அதே வேளை தேசிய மக்கள் காங்கிரஸின் நிலையியல் குழுவின் உதவித் தலைவரான சாங் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகவும், அவர் நவம்பர் 17 முதல் 20 வரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அம்பாந்தோட்டை துறைமுக ஆரம்ப வைபத்திலும் சாங் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை இலங்கை அரசின் இராணுவ முக்கம்களை அமைப்பதற்கும் சீனா உதவிபுரிவதாக பரவலான செய்திகளையும் ஊடகங்கள் வெளியிருகின்றன. குறிப்பாக யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாம் ஊடகப் பிரிவினை ஆதாரம் காட்டி நிரந்தர இராணுவ முகாம்களை அமைப்பதற்கு சீன அரசு உதவி புரிவதாகவும் செய்திகள் வெளியாகின்றன.
ஏதாவது ஒரு அதிகாரத்துடன் இணைந்து அவர்களுக்குச் சேவை செய்வதன் ஊடகவே எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற சுய சார்பற்ற அடிமை மனோபாவத்தைக் கொண்ட ஒரு பகுதியினர் சீனப் பூச்சாண்டியைக் காட்டி இந்தியாவை தமிழர்களுக்குச் சார்பாக அழைக்கின்றனர்.
வெளியுறவிற்கான பலமான அடித்தளத்தையும், வெளிவிவகார உளவுப் பிரிவொன்றையும் கொண்ட மிகச் சில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் ஒன்று. தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்தைச் சீர்குலைப்பதற்கென்றே 1980 களில் இந்தியா விடுதலை இயக்கங்களுக்கு இராணுவப் பயிற்சியை வழங்கிற்று. போராளிக் குழுக்கள் தமக்கிடையே மோதிக் கொள்வதற்கும் புலிகள் ஏகத்துவமாக உருவாகுவதற்கும் இந்திய அரசின் பின் புலம் பிரதான காரணமாக அமைந்திருந்தது,
கட்டுக்கோப்பான இராணுவக் குழு ஒன்றே தமிழர்களுக்கான தனி நாட்டைப் பெற்றுக்கொள்ளப் போதுமான முன் நிபந்தனை என்று முழுமையாக நம்பிய பிரபாகரன் என்ற அப்பாவி மனிதனை அசுர பலத்துடன் வளர்த்தெடுத்த கைங்கரியத்தையும் அதே பிரபாகரனை முள்ளிவாய்க்காலில் ஆயிரக் கணக்கான மக்களோடு கொலை செய்த கோரத்தையும் இந்திய அரசே திட்டமிட்டது.
90 கள் வரை இந்திய வெளிவிவகாரக் கொள்கை என்பது போராளிக் குழுக்களை பலமடையச் செய்து இலங்கை அரசை மிரட்டுதல் என்பதாகவே அமைந்திருந்தது. அமரிக்கா சோவியத் ரஷ்யா என்ற இரு துருவ வல்லரசு உலகில் இந்தியாவின் சோவியத் சார்பு நிலையிலிருந்து அதன் வெளியுறவுக் கொள்கையும் பிராந்தியப் பாதுகாப்பு நலன்களும் வரைவு செய்யப்பட்டன. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமரிக்க நலன்கள் இந்திய அரசின் பாதுகாப்பு நலன்களுக்கு முரண்பட்டிருந்த அந்தக் காலப்பகுதியில் சோவியத் சார்பு வெளியுறவுக் கொள்கைக்கு தனது பிராந்திய நலன்களை உட்படுத்திக்கொண்டது இந்தியா.
தனது தேவைக்கும் அதிகமான சந்தையைக் கொண்டிருந்த நாடு இந்தியா. அதன் பொருளாதர நலன்களை விட இராணுவ நலன்களே முக்கியத்துவம் அடைந்திருந்த 90 களுக்கு முற்பட்ட காலப்பகுதி, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்திய – ரஷ்யப் பாதுகாப்பு நலன்களுக்கு இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது.
சோவியத்தின் வீழ்ச்சியும், இந்தியப் பெரு முதளாளிகளின் அபார வளர்ச்சியும் இந்திய அரசின் பொருளாதர நலன்கள் பாதுகாப்புடன் இணைந்து கொண்டன. ஐரோப்பியப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியும் ஆசியச் சந்ததையின் செயற்கையான வளர்ச்சியும், சில மேல்தட்டுப் பொருளாதரப் பயங்கரவாதிகளை உருவாக்கியது. இந்திய ஆட்சியையும் தெற்காசிய அரசியலையும் தீர்மானிக்கும் நிலைக்கு இவர்களின் வளர்ச்சி அமைந்துள்ளது.
இயல்பாக வளர்ச்சியடைந்த ஐரோப்பியப் பொருளாதாரம் சரிந்து விழும் போது அதனைக் கைப்பற்றிக்கொள்வதற்கும், தமது எல்லைக்குள் நிலை நாட்டுவதற்கும் இந்திய சீன அரசுகள் இணைந்து கொள்கின்றன.
இந்த இரு நாடுகளிடையேயான போட்டி என்பதற்கும் அதிகமாக இணைவு என்பதே இரு நாடுகளுக்கும் அதிக பலன் தருகின்றது. இதனைத் தான் ஆசியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி என்கிறார்கள். ஆசியப் பொருளாதாரம் என்பது தேசிய அரசுகளின் வளர்ச்சி அல்ல; முழுமையான உலகச் சுரண்டல் முறை. இதன் கொடூரத்திற்கு எதிராக இந்தியாவில் மட்டுமல்ல சீனாவிலும் மக்கள் போராடுகிறார்கள். ஆபிரிக்க நாடுகள் வரை சீனப் பொருளாதர சுரண்டல் எல்லை விரிவடைந்துள்ளது. அங்கும் அடக்கப்படும் மக்கள் சீனப்பொருளாதாரத்திற்கு எதிராகப் போராடுகிறார்கள்.
ஐரோப்பாவின் வீழ்ச்சியை ஏகாதிபத்தியங்கள் எதிர்கொள்ள முடியாத நிலையை எட்டியுள்ளன. அங்கும் மக்கள் போராடுகிறார்கள். இந்தப் போராட்டங்களை உலக உழைக்கும் மக்களின் ஒருங்கிணைவாக உருமாற்றும் சக்தி ஒடுக்கப்படும் தேசிய இனமான தமிழ்ப் பேசும் தேசிய இனங்களுக்கு உண்டு என்பதில் உறுதிகொள்ள வேண்டும்.
நாம் ஒரு அதிஅகாரத்தை இன்னொரு அதிகாரத்திற்கு எதிராகப் பயன்படுத்துவதாகக் கனவுகண்டு தோற்றுப் போயிருக்கிறோம். புதிய உலக அரசியல் மாற்றத்தில் அதிக பலம் பெற்றிருப்பவர்கள் ஒடுக்கப்பட்டும் மக்களே என்பதை இன்று உலகமெங்கும் நடைபெறும் எழுச்சிகளும் அவற்றின் வெற்றிகளும் இனம்காட்டுகின்றன.
இலங்கையில் மக்களை அழிப்பதற்கும், இலங்கை அரசைப் போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து பாதுகாப்பதற்கும் இந்திய – சீன அரசுகள் இணைந்தே செயற்பட்டிருக்கின்றன. ஆனல் மத்திய இந்தியாவில் அதன் இதயத்தின் மீது இன்னும் உறுதிகுலையாமல் போராடும் மாவோயிஸ்டுக்களை இந்திய இராணுவத்தால் அழிக்க முடியவில்லை. இந்தியாவின் டாட்ஜீலிங் மலைகளின் மறுபுறத்தில் கூப்பிடு தூரத்தில் இருக்கின்ற நேபாள மக்கள் போராடி வெற்றி கண்டிருக்கிறார்கள். சீனா கூட எதிர்க்கப்பட வேண்டிய வல்லரசாகவே அவர்கள் அறிவித்துப் போராடி வென்றார்கள் என்றால் நமது தோல்விக்குக் காரணத்தைப் புரிந்துகொள்ள வேறு உதாரணங்களே தேவையற்றவை.
இந்தியாவிற்கு எதிராக சீனாவையும், சீனாவிற்கு எதிராக இந்தியாவையும் பயன்படுத்துவோம் என்ற தன்னம்பிக்கையற்ற, அடிமை மனோபாவத்திலிருந்து நாம் விடுபட்டாகவில்லை. இந்த இரண்டு எதிரிகளும் இணைந்து கொத்துக் கொத்தாக மக்களை அழித்த பின்பும் இவர்களை நம்பக் கோருவது அப்பாவித்தனம் மட்டுமல்ல கேலிக்குரியதாகும்.
சீனாவையும், இந்தியாவையும், ஐரோப்பாவையும், அமரிக்காவையும் நண்பர்களாகக் கருதுவதன் எதிர்வினையாக நாம் போராடும் மனிதாபிமானமுள்ள மக்களிடமிருந்து அன்னியப்பட்டிருக்கிறோம். நாம் அவர்களின் எதிரியின் பக்கம் சார்ந்தவர்கள் என்று தான் இது வரை கூறியிருக்கிறோம்.
நேர்மையோடு நாம் ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் எமக்கு உதவ முன்வருகின்ற, எமது போராட்டத்தைத் தமது நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளாத போராடும் ஒடுக்கப்பட்ட ஏனைய மக்களோடு இணைந்து இனியாவது இணைந்து கொள்ளவேண்டும்.