“ரயாகரனின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, அபாண்டமானவை” என்று அருள் எழிலன், அருள் செழியன், சபா.நாவலன் ஆகியோர் கூறுகின்றனர். ரயாகரன் எழுப்பியிருப்பது பொய்க்குற்றச்சாட்டு என்றும் அது தங்களது தொழில், சமூக வாழ்வு, தனிப்பட்ட வாழ்வு ஆகியவற்றை பாதித்திருக்கிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர். இது தொடர்பான பகிரங்க விசாரணைக்குத் தயார் என்கின்றனர். இது குற்றம் சாட்டப்பட்டவர்களின் நிலை.
குற்றம் சாட்டிய இரயாகரன் அதனை நிரூபிக்கத் தயாராக இல்லை. “சம்பவம் உண்மை. அவர்களே அதை ஏதோ ஒரு வகையில் ஓத்துக்கொள்கின்றனர்” என்று மிக அலட்சியமாகப் பேசுகிறார். பிரச்சினையை தீர்ப்பதற்கு ம.க.இ.க முன்வைத்திருக்கும் இந்த வழிமுறையை குற்றவாளிகளைப் பாதுகாக்கின்ற வழி, என்றும் “எல்லா சந்தர்ப்பவாதிகளையும் பிழைப்புவாதிகளையும் பாதுகாக்கும் முயற்சி” என்றும் சாடுகிறார்.
இப்பிரச்சினையில் குற்றம் சாட்டியவரும், பிறகு குறுக்கு விசாரணை நடத்தியவரும், தீர்ப்பு வழங்கியவரும் ரயாகரன்தான். ம.க.இ.க வழங்கியிருப்பது தீர்ப்பு அல்ல. பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் குற்றமிழைத்தவரைக் கண்டறிவதற்குமான ஒரு வழிமுறை – அவ்வளவே. “இருதரப்பும் ஏற்றுக் கொள்ளுகின்ற ஒரு நடுநிலையாளர் இந்த விசாரணையை நடத்தட்டும்” என்று ம.க.இ.க வின் அறிக்கை தெளிவாகத்தான் குறிப்பிட்டிருக்கிறது.
இது இந்தப் பிரச்சினையை ஒட்டி நாங்கள் கண்டுபிடித்திருக்கும் வழிமுறையும் அல்ல. எமது அமைப்புத் தோழர் ஒருவர் தவறிழைத்திருப்பதாக ஊர்மக்கள் யாரேனும் குற்றம் சாட்டினால், சம்பந்தப்பட்டவர்களை நேரில் வைத்து பலர் முன்னிலையில்தான் விசாரிக்கிறோம். அதே வழிமுறையைத்தான் இப்பிரச்சினையிலும் முன்மொழிந்திருக்கிறோம். இது இரயாகரனுக்காகவோ, நாவலனுக்காகவோ பிரத்தியேகமாகத் உருவாக்கப்பட்ட வழிமுறை அல்ல.
“அத்வானி தலைமையில் இந்து பாசிட்டுகள் (மசூதியை) இடித்தனர் என்பதை, அதற்கு எதிராக போராடும் மக்கள் நிறுவ வேண்டும் என்று கோருவது போன்றது இந்த விடையம்” என்று கூறி ம.க.இ.க முன்வைக்கும் வழிமுறையை ரயாகரன் நக்கலடிக்கிறார். அவருடைய பாணியிலேயே பதில் சொல்கிறோம். அத்வானியின் குற்றத்தை நிரூபிப்பதற்கு மக்கள் தயாராகத்தான் இருக்கின்றனர். நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாமல், அத்வானிதான் சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பி ஓடி ஒளிகிறார். இது ரயாகரனுக்கு தெரியாது போலும்!
இரயாகரன் முன்வைக்கும் வழிமுறை என்ன? ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றம் சாட்டி, அறிக்கை – மறுப்பறிக்கை விட்டு அரசியல் நடத்தும் ஓட்டுக்கட்சிகளைப் போல இணையத்தில் அறிக்கைப் போர், அக்கப்போர் நடத்த அவர் அழைக்கிறார். பிரச்சினையை நேரில் விசாரித்து முடிவுக்கு வருவோம் என்று சொன்னவுடனேயே, தன்னுடைய குற்றச்சாட்டை “அரசியல் ரீதியாகவும் எடுக்கலாம், ஊடகவியல் சார்ந்ததாகவும் எடுக்கலாம்” என்று விளக்கமளித்து குற்றத்தை நிரூபிக்கும் பொறுப்பிலிருந்து கூச்சமே இல்லாமல் நழுவுகிறார்.
சென்ற மாதம் தில்லை தீட்சிதர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு கிரிமினல் குற்றவழக்கின் உதாரணத்தை இங்கே குறிப்பிடுகிறோம். சில ஆண்டுகளுக்கு முன் கோயிலுக்குள்ளே நடைபெற்ற ஒரு மர்மமான மரணம் குறித்து சிதம்பரத்தை சேர்ந்த மார்க்சிஸ்டு கட்சிக்காரர் ஒருவர் வாய்மொழியாக மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தோழர்களிடம் தெரிவித்தார். அதேபோல, சிதம்பரம் நகரத்தின் நக்கீரன் நிருபர் இரவு நேரத்தில் கோயிலுக்குள் நடைபெறும் காமக்களியாட்டங்கள் குறித்து பத்திரிகையில் அம்பலப்படுத்தியிருந்தார். ஆனால் இவை குறித்து வழக்கு பதிவு செய்ய போலீசு மறுத்து வந்தது. இந்தக் குற்றச்சாட்டுகளை பிரமாண வாக்குமூலமாக ( sworn affidavit ) தாக்கல் செய்து, ஒரு சாட்சியமாக முன் நிற்குமாறு அவர்களைக் கோரினோம். அதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வாக்குமூலம் தாக்கல் செய்தனர். அதன் விளைவாக தற்போது தீட்சிதர்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
“எதற்கு வம்பு” என்று அவர்கள் கருதியிருந்தாலோ, “வழக்கு வாய்தா என்று கோர்ட்டுக்கும் போலீசு நிலையத்துக்கும் அலைய வேண்டுமே” என்று நினைத்திருந்தாலோ இது நடந்திருக்காது. தான் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து, ஒரு போலி கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினரும், ஒரு முதலாளித்துவ பரபரப்பு பத்திரிகையின் நிருபரும் கொண்டிருக்கும் தார்மீகப் பொறுப்புணர்ச்சி இரயாகரனிடம் இருக்கிறதா?
சம்பவம் குறித்து அவர் அளிக்கின்ற வியாக்கியானத்தை குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒப்புக்கொள்ளவேண்டுமாம். அவர் எழுப்பும் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்க வேண்டுமாம். அவர் கேட்கும் ஆவணங்களையெல்லாம் சமர்ப்பிக்க வேண்டுமாம். அப்புறம் அவர் கூறும் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளவேண்டுமாம். -இதுதான் ரயாகரன் முன்வைக்கும் வழிமுறை. தமிழரங்கத்தையும் ரயாகரனையும் அத்தகையதொரு சர்வதேச நீதிமன்றமாக அனைவரும் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அவரது தீர்ப்புக்கு அனைவரும் தலைவணங்கி விடலாம். ஆனால் ஜார்ஜ் புஷ்ஷையே உலகம் அவ்வாறு ஏற்றுக் கொள்ளவில்லையே!
குற்றம் சாட்டுபவராகவும், குறுக்கு விசாரணை செய்யும் வக்கீலாகவும், பிறகு நீதிபதியாகவும் ரயாகரனே இருக்க விரும்புகிறார். இப்பிரச்சினை குறித்து 2.9.2010 அன்று ரயாகரன் முதன்முதலாக எழுதிய முதல் கட்டுரையின் தலைப்பபையும், துவக்க வரிகளளையும் கீழே தருகிறோம் :
“இந்தியப் போலீசுடன் கூட்டுச் சேர்ந்து கட்டைப் பஞ்சாயத்து நடத்திய சபா நாவலன், குகநாதனிடம் 30 இலட்சம் கோரினார்“
“இது ஒன்றும் கற்பனையல்ல. நிஜம். அண்மையில் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இந்திய பொலிசார் பிடித்த குகநாதனை விடுவிக்க, சபா நாவலன் அவரிடம் இந்திய ரூபா 30 இலட்சத்தைக் கோரினார். நடந்த சம்பவம் உண்மை. கைது, பேரம், ஊழல், இலஞ்சம் … இதில் சபா நாவலன் சம்மந்தப்பட்டது எல்லாம் உண்மை. இதன் பின்னணியில் உலவும் தகவல்கள் பல. பொய், புரட்டு, உண்மை, மூடிமறைப்பு என்று அனைத்தும் கலந்த தகவல்கள் வெளிவருகின்றது. அதைத்தான் இங்கு நாம் தொகுத்துத் தர முனைகின்றோம்.
கைது, கடத்தல், மிரட்டல், கட்டைப் பஞ்சாயத்து … மூலம் பல இலட்சங்கள் சம்பாதிப்பது, இலங்கை அரசியலில் ஒரு அம்சமாகிவிட்டது. இதற்குள் மாமா வேலை பார்த்து அரசியல் செய்வது, கட்டைப் பஞ்சாயத்து செய்து பணம் பண்ணுவது என்று, இடைத்தரகுத் தொழில்களும் புரட்சி அரசியலும் கூடத்தான் செழிக்கின்றது. இதைத்தான் சபா நாவலன் செய்தார்.”
இதற்குப் பெயர் கிரிமினல் குற்றச்சாட்டா, அல்லது அரசியல் விமரிசனமா? இந்தக் கிரிமினல் குற்றச்சாட்டை விசாரிப்பதற்கும், குற்றமிழைத்தவர்களைத் தண்டிப்பதற்கும் நேரில் வருமாறு அழைத்தால், இதனை “அரசியல் ரீதியாக எப்படி பார்த்தல் என்பதில் வேண்டுமென்றால், அரசியல் ரீதியாக விளக்கலாம்” என்று கூறி தப்பிக்கிறார் ரயாகரன். இதைவிட நாணயமற்ற பேச்சை யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
ஒரு மனிதன், அவன் மார்க்சியவாதியாக இருக்கட்டும் அல்லது ஏதேனும் ஒரு வெங்காயவாதியாக இருக்கட்டும், அவனைத் “திருடன்” என்று கூறுவதும், ஒரு பெண்ணை “வேசி” என்று தூற்றுவதும் அரசியல் விமரிசனங்களா? மார்க்சிய லெனினியத்தில் ரயாகரன் அளவுக்கு எமக்கு ஆழ்ந்த புலமை இல்லாததால் இதனைக் கிரிமினல் குற்றச்சாட்டு என்று புரிந்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் குற்றம் சாட்டுபவர் விசாரணைக்கு வந்து தனது குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.
நாவலன், எழிலன் குறித்த எங்கள் மதிப்பீடு என்னவாக இருந்தாலும், இந்த விசாரணை, நடுநிலையானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்கவேண்டும் என்பதனால்தான் “பகிரங்க விசாரணை” என்ற வழிமுறையை ம.க.இ.க முன்வைத்தது. ஆனால் இதையே ஒரு குற்றமாக்கி, ம.க.இ.கவுக்கும் உள்நோக்கம் கற்பிக்கிறார் ரயாகரன்.
“ புலிகள் பற்றிய எம் பார்வையும், அதை விமர்சனம் செய்யும் முறையும் தவறானது என்ற அரசியல் கண்ணோட்டம் தான், தீர்மானகரமாக எமக்கு எதிரான ம.க.இ.க.வின் நிலையாக மாறுகின்றது என்று கருதி வருகின்றோம். அனைத்தும் அரசியல் என்ற வகையில், இந்த விசாரணையும் தற்செயலானதல்ல”
“புலிகள் பற்றிய பார்வையில் அவருக்கும் ம.க.இ.க வுக்கும் கருத்து வேறுபாடு” என்று இரயாகரன் கூறுவதற்கும், தற்போது நாவலன் உள்ளிட்டோர் மீது அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கும் என்ன தொடர்பு? அரசியல் ரீதியான கருத்து வேறுபாட்டை கணக்குத் தீர்த்துக் கொள்ளத்தான் விசாரணை என்ற ஆலோசனையை (அல்லது சூழ்ச்சியை) முன்வைத்திருப்பதாக இரண்டுக்கும் முடிச்சுப் போடுகிறார் ரயாகரன். அல்லது அவருடைய கருத்தின்படி ம.க.இ.க புலி ஆதரவு என்பதால், புலி ஆதரவாளர்களைத் தப்பிக்க வைக்க ம.க.இ.க தந்திரம் செய்கிறது என்று குற்றம் சாட்டுகிறார். இதுதான் அவரது கூற்றின் பொருள். பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நேர்மையானதொரு வழிமுறையை முன்வைத்திருக்கும் ஒரு புரட்சிகர அமைப்பை இதைவிடக் கேவலமான முறையில் யாரேனும் இழிவு படுத்த முடியுமா?
இத்தனையும் சொல்லியதற்குப் பிறகு, இந்தியா வருவதில் தனக்கு உள்ள பிரச்சினைகள், சிக்கல்கள் பற்றி அவர் எதற்காக விளக்கவேண்டும்? பகிரங்க விசாரணை என்பதை, “குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கான ம.க.இ.க வின் சதித்திட்டம்” என்பதாகச் சித்தரித்து, “வரமுடியாது” என்று நிலை எடுத்தவர் “விசா இல்லாததால் வர இயலாத நிலை”, “கைது செய்யப்படும் அபாயம்” ஆகியவை பற்றியெல்லாம் எதற்காக விளக்கம் அளிக்க வேண்டும்? அனுதாபம் தேடுவதற்கா? “மரண தண்டனைக்குத் தயார், சிறைத்தண்டனைக்குத் தயார்” என்று நாவலனுக்கு சவால் விட்டு அவர் எழுதியவற்றை ஒருமுறை அவரே மீள வாசித்துப் பார்த்தல் நலம்.
குகநாதனையும், ஜெயபாலனையும், ரயாகரனையும் விருந்துக்கா வருந்தி அழைக்கிறோம்? அல்லது ம.க.இ.க வுக்கு வேறு வேலை இல்லையா? இணையத்தில் இக்குற்றச்சாட்டை முதன்முதலில் எழுப்பியவர் குகநாதன் அல்ல, ரயாகரன். அவருடைய வார்த்தைகளையே மேற்கோள் காட்டுகிறோம்.
“(குகநாதனை) நான் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போதுதான், உங்களை கடத்தியதாக கூறுகின்றனரே யார் என்று கேட்கின்றோம். அப்படி யாரும் கடத்தவில்லை என்றதுடன், இது தனிப்பட்ட விவகாரம் என்றும், இதை எழுதுவதை தான் விரும்பவில்லை என்றார். நாம் எழுத உள்ளதை தெளிவுபடுத்தியும், இதில் நடந்தவற்றை பற்றியும் உரையாடினோம்”
இவ்வாறு தன்னுடைய சொந்த “முயற்சி”யில் நாவலன், செழியன், எழிலன் ஆகியோர் மீது குற்றச்சாட்டை எழுப்பியவர் ரயாகரன். குகநாதனைத் தேடிப்பிடித்து தனது குற்றச்சாட்டுக்கு விவரம் திரட்டியவர் ரயாகரன். எனவேதான் குகநாதனை அழைத்து வருவதும் ரயாகரனின் பொறுப்பு என்று கூறுகிறோம்.
தான் சுமத்திய குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் என்ற தார்மீகப் பொறுப்போ, நேர்மையோ இரயாகரனுக்கு இல்லை. கேள்விகளுக்கும் விசாரணைகளுக்கும் அப்பாற்பட்ட “புனிதத் திருஉரு” வாக அவர் தன்னைக் கருதிக் கொண்டிருப்பதையே அவரது வாதங்கள் காட்டுகின்றன. அவர் மீது மதிப்பும் அபிமானமும் கொண்டிருந்த பல தோழர்கள் மத்தியிலும்கூட அவர் மதிப்பிழந்து வருகிறார். ஒரு அமைப்பு என்பது பல்லாயிரம் தோழர்களைக் கொண்டது என்ற மதிப்போ, மக்களுக்குப் பொறுப்பாக இருப்பது என்ற கம்யூனிஸ்டுக்குரிய பணிவோ அவரிடம் இல்லை. சுயபரிசீலனை அற்ற தன்னகங்காரமும், ஆணவமுமே அவரது பதில் முழுவதும் விரவிக்கிடக்கிறது.
பணத்தைப் பறிகொடுத்ததாகக் கூறும் குகநாதன், ஊடக தருமம் குறித்து பெரும் கவலை வெளியிட்ட “தேசம் நெற்” ஜெயபாலன் ஆகியோரிடமிருந்து எமக்கு எவ்வித பதிலும் வரவில்லை.
அதே நேரத்தில் “வீடியோவைக் கொடு, ஆடியோவைக் கொடு” என்று பலர் பின்னூட்டமிடுகிறார்கள். “அவை தங்கள் தரப்பு நியாயத்தை நிறுவுவதற்கான ஆதாரங்கள்” என்பது குற்றம் சாட்டப்பட்டவர்களின் கருத்து. விசாரணையின் போது அதனை அவர்கள் வெளியிடலாம். குற்றம் சாட்டுபவர்கள் தங்களுடைய குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு குற்றம் சாட்டப்பட்டவர்களிடமே ஆதாரம் கேட்கும் கேலிக்கூத்தை இப்போதுதான் பார்க்கிறோம். இது ஒரு பாசிஸ்ட் நீதிமன்றத்தில் கூட காணமுடியாத நீதி வழங்கு முறையாக அல்லவா இருக்கிறது !
“விசாரணைக்குப் பொறுப்பேற்கும் நடுநிலையாளர்கள் தமது முடிவைச் சொல்லட்டும். “ஆள் கடத்திப் பணம் பறித்தார்கள்” என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், நாவலன், அருள் எழிலன், அருள் செழியன் ஆகியோர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்ய நாங்களே முன் நின்று ஏற்பாடு செய்கிறோம்” என்று ம.க.இ.க வெளிப்படையாக பொறுப்பேற்றுக் கொண்டபின்னரும், குற்றம் சாட்டும் இரயாகரன் நழுவுவதும், மற்றவர்கள் மவுனம் சாதிப்பதும், அவர்கள் சார்பில் சிலர் அவதூறாகப் பின்னூட்டம் போடுவதும், இந்த மொத்த விவகாரம் குறித்தும் எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இரயாகரனிடம் பதில்களும் அவர் பதிலளிக்கும் முறையும் அவரிடம் நேர்மை இல்லை என்பதையே காட்டுகின்றன. ம.க.இ.க வின் பத்திரிகைகளையும், ஒலி, ஒளித்தகடுகளையும் புலத்திலும் இணையத்திலும் தான் எடுத்துச் சென்றதையும், நாவலன் “திடீர் மார்க்சியவாதி” என்றும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டும் நோக்கமென்ன? அவர் மார்க்சியவாதியாக இருக்கட்டும் அல்லது முதலாளித்துவ ஜனநாயகவாதியாக இருக்கட்டும், அதுவா பிரச்சினை?
விசாரணை என்று முன்மொழிந்தவுடனே, “குற்றவாளிகளைத் தப்பவைக்க ம.க.இ.க முயற்சிக்கிறது” என்று முத்திரை குத்துகிறார் ரயாகரன். அவர் இந்தக் குற்றச்சாட்டை எழுப்பியிருப்பதற்கே வேறு மறைவான நோக்கங்கள் இருக்கின்றனவோ என்ற வலுவான சந்தேகத்தைத்தான் அவரது அணுகுமுறை ஏற்படுத்துகிறது.
இந்தப் பிரச்சினை குறித்து அவர் நடத்தியிருக்கும் விசாரணை, ம.க.இ.க வுக்கு அவர் அளித்திருக்கும் பதில் ஆகியவற்றிலிருந்து அவருடைய மனோபாவம் குறித்த ஒரு சித்திரம் கிடைக்கிறது. நாவலனுக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டு பற்றிக் கேள்விப்பட்டவுடனே, “ஆகா கிடைத்தது வாய்ப்பு” என்று அவர் மகிழ்ந்திருக்கிறார். குகநாதனின் யோக்கியதை என்ன என்பது பற்றிக் கூடக் கவலைப் படாமல் அவரைத் தேடிப்பிடித்து விவரம் கேட்டு, “கடத்தல், தரகுவேலை, மாமாவேலை, கட்டப்பஞ்சாயத்து” என்று எழுதிவிட்டார். “குற்றத்தை நிரூபித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரலாம் -வாருங்கள்” என்று அழைத்தால் ஓடி ஒளிகிறார்.
விவகாரம் இத்தனை தூரம் போகும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை என்றே தெரிகிறது. கட்டப்பஞ்சாயத்து செய்த குற்றத்துக்காக நாவலன், எழிலன், செழியன் ஆகியோரைத் தண்டிக்க வேண்டும் என்றெல்லாம் அவர் கோரவேயில்லை. அது அவரது நோக்கமும் அல்ல. அவர் கேட்பது தன்னுடைய சந்நிதியில் ஒரு சுயவிமரிசனம். ஒரு மழுப்பலான சுயவிமரிசனத்தை அவர்கள் வெளியிட்டிருந்தாலும், உடனே அதனைப் “பெருந்தன்மையுடன்” ரயாகரன் அங்கீகரித்திருக்கக் கூடும். ஒருவேளை அவர்கள் சுயவிமரிசனம் செய்து கொள்ள மறுத்திருந்தால் புலம்பெயர் உலகத்தின் புகழ்பெற்ற குழாயடிச்சண்டை வரலாற்றில், இன்னொரு அத்தியாயமாக இது சேர்ந்திருக்கும்.
ம.க.இ.க இப்பிரச்சினையில் நுழைந்து இதனை ஒரு முடிவை நோக்கித் தள்ளும் என்று ரயாகரன் எதிர்பார்க்கவில்லை போலும். அதனால்தான் தான் பின்வாங்குவதை மறைக்கும் பொருட்டு, “ம.க.இ.க குற்றவாளிகளைப் பாதுகாக்க முயற்சிக்கிறது” என்று அவதூறு செய்கிறார். “நாங்கள் சொல்வதில் நம்பிக்கையில்லையா? எங்களை பகிரங்க விசாரணைக்கு அழைக்கிறீர்களே” என்று நாவலனோ அருள் எழிலனோ, அருள் செழியனோ எங்களிடம் கேட்டிருக்கலாம். அவர்கள் அவ்வாறு கேட்கவில்லை.
ஆனால் அவர்களைக் காட்டிலும் நெடுநாளாக எம்முடன் தொடர்பில் இருப்பவரும், ம.க.இ.க வின் அரசியலில் உடன்பாடு இருப்பதாகக் கூறுபவருமான ரயாகரன், அவருக்கு உவப்பில்லாத ஒரு வழிமுறையை நாங்கள் முன்வைத்தவுடனே, குற்றவாளிகளைப் பாதுகாக்க முயல்வதாகக் கூறி, ம.க.இ.க வின் மீது எதிர்க்குற்றம் சாட்டுகிறார். அரசியல் உள்நோக்கமும் கற்பிக்கிறார்.
கருத்து வேறுபாடு வரும் சந்தர்ப்பங்களில் ஒருவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதுதான் அவரது ஜனநாயகப் பண்புக்கும், தோழமை உணர்வுக்கும், நேர்மைக்கும் உரை கல்லாக இருக்கிறது. அந்த வகையில் ரயாகரன் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அவ்வளவே.
மேற்கொண்டு இப்பிரச்சினையில் நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை. நேர்மையான முறையில் ஒரு தீர்வை முன்வைத்தோம். அதை ரயாகரன் ஏற்கவில்லை. அவர் தன் சொந்த வழிமுறையைப் பின்பற்றட்டும். அவரிடருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோம்.
இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு.