மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகரும் பொருளாதார ஆதிக்கம், மேற்கு அதிகாரத்தால் தவிர்க்க முடியாத, புதிய பொருளாதாரச் சுற்றை ஆரம்பித்து வைத்திருக்கிறது. 1949 இல் உறுதியான பொருளாதாரச் சுற்று, 1970 களில் நெருக்கடிக்குள்ளான போது மறுபடி ஒழுங்கமைக்கப்பட்டது. பிரித்தானியப் பிரதமர் மாகிரட் தட்சர் மற்றும் அமரிக்க அதிபர் ரொனாட்ல் ரீகன் ஆகியோரது தலைமையில் உருவான இவ்வமைப்பு முறையானது புதிய தாராளவாதப் பொருளாதரக் கொள்கையை உருவாக்கியது.
இதன் வளர்ச்சிக் கட்டமான உலகமயமாதல் என்ற ஒழுங்கமைப்பு இன்று தவிர்க்க முடியாத அமைப்பியல் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது.
ஒவ்வொரு தடவையும் உலகம் புதிதாக ஒழுங்கமைக்கப்படும் போது, அதன் முதற் பகுதியானது, படுகொலைகளும், ஆக்கிரமிபுக்களும், அவலங்களும், அசிங்கங்களும் நிறைந்ததாகவே காணப்பட்டது.
இந்தச் சர்வதேச மாற்றங்களுக்கு முதல் பலிதான் 50 ஆயிரம் அப்பாவிப் பொதுமக்கள். அதிகாரத்திற்கும் ஏகத்துவத்திற்கும் எதிரான எந்த எதிர்ப்பியக்கமும் இந்த சர்வதேச மாற்றத்தின் புதிய அணிசேர்க்கைகளை நிராகரித்து வெற்றிகொள்ள முடியாது.
அமரிக்க அணியின் தலைமையிலான ஏகாதிபத்தியம் என்பது இன்றைக்குப் பல துருவ பிராந்திய ஏகத்துவப் பரவல்களாக விரிவடைந்து கொண்டிருக்க, புதிய அரசியற் சூழலை நோக்கி உலகம் நகர்த்தப் பட்டுக்கொண்டிருக்கிறது.
ஆசியாவின் புதிய அதிகாரங்கள், ரஷ்யாவின் மறு உருவாக்கம், அமரிக்க அணியின் பொருளாதாரச் சரிவு, இலத்தீன் அமரிக்காவின் மேற்குல எதிர்ப்பியல், மத்திய கிழக்கின் புதிய அணி சேர்க்கை என்பவையெல்லாம் இப்புதிய உலக ஒழுங்கு விதியின் பிரதான அரசியற் பொருளாதாரக் கூறுகள்.
மேலெழுந்துள்ள சீனா, இந்தியா போன்ற நாடுகளின் சர்வதேச சக்திகளானது 20ம் நூற்றாண்டில் அமரிக்காவின் சக்திக்கும், 19ம் நூற்றாண்டின் ஒருங்கிணைந்த ஜேர்மனியின் சக்திகும் இணையானதாக உருவாகிக் கொண்டிருக்கிறது என்று கூறும் அமரிக்க தேசிய உளவுத் துறையின் அறிக்கையானது, இந்தப் புதிய சர்வதேச சக்திகள், கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக நிலவிவந்த புவிசார் அரசியலின் தன்மையை மாற்றத்திற்குள்ளாகிவிடும் என்கிறது.
டெல்லிப் பல்கலைக் கழகத்தில் ஷிவ் சங்கர் மேனன் நிகழ்த்திய உரையில் 90 கள் வரையிலான இந்திய வெளியுறவுத் துறையின் கொள்கை மாற்றமடைந்துள்ளது என்கிறார்.
இந்தியா தனது எல்லைக்குள்ளேயே தனது தேவைக்கும் அதிகமான சந்தை வளத்தைக் கொண்டுள்ள ஒரே நாடு. தனது எல்லைக்குள்ளேயே தனது தேவைக்கும் அதிகமான கனிம வளங்களையும், உழைப்புச் சக்தியையும் கொண்டுள்ள நாடு. உலக முதலாளித்துவத்திற்கு இந்தியாவின் சக்தி இன்று வரலாறு காணாத சேவையாற்றிக்கொண்டிருக்கின்றது.
அமரிக்காவும் ஐரோப்பாவும் தனது அதிகார பலத்தின் ஒரு பகுதியை இழந்தாலும், இவ்வொழுங்கமைப்பில் தம்மை இணைத்துக் கொள்வதே தம்மைத் தக்க வைத்துக்கொள்வதற்கான ஒரே வழிமுறை என உணர்ந்து கொண்டுள்ளன.
இப்போது உலகம் முழுவதும் நடைபெறும் அரசியல் பனிப்போர் என்பதெல்லாம் யார் உலக முதலாளித்துவத்திற்கு தலைமைப் பாத்திரம் வகிப்பது என்பது தான். இங்கு தான் துருவ வல்லரசுகளும் அதன் ஆதிக்கமும் மேற்கின் ஏக போகத்திற்குப் போட்டியாக உருவாகின்றது.
இந்தப் பனிப்போரில் பலியாகும் முதல் பிரதேசம் தீபெத். தெற்காசியாவில் இதன் முதல் பலி இலங்கை என்ற அழகிய தீவு. அங்கு தான் 50 ஆயிரம் அப்பாவிப் பொதுமக்கள் சில நாள் எல்லைக்குள் அனைத்துலக ஆசியுடன் இந்திய இலங்கை அரசுகளால் பலியெடுக்கப்பட்டனர். இந்திய அரசு ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து அனைத்து நாடுகளின் ஆதிக்கத்திற்கு எதிராகவும் இலங்கை அரசைப் பாதுகாப்பதற்காகப் போராடியது.
இறுதியில் இலங்கையில் இந்தியா, அதன் முழுமையான அரசியல் பொருளாதார ஆதிக்கதிற்கு உட்பட்ட பொம்மை அரசை உருவாக்கிவிட்டது. மேற்குலக அதிகாரத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட சரத் பொன்சேகா குழு இந்திய அதிகாரத்தின் முன் தோற்றுப்போனது.
உலக முதலாளித்துவத்தின் தென் ஆசியத் தலைமையைக் கோருகின்ற இந்திய அரசு இப்பிரதேசத்தில் மேற்கின் அதிகார உள்ளீட்டிற்கு எதிராக சீனாவுடன் கூடக் கைகோர்த்துக் கொள்ளத் தயாராயிருக்கிறது என்பதை இலங்கையில் இந்திய அதிகாரம் நிகழ்த்திய இனப்படுகொலை தெளிவுபடுத்துகின்றது.
“புதிய வல்லரசுகளாக சீனாவும் இந்தியாவும் உருவாதல் என்பது தவிர்க்கமுடியாத மறுதலையான உறுதியெனினும், சர்வதேச அளவில் அமைந்திருக்கும் எனைய வல்லரசுகளுடன் போட்டி போட்டியாகவா, அல்லது ஒத்துழைப்புடனா தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்ளும் என்பது முற்றிலும் நிச்சயமற்றதாகவே உள்ளது” என்கிறது அமரிக்க தேசிய உளவுத்துறை ஆலோசனை மையம்.
தெற்காசியாவின் சர்வதேச அரசியல் தளம் மூன்று முக்கிய காரணிகளை உள்ளடகியது.
1. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு.
2. ஆசிய தேசிய அரசுகளிற்கெதிரான எதிர்ப்பியக்கங்கள்.
3. துருவ வல்லரசுகளின் பிராந்திய அரசியல் முரண்பாடுகள்.
இந்த வேளையில் நாம் இந்தியாவைத் திருப்திப்படுத என்ன செய்யவேண்டும் என்ற கோமாளித் தனமான ஆய்வுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறனர், அழிந்து போன தமிழ்ப் பேசும் மக்களின் உள்ளிருக்கும் அரசியல் வியாபாரிகள். அப்பாவி மக்கள் துடிக்கத் துடிக்க சாரிசாரியாகக் கொல்லப்பட்ட போதெல்லாம் அக்கொலைகளில் பங்களித்த இந்தியாவின் நோக்கம் தமிழ் மக்களின் நலன்கள் அல்ல. தெற்காசியாவில் அதன் அதிகாரம் மட்டுமே. அதுவும் விரவிட்டெண்ணக் கூடிய இந்தியப் பெருமுதலாளிகளின் அதிகாரத்திற்காகவே இரத்த ஆறு ஓடியது.
இந்தியா அதன் எந்த அரசியல் நிலையிலும் தமிழ்ப் பேசும் மக்களின் நட்பு சக்தியாக இருந்ததில்லை.
80 களில் தமிழ் தேசிய இயக்கங்களுக்ளுக்கு இரணுவப் பயிற்சியும் நிதி உதவியும் வழங்கிய இந்தியா, மூன்று பிரதான நோக்கங்களைக் கொண்டிருந்தது.
1. இலங்கையின் உள் நாட்டு அரசியலைக் கொந்தளிப்பு நிலையில் பேணுவதனூடாக தனது தலையீடுகளை மேற்கொள்வது.
2. இலங்கையில் உருவாகவல்ல புரட்சிகர அமைப்புக்களை சீர்குலைப்பது.
3. தமிழ் நாட்டிலுள்ள முற்போக்குப் போராட்ட அமைப்புக்களுடனான அவர்களின் ஒருங்கிணைவைத் தடுப்பது.
இந்த நோக்கங்களை 90 களின் ஆரம்பம் வரை வெற்றிகரமாக நிறைவேற்றிய இந்திய அரசு, அதன் பின்னரான உலக அரசியல் மாற்றங்களில் இசைவாக்கத்தினூடாக புதிய மாற்றங்களையும் அணுகுமுறைகளையும் அறிமுகப்படுத்திற்று.
மேற்கின் அதிகாரத்தின் ஆளுமை சரிவடைய ஆரம்பித்ததும், உலக முதலாளித்துவத்தில் இந்தியாவின் பங்கு அதிகரித்ததும் இந்தியாவின் தெற்காசிய அரசியல் நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்திற்று. இலங்கை அரசை அதன் அதிகார எல்லைக்குள் கொண்டுவருவதில் வெற்றிகண்ட இந்தியா, முன்னயதிலிருந்து வேறுபட்ட அணுகு முறையை கையள ஆரம்பித்தது.
அப்பாவி மக்களை அழித்து தமிழ் பேசும் மக்களின் உரிமைக்கான எதிர்ப்பியக்கத்தை முற்றாக நிர்மூலமாக்கிய இந்திய அரசு, இலங்கையை தனது முழுமையன அதிகார எல்லைக்குள் கொண்டுவந்துள்ளது.
இந்த அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்:
1. தமிழ்ப்பேசும் மக்கள் மத்தியில் சாத்தியமான புதிய எதிர்ப்பியக்கங்களின் உருவாக்கம்.
2. மேற்கின் அதிகார மீட்சி.
3. சிங்கள மக்கள் மத்தியிலிருந்து உருவாகவல்ல எதிர்ப்பியக்கங்கள்.
மேற்குல ஆளுமைக்கு எதிரான ராஜபக்ச அரசு தென்பகுதியில் இந்த நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள இந்திய அரசிற்குக்
இவை மூன்று முக்கிய தளங்களில் முன்னெடுக்கப்படுகின்றன.
1. தமிழ்ப் பிரதேசங்களில் உரிமைக்கெதிராக இந்திய மூலதனத்தின் அபிவிருத்தியை முன்வைத்தல்.
2. எதிர்ப்பரசியலை இந்திய ஆதரவு சக்திகளூடாக முன்வைத்துச் சீர்குலைத்தல்.
3. இலங்கை அரச ஆதிக்கத்தை அதன் துணை இராணுவ அரசியல் குழுக்களூடாக வலுபெறச் செய்தல்.
இந்த வகையில் இந்திய ஆதரவுக் குழுவாக தமிழ்ப் பேசும் மக்களின் எதிர்ப்பியக்கங்களை சிதைக்கும் பிரதான சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகியுள்ளது. இந்திய உளவுத்துறையின் சிலந்தி வலைக்குள் டெல்லியில் அலுவலகத்தை அமைத்துக் கொண்ட இந்த அமைப்பு இன்னொரு பேரழிவிற்கான அபாயக் குரல்.
மிக நீண்ட ஆழமான நிகழ்ச்சி நிரலைக் கொண்டு செயலாற்றும் இந்திய வல்லரசு அதிகாரத்தை எவ்வறு ஒடுக்கப்படும் இந்திய ஆதிவாசிகள் திருப்திப்படுத்த இயலாதோ அப்படியே தமிழ் மக்களும் திருப்திப்படுத்த முடியாது. ஒடுக்கப்படும் இந்திய மக்களின் நலன்களும் இலங்கையில் ஒடுக்கப்படும் மக்களின் நலன்களும் மட்டுமே ஒன்று சேர முடியும். இந்த இலகுவான உண்மையைப் புரிந்து கொள்ளத் தவறும் பட்சத்தில் இன்னொரு இனப்படுகொலைகூட சத்தமின்றி நிகழ்த்தப்படலாம்.
மக்கள் அரசியலுக்கு எதிராக ஒற்றுமை என்ற சுலோகத்தை முன்வைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை இந்திய ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கானது. இதன் அழிவரசியல் இனங்காணப்படவேண்டியது அழிவுகளின் அவலத்தில் வாழும் ஒரு மக்கள் கூட்டத்தின் அவசியக் கடமை.
ஒடுக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்களின் எதிர்ப்பரசியல் மறுபடி ஒரு முறை தவறான குறுந்தேசிய வாதிகளின் ஆதிக்க நலனின் பிடிகளில் இறுகிவிடாமல் இருப்பதற்கான போராட்டம் இன்று முதன்மையானது.
தவிர, மேற்கின் அரசியல் குரலாக ஒலிக்கும் கஜேந்திரன் பொன்னம்பலம், சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக் கட்சி போன்ற அனைத்து மக்கள் விரோத சக்திகளும் நிராகரிக்கப்பட வேண்டும். தெற்காசியப் பிராந்தியத்தில் இந்திய,ஐரோப்பிய,அமரிக்க அதிகார மையங்களின் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடும் மக்கள் பிரிவுகளோடு ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் சிறுபான்மையும் இணைந்து கொள்ளும்போது மட்டும் தான் எமது குரல்கள் ஓங்கி ஒலிக்கும்.
கார்டூன் : தோழர் முகிலன்