Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அழிவின் விழிம்பில் ஐரோப்பிய நாடுகள் : வங்கிகளில் கூட வைப்பிட முடியாது!

Cyprusஐரோப்பிய ஒன்றியத்தின் ‘தன்னிறைவான’ நாடாகக் கருதப்பட்டுவந்த சைப்பிரஸ் நாட்டின் இரண்டு பெரிய வங்கிகளும் திவாலாகிவிட்டன என்றும் அவை மேலும் இயங்க முடியாத நிலைக்கு வந்துவிட்டன என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டுள்ளனர். எதிர்வரும் செவ்வாய்(27.03.13) வரையும் அனைத்து வங்கிகளும் சைப்பிரஸ் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. மக்கள் தெருக்களில் பீதியோடு ATM பொறிகளின் முன்னால் கிடைத்த பணத்தை எடுத்துக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் நிற்கின்றனர். பல ATM பொறிகள் இயங்கவில்லை எனத்தெரிவிக்கபடுகின்றது. பல்பொருள் அங்காடிகள் உட்பட பல கடைகளில் வங்கி அட்டைகள் நிராகரிக்கப்படுகின்றன.

ஏனைய ஐரோப்பிய நாடுகளைப் போன்றே மக்கள் சிறு தொகைப் பணத்தையும் வீட்டில் வைத்திருப்பதில்லை. இதனால் பலரின் வீடுகளில் உணவுப்பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
நிலைமை இவ்வாறிருக்க ஐரோப்பிய ஒன்றியம் சைப்பிரஸ் மக்களின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டுகிறது. வங்களில் மக்கள் வைப்பிட்டுள்ள பணத்தின் பத்துவீதத்தை அரசிற்கு வரியாகச் செலுத்தினால் மட்டுமே சைப்பிரஸ் வங்கிகளைக் காப்பாற்றுவதற்கான பிணைப்பணத்தை ஐரோப்பிய ஒன்றியம் வழங்குவதாக அந்த மிரட்டல் அமைந்துள்ளது.

சைப்பிரஸ் வங்கிகள் மூடப்படுவதிலிருந்து தற்காலிகமாகக் காப்பாற்றுவதற்கு 17 பில்லியன் யூரோக்கள் தேவைப்படுகின்றன. இத்தொலையில் 10 பில்லியனை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச நாணய நிதியமும் (IMF), தயார் நிலையில் உள்ளன. மிகுதிப் பணமான 7 பில்லியனை வங்கியில் பணத்தை வைப்பிட்டவர்களின் பணத்தில் பத்து வீதத்தை அரசு எடுத்துகொள்வதன் ஊடாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கைவிடுக்கிறது. அதனைச் சைப்பிரஸ் பாராளுமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

வரும் திங்களுக்கு முன்னதாக சைப்பிரஸ் முடிவை அறிவிக்காவிட்டால் வங்கிகளின் பணப்புழக்கம் முற்றாக முடிவிற்குவரும் எனவும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து சைப்பிரஸ் வெளியேற்றப்படும் எனவும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திங்கட்கிளமையுடன் வங்கிகள் மூடப்பட்டால் ஐரோப்பா முழுவதிலும் மக்கள் வங்கிகளில் பணத்தை வைப்பிட மறுக்கும் நிலை உருவாவது மட்டுமன்றி, வங்கிகள் மீதான நம்பிக்கை அற்றுப் போகும் என பொருளியலாளர்கள் கருதுகின்றனர். வங்கிகளில் வைப்பிட்ட பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியாமல் வங்கிகள் மூடப்பட்டதாகத் தகவல் மட்டுமே வெளியாகும் நிலை உருவாலாம் என மக்கள் கருத இடமுண்டு என்பதால் பல சிக்கல்களை இன்றுள்ள வங்கிப் பொறிமுறை எதிர்நோக்கும்.
இதனால் பல்தேசியத் தொலைக்காட்சிகளும் ‘ஆய்வாளர்களும்; ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு இப்படி ஒன்றும் நடக்காது என்று பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள அனைத்து ஊடகங்களும் இதனை மீள ஒப்புவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் அனைத்தையும் மீறி எதிர்வரும் செவ்வாய் வங்கிகளை மூடவும் அவற்றின் சொத்துக்களைக் உறையவைக்கவும் முடிவெடுத்துள்ளதாக் bloomburk இணையம் தெரிவிக்கின்றது.
சைப்பிரசில் ஆங்காங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஐரோப்பிய ஒன்றியம் சைப்பிரஸ் மக்களின் பணத்தைத் திருடுகின்றது என்ற சுலோகங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில் ரஷ்யாவிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கான உடன்பாட்டிற்கு சைப்பிரஸ் அரசு முன்வர முயற்சிக்கிறது.

சைப்பிரசின் மிகப்பெரும் வளமாகக் கருதப்படும் எரிவாயு வயல்களை ரஷ்ய அரசு நீண்டகால குத்தகைக்கு எடுத்துக்கொண்டு இப்பணத்தை வழங்குவதற்கான பேச்சுக்கள் நடைபெறுகின்றன.

சைப்பிரஸ் சேமிப்பாளர்களில் 37 வீதமானோர் வெளிநாட்டவர்கள். அவர்களில் பெரும்பான்மை ரஷ்யாவைச் சேர்ந்த புதிய உயர்குடிப் பணக்கார வர்க்கத்தைச் சார்ந்தவர்கள்.
ரஷ்யா சைப்பிரசில் இராணுவத் தளம் ஒன்றையும் நிறுவ முற்படலாம் என்று ஐரோப்பிய ஆய்வுகள் கருத்து வெளியிடுகின்றன.

சைப்பிரஸ் தது நாட்டின் பொருளாதாரத்தில் நான்கு மடங்கு அதிகமான தொகையை வெளிநாட்டு வைப்பாகக் கொண்டிருந்தது.

ஏனைய ஐரோப்பிய நாடுகளைப் போன்றே நிதி என்பது மூலதனமாகப் பயன்படுத்தப்பட்டது. இத் தொகையின் குறித்த பகுதியை கிரேக்கத்தின் பொருளாதார நெருக்கடிக்குப் பிணையாக வழங்கியது.
கடந்த ஆண்டு கிரேக்க நாடு திவாலானதும் இப்பணத் தொகை மீழ வழங்கப்படவில்லை. உற்பத்தியற்று பணமும் கடன் பொறிமுறையும் பிரதான பொருளாதாரமாகத் திகழ்ந்த சைப்பிரசின் அழிவு ஐரோப்பிய ஒன்றியத்தின் அழிவை விரைவுபடுத்தும்.

இதே நிலை ஐரோப்பிய வங்கிகளுக்கும் உருவாகும்.

தவிர, ரஷ்யாவுடன் சைப்பிரஸ் உடன்படிக்கைக்கு வருமானால் புதிய, அமரிக்க அணிக்கு எதிரான அதிகாரம் ஐரோப்பிய சூழல் மீது ஆளுமை செலுத்தும். அமரிக்க அரச அதிகாரத்திற்கு எதிரான புதிய அணி சேர்க்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் அழிவை விரைவுபடுத்தும்.

இறுதியாக சைப்பிரஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனையை ஏற்றுக்கொள்ளுமானால் மக்கள் வங்கிகளில் பணத்தை வைப்பிட மாட்டார்கள் என்பது மட்டுமன்றி சைப்பிரசின் பொருளாதாரப் பொறிமுறை உடைக்கப்படும். இந்தவகையிலும் ஐரோப்பிய ஒன்றியம் கேள்விக்குள்ளாகும். அதன் அழிவை விரைவுபடுத்தும்.

அவ்வாறான அழிவின் பின்னர் ஏற்படும் பொருளாதார அவலம், சமூகத்தின் அமைப்பியல் சீர்குலைவு என்பவற்றிற்கு மக்கள் தயாராக வேண்டும் என்பதே இங்கு விடுக்கப்படும் எச்சரிக்கை.

உற்பத்தி என்பது ஒவ்வொரு சமூக அமைப்பினதும், ஆதாரமாக அமையும். 70 களில் முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது அதனை மீண்டும் குறித்த காலத்திற்கு நீட்சியடையச் செய்வதற்காக உற்பத்தியை அழித்து நிதியை மூலதனமாக்கிய பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகில் அழிவுகளை ஏற்படுத்திய இச் செயற்கையான மாற்றம் இன்று தவிர்க்கமுடியாத அழிவுகளை நோக்கிச் சென்றுவிட்டது. இலங்கையில் நடைபெற்றதைப் போன்று உலகம் முழுவதிலும் மக்கள் அழிவுகளையும் மனிதப் படுகொலைகளும் இந்த நெருக்கடியின் அறுவடையாகக் கிடைக்கும்.

Exit mobile version