பல ஆயிரங்களை கொட்டி நீங்கள் நிகழ்த்திய மாவீரர் தினத்தின் அலங்காரங்கள் கலைவதற்கு முன்பாகவே மக்கள் போராட ஆரம்பித்துவிட்டார்கள்.
தமிழ்ப் பேசும் மக்கள் ஆயிரம் ஆயிரமாய்க் கொன்று குவிக்கப்பட்ட மண்ணின் ஒவ்வொரு அங்குலத்தையும் பேரினவாத அரசு திட்டமிட்டுச் சூறையாடுகிறது. வன்னி பெரு நிலம் என்று நீங்கள் பெருமையடித்துக்கொண்ட மண்ணின் 30 வீதத்தை ஆக்கிரமித்தாகிவிட்டது.
மூதூர், சம்பூர், அம்பாறை என்று கிழக்கு மாகாணத்தின் நிலம் பல்தேசியக் கம்பனிகளின் வியாபரப் பசிக்கும் சிங்கள பௌத்த இனவாத வெறிக்கும் இரையாக்கப்படுகின்றது. நிங்கள் பேச்சு நடத்திப் புழகாங்கிதம்டையும் அமரிக்கக் கம்பனிகள், ஐரோப்பிய நிறுவனங்கள், இந்திய வியாபாரிகள் எல்லோரும் கோரப்பற்களோடு மக்கள் குடியிருப்புக்களை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள்.
பேரினவாதிகளும் பல்தேசிய நிறுவனங்களும் இணைந்தே இந்த ஆக்கிரமிப்பை நடத்துகிறார்கள். இராணுவக் குடியிருப்புகளும், பல்தேசியக் கம்பனிகளும் அருகருகே “பாதுகாப்பாக” பக்கத்துவீட்டுக் காரர்களாக மாறிவருகிறார்கள்.
இதற்கு புலம் பெயர் வியாபாரிகள் தம்மையும் நுளைத்துக்கொண்டு கொள்ளையடிக் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
எந்த மக்களுக்கு “உதவிசெய்வதாக” புலம்பெயர் நாடுகளில் நீங்கள் பணம் சேர்த்துக்கொண்டீர்களோ அந்த மக்கள் தெருவோரங்களில் அனாதைகளாக, அடிமைகளாக விரட்டியடிக்கப்படுகிறார்கள். பட்டினிச் சாவை எதிர் நோக்குகிறார்கள். பசியின் கொடுமையால் உடலை விற்கக்கூடத் தயாராக ஒரு வறிய மக்கள் கூட்டம் உருவாக்கப்படுகிறது. புலம்பெயர் நாடுகளில் அமரிக்காவை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டு ‘கலாச்சாரம் சீரழிகிறது’ என்ற உங்கள் கூக்குரல்கள் நாரசமாக ஒலிக்கிறது.
யாழ். மாதகல் கிராமத்தினை கடற்படையினர் ஆக்கிரமிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்களால் பேரணியும் மகஜர் கையளிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
05.12.2011 திங்கட்கிழமை முற்பகல் சண்டிலிப்பாய் அந்தோனியார் தேவாலய முன்றலில் இருந்து ஆரம்பமான பேரணியாக பிரதேச சபைச் செயலகத்தினைச் சென்றடைந்த மக்கள் பிரதேச சபைச் செயலரிடம் மனுவை கையளித்துள்ளனர்.
மாதகல் கிராமத்தினைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டிருந்தனர்.
இன்று பேரணி இடம்பெறுவதை அறிந்து கொண்ட இராணுவத்தினரும் பொலிஸாரும் குறித்த பகுதிகளில் பெருமளவில் குவிக்கப்பட்டு வாகனங்களும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
நாடுகடந்த தமிழீழ கனவான்கள் தமது அடையாள அட்டை வியாபாரத்தைத் தீவிரப்படுத்த ஆரம்பித்து விட்டனர். இலங்கை அரச கைக்கூலி கே.பிக்கும் குறுந்தேசியத்திற்கும் இடையே ஊசலாடிக்கொண்டிருக்கின்றனர்.
தமிழர் பேரவைகள் சோனியா காந்தியைத் தேடிக்கொண்டிருப்பார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருகோணமலையிலிருந்து மேற்கே திரும்பி ரோபேர் ஓ பிளேக்கை நோக்கித் தேவாரம் பாடிக்கொண்டிருப்பார்கள்.
இந்தியப் பழங்குடி மக்கள் நில ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடி வெற்றிபெறுகிறார்கள். நாளுக்கு நாள் குவிக்கப்படும் இராணுவத்தை புறமுதுகு காட்டி ஓடச் செய்கிறார்கள். நீங்கள் நம்பியிருக்கும் மனித கசாப்புக்கடைக் காரர்களிடம் அவர்கள் மண்டியிட்டுத் தம்மைக் காப்பாற்றும் படி இரஞ்சவில்லை. நீங்கள் அமரிக்காவிடமும், இந்தியாவிடமும், ஐரோப்பாவிடமும் உங்கள் கனவான்களின் உடைகளோடு மண்டியிடுவது அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாமில்லை. அப்படித் தெரிரிந்துகொண்டால் உங்களைக் கேலிச்சித்திரங்களாக வரைந்திருப்பார்கள்.
மாவீரர்தினம் நடத்தி மகிழந்தாகிவிட்டது. இனிமேல் பாலசிங்கத்திற்கு அஞ்சலிக் கூட்டம் நடத்தி அகமகிழ ஆயத்தமாகிவிடுவீர்கள். மக்களை மட்டும் மறந்துவிடுவீர்கள்.
இதுவரைக்கும் இலங்கையில் மக்கள் போராடுகின்ற போது எங்காவது மூலையில் நின்றாவது குரல் கொடுத்தீர்களா?
இப்போது இன்னொரு சந்தர்ப்பம். என்ன செய்வதாக உத்தேசம்?
நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இன்னும் சில வருடங்களில் தமிழ்ப் பேசும் மக்கள் செறிவாக வாழ்ந்த பிரதேசங்கள் இருந்ததாக புத்தகங்களில் மட்டுமே படித்தறியக் கூடிய நிலைமை உருவாகும்.
நிலத்தை ஆக்கிரமிக்கும் சிங்கள பௌத்த பெருந்தேசியவாத கொலைகாரர்களுக்கு எதிராகவும் பல் தேசிய முதலைகளுக்கு எதிராகவும் தெருவில் இறங்கிப் போராட நீங்கள் தயாரா?
வீரம் செறிந்த போராட்டத்தின் பங்குதாரர்கள் என்று கூறி பணம் கேட்க வரும் நீங்கள் இப்போது உங்கள் வீரத்தோடு இலங்கை இந்தியத் தூதரகங்களின் முன்னாலும், பல்தேசிய ஆக்கிரமிப்பாளர்களின் முன்னாலும் அணிதிரண்டு போராடத் தயாரா?
அல்லது போராடும் மக்களை அனாதைகளாகத் தெருக்களில் அலையவிட்டுவிட்டு ஐந்து நட்சத்திர விடுதிகளில் மனிதக் கசாப்புக்கடைக் காரர்களோடு விருந்துண்டு களிக்கப்போகிறீர்களா?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மின்னஞ்சல் அனுப்பினால் சில வேளைகளில் தெரிந்து கொள்வார்கள் தங்களுக்கு வாக்களித்த மக்கள் போராடுகிறார்கள் என்று.
ஒற்றுமை ஒற்றுமை என்று நீங்கள் போட்ட ஓலத்தில் அழிக்கப்படுக்கொண்டுருக்கும் தேசிய இனத்தின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க நீங்கள் தயாரானால் ஒற்றுமை தானாக உருவாகும்; சந்தர்பவாதிகள் தொலைந்து போய்விடுவார்கள்.
என்ன செய்யப்போகிறீர்கள்? போராடத் தாயரா??