இதைவிட கொடூரம் ஏதாவது இருக்க முடியுமா? இதைவிட வக்கிரம் ஏதாவது இருக்கத்தான் முடியுமா? மனித இனம் குடிக்கத் தண்ணீர்பெறும் மிகச்சாதாரண உரிமையைக் கூட எதிர்க்கிறார்கள், மனித இனத்தின் கொடிய எதிரிகளான ஏகாதிபத்தியவாதிகள்.
கடந்த ஜூலை 28-ஆம் தேதியன்று அனைத்து மக்களும் தூய குடிநீரும் சுகாதார வசதியும் பெற வேண்டும் என்று ஐ.நா. மன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தூய குடிநீர் பெறுவதென்பது அடிப்படை மனித உரிமை என்றும், அனைத்து நாடுகளும் இம்மனித உரிமையைக் காக்க வேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது.
2000 மற்றும் 2005-ஆம் ஆண்டுகளில் பொலிவியாவின் மூன்றாவது பெரிய நகரமான கோச்சபம்பாவில் தண்ணீர்
இத்தீர்மானத்தை நிறைவேற்றக் கூடாது என்றும், தீர்மானத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று கூறி அதை நீர்த்துப்போக வைக்கவும் ஏகாதிபத்திய நாடுகளும் தண்ணீர் ஏகபோக நிறுவனங்களும் கடும் முயற்சி செய்தன. ஏனெனில், இன்று உலகின் வேகமாக வளர்ந்து வரக்கூடிய, கொள்ளை இலாபம் தரக்கூடிய தொழிலாக தண்ணீர் வியாபாரம் முன்னணிக்கு வந்துள்ளது. இதனாலேயே தண்ணீரை “நீலத் தங்கம்” என்று பன்னாட்டு ஏகபோகக் கம்பெனிகள் அழைக்கின்றன. கடந்த ஆண்டில், எண்ணெக் கம்பெனிகளின் இலாபத்தில் ஏறத்தாழ 40 சதவீதத்தை தண்ணீர் கம்பெனிகள் அடைந்துள்ளன. இந்தக் கம்பெனிகள், உலகின் தண்ணீர் ஆதாரங்களில் 5% அளவுக்கு சொந்தம் கொண்டாடுகின்றன. இதிலேயே இவ்வளவு இலாபம் என்றால், இதர நீர் ஆதாரங்களையும் அவைக் கைப்பற்றிக் கொண்டால் அவற்றின் இலாபம் எவ்வளவு மடங்கு அதிகரிக்கும் என்று சொல்லத் தேவையில்லை.
விவெண்டி, சூயஸ், பெக்டெல் முதலான உலக அளவில் தண்ணீர் வியாபாரத்தில் முதன்மையாக உள்ள பத்து நிறுவனங்கள், 150 நாடுகளில் 200 கோடி வாடிக்கையாளர்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றன. உலக வர்த்தகக் கழகம் தண்ணீரையும் ஒரு சரக்காகவே ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே தண்ணீரும் ஏற்றுமதி வியாபாரமாகிறது. ஏழை நாடுகளில் உலக வங்கியின் கடன் திட்டங்களில் பெரும்பாலானவை தண்ணீர் தனியார்மயத்தை நிபந்தனையாகக் கொண்டுள்ளன. இதன்படி, தண்ணீர், சுகாதாரம் முதலான மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் செய்து தர வேண்டியதில்லை என்பதுதான் உலக வங்கி மற்றும் உலக வர்த்தகக் கழகத்தின் விதி.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலகில் நடந்த எல்லா வன்முறைப் படுகொலைகளையும் விட தண்ணீர் தொடர்பான நோகளால் இறந்துபோனவர்களின் எண்ணிக்கையே அதிகம். ஆண்டுதோறும் தூய குடிநீர் கிடைக்காமலும் சுகாதார வசதி இல்லாமலும் உலகெங்கும் ஐந்து வயதுக்கும் குறைவான 21 இலட்சம் குழந்தைகள் மாண்டு போகின்றன. மிகக் கொடிய இருபெரும் நோகளான எயிட்ஸ் மற்றும் மலேரியாவினால் கொல்லப்பட்டவர்களை விட, தூய குடிநீர் கிடைக்காமல் நோ தாக்கி மாண்டவர்களின் எண்ணிக்கை அதிகம்.
ஐ.நா.வின் கணக்கீட்டின்படி, உலகில் ஏறத்தாழ 200 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். உலகின் 88 கோடியே 40 இலட்சம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை. 260 கோடி மக்களுக்குக் கழிப்பறை வசதி இல்லை. உலகின் வளரும் நாடுகளிலுள்ள ஏறத்தாழ 40 % மக்களுக்கு முற்றாக இத்தகைய வசதிகள் இல்லை. ஐ.நா. மதிப்பீட்டின்படி, 2025-ஆம் ஆண்டுக்குள் உலகில் 48 நாடுகள் குடிநீர் பற்றாக்குறையால் தவிக்க நேரிடும். ஏற்கெனவே ஆயிரக்கணக்கான கிராமங்கள் நீரின்றி மக்கள் வெளியேறும் போக்கு பல ஆப்பிரிக்க நாடுகளிலும், ஈரான், சீனா மற்றும் பாகிஸ்தானிலும் நிகழ்ந்து வருகிறது. இவர்கள் “தண்ணீர் அகதிகள்” என்று குறிப்பிடப்படுகின்றனர்.
இந்தியாவில் 1985-இல் குடிநீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களின் எண்ணிக்கை 750. இது 1995-இல் 65,000 கிராமங்களாக அதிகரித்து விட்டதாக அரசாங்கமே ஒப்புக் கொள்கிறது. இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட நதிகள் மற்றும் ஏரிகளின் நீர் மாசுபட்டுள்ளது. அந்நீரைக் குடிக்கவோ குளிக்கவோ பயன்படுத்த முடியாது. நாட்டின் மூன்றில் இரு பங்கு மக்களுக்குப் போதுமான சுகாதார வசதிகள் கிடையாது. இந்தியாவில் நடந்துவரும் தண்ணீர் வியாபாரத்தின் ஓராண்டு மதிப்பு ஏறத்தாழ 10 ஆயிரம் கோடி ரூபா என்கிறது ஒரு ஆய்வு. தண்ணீர் தனியார்மயத்தை உள்நாட்டில் தீவிரமாகச் செயல்படுத்திவரும் இந்திய அரசு, உலக அரங்கில் தண்ணீர் மட்டுமின்றி, பல்வேறு மனித உரிமை விவகாரங்களில் முற்போக்கு நாடகமாடிக் கொண்டு பித்தலாட்டம் செய்து வருகிறது.
தண்ணீர் மனித இனத்தின் அடிப்படைத் தேவை. ஆனால், அந்தத் தேவை என்பது உங்களது வாங்கும் சக்தியைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. எனவே அது விற்பனைக்கானது. மாறாக, உரிமை என்பது நீங்கள் பெற்றே ஆகவேண்டிய விசயம். அதை வியாபாரப் பொருளாக்க முடியாது. இத்தனை காலமும் வெறுமனே அடிப்படைத் தேவை என்று குறிப்பிட்டு வந்த ஐ.நா.மன்றம், இப்போது தண்ணீர் என்பது மனித இனத்தின் அடிப்படை உரிமை என்று ஏற்றுக் கொண்டுள்ளது.
தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், உலக நாடுகளைக் கட்டுப்படுத்தாத வெறும் காகிதத் தீர்மானம்தான். கட்டுப்படுத்தும் என்றால் இத்தனை நாடுகள் இத்தீர்மானத்தை ஆதரிக்குமா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. எனினும், பெயரளவிலான இத்தீர்மானத்தைக் கூட ஏகாதிபத்திய தண்ணீர் ஏகபோக நிறுவனங்கள் எதிர்த்து நின்று சதி செய்கின்றன. இது நடைமுறைக்கு வந்துவிட்டால் ஆபத்து என்று அலறுகின்றன.
மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று பிற நாடுகளில் தலையீடு செயும் ஏகாதிபத்தியங்கள், மிகச் சாதாரண தண்ணீர் பெறும் உரிமையை நிலைநாட்டக் கோரும்போது, அதை நிராகரித்து எதிராக நிற்கின்றன. மனித உரிமை என்றெல்லாம் தமது ஆதிக்க நலன்களிலிருந்துதான் ஏகாதிபத்திய நாடுகள் கூச்சலிடுகின்றனவே தவிர, மக்கள் நலனிலிருந்து அல்ல.
மனித இனம் குடிக்கத் தண்ணீர்கூட கிடைக்காமல் செத்து மடிந்தாலும் பரவாயில்லை, தண்ணீர் ஏகபோக நிறுவனங்களின் கொள்ளை லாபத்துக்கும் சூறையாடலுக்கும் எவ்வித சிறு இடையூறும் நேரக்கூடாது என்பதுதான் ஏகாதிபத்தியவாதிகளின் நியாயவாதம். இதுதான் பெருமையாகப் பீற்றிக் கொள்ளப்படும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் மகிமை!
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புதிய ஜனநாயகம் இதழிலிருந்து…