Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆயுதப் போராட்டத்திற்கான அறம்:குட்டி ரேவதி

1312ஆயுதப் போராட்டம் என்பது ஒரு வன்முறை என்று கூறுதலே ஒரு சமூக இயக்கத் தந்திரமாகவும் அதை ஒரு நாடு இராணுவத்தின் பெயரால் செயல்படுத்தும் போது அதுவே ஒரு ராஜதந்திரமாகவும் அர்த்தம் பெறுகிறது. ஆயுதம் என்றால் என்னவோ உலோகங்களாலும் இன்ன பிற ஆக்கங்களாலும் ஆக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது. இது ஓர் ஒற்றைப் பரிமாணச் சிந்தனையே. ஒடுக்குமுறையைச் செயல்படுத்துபவர்கள் தங்களால் இயன்ற எல்லாவற்றையும் ஆயுதமாகப் பயன்படுத்துகையில் நாம் ஆயுதத்தையே ஆயுதமாகப் பயன்படுத்துவது அறம் பிழைத்ததாகாது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆயுத இயக்கமும் ஆயுதப் போராட்ட வடிவங்களும் முன்னிலை வகுத்ததாலேயே அதை ஒரு வன்முறை இயக்கம் என்று கூறுதலும் அதன் அடிப்படைக் கோரிக்கைகளை ஒட்டுமொத்தமாக மறுத்தலும் எந்த விதத்திலும் நியாயமாகாது. இதன் பின்னணி ராஜ தந்திரங்கள் நமது மூளைக்குப் புரியாமல் இல்லை. கம்யூனிஸ இயக்கங்கள் நாடு என்ற சிந்தனையைத் தான் முதன்மையானதாக வலியுறுத்துகின்றன. நாடு என்ற பூகோள வரையறைக்குட்பட்ட நிலம் என்பதன் நலத்துக்காக ஒரு நாட்டின் தலைமை என்ன வகையான நடவடிக்கையையும் எடுக்கலாம். ஆனால், மக்களின் நலம், அடிப்படைத் தேவைகள் குறித்த ஆழமான பார்வையற்ற ஒரு தலைமை, அதன் சிந்தனை அப்படியான நடவடிக்கைகளின் பின்னால் இயங்கும் போது மேற்கண்ட சிந்தனை ஒரு பொழுதும் மக்களுக்கு உதவுவதில்லை.

மக்களின் நலன் பாராட்டவும் பேணவுமே நாடு இருக்கிறது என்ற அடிப்படையான நியாயம் மறுக்கப்பட்ட நிலத்தில் இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் உள்ள நாட்டில் மக்களே அரசுக்கு எதிராகத் திரும்பியாகத் தான் வேண்டும். நாட்டின் இறையாண்மை என்பதே கூட சில பல வகைகளின் மேலாதிக்கத்திற்கு, மேல் சாதிக்கு, ஆதிக்க வர்க்கத்திற்கு சாதகமான கோடுகளால் வரையப் பட்டது தான். துருவித் துருவிப் பார்த்தால் சமூக வேறுபாடுகளை இன்னும் அதிகப்படுத்தும் ஆயுதங்களாக சாதி, மதம், வர்க்கம், பாலியல் வன்முறை, பால் வேறுபாடு என்று நிறைந்திருப்பவை தாம் ஒடுக்குமுறை வெப்பத்தைத் தணிக்கும் உத்தியாக ஆயுதங்களைப் பயன்படுத்தும் சிந்தனக்குத் தள்ளுகிறது.

சமீபத்தில் ஈழத்தில் நிகழ்ந்து முடிந்துள்ள இனப்படுகொலையில் முக்கியமான ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது, ஏவப்பட்டிருப்பது தமிழ்ப் பெண்களின் மீதான பாலியல் வன்முறை. பெண்கள் எந்த வகையிலும் தம் எதிர்ப்பைக் காட்ட முடியாத வகையில் இராணுவ பலத்துடன் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இங்கு இன மேலாதிக்கம் மற்றும் இராணுவ ஆயுதம் கூடிய பாலியல் வன்முறை தமது அதிகாரத்தைக் காட்ட வசதியாகவும் வாய்ப்பாகவும் இருந்துள்ளதைக் காணலாம். இப்பொழுது எதை ஆயுதம் என்பீர்கள்? பலவீனமான பெண்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மீது பாலியல் வன்முறையை நிகழ்த்துவதுடன் ஒப்பிடும்போது கொடூரமான ஆயுதம் என்று ஏதுமில்லை.

இன்னும் நுணுகிப்பார்த்தால் இந்திய நிலத்திலிருந்து ஆயுதப்போராட்டம் என்பதை எதிர்ப்பதற்கான காரணம் என்பது அஹிம்சை என்ற காந்திய சித்தாந்தத்தில் ஊறிப்போன ஆதிக்கசாதி மனோநிலை தான். காலங்காலமாய் ஆயுதங்களுக்கான உரிமையும் சலுகையும் அரசுப்பூர்வமான அதிகாரமும் ஆதிக்கசாதியினருக்குத் தான் வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் எதிர்நிலை ஒடுக்கப்பட்டோர் தங்கள் மீது செலுத்தப்படும் வன்முறைக்கு, ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதங்களைப் பறித்தோ, ஆயுதங்களை தயாரித்தோ, ஆயுத வடிவங்களை உருவாக்கியோ பயன்படுத்தும் போது உடனே, ‘அய்யகோ!’ ஆயுதத்தைப் பயன்படுத்துவது வன்முறை என்று கூவுதல் ஆதிக்க மனோபாவத்தை நிறுவுவதற்கான குரலே அன்றி மண்ணில் அதர்மத்தை அழித்து தர்மத்தைப் பேணும் குரலோ, அல்லது மானுடம் பேண வன்முறை ஒழிப்போம் என்ற கோரிக்கை முழக்கமோ அல்ல. இந்நிலையில் ஈழவிடுதலைப் போராட்டத்தையும் மறுப்பதற்கு மிக முக்கியமான வாய்ப்பாக ஆதிக்க சாதியினருக்கும் அதிகாரத்திலிருப்போருக்கும் இருப்பது ஆயுதப்போராட்டம் தான். அதே ஆயுதம் அவர்கள் கையில் இருக்கும் போது அது அடிப்படை முறையாகவும் தர்மப் போராட்டவும் மகாபாரதக் கிருஷ்ணன் சொல்லும் ஆயுத, யுத்த தர்மங்களும் கூட கடைபிடிக்கப்படும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

மேலும் ஈழ விடுதலைப் போராட்ட்த்தை ஓர் ஆயுதப் போராட்டமாக மட்டும் நோக்கியதே அல்லது அவ்வாறு ஊடகங்களாலும் அதிகார ஆதாயம் தேடும் அரசியல் தலைவர்களாலும் நம்பவைக்கப் பட்டதே இன்று தமிழகத் தமிழர்கள், புலம் பெயர்ந்த தமிழர்கள் என தமிழ் மக்கள் எல்லோரும் ஒருங்கிணையாது பிளவுபட்ட ஒரு சக்தியாக இருப்பதற்கு காரணம். இவ்வாறு அவ்விடுதலைப் போராட்டத்தை ஓர் ஆயுதப் போராட்டம் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தியே எழுச்சியின் நெடுஞ்சாலையிலிருந்து விலக்கி வைத்தனர். இவ்விடுதலைப் போராட்டம் பெரிய அளவில் வெற்றியைப் பெறாததற்கு முக்கியமான இன்னுமொரு காரணம் இதை ஓர் அரசியல் போராட்டமாக மட்டுமே நோக்கியதோடு நிறுத்திக் கொண்டதும் தான். இப்போராட்டத்தில் பங்கெடுக்க வழியில்லாத மற்ற புலத்திலிருந்தோர் இப்போராட்டத்தின் மற்ற வடிவங்களை உருவாக்கிக் கொள்ளாததும் அதற்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்ளாததும் அப்போராட்ட வளையத்திற்கு வெளியே தங்களை இருத்திக் கொண்டதும் தாம். இதை ஒரு சமூக, பண்பாட்டு, வரலாற்றுப் போராட்டமாக மாற்றுவதற்கான சக்தியை ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுக்காத மற்ற மக்கள் குழுமம் திரண்டு அளிக்காததும் தான். கொழும்புவில் சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு பெண்ணியக் கருத்தரங்கில் இதே கருத்தை நான் முன் வைத்த போதும் இதை ஓர் ஆயுதப் போராட்டத்திற்கு எதிரான கருத்தாகவே உள்வாங்கும் குறுகிய மனோபாவம் அல்லது எச்சரிக்கை உணர்வு எதிரில் இருந்த எல்லோரையும் பேசா மடந்தையராக்கியிருந்தது.

ஈழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கப் போய் எல்லா தேசிய இனப் பிரச்சனைக்கான முன்மாதிரியாக அது இருந்து விடக்கூடாது என்ற சர்வதேச அரசியல் பேசுவோரின் போலியான அக்கறையும் முக்கியமான காரணம். சிங்கள அரசே கூட இதற்கு முன்பு உலக அளவில் அரங்கேறிய பல இனப்படுகொலைகளை தனது இராணுவச்செயல்பாட்டுக்கு முன்மாதிரியாக எடுத்துக் கொண்டுள்ளது எனலாம். இராணுவ நிரல்களில் பிரயோகிக்கப்படும் எல்லா சொற்களும் செயல்களும் மக்களை சடப்பொருள்களாக, வெறுமனே டார்கெட்டாக, மக்களை அம்பு வழி நோக்கிய குறிகளாகப் பார்க்கின்றன. ஆயுதங்களைக் கைவிடுதல், இராணுவ வலையம், மக்களை வேறு இடத்தில் குடியமர்த்துதல், போர் நிறுத்தம் என்ற வார்த்தைகள் மட்டுமே அமைதிக்கான வழிகள் என்று எண்ணலாகாது. இவை எல்லாம் மக்களின் உரிமைகளை முன்வைக்கும் செயல்பாடாக இல்லாமல் இராணுவ நடவடிக்கைகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. வாழ்வை நிலத்தோடும் தட்பவெப்ப நிலையோடும் பண்பாட்டோடும் சூழலோடும் நடத்தி வந்த ’மக்களை வெளியேற்றல்’ என்பதும் இராணுவ செயல்பாடுகளில் ஒன்றாகும். இந்நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழின மக்களுக்கு உரிமைகளே அற்ற இடத்தில் ஆயுதங்களையே உரிமைகளாகத் தந்துள்ளது. ஆயுதங்கள் ஏதுமற்ற சூழ்நிலையில் கைக்கு எட்டிய எதையும் ஆயுதமாகப் பயன்படுத்துவோம் என்றார் சே குவேரா எனபது இவ்விடம் என் நினைவில் புரள்கிறது.

Exit mobile version