Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியாவின் வல்லரசுக் கனவில் மிதிபடும் வடக்கு கிழக்கு தமிழர்களின் வாழ்வு : விஜய்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் இலங்கை வருகையையொட்டி பல்வேறு கதைகள் கட்டுவிக்கப்பட்டன.

தமிழத் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்க் கட்சிகளின் அரங்கம் என்பன இந்திய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்து தமிழர் விவகாரம் குறித்துப் பேசப்போவதாக அறிக்கைகளை வெளியிட்டன. இதற்கிடையில் தமிழக முதலமைச்சரும் ‘தமிழர் துயர் துடைக்குமாறு’ தனது வேண்டுகோளையும் விடுத்திருந்தார்.
இந்தப் பின்னணியில் இலங்கை இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்வுடன் பேசுவார் என்ற ஒரு வெகுசன அபிப்பிரயாம் உருவாக்கப்பட்டது.

இந்திய இலங்கை அரசுகள் தமிழ் நாடு அரச கூட்டு ஏற்பாட்டுடன் திட்டமிட்டு உருவாக்கிய கிருஷ்ணாவின் விஜயம் குறித்த இந்த விம்பம் பல நோக்கங்களைக் உள்ளடக்கியது.

1. தமிழ் நாட்டில் ஏற்பட்டுவரும் அரசுக்கு எதிரான உணர்வுகளை கையாள்தல்.
2. புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் உருவாகும் இந்திய எதிர்ப்புணர்வை எதிர்கொள்ளல்.
3. ஈழத் தமிழர்களைத் தனிமைப்படுத்தல்

என்பன பிரதான நோக்கங்களாகக் கருதப்படுகின்றன.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கை வந்தார். ஜனாதிபதியையும் சந்தித்து கலந்துரையாடினார். இலங்கை – இந்திய கூட்டு ஆணைக்குழுவின் 7 வது சந்திப்புக் கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

இலங்கை – இந்திய கூட்டு ஆணைக்குழுவின் 7 வது சந்திப்புக் கூட்டம் முடிவடைந்த பின் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ_ம் இந்திய வெளிவவிகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் இணைந்து பங்கேற்ற செய்தியாளர் மாநாடு நடைபெற்றது.

இச் செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த கிருஷ்ணா, இலங்கையில் மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்குரிய அரிய சந்தர்ப்பம் இலங்கை அரசுக்கு கிடைத்திருக்கிறது. பரஸ்பர புரிந்துணர்வுடன் கூடிய தீர்வினை பெற்றுக் கொள்ள அரசு செயற்படுமென இந்தியா நம்புகின்றதென தெரிவித்தார். அத்துடன் இந்த விடயத்தை நிறைவேற்றுவதற்கு கட்டமைப்பு ரீதியான பேச்சுவார்த்தை பொறிமுறையானது விரைவில் ஆரம்பிக்கப்படும் என்பது எமது நம்பிக்கையாகும் எனவும் அர்த்த புஷ்டியான அதிகாரத் தீர்வுப் பொதியானது இலங்கையில் இறுதியானதும் நிலையானதுமான சமாதானத்தை உருவாக்க உதவுமென்றும் அந்தப் பேச்சு வார்த்தைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.

தவிர,”போரால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதும் மற்றும் மனிதாபிமான பிரச்சினைகளைத் தீர்ப்பதையுமே இலங்கை அரசு முக்கியமானதாகக் கருதுவதாகவும் குறிப்பிடுகிறார்”.

முன்னெப்போதையும் விட மிகவும் அருவருக்கத்தக்க வகையில், ராஜபக்ச அரசும் அதன் கைக்கூலிகளும் இனச்சுத்திகரிப்பை மிகவும் வெளிப்படையாகவே நடத்திவரும் நிலையில், அவர்களின் நடவடிக்கைகளு அங்கீகாரம் வழங்கும் வகையில் எஸ்.எம்.கிருஷ்ணா கருத்துவெளியிட்டிருக்கிறார்.

வழங்கப்பட்ட அங்கீகாரத்தைத் தவிர்த்து ஏனையவற்றை அலசினால், கிருஷ்ணாவின் இந்தப் பேச்சு இன்று நேற்றல்ல மிக நீண்டகாலமாகப் பேசப்பட்டு வருகிற ஒரு சம்பிரதாய பூர்வமான பேச்சு. யுத்தம் முடிவடைந்த காலத்தில் இதனைவிட அர்த்த புஷ்டியாகவும் இந்திய அரசப் பிரதிநிதிகள் பேசியிருக்கிறார்கள். யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் எனவும் பேசியிருக்கிறார்கள்.
உண்மையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப்பட வேண்டும் என்ற இந்திய அரசாங்கத்தின் பெருவிருப்பினை நாம் வன்னி யுத்தத்தின் போதும் அதன் பின்னரான சம்பவங்களின் போதும் நன்கு அறிந்திருக்கிறோம். கருணாநிதியின் யுத்த நிறுத்த நாடகம் பற்றியும் நாம் அறிந்திருக்கிறோம். அனுபவித்தும் இருக்கிறோம்.

இது ஒருபுறமிருக்க தமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து கிருஷ்ணாவுடன் இணைந்து கலந்து கொண்ட செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த பீரிஸ், சிறுபாண்மைத் தமிழருக்காக தீர்வுப் பொதியானது இலங்கையின் ராடரிலிருந்து விலகியிருக்கவில்லை எனக்கூறியிருப்பதுடன், மக்களின் மீள்குடியேற்றம், விவசாயம், நீர் போன்ற அடிப்படை மனிதாபிமானப் பிரச்சினைகளை முதலில் தீர்க்க வேண்டியுள்ளது. ஆயினும் அரசியல் தீர்வு குறித்த பேச்சுக்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. அண்மையில் தமிழ்க் கூட்டமைப்பினருடன் ஜனாதிபதி இது குறித்த பேச்சுக்களில் ஈடுபட்டார். அத்துடன் ஏனைய தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் பேச்சுகள் நடத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருக்கிறார்.

பீரிஸ் கூறியது போன்று ‘அரசியல் தீர்வு குறித்த பேச்சுக்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது” என்பது நாமறிந்தவரைக்கும் முழுப்பொய் என்பதை அறிவோம். த.தே.கூ. ஜனாதிபதி சந்திப்பு எவ்வாறு நடைபெற்றது என்பதையும் என்ன பேசப்படுகிறது என்பதனையும் த.தே.கூட்டமைப்பினரே பெரும் மனக்குறைபாட்டுடன் தொடர்ச்சியாக தமது கவலையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

‘ஏனைய தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுடனுமான” சந்திப்பு 26.1.1.2010 இல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் பீரிஸ் கூறியவாறு ‘பேச்சுக்கள”ஆக அது அமையவில்லை. 26.1.1.2010 இல் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதியைச் சந்தித்து சில கோரிக்கைகளை முன்வைத்தன. அக்கோரிக்கைகளில் முக்கியமானவற்றை எல்லாம் ஜனாதிபதி சாத்தியப்படாது என மறுத்துவிட்டார். இந்தச் சந்திப்பைத்ததான் பீரிஸ் ‘ஏனைய தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் பேச்சுகள் நடத்தப்பட்டுள்ளது” எனப்புருடா விட்டிருக்கிறார்.

இந்த புருடா விவகாரங்கள், இராஜதந்திர வல்லுணர்களான இந்திய வெளிவிகார அமைச்சர் போன்றவர்களுக்குத் தெரியாதா? என்ற வினா ஒன்று எழலாம்.

இந்திய அரசாங்கப் பிரதிநிதிகளின் கவலைக்குரிய விடயங்கள் வேறு. இந்தியாவில் மற்றும் அண்டை நாடுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அழிவுகளின் மேல், இந்திய வல்லரசு ஒன்றை உருவாக்கும் முதலாளித்துவக் கனவில் அவர்கள் மிதந்து திரிகிறார்கள். அது மட்டுமே அவர்களுடைய கவனிப்பிற்குரிய விடயம். இதனைப் பிரிஸ_ம் கிருஷ்ணாவும் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள்.

இலங்கையை அடிமைப்படுத்துவதற்காக மில்லியன்களை இந்திய அரசு உதவி என்ற பெயரில் வழங்கியிருக்கிறது. சொந்த நிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்கள், மர நிழலில் வாழ்ந்து மடிகின்ற அவலமான சூழலில் அவை குறித்து மூச்சுக்கூட விடாத இந்திய அரசு இனச்சுத்திகரிபில் ஈடுபடும் மக்கள் விரோத அரசிற்கு மில்லியன்களை வழங்கியுள்ளது.

சீனாவின் உள்ளீட்டிற்கு எதிராக இந்திய அரசைத் தாஜா செய்து உரிமையை வெற்றிகொள்வோம் என்ற சில தமிழ்க் குழுக்களின் கோமாளிக் கனவைவும் கிருஷ்ணா தகர்த்திருக்கிறார். சீனாவுடனோ அல்லது வேறும் நாடுகளுடனோ இலங்கை அரசாங்கம் பேணி வரும் உறவுகளினால் இந்தியாவுடனான உறவுகளில் விரிசல் ஏற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா சீனா இணைந்த ஆசியப் பொருளாதாரத்தின் கோரப் பசிக்கு இன்னும் தமிழ்ப் பேசும் மக்கள் பலியாகிக்கொண்டிருக்கிறார்கள்.

பீரிஸ், கூட்டு ஆணைக்குழுவின் 7 வது அமர்வின்போது முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்திய – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் அனைத்து விடயங்கள் குறித்தும் பேசப்பட்டு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன எனவும் கிருஷ்ணா கல்வி, கலாசாரம், விஞ்ஞானழும் தொழில் நுட்பமும், அபிவிருத்தி ஒத்துழைப்பு, சேவைகள், வர்த்தகம் உள்ளிட்ட இருதரப்பு உறவுகள் குறித்து கூட்டு ஆணைக்குழு கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.

இங்கு இந்திய – இலங்கை உடன் படிக்கைகள் மற்றும் இந்திய இலங்கைக்கு வழங்கவுள்ள உதவிகள் என்பன மிக நீண்ட பட்டியலாக அமையும் என்பதனால் அதனை தவிர்த்து விடவேண்டியதாகிறது. அரங்கத்தின் கோரிக்கைகளையும் அதற்கு ஜனாதிபதியின் பதில்கள் சிலவற்றையும் ‘பேரினவாதி மகிந்தவின் வாக்குமூலம் – சிங்களக் குடியேற்றங்கள் தொடரும்” பதிவில் பார்க்கமுடியும். முழுப்பகுதியையும் வாசிக்காமலிருப்பதே நல்லது.
செய்தியாளர் மாநாட்டில் ‘நாங்கள் தற்போது சிறந்ததொரு சூழலில் சமாதானத்தை அனுபவித்து வருகிறோம்” என பீரிஸ் கூறியிருப்பதனை விட பொருத்தமாக யாரால்தான் கூறமுடியும். வடக்கு கிழக்கு மக்கள் மட்டும் அழிவிலும் அவலத்திலும். பெருமளவான சாதாரண சிங்கள மக்களும் பெருவாழ்வொன்றை வாழ்ந்து விடவில்லை. ஐ.தே.க வினதும் ஜே.வி.பி.யினதும் பிடியில் அகப்பட்டு விடுதலைக்கான வழியற்று நிற்கிறார்கள்.

Exit mobile version