Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியா அமெரிக்காவின் ஏவல் நாயாகச் செயற்படுகிறது!:ஸ்ரீ

  
  
  
  ( இக் கட்டுரை தென்னாசியப் பிராந்தியத்தில் இந்திய நடத்தையை ஆராய்கிறது.)
  
 
 இந்தியா அமெரிக்கா ஏவல் நாயாகச் செயற்படுகிறது என்பதற்கு பல உதாரணங்கள் காட்டப்படுகின்றன. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் சேர்ந்து வாக்களித்தமை, இலங்கை அரசின் யுத்தத்திற்கு ஆயுதம் வழங்குவதுடன் 256 இந்தியத் தொழில்நுட்ப ஊழியர்களை இலங்கையில் நிலை கொண்டுள்ளமை, சார்க் மாநாட்டின் போது முப்படைகளும் இலங்கையைத் தனது பிடிக்குள் வைத்திருந்தமை என்பன இந்தியா இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்க நலனுக்கு இசைவாக செயற்படுவதை அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது.
 
இந்தியா ஆப்கானிஸ்தானில் எவ்வாறு செயற்படுகிற என்பதைக் கவனித்தால் இந்தியா இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்க நலனுக்கு ஏற்றால் போல செயற்படுவதற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளதைக் காணலாம்.
சில மாதங்களுக்கு முன் ஆப்கான் தலைநகரான காபூலில் இந்திய தூதரகம் தாக்குதலுக்கு உள்ளானது. 2001ம் ஆண்டு தலிபான்கள் வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் படிப்படியாக இந்தியா காலூன்றியது. 1979ம் ஆண்டு மூடப்பட்ட இரண்டு கொன்சுலர் காரியாலங்களை கேரத்திலும் மசார் ஈ-சரிப்பிலும் மீண்டும் ஆரம்பித்தது. அது மட்டுமல்ல. பாக்கிஸ்தானில் எல்லையோரமாக கந்தஹார், ஜலாலபாத் ஆகிய இடங்களில் மேலும் இரண்டு கொன்சுலர் காரியாலங்களை திறந்தது.அதுமட்டுமல்ல. சின்னாபின்னமாகவுள்ள ஆப்கானின் உட்கட்டமைப்பை மீளக் கட்டுவதற்கென 75 கோடி டொலர்களை கொடுப்பதற்கு உடன்பட்டுள்ளது.
 
வடபகுதியில் மின்கம்பங்களை நாட்டி மின் கம்பிகளை பொருத்துகின்றனர். 200 கி.மீ. சாலைகளை ஏற்படுத்துவதுடன், ஆறு மாகாணங்களில் குழாய்க் கிணறுகள் தோன்டுகிறார்கள். 100 கிராமங்களுக்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் வழங்கவும், இவற்றையெல்லாம் விட ஆப்கானிஸ்தானின் பாராளுமன்ற கட்டடத்தையும் கட்டுகிறார்கள். பெரும் சிக்கலில் உள்ள ஆப்கானிஸ்தானின் விமான சேவைக்காக குறைந்தது 3 ஏயார் பஸ் விமானங்களை கொடுத்துள்ளது இந்தியா. இது மட்டுமல்ல ஆப்கானிஸ்தானின் கட்டுமானப் பணிக்கென ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அந்த நாட்டில் நிலை கொண்டுள்ளனர்.
 
இந்தப் பிராந்தியம் தொடர்பாக விரிவாக எழுதிவரும் ஆய்வாளர் அகமெட் ராசித் கூறுகிறார்:-
“ஆப்கான் சமூகத்தின் ஒவ்வொரு துறையையும் வெற்றி கொள்ளும் நோக்கிலேயே இந்தியாவின் மீள் கட்டுமானப்பணி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஆப்கான் மக்களிடையே இந்தியா பற்றிய ஒரு பெரிய மதிப்பை ஏற்படுத்தும் நோக்குடன் பாக்கிஸ்தானின் செல்வாக்கை மட்டந்தட்டி ஆகக்கூடிய அரசியல் இலாபம் பெறும் நோக்குடையது”.
 
இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் பெரும் அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. 2006, 2007 ஆண்டில் இருபத்திரண்டரை கோடி டொலர்களை எட்டியுள்ளது. ஆப்கானிஸ்தானுடன் நேரடியாக வர்த்தகத்தில் ஈடுபட முடியாத நிலையில் பாக்கிஸ்தானிய நிலப்பரப்பு ஊடாக ஈரானிய துறைமுகமான சாபகார் சென்றடைய ஒரு புதிய சாலையைக் கட்டுவதற்கு இரகசியமாக நிதி உதவியுள்ளது. இந்தப் புதிய பாதை ஈரானிய துறைமுகங்களுக்கான தூரத்தைக் குறைத்துவிடும்.
 
“தலிபான் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின் ஆப்கானிஸ்தானில் இந்தியச் செல்வாக்கு கூடி வருவதை பாக்கிஸ்தான் அவதானித்த வண்ணம் உள்ளது. ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் அக்கறை மிகத் தெளிவானது. பாக்கிஸ்தானை சங்கடத்துக்குள்ளாவது தான் அதன் நோக்கம். ஜலாலபாட், கண்டகார் ஆகிய இடங்களில் இந்தியாவின் கொன்சுலர் பிரிவுகள் என்ன தேவைக்காக திறக்கப்பட்டன. இது பாக்கிஸ்தானை அச்சுறுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டன” என முன்னாள் ஜனாதிபதி முசாரப் தெரிவித்திருந்தார்.
 
இந்த இரண்டு கொன்சுலர் பிரிவுகள் மூலம் பாக்கிஸ்தானின் பலூச்சில்தான் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களையும் பணத்தையும் அனுப்பி வருகின்றது.ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் அதிகரிக்கும் செயற்பாடுகளின் விளைவே காபூலில் இந்திய தூதரகம் தாக்கப்பட்டதற்கான காரணம். இலங்கையில் எந்தவொரு சம்பவம் நிகழ்ந்தாலும் தமிழர்கள் கைது செய்யப்படுவதைப் போல இந்தியாவில் எந்தவொரு சம்பவம் நிகழ்ந்தாலும் அது பாக்கிஸ்தானிய உளவாளிகளின் வேலை என்று கூறி முஸ்லிம்களைக் கைது செய்வது வழக்கம்.
 
முன்பெல்லாம் தலிபான்கள் இந்தியப் பிரஜைகளைத் தாக்கியும் கடத்தியும் வந்தனர். இந்திய பிரஜைகளுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. ஹேரத், ஜலாலபாத் ஆகிய கொன்சுலர் பிரிவுகள் மீது வெடிச் சம்பவங்களும், கிரனைட் தாக்குதல்களும் இடம்பெற்று இருக்கின்றன. எவ்வாறாயினும் காபூல் தாக்குதலே மிகப்பெரிய தாக்குதல் ஆகும்.
 
இந்தியாவிற்கு ஆப்கானிஸ்தான் சுதந்திர நாடாக இருக்க வேண்டும் என்ற அக்கறை கிடையாது. 1979இல் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை தாக்கிய போது அதனை இந்தியா ஆதரித்தது. இது ஆப்கான் மக்களிடையே இந்தியா மீது வெறுப்பை ஏற்படுத்தியது. தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியபோது ஆப்கானிஸ்தானில் இந்தியச் செல்வாக்கு இல்லாது போனது. தற்போது மீண்டும் இந்தியா ஆப்கானிஸ்தானில் தனது கைங்கரியங்களில் படிப்படியாக ஈடுபட்டு வருகிறது.
 
ஆப்கானிஸ்தானில் முழு அளவில் மூக்கை நுழைத்துள்ள இந்தியா அங்கு வேலை செய்யும் இந்தியர்களைப் பாதுகாப்பது என்ற பெயரில் ஆயுதப் படையினரையும் அமர்த்தியுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தைப் படிப்படியாக தனது கைக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கும் இந்தியா ஆப்கானிஸ்தானைப் போல இலங்கையிலும் அதன் கைவரிசையை மென்மேலும் காட்டத்தான் போகிறது.

Exit mobile version