இவ் ஒதுக்கீடுகள் அனைத்தும் பிறவி அடிப்படையில் அதாவது வருண / சாதி அடிப்படையில் செய்தனரே ஒழிய, அவ்வேலைகளைச் செய்யத் தேவைப்படும் திறமைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் விதமாகச் செய்யவில்லை. ‘தகுதியும் திறமையும் அனைத்து மக்களுக்கும் பொதுவாக இருக்கையில் அனைத்து மக்களும் அனைத்து நிலை வேலைகளிலும் இருக்க வேண்டும் அல்லவா? இவ்வாறு வருண / சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்வது தவறு அல்லவா?’ என்ற விவாதங்கள் அன்று எழுந்து இருக்கின்றன. ஆனால் ‘மனித இனத்திற்குத் தேவைப்படும் வேலையைச் செய்யக் கூடாது; அதாவது உழைக்காமல் சோம்பேறியாக இருந்து கொண்டே உலக சுகங்கள் அனைத்தையும் அனுபவிக்க வேண்டும்’ என்ற கொடூரமான எண்ணம் கொண்ட பார்ப்பனர்கள் இந்த நியாயத்திற்குக் கட்டுப்பட மறுத்தனர்.
அவரவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்த வேலைகளை அவரவர்கள் செய்ய வேண்டும் என்றும், அவ்வேலைகளைச் செய்யத் திறமை இல்லாவிட்டாலும் அவ்வேலைகளையே செய்ய வேண்டும்; வேறு வேலைகளில் திறமை இருந்தாலும் அவற்றைச் செய்யக் கூடாது என்றும் அடித்துக் கூறி விட்டனர். இதனால் சமூக இயக்கத்தில் நெருடல்களும் உராய்வுகளும் இருக்குமே என்ற விவாதத்திற்கு அப்படி இருந்தாலும் பராவாயில்லை என்று கூறி விட்டனர். சமூக இயக்கத்திற்குப் பெரும் கேடு விளைவிக்கும் இக்கருத்தை அனைவரும் ஒப்புக் கொண்டே தீர வேண்டும் என்பதற்காக, அவர்கள் புனித நூல் என்று பிரகடனம் செய்து வைத்து இருக்கும் பகவத் கீதையில் 18ஆம் அத்தியாயத்தில் 46, 47, 48வது செய்யுள்களில் இவற்றைத் தெளிவாக எழுதி, மீற முடியாத விதியாகச் செய்து வைத்தனர்.
இதனால் திறமை உள்ள சூத்திர, பஞ்சம மக்கள் உயர்நிலை வேலைகளுக்குச் செல்ல முடியாமல் மனித வளம் வீணாகியது (இன்றும் வீணாகிக் கொண்டே இருக்கிறது). இதை விடக் கொடுமை என்னவென்றால் திறமை இல்லாத பார்ப்பனர்கள் உயர்நிலை வேலைகளில் அமர்ந்து கொண்டு நாட்டு நிர்வாகத்தை நாசப்படுத்திக் கொணடு இருந்தனர் (இன்றும் நாசப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர்). ஆனால் அவாள் சுகமாக வாழ்வதாலேயே அனைவரும் சுகமாக வாழ்வதாகச் சிறிதும் வெட்கம் இல்லாமல் கூறிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தனர்.
இக்கொடுமைகளைக் கண்டு மனம் கொதித்த மகாத்மா ஃபுலே, தந்தை பெரியார், மேதை அம்பேத்கர் போன்றோர் இதற்கு எதிராகப் பெரும் போராட்டங்களைச் செய்தனர். அதன் விளைவாக, பார்ப்பனர்களின் இட ஒதுக்கீட்டுக் கருத்தியலில் விரிசலை ஏற்படுத்தி, திறமை உள்ள ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் உயர் நிலைகளுக்குச் செல்வதற்கான இட ஒதுக்கீட்டுக் கருத்தியலை ஏற்படுத்தினர்.
உடனே சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என்றும், அவ்வாறு செய்தால், திறமை இல்லாதவர்கள் உயர்நிலைகளில் அமர்ந்து கொண்டு நிர்வாகத்தை நாசப்படுத்தி விடுவார்கள் என்றும் திறமைசாலிகளுக்கு உயர்நிலை வேலை வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும் என்றும் கூச்சலிட ஆரம்பித்தனர்; இன்றும் கூச்சலிட்டுக் கொண்டே இருக்கின்றனர்.
ஆனால் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள், வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் பார்ப்பனர்களை விடத் திறமைசாலிகள் மெய்ப்பிக்கவே செய்தனர்; தொடர்ந்து மெய்ப்பித்துக் கொண்டும் உள்ளனர். இதை யாவரும் தங்கள் அனுபவத்தில் எளிதாக உணர முடியும். இப்பொழுது கூடுதலாக ஒரு செய்தி கிடைத்து உள்ளது. வெறும் அனுபவத்தை வைத்துக் கொண்டு அப்படிப்பட்ட முடிவுக்கு வரத் தேவை இல்லை என்பதும் இதற்கென ஒரு ஆய்வே செய்யப்பட்டு அந்த ஆய்வின் முடிவு அதை வெளிப்படுத்துகிறது என்பதுமே அச்செய்தி.
தில்லி பொருளாதாரக் கல்லூரியின் (Delhi School of Economics) பேராசிரியை அஸ்வினி தேஷ்பாண்டே (Ashwini Deshpande) என்பவரும் அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் (Michigan) பல்கலைக் கழக்த்தின் பொருளாதாரப் பேராசிரியர் தாமஸ் வெய்ஸ்காஃப் (Thomas Weisskopf) என்பவரும் இணைந்து, இந்தியத் தொடர் வண்டித் துறையில் (Indian Railways) இட ஒதுக்கீடு மூலம் வாய்ப்பு பெற்ற ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களால் நிர்வாகம் பாதிக்கப்பட்டு உள்ளதா என்ற ஆய்வை மேற்கொண்டு, அவ் ஆய்வின் முடிவை 4.2.2015 அன்று புது தில்லியில் வெளியிட்டனர். இதன்படி உயர்நிலைகளில் ஒடுக்கப்பட்ட் வகுப்பு மக்கள் வாய்ப்பு பெற்றதினால் நிர்வாகம் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்பது மட்டும் அல்ல; பல இடங்களில் நிர்வாகத் திறன் மேம்பட்டு உள்ளது என்றும் தெரிய வந்து உள்ளது.
இவ் ஆய்வின் முடிவு இயற்கை நியதிக்கு முற்றிலும் ஒத்திசைவாக உள்ளது. ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கு முன்னால் உயர்சாதிக் கும்பலினர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்ட்ட போது, அவர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் பெரும்பாலான இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டு இருந்த நிலையில் நிர்வாகம் செயல் பட்டதை விட, திறமைசாலிகளான ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களும் இணைந்து நிர்வகித்த போது நிர்வாகம் மேம்பட்டு இருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை.
இவ்வாறு ஒரு சிறு அளவு ஒதுக்கீடு கொடுப்பதை விட, நாட்டில் உள்ள அரசு, தனியார் துறைகளில் உள்ள அனைத்து நிலை வேலைகளிலும், கல்வியிலும், எரி பொருள் விநியோகம் போன்ற சமூக, பொருளாதார நடவடிக்கைள் அனைத்திலும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மத சிறுபான்மையினர், உயர்சாதிக் குமபலினர் ஆகியோருக்கு மக்கள் தொகையில் அவரவர் விகிதத்திற்கு ஏற்ப, பங்கீடு செய்து கொடுத்தால் அந்தந்த வகுப்பு மக்களில் உள்ள திறமைசாலிகள் உயர்நிலை வேலைகளை அடைவதற்கும், அந்தந்த வகுப்பு மக்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் அடுத்த நிலை வேலைகளை அடைவதற்கும் வழி வகுக்கும் அல்லவா? அந்நிலையில் இப்பொழுது திறமை இல்லாத உயர் சாதிக் கும்பலினர் உயர் நிலை வேலைகளில் அமர்ந்து நிர்வாகத்தை நாசப்படுத்திக் கொண்டு இருக்கும் நிலைமை மறைந்து விடும் அல்லவா?
அரசியல் கட்சித் தொண்டர்களே! உங்கள் கட்சித் தலைவர்களை விகிதாசாரப் பங்கீட்டு முறையை முன்னெடுக்க வற்புறுத்துங்கள். வாக்களிக்கும் பொது மக்களே! உங்களிடம் வாக்கு கேட்டு வரும் அரசியல்வாதிகளிடம் விகிதாசாரப் பங்கீட்டு முறையை முன்னெடுக்க வற்புறுத்துங்கள். அப்படிச் செய்வது உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் செய்ய வேண்டிய தவிர்க்க முடியாத / தவிர்க்கக் கூடாத கடமையாகும்
(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 114.2..2015 இதழில் வெளி வந்துள்ளது)