மரணத்தைக் கண்டு அஞ்சியோடி ஐரோப்பியத் தெருக்களில் வாழ்வுக்காக அலைவதை எண்ணி நாம் வேதனை அடையும் அதே கணத்தில் தான் வாழும் சமூகத்திற்காய் வாழ்க்கையை அர்ப்பணிக்கத் தயாரான அவர்கள் தம்மை எண்ணிப் பெருமை கொள்வார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
மகிந்தவின் கொலைகரங்களுக்குள் தன்னை இழந்த பிரகீத் எக்னலியகொடவிற்காக அவரது மனைவி பெருமைப்பட்டதைப் படித்திருக்கிறோம்.
நந்திக்கடல் ஈழ மக்களின் இரதத்தால் சிவந்துபோன இரண்டாம் ஆண்டில் இன்னமும் திசை தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வன்னி மண்ணில் பிணங்கள் உரமாகிய நாட்களை அந்த மக்களின் வரிப்பணத்தில் இலவசக் கல்விகற்ற நாங்கள் மறந்துவிடவில்லை.
ஒரு தேசிய இனத்தின், ஒரு மனிதக் கூட்டத்தின், ஒடுக்கப்படும் மக்களின் , உரிமைக்காகப் போராடும் -இதனால் எல்லாம்- ஊடகவியலாளனின் உரிமைக்காகவும் போராடும் தேசிய இனத்தின் ஒரு அங்கம் என்பது நான் எங்கு வாழ்ந்தாலும் எனக்குப் பெருமை சேர்க்கும்.
தீபம் தொலைக்காட்சியில் “புலம் பெயர் நாடுகளில் புலி கொடி வேண்டுமா வேண்டாமா ” என்ற கருப்பொருள் விவாததிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்விவாதம் குறித்து தம்மைத் தேசிய வாதிகள் என மார்தட்டிக்கொள்ளும் புலம் பெயர் இணையங்களில் ஒன்றான இனவாத இணையத்தளமான அதிர்வில் ஒரு கட்டுரை வெளியாகியிருக்கின்றது. வல்லிபுரத்தான் என்ற புனை பெயரில் பதியப்பட்டிருக்கும் கட்டுரை தீபம் தொலைக்காட்சியின் உடகவியலாளர் அனஸ் இற்கு அச்சுறுத்தல் விடுக்கிறது. இவ்வாறான விவாதங்களை இனிமேல் முன்னெடுக்க வேண்டாம் என எச்சரிக்கிறது.
தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரின் உரிமைக்காகக் குரலெழுப்பும் சிங்கள ஊடகவியலார்களுக்கு மகிந்த அரசு விடுக்கும் அதே அச்சுறுத்தல்! அதே நியாயம்!! அதே வரை முறை!!! புலிகளின் கொடி என்பது தேசியக் கொடியென்று அவர்களே வரை முறை செய்துகொண்டு அது குறித்து விவாதிக்கக் கூட வேண்டாம் என்று விடுக்கப்படும் அச்சுறுத்தல் மகிந்த அரசை நினைவு படுத்துகிறது.
சிங்களத்தில் மட்டுமே இலங்கைத் தேசிய கீதத்தைப் பாட வேண்டும் என்பதை எதிர்த்த ஜனநாயக வாதிகள் மீது விடுக்கப்பட்ட அதே பயமுறுத்தல்களை நினைவுபடுத்துகிறது.
இங்கு புலிக்கொடி குறித்த விவாதங்களுக்கு எல்லாம் அப்பால் அனஸ் என்ற ஊடகவியலாளனின் பேச்சுச்சுதந்திரம் குறித்த அச்சுறுத்தலே முன்னிலைக்கு வருகிறது.
ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் புலம் பெயர் நாட்ட்டு நீட்சிகளான நாம் இன்னொருவரின் பேச்சுச் சுதந்திரததை மறுத்து எமது சுதந்திரத்தை எதிர்பார்க்க முயல்வது பச்சைச் சந்தர்பவாதம், திருட்டுத்தனம்.
அனஸ் என்ற ஊடகவியலளர் எப்படி நிகழ்ச்சியை நடத்திச் செல்ல வேண்டும் என்பதைக் கூட அதிர்வின் கட்டுரை அறிவுறுத்துகிறது.
நாங்கள் கொழும்பிலோ அன்றி வன்னியிலோ வாழவில்லை என்பதை இங்கு அதிகாரத்தைத் தேடியலையும் பலர் மறந்துவிடுகிறார்கள். “கேள்வி கேட்க பல விடயங்கள் உள்ளன. அதற்கு தேசிய கொடி பிடிக்கவேண்டுமா வேண்டாமா என்பது தான் ஒரு கேள்வி அல்ல ! கேள்வி நேரம் என்பது ஒரு நிகழ்சி அதில் உங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை மேடை ஏற்றவேண்டாம். குறிப்பாக எமது தேசியத்தோடு விளையாடவேண்டாம். தமிழ் தேசியத்தை கேள்விக்களமாக்க நீங்கள் யார்?” என்ற மிரட்டலின் பின்னால் கொச்சயான இனவாதப் பின்னூட்டங்கள் பதியப்பட்டுள்ளன.
ஒரு பின்னூட்டத்தில் “அனஸ் நீ இருக்கும் இடம் தெரியும். கவனமாய் இரு என்று கூறப்படுகிறது.” வன்முறைக் கலாசாரத்தின் நச்சு வேர்களை புலியின் பெயராலும், தேசியத்தின் பெயராலும் உறை நிலையில் வைத்திருக்கும் இவர்கள் தான் தேசியத்தின் எதிரிகள். மகிந்த ராஜப்கச போன்ற பேரினவாதிகளின் நண்பர்கள்.
அடிப்படை வாதிகளின், இனவாதிகளின் , ஒடுக்குபவர்களின் -இதனால் எல்லாம் – ஊடகவிலாளனின் அடிப்படை உரிமைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் மனிதர்களுக்கு மத்தியில் மௌனமாய் வாழ்வதற்காகய் நான் அவமானப்படுகிறேன்.
அனஸ் இன் கருத்து என்ன என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அது இன்று எனக்குத் தேவையற்றது. அவரது கருத்தோடு முரண்பட்டால் அதனை எதிர்கொள்ளும் ஆற்ரலும் துணிவும் எனக்கு இருப்பதாக நம்புகிறேன். ஆனல் அனஸ் என்ற ஊடகவியலாளனின் ஜனநாயகத்தை வன்முறை மூலம் அழிக்க முயலும் கோழைகளை நான் செத்துப்போகும் வரை எதிர்கொள்ளத் தயாராகவுள்ளேன்.