சோளனின் 2 கிகாபைட் மெமறி பிளாஷ் பக்கில் போனால், 83 ஆம் ஆண்டு ஆமிக்காரனை அடித்ததில் மகிழ்ந்து போய் உத்திரப் பிரதேசத்தில் இராணுவப் பயிற்சி வழங்கி ரத்தமும் சதையுமாய் ஈழத்தை மாற்றிய இந்திய எசமான் சுருள் சுருளாக நினைவில் வந்து போகிறான்.
அப்ப இந்தியாவை நம்பாதே என்று சொன்னவங்களை மேலையும் கீழையும் ஏற இறங்க லுக்கு விட்ட அதே தேஸ்ய வாதிகள் இப்ப விக்கி தலைமையில் நடந்த சுனாமியில் அடிப்பட்டு டெல்லியில் கரை ஒதுங்கியுள்ளார்கள்.
தோற்றுப் போன ஒட்டுண்ணி தவராசாவும் ஈழப் பிரச்சனையில் துட்டுப் பார்த்த டக்ளஸ் குழுவும் மன்மோகனை அழைத்திருந்தால் மன்மோகனே கண்டுகொண்டிருக்க மாட்டார். இப்போது மக்கள் ஆதரவோடு விக்னேஸ்வரன் அழைத்திருக்கிறார்.
தவராசா மக்கள் ஆதரவில்லாமல் செய்திருக்கக்கூடிய அதே வேலையை இப்போ விக்கி செய்திருக்கிறார்.
தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை ‘வாயை மூடு’ என்று தாடியைத் தடவாமலே விக்கி சொன்னபோது புல்லரித்துப் போன சோளன் இப்போ சுப்ரமணியையும், நாச்சியப்புவையும், சிதம்பரத்தையும் திருப்பதியையும் வாயை மூடு என்று ஏன் சொல்லவில்லை என்று மூளையைப் போட்டுக் கசக்கிக்கொண்டிருக்கிறான். இந்த மேட்டுக்குடி ரேசன் காட்டுகள் எல்லாம் இன்ப்படுகொலையை ஆதரித்த அருவருப்புக்கள் என்பது அரசியல் தெரியாத விக்கிக்கு எப்படி தெரியப் போகிறது. அப்பாவி அப்பாவி….
எனக்கு அரசியல் தெரியாது சட்டம் மட்டும் தான் தெரியும் என்று விக்கி சொன்ன போதே சோளனுக்கு சந்தேகம். அரசியலை இந்திய நாசமறுத்த அரசாங்கத்தின் தலையில் ஒப்படைத்துவிட்டு சட்டத்தை உள்ளங்கையில் வைத்து உரசுகிறார் என்று..
இந்து பேப்பரில் ராசபக்சவோடு பேசி ஈழம் பிடிக்கிறம் என்று விக்கி பேட்டி கொடுத்துவிட்டு யாழ்ப்பாணத்தில் பனை வடலிக்குப் பின்னால மறுப்பறிக்கை விடும் போதே இது இந்தியாவின் அரசியல் என்று விளங்கிப்போச்சு. இனி அரசியல் தெரியாமல் இந்துப் பேப்பரில எப்படி மறுப்பறிக்கை விடுவது என்று அரசியல் ஆய்வாளர்கள் வேறு ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.
உயிர்களோடு விளையாடுகிறோம் என்று தெரியாமலே விக்கிக்கு வாக்குப்போடுங்கள் என்று அறிக்கை விட்ட புலம் பெயர்ந்த அரசியல் தலைகள் தமிழ் நாட்டு மக்களிடமிருந்தும் புலம் பெயர் மக்களிடமிருந்தும் ஈழத் தமிழர்களைத் தனிமைப்படுத்தி இந்திய இலங்கை அரசுகளிடம் சரணடையச் சொல்லியிருக்கிறார்கள். பொல்லுக் குடுத்து அடிவாங்குகிறது என்பதன் பொழிப்பு இப்போதான் சோளனுக்கு தெள்ளத் தெளிவாக விளங்கியுள்ளது.
சதாம் ரைப் அரசியல் கோமாளி ஜெயா மாமியை நம்பிய தேசிய வாதிகளின் பார்வை இப்போது இனக்கொலையாளி மோடியின் தாடி மீது திரும்பியுள்ளதால் அடுத்த மாவீரர் தினம் வரைக்கும் பிழைப்பு ஓட்ட வாய்ப்புக் கிடைத்துள்ளது என்னவோ உண்மைதான்.
தேர்தலுக்கு முதல் இந்து மத குருக்களைக் கூப்பிட்டு விக்கி நடத்திய யாகத்தின் பலனால் அல்ல மக்களின் போர்க்குணத்தாலும் எதிர்ப்புணர்வாலும் வென்றிருக்கிறார். வெற்றி நல்ல செய்தியை சொல்லியிருக்கிறது. ஆனால் எதிர்காலம் மனிதர்களை விழுங்கும் இரத்தக் காட்டேரிகளின் பிடியில்…
இனப்படுகொலையை சந்தித்து குத்திக் குதறப்பட்ட பின்னும் உரிமை தான் வேண்டும் என்று உறுதிகொண்ட சமூகம் மகிந்த குடும்பத்தையும் இந்திய கொலைகார அரசையும் அதன் ஏஜண்டுகளையும் எதிர்கொள்ளும். சோளன் பிடரியில் அடித்து சத்தியம் செய்கிறான்!