ஒடுக்கு முறை கோலோச்சும் வரை போராட்டத்திற்கான தேவையும் போராட்டமும் வாழும். ஆனால், தவறுகள் மீண்டும் மீண்டும் நியாயப்ப்படுத்தப்படுகின்றன. கடந்து போனவற்றிலிருந்து கற்றுக்கொள்ளத் தயாரற்ற கூட்டம் மக்களின் உணர்வுகளிலிருந்து தமது நலன்களைக் கறந்து கொள்கிறார்கள். போராட்டம் வெற்றி கொள்ளப்பட கூடாது என்பதில் அதிகாரவர்கங்கள் தமது மொழி, பிரதேச, தேசிய இன வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றிணைந்துள்ளன. வட,கிழக்கில் எனது ஊரோடி வாழ்வு தற்போதும் தொடர்கிறது. தற்போது நான் தனியாளாக வெறுமையுடன் அலைந்து திரிகிறேன்.
இதற்கு முன்னதாகத்தான் டெலோ உட்கட்சிப்படுகொலை-அதனுடன் தொடர்பான மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகள் நிகழ்ந்திருந்தன. அதில் சம்பந்தப்பட்டு டெலோவின் கோபத்திற்கு இலக்காகியிருந்தோம். நண்பருர் குகமூர்த்தி (புலி ஆதவராளர் என அறியப்பட்டவர்-கொழும்பில் கடத்தப்பட்டவர்), வா நிலைமைகளைப் பார்ப்போம் எனக்கூற, சண்டை நடந்த பகுதிகளுக்குள் நுழைகிறோம்.
முக்கியமான குடும்பங்கள் சிலரைச் சந்திக்கிறோம். ஆனால் டேலோ உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் தெரியவரவில்லை. சிலர் தப்பியோடிப் பாதுகாப்பாக இருப்பதாக தெரிய வந்தது. கிறிஸ்தவ மதகுருமார்களிடம் சிலர் அடைக்கலம் புகுந்து தப்பியதாக தெரியவந்தது. பின்னர் சிறீ கொல்லப்பட்டார். பல போரளிகள் அடைக்கப்பட்டிருந்தார்கள். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் புலிகளிடம் பேசி தங்கள் பிள்ளைகளை காப்பாற்றிக் கொண்டார்கள். திருகோணமலை-மட்டக்களப்பு போராளிகள் பலர் சிறையில் (நல்லூரில்) அடைக்கப்பட்டிருந்தார்கள்.
உறவுகள் யாழ்-புலிகளுடன் தொடர்புகளற்ற நிலையால் அவர்களை மீட்க முடியமல் போய்விட்டது. பின்னர் ஒரு நாளில் அடைக்கப்பட்டிருந்த அனைவரையும் கொன்று புதைத்தாக செய்தி வந்தது! பின்னர் ஈ.பி.ஈர.எல்.எப் உம், புளொட்டும், ஏனைய இயக்கங்களும் ரி.என.ஏ. யும் (கடத்தி சேர்க்கப்பட்டவர்கள்) எனவும் என எத்தனை பேர் அநியாயமாக் கொல்லப்பட்டு நமது பூமியில் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் இப்படி மனிதப் புதைகுழிகள் நிரம்பிக் காணப்படுகிற போது, இந்த மண் குறித்து எனக்கு அவலமும் சோகமும் தான் மிஞ்சி நிற்கிறது.
முன்வைக்கும் ஒவ்வொரு கால் அடியின் கீழும் மனதிர்கள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள்! அரச படைகள்-புலிகள்- ஏனைய இயக்கங்கள்-உட்கட்சி படுகொலைகள் என …..மனிதர்களின் புதைகுளிகளால் நிரம்பியிருக்கிறது நம் பூமி! எல்லாவற்றிற்கும் மேலாக குகுமூர்த்தி, வாசுதேவன், யோகன் போன்றவர்கள் நம் மத்தியில் வாழ்ந்தார்கள் என்பது குறித்து பெருமையும் ஏற்படுகிறது.
புலிகளில் சிலர் மனிதாபிமானம் மிக்கவர்களாக “பெரும் மனிதர்களாக” நடந்து கொண்டிருந்தது பற்றியும் அறிய முடிகிறது. ஆனால் அவர்கள் ஒதுக்கப்பட்டு-ஒதுங்கி அழிந்து போனார்கள். புலிகள் புரிந்த படுகொலைகள் சித்திரவதைகள் பற்றி உலகம் அறியாதிருப்பதே நல்லது. வன்னியில் தடுப்பிலிருந்து வந்தவரிடம் புலிகளால் கைது செய்யப்பட்ட தில்லை-தர்மு-செல்வி பற்றிக் கேட்டேன்.
அங்கே கைதும்-கொலையும்-விடுவிப்பும் சர்வசாதரணமானது என்ற சாதரணமாகக் கூறிச்சென்றார். படுகொலைகள் குறித்து இவ்வாறு எமது சமூகம் சிந்திப்பதற்கு காரணமென்ன? ஏன் படுகொலைக்கெதிராக ஏனைய இணக்கங்கள் ஒன்றிணைய முடியாமல் போனது. ஒரு முற்போக்கு அணி ஆகக்குறைந்தது அறிக்கை விடும் அரசியல் தகைமையுடனாவது வளராமல் விட்டதற்கு என்ன காரணம்? கொலைகள் பற்றி நாம் பேசியாக வேண்டும். அது கொலை செய்யப்பட்டவர்களுக்கும் – அதனால் துயருற்று வாழும் அவர்கள் குடும்பத்தினருக்கும் பல்லாண்டுகள் கடந்து நாம் செய்கிற கடன் மட்டமுல்ல, எதிர்காலம் ஒரு புதிய பாதையில் செல்வதற்கான பாதையை அமைப்பதற்காகவும். நிகழ்கிற கொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காகவும். நிழல் உலகக் குழுக்கள் போன்று கொலை செய்துகொண்டவர்கள் தம்மை விடுதலை இயக்கங்கள் என்று பெயர் சூட்டிக்கொண்டதை திரும்பிப்பார்க்க வேண்டும்.
ஒடுக்குமுறை தொடரும் நிலையில் விடுதலை இயக்கங்களில் மறு உருவாக்கம் தவிர்க்க முடியாதது; ஆயினும் முன்னைய விடுதலை இயக்கங்களின் மறு பதிப்பு நிராகரிக்கப்பட வேண்டும்.