Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆயுதமேந்திய டக்ளஸும் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளலும் : கோசலன்

Doudlas with Rangan
Doudlas with Rangan

தமக்குக் கிடைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்கள் தாம் ஒடுக்கப்படுகிறோம் என்று உரத்துக் கூறியிருக்கிறார்கள். மக்கள் விரோதிகள், இடதுசாரி சந்தர்ப்ப வாதிகள், சுய நலமிகள் என்று ஒவ்வொருவரது மனச் சாட்சியிலும் குருதியறைந்து தம்மை இனம் காட்டியிருக்கிறார்கள். இந்திய விஸ்தரிப்பு வாதிகள், சீன வியாபாரிகள், அமரிக்க ஏகபோகம், ஐரோப்பிய மிரட்டல்கள் என்ற எதனையும் அவர்கள் பொருட்டாகக் கொள்ளவில்லை. தேசிய இன ஒடுக்கு முறைக்கு எதிரான அரசியல் தளத்தில் அவர்கள் அறுபது ஆண்டுகள் குவித்துவைத்த சாம்பல் மேடுகளின் மேல் நின்று போர்கொடி உயர்த்திக் கூறியிருக்கிறார்கள்.

வன்னி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், அம்பாறை என்று பேரின வாதிகள் குறிவைத்த ஒவ்வொரு பகுதிகளிலுருந்தும் உள்ளூராட்சித் தேர்தலினூடாக மக்களின் குரல் ஓங்கி ஒலித்திருக்கின்றது.

புலம் பெயர் நாடுகளிலிருந்து விடுமுறை உழைப்பிற்காக சொந்த தேசத்திற்குச் சென்று சோறு போடுவதே இன்றைய தேவை என்று மார்தட்டித் திரிந்த வியாபாரிகளை நோக்கி மக்கள் கோருகிறார்கள்! தாம் சலுகைகளுக்காக அலையும் பச்சோந்திகள் என இனிமேலும் அவமானப்படுத்த வேண்டாம் என்று கோரியிருக்கிறார்கள்!! “இணக்க அரசியல்” என்று தலையங்கமிட்டு இனப்படுகொலையாளர்களோடு கைகோர்த்துக் கொள்வதை தம்மால் அனுமதிக்க முடியாது என ஆணிததரமாகக் கூறியிருக்கிறார்கள்.

தேர்தல் தோல்வியை ஒத்துக்கொண்ட அரச துணைக்கட்சியான ஈ.பி.டிபியின் செயலாளர் டக்ளஸ் தேவானனந்தா வெற்றிபெற்ரவர்கள் அபிவிருத்தியில் ஈடுபட மாட்டார்கள் என்றும் கிள்நொச்சியிலும் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளதால் தமது அபிவிருத்தி வேலைகள் தடைப்படும் என்று மிரட்டியிருக்கிறார். மக்கள், தேசியக் கூட்டமைப்பு யார் என்று மிகத் தெளிவான புரிதலுடனேயே வாக்களித்திருக்கிறார்கள். அரச செலவோடு, ஆடம்பரமாக, அனைத்து வசதிகளோடும் மேற்கொண்ட பிரச்சாரத்திலேயே டக்ளஸ் குழாம் அபிவிருத்தியே தமது ஒரே நோக்கம் என்று ஒவ்வொரு தடவையும் கூறியிருந்ததை எல்லாம் மக்கள் அவதானமாகச் கேட்ட பின்னரே அவர்களுக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள்.

பேரினவாத ஒடுக்கு முறையின் கோரப்பசி முழுமையான இராணுவ ஒடுக்கு முறையாக உருவாகியிருந்த 70 களின் இறுதிப்பகுதியில் டக்ளஸ் தேவானந்தா ஆயுதமேந்திய அரசியலில் தன்னை இணைத்துக்கொண்டார். 1977இல் அவர் ஆயுதமேந்திய அதே காலப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆளும்கட்சிக்கு அடுத்த இடத்தில் வெற்றி பெற்றிருந்தது. டக்ளஸைப் போன்றே ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒரு புறத்தில் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட அதே வேளை பேரினவாத அரசிற்கு எதிரான ஆயுத எழுச்சியின் தேவையையும் உணர்ந்திருந்தனர்.

அன்றைய பேரினவாத அரசோ அன்றி அதன் துணைக் கட்சிகளோ தேசிய இன ஒடுக்கு முறைக்கு எதிரான மக்களின் குரலைக் கேட்க மறுத்தன. மக்கள் போராட்டத்திற்கான அரசியல் தலைமை இன்னும் உருவாகியிருக்கவில்லை. தன்னெழுச்சியான இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் இந்தப் பின்னணியிலேயே உருவாக இளைஞனான டக்ளஸ் ஈரோஸ் இயக்கத்திலும் அது பிளவடைந்த வேளையில் ஈ.பி.ஆர்.எல்.எப் இலும் இணைந்து கொண்டார்.

அதே வரலாற்றின் மறு விம்பம் இன்று அழிவுகளின் விழிம்பிலிருந்து உருவாகியுள்ளது. இப்போது டக்ளஸ் அரச துணைக் கட்சி! உரிமைகளை விலைபேசிவிட்டு பதவிக்காக அபிவிருத்தி என்ற பெயரில் தேர்தல் சந்தையில்!!

ஒரு வேறுபாடு. 77இல் காணப்பட்டதை விடவும் பல மடங்கு அதிகமாக தேசிய இன ஒடுக்கு முறை இனப்படுகொலையாகவும், இனச் சுத்திகரிப்பாகவும் திட்டமிட்டு நிறுவனமயப்படுத்தப்பட்ட நிலையில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

அன்றைப் போலவே இன்றும் மக்கள் தங்கள் உணர்வுகளைத் தேர்தல் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார்கள். அன்றைப் போலவே தேர்தல் என்பதும் பாராளுமன்றம் என்பதும் இறுதித் தீர்வல்ல என்பதும் மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

ஒரு வேறுபாடு. 77 ஐப் போலன்றி வன்னிமண்ணில் குண்டுத் துகள்களைத் தாங்கிய ஆயிரக்கணக்கான குழந்தைகளைப் பேரினவாதம் உற்பத்தி செய்து வைத்திருக்கின்றது. பேரினவாதத்திற்கு எதிரான போராட்ட உணர்வு அவர்களின் “இரத்தத்தில் கலந்திருக்கிறது”. 30 ஆண்டு போராட்ட வரலாற்றைக் கண்ட அனுபவத்தை அவர்கள் சுமந்திருக்கிறார்கள்.

மக்கள் தீர்ப்பு, பாராளுமன்றத்தை நிராகரித்தல், அபிவிருத்தி அரசியலின் தோல்வி, ஆயுத எழுச்சி என்ற நிகழ்ச்சிப் போக்கு மறுபடி உருவாகும் அத்தனை சாத்தியங்களும் அதற்கான புறச் சூழலும் 70களின் பிற்பகுதிகளை விட மிக அதிகமாகவே காணப்படுகின்றன.

இதனை பேரினவாதிகளும், ஈ.பிடி.பி போன்ற அதன் துணைக் குழுக்களும், ஏன் தேசியக் கூட்டமைப்பும் கூட, நன்கு அறிந்தே வைத்திருப்பார்கள். இவர்கள் அனைவருக்கும் மேலாக இதனை ஜனநாயக முற்போக்கு சக்திகள் உள்வாங்கிக் கொண்டால் ஆயுத எழுச்சியின் தோல்வி இன்னொரு முறை நிகழாமல் இருக்கும்.

Exit mobile version