒரு சந்தேகம் எழ முழு காரணமும் நீதிமன்றம் தான். கடந்த காலங்களில் சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் நம்பிக்கைகளையும் அந்த அளவு பெற்றிருக்கிறார்கள்.விவசாயிகளிடம் நம்பிக்கையளிக்கும் விஷயமாக அவர்கள் கருதுவது போராட்டத்தை மட்டும்தான். நீதித்துறை இழந்து போன  தன் நம்பிக்கைகளை மீட்டுக் கொள்ள வேண்டும்.இது நீதித்துறை மீதான விமர்சனம் அல்ல நாட்டில் உள்ள பொது மக்களின் மன நிலை இதுவே. மக்கள் வங்கிகள்,ரூபாய் நோட்டுகள்,தனியார் நிறுவனங்கள் மீது  எப்படி நம்பிக்கையிழந்திருக்கிறார்களோ அப்படித்தான் இந்த விஷயமும் இதை சுட்டிக்காட்டுவதில் தவறொன்றும் இல்லை.

விவசாய சட்டங்களுக்கு எதிராக பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் அனைத்துமே  விவசாயச் சட்டங்கள்  தொடர்பானதுதானே தவிற விவசாயிகளின் போராட்டம் தொடர்பானது அல்ல, மிகக் குறிப்பிட்டுச் சொன்னால் விவசாயச் சட்டங்கள் முறைகேடான வழிகளில் அமலாக்கப்பட்டுள்ளன என்றும், இந்தச் சட்டங்கள் வேளாண்மையை அழித்துவிடும் என்றும் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், உச்சநீதிமன்றம்  விவசாயிகளுடன் பேச ஐவர் குழுவை அறிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளுக்கும் அது வழங்கியிருக்கும் உத்தரவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.  விவசாயிகள் நீதிமன்றத்திற்குச் செல்லவே இல்லை. அவர்கள் அரசோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள். துவக்கத்தில் தலையிட மறுத்த நீதிமன்றம் இப்போது எதன் பேரில் வலுக்கட்டாயமாக  உத்தரவை பிறப்பித்தது என விவசாயிகள் கேட்கிறார்கள். உச்சநீதிமன்றம் நியமித்த ஐவர் குழுவோடு பேச வேண்டிய அவசியமே இல்லை என்றும் அறிவித்து விட்டார்கள்.

பேச்சுவார்த்தை மேஜையில் பலத்தோடு இருக்கும் விவசாயிகளை பலவீனமாக்கி  போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதே உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என விவசாயிகள் சந்தேகிக்கிறார்கள்.காரணம் உச்சநீதிமன்றம் நியமித்துள்ள ஐந்து பேரும் விவசாயச் சட்டங்களை ஆதரித்து தொடர்ந்து எழுதியவர்கள். அவர்களிடம் என்ன நீதியை எதிர்பார்க்க முடியும் எனக் கேட்கிறார்கள்.

இந்திய நீதித்துறை கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.   சில ஆண்டுகளுக்கு முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் வெளிப்படையாக பத்திரிகையாளர்களைச் சந்தித்து  உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள். மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் செயல்படுகிறதோ என அவர்கள் வெளிப்படையாகவே சொன்னார்கள். அந்த சந்தேகங்கள் அடுத்தடுத்த அதன் தீர்ப்புகளில் உறுதியாகிறதோ என்ற சந்தேகம் மக்களிடம் உள்ளது.

பாஜக அரசுக்கு தேவையான வழக்குகளில் சாதகமான தீர்ப்புகளையும், மக்களை பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகளிலும் அரசுக்கு ஆதரவாகவுமே உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

Exit mobile version