Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆம் ஆத்மிக் கட்சி- சாதாரண மக்களுக்கா? சர்வ வல்லமை வாய்ந்த கார்ப்பரேட் முதலாளிகளுக்கா? : திருபூர் குணா

arvind_kejriwal“உங்களுக்கு ஒரு சுவராசியமான தகவலை சொல்கிறேன். இந்தியாவை மீட்க வந்த இரட்சகராகப் போற்றப்படும் அரவிந்த் கேஜ்ரிவால் ‘கபீர்’ என்ற என்.ஜி.ஒ அமைப்பை நடத்தி வருகிறார். கேஜ்ரிவால் கபீருக்காக போர்டு பவுண்டேசனிடமிருந்து 4.5 கோடி ரூபாய் நிதி பெற்றிருக்கிறார். அவர் அந்தப் பணத்தின் கடைசி காசு வரை நாணயமாகவே செலவு செய்திருக்கக் கூடும். பிரச்சினை அதுவல்ல. எல்லாவற்றையும் லோக்பால் சட்ட வரம்பின் கீழ் கொண்டு வர குரலெழுப்பும் கேஜ்ரிவால் என்.ஜி.ஒ-க்களையும், பன்னாட்டு நிறுவனங்களையும் அதன் வரம்பின் கீழ் கொண்டு வர சொல்வதில்லை. இவை இரண்டையும் இணைத்துப் புரிந்துக் கொள்ள வேண்டும்.” இரா.முருகவேள்.

ஆம், அரவிந்த் கேஜ்ரிவாலும், அவரது சகாக்களும் ஆம் அத்மிக் கட்சியைத் தொடங்குவதற்கு முன்பிருந்தே என்.ஜி.ஒ நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். அதுவும் அமரிக்க போர்டு பவுண்டேசனின் கட்டுப்பாட்டில்.

அமரிக்க போர்டு பவுண்டேசனுடைய கட்டுப்பாட்டில் செயல்படுகிற அரவிந்த் கேஜ்ரிவால் எப்படி சாதாரண மக்களுக்கான கட்சியை நடத்த முடியும்? எப்படி ஊழலை ஒழிக்க முடியும்?

கார்ப்பரேட் நிறுவனங்களும்- பவுண்டேசன்களும்.

பவுண்டேசன்களை இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அமெரிக்காவின் முதலாளித்துவ சிக்கல்களோடு இணைத்துப் புரிந்துக் கொள்ள வேண்டும். இரண்டு உலகப் போர்கள் என்பது இங்கிலாந்து உட்பட அனைத்து முதலாளிய நாடுகளையும் பேரிழப்புகளுடன் படுக்கையில் கிடத்தியது. ஆனால் நேரடிப் பாதிப்புகள் இல்லாமல் ஆயுத விற்பனையில் பெரும் லாபமடைந்த அமெரிக்கா மட்டும் பெரும் தொழில் நிறுவனங்களை-கார்ப்பரேட்டுகளை வளர்த்துக் கொண்டு முதலாளிய சாம்ராஜ்யத்தின் தனிப்பெரும் சக்தியாக நின்றது.

அதே நேரத்தில் அமெரிக்காவின் முதலாளித்துவமும் நிலைத்து நிற்க முடியாத சூழலை கம்யூனிசம் உருவாக்கியிருந்தது. முதலாளித்துவத்தின் லாபவெறிதான் உலகப் போர்களைக் கொண்டு வந்தது. ஜெர்மன் பாசிசத்துக்கு காரணமும் முதலாளித்துவம்தான். ஆனால் இதனை முறியடித்து உலகைக் காப்பாற்றியது கம்யூனிசம். ஆகவே முதலாளித்துவம் வேண்டாம், கம்யூனிசமே வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக இருந்தது. இரசியாவைத் தொடர்ந்து சீனா, வியத்நாம்,க்யூபா எனப் புரட்சி அலை முன்னேறிக் கொண்டிருந்தது. ஜெர்மன் பாசிசத்தை வேரோடு அழித்த இரசியாவை ஆதரித்து ஐரோப்பிய கண்டமெங்கும் சிவப்பு நாடுகள் முளைத்துக் கொண்டேயிருந்தன.

கம்யூனிசத்தை ஒழித்தால்தான் நிலைக்க முடியும் என்பதை அமெரிக்காவின் முதலாளிகள் உணர்ந்தனர். கார்ப்பரேட்டுகள் செயல்பட்டன. கம்யூனிசத்தை ஒழிக்கவும் முதலாளித்துவத்தை விரிவாக்கவும் ஏராளமான நிதியாதாரத்துடன் பவுண்டேசன்கள் உருவாக்கப்பட்டன. இப்படித்தான் போர்டு பவுண்டேசன், ராக்பெல்லர் பவுண்டேசன் போன்றவைத் தோன்றின.

முதலாளித்துவக் கொள்ளையும், சுரண்டலும் ஞாயமானது என நிறுவுவதற்கு பவுண்டேசன்கள் பணத்தை வாரியிறைத்தன. இந்த சூழ்ச்சிகர செயலில் அமெரிக்காவின் அனைத்து அதிகார வர்க்கங்களும் முழுமூச்சோடு செயல்பட்டன.

ராக்பெல்லர் பவுண்டேஷனை நிறுவியவர்களில் ஒருவர் அன்றைய அதிபர் ஜான் கென்னடி. அன்றைய அரசு செயலரான டீன் ரஸ்க் என்பவர்தான் பவுண்டேசனின் முதல் செயலர். சி.ஐ.ஏ-வின் தலைவராக இருந்த வில்லியம் கால்பி இதன் தலைவராக வந்திருக்கிறார்.

சி.ஐ.ஏ-வுக்கும் போர்டு பவுண்டேசனுக்கும் உள்ள உறவை ஜேம்ஸ் பெட்ராஸ் எனும் அமெரிக்க எழுத்தாளர் நிறையவே எழுதியுள்ளார்.போர்டு பவுண்டேசனுக்கும் சி.ஐ.ஏ-வுக்கும் இணைப்பாக மூன்று பேர் கொண்ட சிறப்புக் கமிட்டியே உண்டு. இதன் தலைவராக ஜான் மேக்கிளாய் என்பவர் இருந்துள்ளார். இது குறித்து இஜாஸ் அகமது,பி.ஜே.ஜேம்ஸ், இரா.முருகவேள், ஜமாலன் என ஏராளமானோர் எழுதியும்,பேசியும் வருகின்றனர்.

பவுண்டேசன்கள் உலகெங்கும் வலை விரித்தன.முதலாளித்துவத்திற்கும்,அமெரிக்காவுக்கும் ஆதரவான கைக்கூலி அறிவாளிகள் உருவாக்கப்பட்டனர்.முற்போக்கு வேடமனிந்திருந்த அரைவேக்காடு அறிவுஜீவிகள் விலைக்கு வாங்கப்பட்டனர். இந்தியா உட்பட பல நாடுகளின் பல்கலைக்கழகங்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களோடு இணைக்கப்பட்டன. நீண்டகாலத் தேவைக்கான அடிமை சேவைப் பிரிவினர் தயாரிக்கப் படுகின்றனர்.

இவர்களைக் கொண்டுதான் அரசு சாரா நிறுவனங்கள் எனும் என்.ஜி.ஒ-க்கள் உருவாக்கப்பட்டன.

ஆக அமெரிக்கா முதலாளித்துவத்தை நிலைநிறுத்தவும், விரிவாக்கவும் கார்ப்பரேட்டுகளின் பணத்தை அள்ளிக்கொட்டி நடத்திக் கொண்டிருப்பதுதான் என்.ஜி.ஒ-க்கள். அரவிந்த் கெஜ்ரிவாலின் என்.ஜி.ஒ-வும் அப்படியானதுதான்.

கம்யூனிச எதிர்ப்புக்கு அப்பாலும் கார்ப்பரேட்டுகளின் என்.ஜி.ஒ-க்கள்

பவுண்டேசன்களின் கம்யூனிச எதிர்ப்புப் பணிகள்-சோவியத் எதிர்ப்பு,பனிப்போர்,தோழர் ஸ்டாலின் மீதான அவதூறுகள், இவையனைத்துக்குமான சினிமா,இலக்கியம்,எல்லாவற்றிலும் செல்வாக்கு செலுத்திய பின்நவீனத்துவம்,இவற்றிற்குப் பின்புலமாக இயங்கிய என்.ஜி.ஒ-க்கள் குறித்து உலகம் அறியும்.

ஆனால் இத்தோடு கார்ப்பரேட்டுகளின் பணிகள் முற்றுப்பெறவில்லை என்பதே உண்மை.அதைத்தான் கேஜ்ரிவால் போன்ற என்.ஜி.ஒ-க்களின் அரசியல் பிரவேசம் உணர்த்துகிறது.

இந்தியாவில் என்.ஜி.ஒ-க்களின் அரசியல் பிரவேசங்கள் புதிதல்ல. அதில் போர்டு பவுண்டேசனுக்கு உள்ளத் தேர்ச்சிக் குறைவானதல்ல.

போர்டு பவுண்டேசன் முதன்முதலாக கால்பதித்த வெளிநாடு இந்தியாதான். 1947 அதிகார மாற்றத்துக்குப் பின் வெளிநாட்டு மூலதனத்துக்கு இந்தியா எட்டுத் திக்கும் பறந்தது. இந்தியாவின் எதிர்பார்ப்பில் அமெரிக்கா முக்கியமானதாக இருந்தது. முதலீட்டைச் செய்ய விரும்புகிறவன் அதற்கானப் பாதுகாப்பும்,பலனும் கிட்டுமா என தெரிந்துதானே இறங்குவான். அப்படித்தான் 1950-களின் தொடக்கத்தில் பவுண்டேசனின் தலைவர் பால்ஹார்ப்மேன் இந்திய வந்தார். அவர் இந்தியாவின் நிலைமைகளை ஆராய்ந்துவிட்டு வைத்த முழக்கம்தான் ‘சீனாவை இழந்துவிட்டோம்- இந்தியாவை இழக்க மாட்டோம்’.

அப்போது சீனா கம்யூனிச நாடாக இருந்தது. இந்தியாவிலும் வீரத் தெலுங்கானாவை தொடர்ந்து கம்யூனிச தாக்கம் பரவலாகவே இருந்தது. இந்தியாவில் தலித்துகள், பழங்குடியினர், பெண்கள் ஆகியப் பிரிவினர்களிடம் எளிதில் கம்யூனிசம் பரவும் என பவுண்டேசன் தீர்மானித்தது. அதற்கான மாற்றை உடனடியாக செய்ய களமிறங்கியது. அரசுக்கு ஆதரவான அறிவுஜீவிகளை உருவாக்கும் பணி முதன்மையாக்கப்பட்டது. அதற்காகமுற்போக்கு இயக்கங்கள் மற்றும் இலக்கியம் அறிவுத்துறையில் உள்ள விலைபோகும் நபர்கள் வாங்கப்பட்டார்கள். தொடர்ச்சியான செயல்பாட்டாளர்களை உருவாக்க இந்தியப் பல்கலைக்கழகங்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களோடு இணைக்கப்பட்டன. இந்திய மாணவர்கள் பவுண்டேசனின் தயவில் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர். தலித்துகள் பெரும்பான்மையாக இதற்காக தேர்வுச் செய்யப்பட்டனர்.

இவர்களின் பின்புலத்தில் 1980-களில் என்.ஜி.ஒ எனப்படும் தொண்டு நிறுவனங்கள் நிறுவப்பட்டன. தலித் ஆதார மையங்கள் உருவாக்கப்பட்டன. தலித் ஆதார மையங்கள் அம்பேத்கரையும், இரட்டைமலை சீனிவாசனையும், அயோத்திதாசரையும் முன்னிலைப்படுத்தி தீவிரப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டது.(இப்போது காந்தியம் குறித்து தீவிரப் பிரச்சாரம் செய்யப்படுவதை நினைவில் கொள்க.) தலித் அரசியலும்,அதற்கான கட்சிகளும் உருவாக்கப்பட்டன.

என்.ஜி.ஓ-க்களும், பவுண்டேசன்களும் கார்ப்பரேட்டுகளின் அரசியல் நடவடிக்கைகளுக்கானதே

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னால் உலகத்தின் முன் ஒருக் கேள்வி உயர்ந்து நின்றது. அது என்னவென்றால், இனி உலக மக்கள் பின்பற்ற வேண்டியது லாபவெறியால் உலகை போர் மற்றும் துன்பத்துக்குள்ளாக்கும் முதலாளித்துவப் பாதையா? அல்லது, மக்களின் வாழ்க்கையை மக்களேத் தீர்மானிக்கும் கம்யூனிசப் பாதையா? என்பதாகும். நெருக்கடியை உணர்ந்த மக்கள் கம்யூனிசத்தையே தேர்ந்தெடுத்தனர். உலகில் பாதிக்கும் மேலான நாடுகள் கம்யூனிச நாடுகளாயின.

இந்த நிலமையை உணர முடிந்த அமெரிக்காதான் பவுண்டேசன்களையும், அதன் மூலமான என்.ஜி.ஓ-க்களையும் உருவாக்கியது. அது ஒரு அரசியல் நடவடிக்கை. பவுண்டேசன்களும், என்.ஜி.ஓ-க்களும் கார்ப்பரேட்டுகளின் அரசியல் நடவடிக்கைக்கான நிறுவனங்கள். அவை அரசியல் பணிகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டிய காலம் எப்போதும் இருந்ததில்லை; முதலாளித்துவமும், கார்ப்பரேட்டுகளும் இருக்கும் வரை அப்படி ஒரு காலம் வரப் போவதும் இல்லை.

லாபவெறியை தன்னால் தவிர்க்க முடியாது என்பதுப் போலவே அதனால் ஏற்படும் மக்களின் போராட்டங்களையும் தவிர்க்க முடியாது என்பதை கார்ப்பரேட்டுகள் உணர்ந்துதான் இருக்கின்றன. இங்கே கார்ப்பரேட்டுகள் எதை தவிர்க்க முடியுமென கற்று முன்னேறிக் கொண்டிருக்கின்றனவென்றால் மக்களின் போராட்டங்கள் சமூக மாற்றத்தை நோக்கி செல்லாமல் தவிர்க்க முடியுமென கற்றுணர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கின்றன.

ஆம்,பனிப்போரின் மூலம் உலகில் கம்யூனிசத்தைப் பின்னடைவுக்குள்ளாக்கியப் பிறகு மக்களிடையே போலி அமைப்புகளை உருவாக்குவது கார்ப்பரேட்டுகளுக்கு சாத்தியமாகியிருக்கிறது. இப்போலி அமைப்புகளை உருவாக்குவதற்கு பெரும்பாலும் என்.ஜி.ஓ-க்களே பயனளித்திருக்கிறார்கள். 1990-களில் தமிழ்நாட்டில் பாதர் சேவியர்அருள்ராஜ் என்பவர் உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். இது போர்டு பவுண்டேசன் பின்புலத்திலானதென அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிற எல்லோருக்கும் தெரியும். இந்தியாவில் பிழைப்புவாத தலித் இயக்கங்கள் உருவானதன் பின்னணியிலும் பவுண்டேசன்கள் இருந்ததை மறந்து விடக்கூடாது.

போலி இயக்கங்களைக் கட்டுவது இந்தியாவில் எளிதானதாகவே இருக்கிறது. காங்கிரசு கட்சியேக் கூட வெள்ளை ஏகாதிப்பத்தியத்துக்கு எதிரான மக்களின் போராட்டத்தை மழுங்கடிப்பதற்கு வெள்ளை ஏகாதிப்பத்தியமே கட்டிய போலி அமைப்புதான். கார்ப்பரேட்டுகள் உலகில் பல இடங்களில் போலிகளை உருவாக்குகின்றன. அரபுலக நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பல ஆயுதக் குழுக்களைக் கூட கார்ப்பரேட்டுகள் உருவாக்குகின்றன. அவற்றில் சில கர்ப்பரேட்டுகளுக்கே எதிராக மாறிவிடுவதுண்டு. அல்காய்தா அப்படியொரு தலைவலியாக மாறிப் போயிருப்பதை நாமறிவோம்.

ஆனால் இந்தியாவில் போலி இயக்கங்களைக் கட்டுவது எளிதானதாகவே இருக்கிறது. அதற்கான ஒரே காரணம் என்னவென்றால், எதிரியைப் புரிந்துக் கொள்கிற வலிமை மக்கள் இயக்கங்களுக்கு இல்லாததேயாகும்.

1950 தொடக்கத்தில் போர்டுபவுண்டேசன் இந்தியாவில் நுழையும்போதே அது தனக்கான அரசியலை முன்வைத்துதான் நுழைந்தது. “கம்யூனிசத்திடம் சீனாவை இழந்து விட்டோம்- இந்தியாவை இழக்க மாட்டோம்” என்ற முழக்கத்துடன்தான் பவுண்டேசன் வந்தது. அப்படி வந்தவர்கள் இதியாவை ஆய்வு செய்தார்கள். இங்கு தலித்துகள், பெண்கள், பழங்குடியினர் மிகவும் நலிந்தப் பிரிவினராக உள்ளனர். ஆகவே இவர்களிடம் எளிதாக கம்யூனிசம் காலூன்றும். அதைத் தடுக்கிற அரசியல் பணியை தொடங்கி தீவிரப் படுத்த வேண்டும் என்றுதான் இங்கு என்.ஜி.ஓ-க்கள் உருவாக்கப்பட்டனர்.

நலிந்தப் பிரிவினரிடையே கம்யூனிசம் பரவாமல் இருப்பதற்கான காரணங்கள் மறைந்து விட்டனவா? இல்லை , இன்னமும் அதிகரித்திருக்கிறது.நலிந்தப் பிரிவினரின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. இஸ்லாமிய சமூகத்தைப் பொறுத்தவரை ஓட்டுமொத்த மக்களும் நெருக்கடிக்குள்ளாக்கப் பட்டிருக்கிறார்கள். பிரித்தாளும் சூழ்ச்சியாலும், வாழ்வாதாரச் சூறையாடலா லும் தேசிய மற்றும் பழங்குடி இனங்களிடையே முரண்பாடுகள் அதிகரித்திருக்கிறது.

இந்நிலைமைகள் அனைத்தும் கார்ப்பரேட்டுகளையும், அவற்றின் பவுண்டேசன்களையும் ,அவைகளின் என்.ஜி.ஓ-க்களையும் இடைவிடாது இயங்கவே நிர்பந்திக்கின்றன. சமூகச் சூழலை உடனுக்குடன் உணர்ந்துக் கொள்ள ஆயிரமாயிரம் அரச நிர்வாகிகளின் கீழிருக்கும் அவர்களும் இயங்கி கொண்டேதானிருக்கின்றனர். இன்றைக்கும் தலித் இயக்கங்களுக்கான வகுப்புகளும்,பயிற்சிகளும் பவுண்டேசனின் என்.ஜி.ஓ-க்களால் பெங்களூரிலும், டெல்லியிலும் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. சாதியாதிக்க சக்திகளிடையே மக்களைப் பிரித்தாளுவதற்காக நன்கு பயிற்சியளிக்கப்பட்ட நபர்கள் அனுப்பப் படுகிறார்கள். தமிழ்நாட்டில் ஈழப் பிரச்சினையை கையாள்வதற்கு பால்நியூமன், கஸ்பர் போன்ற பவுண்டேசனின் ஏவாஞ்சலிக்கல் சர்ச் ஆட்களே முன்நிற்கிறார்கள்.

ஆக என்.ஜி.ஓ-க்களும், பவுண்டேசன்களும்என்றாலே அவை கார்ப்பரேட்டுகளின் அரசியல் நடவடிக்கைகளுக்கானதே. அரசியல் நடவடிக்கை என்பது அதற்கான அமைப்பைக் கட்டுவதே. அதில் கட்சியும் அடங்கும். ஆம் ஆத்மி அப்படியானதொரு எதிர் புரட்சிக் கட்சிதான் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆம் ஆத்மியும் – வரலாற்று எச்சரிக்கைகளும்

‘இந்தியாவில் பெரும்பான்மையான நிறுவனங்கள் நேர்மையாக நடக்கின்றன. சிலர் மட்டுமே ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். நான் பெரும்பான்மையானவர்களின் பக்கம் நிற்பேன்’- இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் (சி ஐ ஐ ) கூட்டத்தில் கெஜ்ரிவால் .

நாங்கள் வெளிநாட்டு முதலீட்டுக்கு எதிரானவர்களல்ல – ஊடகங்களிடம் கெஜ்ரிவால் .

இந்த உத்தரவாதமும், இன்போஸிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதியதிகாரி பாலகிருஷ்ணன் போன்றோர்கள் ஆம் ஆத்மிக் கட்சியில் இணைவதும் சாதாரணச் செய்திகளல்ல.

1. ஊழல்

ஊழலென்பது தனியுடமையின் உடன்பிறப்பு. இதனை காரியம் சாதிப்பவர்கள் வாய்ப்புகளைத் தவற விடாமல் இருக்கவும், விரைவாக கடமையாற்றவும் அவசியமான கூடுதல் செலவு எனப்படுகிறது.

காரியமாற்றுகிறவர்களையும், காரியம் சாதிப்பவர்களையும் ஊழலோடு நெருக்கமாகப் பிணைத்து வளர்த்தெடுத்திருக்கிறது இன்றைய முதலாளித்துவமும், அதன் கார்ப்பரேட்டுகளும்.

மக்களின் வளங்களை, வாழ்வாதாரங்களைக் கொள்ளையடிப்பதற்கு; மக்களின் பணத்தை கடனாகப் பெறுவதற்கு, திருப்பி செலுத்தாமல் இருப்பதற்கு; மானியங்கள் பெறுவதற்கு என நிறுவனங்களுக்கிடையில் போட்டிகள் இருக்கிறது. இந்தப் போட்டியில் காரியம் சாதிப்பதற்கு நிறுவனங்கள் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் தாராளமாக கையூட்டளிக்கிறது. (இன்றைய எல்லா ஊழல்களும் பல இலட்சம் கோடிகளில்தான்).

ஆட்சியின் மூலமாக காரியம் சாதிப்பதற்குதான் ஒவ்வொருக் கட்சிக்குப் பின்னாலும் சில நிறுவனங்கள் பின்புலமாக இருக்கின்றன. டாடா போன்றவர்கள் காங்கிரசுக்குப் பின்னணியாகவும், அம்பானிகள் பி.ஜே.பி-க்குப் பின்னணியாகவும் இருப்பது வெளிப்படையானதே. இவர்களை எதிர்கொள்ள முடியாத தொழிலதிபர்கள் நேரடியாக கட்சித் தொடங்குவதும் உண்டு. எஸ்.ஆர்.எம் கல்லூரிகள் மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனங்களின் அதிபர் பிச்சைமுத்துவின் ஐ.ஜே.கே-யை நினைவில் கொள்க.

நிறுவனங்கள் காரியம் சாதிப்பதற்குப் பின்னணியாக இருந்து பலனடைந்த கட்சிகளும், அரசியல்வாதிகளும் கார்ப்பரேட்டுகளின் அதிபர்களாக மாறிவருவதற்கு தி.மு.க நல்ல உதாரணம்.

ஆக தொழில்நிறுவனங்கள் அரசியல் பின்னனியில் இருப்பதும், அரசியல் கட்சிகளின் பின்னனியில் தொழில்நிறுவனங்கள் உருவாக்குவதும் இயல்பாக இருக்கிறது. ஆகவே இவர்களின் காரியம் சாதித்தல் தீவிரமாகியுள்ளது. இப்படி காரியங்கள் நடப்பதும், அதற்கு கைமாறுச் செய்வதும் சட்டப்பூர்வமாக்கப் பட்டுள்ளது. நிறுவனங்கள் தேர்தல் நிதி, கட்சி வளர்ச்சி நிதியளிப்பது அங்கீகரிக்கப்பட்டதே. நிதியளிப்பு கோடிகளில்தான் என்பதை மறந்துவிடக் கூடாது. (அரவிந்த் கெஜ்ரிவாலே 4.5 கோடிகள் வாங்கும்போது போது…)

தவிர இப்போது நிறுவனங்களுக்கும், கட்சிகளுக்கும் இடையே நடக்கின்ற கைமாறுகள் அறிவியல்பூர்வமான பேரங்களாக வளர்ச்சியடைந்துள்ளது. ஆம், கார்ப்பரேடுகளால் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலும், உலக வங்கி மற்றும் வர்த்தகக்கழகங்களிலும், பவுண்டேசன்களிலும் பயிற்றுவிக்கப்பட்ட மாண்டேக்சிங், மன்மோகன், ப.சிதம்பரம் போன்றவர்கள் நிறுவனங்களின் லாபங்கள் எவ்வளவு மதிப்பு மிக்கதென தெளிவுடன் இருக்கிறார்கள். ஆதலால் தமக்குரியப் பங்குகளை விட்டு கொடுக்காமல் பெற்றுவிடுகிறார்கள். அதனால்தான் ஊழல்கள் இலட்சக்கணக்கான கோடிகளுக்குக் கீழ் நடப்பதில்லை.

தவிர்க்க முடியாததாக வர்ந்துவிட்ட இந்த ஊழலுக்கு நிதி ஒதுக்கீடு என்பது ஒருத் தொழிலுக்கான முதலீட்டின் அம்சமாகவே மாறியுள்ளது. தொழில் தொடங்குவதற்கான செலவுகளில் இடம், கட்டுமானம், இயந்திரம், மனித ஆற்றல்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் இருப்பதுப் போலவே ஊழலுக்கான நிதியும் ஒரு பாகமாகிவிட்டது. அதுவும் தொழில் குறித்து விளம்பரம் என்றப் பேரிலேயே ஊழலுக்கு செலவுச் செய்வதுதான் முதன்மையாகிப் போனதை வால்மார்ட் விவகாரத்தில் தெரிந்திருக்கும். வால்மார்ட் இந்தியாவில் நுழைவதை விளம்பரப் படுத்தவே பல நூறுகோடிகள் செலவுச் செய்ததாக அமெரிக்க செனட்டில் கணக்கு வாசிக்கபட்டது.

ஆக ஊழல் என்பதே கார்ப்பரேட்டுகளின் விளைப்பொருளாகத்தான் இருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலும், ஆம் ஆத்மியினரும் இந்த உண்மையை மறைக்கிறார்கள். ஊழல் ஏதோ தனிநபர்களின் பேராசையால் நடப்பதுப் போல் காட்டி கார்ப்பரேட்டுகளைக் காப்பாற்றுகிறார்கள். அதனால்தான் சாதாரண மக்களுக்கான கட்சியில் நிறுவன அதிபர்கள், உயரதிகாரிகள், மேட்டுக்குடியினர் மற்றும் திரு. ஜமாலன் சொல்வதுப் போல ராக்பெல்லர் பவுண்டேசனால் மகாசேசே விருதளித்து அடையாளம் காட்டப்படும் நபர்களும் பொறுப்பாளராகுகின்றனர்.

இது சாதாரண மக்களை ஏமாற்றி கார்ப்பரேட்டுகளுக்குப் பலி கொடுக்கும் சதியாகும்.

2. காந்தீயம்

காந்தீயம் என்பது அப்பட்டமான சூழ்ச்சியும், வஞ்சகமும் நிறைந்த முதலாளித்துவ- கார்பரேட் கொள்கை. அது பவுத்தம், சமணம் போல மக்களை எளிமையாகவும், தங்களைத் தாங்களே வருத்திக் கொள்ளவும் பயிற்றுவிக்கிறது.

காந்தீயம் சமூகத்தின் எல்லா கொடுமைகளையும் கவனத்துக்குக் கொண்டு வருகிறது. அவற்றுக்கெதிராகப் போராடவும் தூண்டுகிறது. போராட்ட வடிவங்களாக உண்ணாவிரதம், சத்தியாகிக்கிரகம் போன்ற வதைப்படும் வடிவங்களைத் திணிக்கிறது. போராட்டங்கள் தாக்குதலுக்குட்படுத்தப்படும் போதும் எதிர்வினையாற்ற விடாமல் செயலற்றுப் போகச் செய்கிறது.

இதன் மூலம் வதைப்படலை சமூகம் இயல்பானதாக ஏற்றுக் கொள்ளச் செய்கிறது. ( இப்போது நமக்கு கூடங்குள போராட்டம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது ). வதைப்படலும், வருத்திக்கொள்ளலும், வலி தாங்குவதும் மக்களுக்குப் பயிற்றுவிக்கப் படும்போது சமூகக் கொடுமைகளின் வலி நீர்த்துப் போகச் செய்யப்படுகிறது. வலி தாங்குவதும், வறுமையில் வாடுவதும் சமூக உளவியலாக இதனால் சமூகக் கொடுமைகளுக்குக் காரணமான ஆளும்வர்க்கத்தின் பாத்திரம் மறைக்கப்படுகிறது.

ஆளும்வர்க்கம் எளிதாக காப்பாற்றப்படுகிறது. அதனால்தான் ஒரிஜினல் காந்திக்கு பிர்லாக்கள் தாராளமாக நிதி வழங்கிப் பின்புலமாக இருந்ததுப் போலவே காந்தியின் இன்றைய நகல்களுக்கும் பல்வேறு முதலாளிகள் நிதியினை அள்ளிக்கொட்டிப் பின்புலமாக இருக்கிறார்கள். அன்னாஹசாரேக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் வரும் நிதியை எல்லோராலும் கண்டுப் பிடிக்க முடியும்.

இது சாதாரண மக்கள் ஆளும்வர்க்கத்துக்காக தங்களைத் தாங்களே பலி கொடுக்க வைக்கும் பார்ப்பனிய வழிமுறையாகும்.

3. காந்தீயத்தை நிலை நிறுத்துவதற்குப் பின்னாலுள்ள சதிகள்.

எந்த ஒன்றையும் மக்களை ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கு முன்னால் அதற்கானச் சூழலை உருவாக்கி விட வேண்டும் என்பது முதலாளித்துவ நடைமுறையாகும். உணவு, உடை, அழகு மற்றும் ஆடம்பரப் பொருட்கள், மருந்துகள் என முதலாளித்துவம் தன் உற்பத்தியை மக்களிடம் சந்தைப் படுத்துவதற்குப் பின்பற்றும் முறைதான் இது. இது எவ்வளவு கொடூரமானது என்பதை மருந்து விற்பதற்காக நோய்களையே உருவாக்கும் சதியறிந்தவர்களுக்குப் புரியும். அப்படித்தான் முதலாளித்துவக் கொள்கைகளும் கொண்டுவரப் படுகின்றன.

“நிறுவன – அதிகாரவர்க்கம் என்பது ஒரு சாதாரண சதிக் கும்பலல்ல ; அது சில பொதுவான மதிபீடுகளையும், இலட்சியங்களையும் முன்னிறுத்தியுள்ளது. இந்த வர்க்கத்தின் மிக முக்கியப் பணிகளில் ஒன்று இந்த அமைப்பை நிலை நிறுத்துவதும், அதை விரிவுப் படுத்துவதுமாகும்…. பொருட்களை வாங்குவது மறுக்க முடியாத கடமை; பூமியைக் கொள்ளையிடுவது பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததுப் போன்றக் கருத்துக்கள் நம் மீது திட்டமிட்டுத் திணிக்கப்படுகின்றன. இக்கருத்தை நம் மீது திணிக்க சாத்தியமான எல்லா வாய்ப்புகளும் பயன்படுத்தப் படுகின்றன.இந்த அமைப்பிற்கு பூமியை ஏலம் கோருவதற்கான வேலையை செய்வதற்கு என்னைப் போன்ற பொருளாதார அடியாட்களுக்கு ஏராளமாகப் பணம் கொட்டிக் கொடுக்கப்படுகிறது. நாங்கள் எங்கள் வேலையில் தோல்வியடைந்தால் இன்னும் மோசமான பொருளாதார குள்ளநரிகள் அரங்குக்கு வருவார்கள். அவர்களும் தோல்வியடையும் பட்சத்தில் அந்த வேலை இராணுவத்தின் தலையில் சுமத்தப்படும்.” ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்- ஜான் பெர்க்கின்ஸ். (தமிழில்- இரா. முருகவேள்)

இந்த வழிமுறையிலேயே ஆப்கன், இராக் போர்கள் உட்பட இன்றைய அரபுலக உள்நாட்டுப் போர்களும் நடக்கின்றன. கார்ப்பரேட்டுகள் உலகெங்கும் தனது அரசியலை, அதிகாரத்தை நிலைநாட்ட ஒவ்வொரு நாட்டிலும் உள்ள முரண்பாடுகளைப் பயன்படுத்துகிறது. இனம், மதம், நிறம் அடிப்படையிலானப் பிரச்சினைகளை கையிலெடுக்கின்றன. ஆதி வெறிப்பிடித்த மோதல்களாக, கலவரங்களாக, போர்களாக மாற்றுகின்றன. பின்பு இதனைப் பயன்படுத்தி தனது அரசியலை, அதிகாரத்தை நிலைநாட்டுகின்றன. இதியாவிலும் பொருளாதார அடியாட்களின் செயல்பாடும், கார்பரேட் சதிகளும் உள்ளதை நீராராடியாவின் செயல்பாட்டை பார்த்தவர்களால் புரிந்துக் கொள்ள முடியும்.

இந்திய ஆளும்வர்க்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் அரசுக்கெதிரானப் போராட்டங்களைத் தீவிரப் படுத்துகிறது. நாடெங்கும் நடக்கின்றப் போராட்டங்கள் அனைத்திலும் இல்லாவிட்டாலும் சில இடங்களில் நடக்கும் முக்கியத்துவமானப் போராட்டங்கள் முதலாளித்துவத்துக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் கொள்கை ரீதியாக குழிப் பறிக்கிறப் போராட்டங்களாக உள்ளன. மாவோயிஸ்டுகளின் தலைமையிலான அப்போராட்டங்கள் சமூக மாற்றத்தையும், அதற்கான கம்யூனிசக் கொள்கையையும் உயர்த்திப் பிடிக்கின்றன. இது ஆளும்வர்க்கத்தைத் தீவிரமாக செயல்படத் தூண்டவேச் செய்கிறது. அவர்களுக்கு மக்களை மடை மாற்ற வேண்டியத் தேவை இருக்கிறது .அவர்கள் தீவிரமாக செயல்படுகிறார்கள்.

ஏற்கனவே இந்தியாவை கம்யூனிசத்திடம் இழக்க மாட்டோம் என்று சூழுரைத்தவர்கள் தீவிரமாக செயல்படவேச் செய்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கும் தலித்தியம், சாதியாதிக்கவாதம், இனவாதம், இவற்றிற்கெல்லாம் துணையானப் பின்னவீனத்துவம் ஆகியவற்றின் போதாமையை உணர்ந்திருக்கிறார்கள்.

இதன் பின்னணியிலேயே திரு. ஜமாலன் சொல்லுகிற- “2009 இல் இந்து சுவராஜ் என்கிற காந்தியின் முக்கியமான சித்தாந்த நூலின் நூற்றாண்டு விழா தலாய் லாமாவால் துவக்கி வைக்கப்பட்டு தொடர்ந்துக் கொண்டாடப்படுகிறது. காந்தி மீள் வாசிப்பிற்குள்ளாகும் அறிவுத் தளத்திலான செயற்பாடுகள் நிறைய நடக்கின்றன….” என்பதைப் பார்க்கவேண்டும். அம்பேத்கர் நூற்றாண்டு விழாக்களும் , பவுண்டேசன் பின்புலத்திலான தலித் இயக்கங்களும் இப்படிதான் முன்னுக்கு வந்தன.

ஆனால் மாவோயிஸ்டுகளை காரணம் காட்டி கம்யூனிச எதிர்ப்பாக காந்தீயத்தை ஆளும்வர்க்கத்தால் முன்வைக்க முடியாது. அது ஆளும்ம்வர்க்கத்தின் பொருளாதாரக் கொள்கையின் மீதும், சமூக நெருக்கடியின் மீதுமான கேள்வியாக மாறிவிடும். அதனால் பொருளாதாரமல்லாத வேறு நெருக்கடியை முன்னிலைப் படுத்த வேண்டும்.

அப்படி இப்போது முன்னிலைப் படுத்த்ப்படும் நெருக்கடி ஊழல் மட்டுமேயல்ல. மதப் பயங்கரவாதமும், பெண்கள் மீதான பாலியல் பயங்கரவாதமும்தான். இவை எப்போதும் சமூக அச்சுறுத்தல்களாக இருப்பது உண்மைதான். அதை ஒழித்தேத் தீர வேண்டுமென்பதும் உண்மைதான். ஆனால் இப்போது தீவிரப் படுத்தப்படும் இச்செயற்பாடுகளின் பின்னால் கார்ப்பரேட்டுகளின் சதி இருக்கலாம் என்பதுதான் நம்மை அச்சுறுத்துகிறது.

மதப் பயங்கரவாதத்தையும், பாலியல் பயங்கரவாதத்தையும் தூண்டிவிட்டு காந்தீயத்தை கொண்டு வருவதால் கார்ப்பரேட்டுகளும் அடைகிற இலாபம் என்ன? மக்கள் அடைகிற இழப்பு என்ன? என்பதிலேயே ஆம் ஆத்மியின் அபாயம் அடங்கியிருக்கிறது.

Exit mobile version