Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அழிக்கப்படும் அரசியல் : பிரபாத் பட்நாயக்

(அரசியலில் ஈடுபடுவோரின் தரம் தாழ்ந்துள்ளது என்ற அனுபவ உண்மையைக் காட்டி, மக்களின் அரசியல் தெரிவுரிமை மறுக்கப் படுகிறது. ‘தொழில் துறையின் தானைத் தலைவர்கள்”, ‘தொழில் முனைவோர்”, பத்திரிகைத் துறையில் உள்ள சில தொழில் முனைவர்களோடும், ‘நேர்மையான, கறாரான” அதிகாரிகளோடும் இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் பாதகமான முறையில் முரண்படுகிறவர்களாகக் காட்டப் படுகிறார்கள். மேற்படி தொழில் துறைத் தளபதிகளும், தொழில் முனைவோரும் இந்த நுட்பமான ஏற்பாட்டில், நவீன தாராளவாத மேம்பாட்டுத் திட்டங்களை உயர்த்திப் பிடிப்போராக மேம்பாட்டுக்கு உறுதியளிப்போராக அதனை உருவாக்குவோராக காட்டப் படுகிறார்கள். ‘அரசியல் வாதிகள்” தரம் தாழ்ந்துவிட்டார்கள் என்ற்தைப் பயன்படுத்தி ‘அபிவிருத்தி” என்ற நவீன தாராளவாதக் கருத்தாக்கத்தைப் புனிதமானதாக்குகிற முயற்சி நடக்கிறது.

இதற்கு விலக்காக இடதுசாரிகள் இருக்கிறார்கள் என்ற உண்மை உரத்துச் சொல்லப் படுவதில்லை. அதே நேரம் ‘அரசியல்வாதி” தரம் தாழ்வதற்கே மேற்படி புனிதமயமாக்கல் தான் ஓரளவுக்காவது காரணமாகிறது. முதலாளித்துவ அரசியல்வாதிகள், சிறு முதலாளித்துவ அரசியல்வாதிகள் ஆகியோரின் தரம் தாழ்வதற்கு வர்க்கம் சார்ந்த காரணங்கள் உள்ளன. ஆனால், நவீன தாராளவாத ‘அபிவிருத்தி” என்பதன் கருத்துநிலை ஆதிக்கமும் நிச்சயமாகப் பங்களிக்கிறது.)

‘அரசியலை அபிவிருத்தியிலிருந்து பிரித்து நோக்குக”

இன்று இந்த மந்திரம் எங்கும் ஒலிக்கிறது. நாட்டின் ஜனாதிபதி இதைத் தான் சொல்கிறார். பிரதமர் இதைத் தான் சொல்கிறார். வருகை தருகிற உலக வங்கி உயரதிகாரிகள் இதையே தான் சொல்கிறார்கள். உள்ளுர் அரசியல்வாதிகள் முதல், ஊடகங்கள் வரை இதே கருத்தைத் தான் எதிரொலிக்கிறார்கள். அரசியல் என்றால் வேறொரு கருத்தாக்கமாக, மாறுபட்ட வர்க்க நிலைப்பாடுகளாக முன்வைக்கப்படுவது அதிகரித்து வருகிறது. அரசியலை அபிவிருத்தியிலிருந்து பிரித்துப் பார்க்க எனக் கூறுவதன் மூலம், உண்மையான ‘அபிவிருத்தி” என்றதொரு கருத்தாக்கம் இருப்பது போலவும், அதுதான் எல்லாவற்றையும் விட மேலானதாக ஓங்கி இருப்பதாகவும், அதற்கு எதிராக யாரும் பேசக் கூடாது என்பதாகவும் வலியுறுத்தப் படுகிறது.

அனைத்து வர்க்கங்களின் மீதும் அனைத்து அரசியல் சக்திகளின் மீதும் ‘அபிவிருத்தி” என்பது குறித்த ஒரு குறிப்பிட்ட கருத்தாக்கம் திணிக்கப் படுகிறது. அந்தக் கருத்தாக்கத்தைத் திணிப்பது உலக நிதி மூலதனம். இந்தத் திணிப்பு வெறும் பொருளாதார ஆளுமை தொடர்பானது மட்டுமல்ல, கருத்து ஆளுமை தொடர்பானதும் கூட. இது ஒரு வகையில் கருத்துநிலைச் சர்வாதிகாரத்தை வளர்க்கின்ற செயன்முறையே.

இப்படிப்பட்ட ஒரு கருத்துநிலைச் சர்வாதிகாரத்தை வளர்ப்பது எப்போதுமே முதலாளித்துவ அமைப்பின் பண்பாக இருந்து வந்துள்ளது. நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு எதிரான அறிவுக் களப் போராட்டத்தை நடத்திய முதலாளித்துவ அறிஞர்கள், ‘இயற்கையான ஒழுங்கமைப்பு” என்றொரு கருத்தாக்கத்தைக் உருவாக்கி விட்டார்கள். தங்களது கோட்பாடுகள் யாவற்றையும் ‘இயற்கை விதிகள்” என்ற வடிவத்திலேயே வார்த்துக் கொடுத்தார்கள். ஏன் அப்படிச் செய்தார்கள் என்றால், அரசாங்கக் கட்டுப்பாடு இல்லாத வர்த்தக அமைப்பு என்பதாக அவர்கள் முன் வைத்த முதலாளித்துவ அமைப்பின் செயல்முறை நிலப்பிரபுத்துவ வணிக அமைப்பிலிருந்து மாறுபட்டது என்று வாதிட அவர்கள் விரும்பினார்கள். நிலப்பிரபுத்துவ அமைப்பில் ஏகபோக உடைமை, கட்டுப்பாடுகள், சிலருக்கு மட்டும் சலுகைகள், ஆதரவுகள் என்ற சிக்கல்கள் காரணமாக பெருங் குழப்பமும் அராஜகமுந் தான் விளைந்தன. ஆனால் கட்டுப்பாடுகள் அற்ற முதலாளித்துவ அமைப்பு ஒழுங்கையும் சமூக நிலையையும் கொண்டு வரும் என்றார்கள். அப்படிச் சொன்னால் மட்டும் போதாது என்பதால் அதற்கு விளக்கமும் அளிக்க வேண்டி இpருந்தது. அப்படி அவர்கள் அளித்த விளக்கந் தான், இயற்கை விதிகளின் கீழ் முதலாளித்துவம் இயங்கும் என்பதாகும். இயற்கை எப்படி தனக்கென விதிகளை வகுத்துக் கொண்டிருப்பதாக அன்று தெரிய வந்திருந்ததோ, அதே போன்ற இயற்கை விதிகள் அடிப்படையில் முதலாளித்துவம் இயங்கும் என்றார்கள்.

அதுவரையில் இருந்து வந்த கட்டுப்பாடுகளும் தலையீடுகளும்தான் ‘கட்டற்ற வர்த்தகத்தின்” இயற்கையான நிலைமைகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்து வந்தன என்றார்கள்.

கட்டற்ற வர்த்தகம் எப்போது வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்ததோ, அன்றுமுதல் அதன் பயனாக ‘இயற்கையான ஒழுங்கமைப்பு” நிலவியிருக்கும் என்று கூறினார்கள். ‘இது வரையில் வரலாறு என ஒன்று இருந்து வந்தது, இனி அப்படி இருக்காது” என முதலாளித்துவவாதிகள் சித்தரித்ததாகக் கார்ல் மார்க்ஸ் தமது ‘தத்துவத்தின் வறுமை” என்ற நூலில் குறிப்பிடுகிறார். முதலாளித்துவவாதிகளின் இந்த வாதம், கருத்துநிலை சர்வாதிகாரப் பிரகடனமாகவும், ஒரு தெய்வ நிலைக்கு முதலாளித்துவத்தை உயர்த்தி வைப்பதாகவும் இருந்தது. ஹெகலியம் முன்வைத்த ‘இருத்தலியல் வாதம்” என்பதை (அதாவது எது இப்போது இருக்கிறதோ அதுதான் வரலாற்றின் இறுதிக் கட்டம் என்பதை) உயர்ததிப் பிடிப்பதாக இருந்தது. (இதன் தாக்கத்தை ஃபூக்குயாமா [Fukuyama) போன்ற இன்றைய ஆய்வாளர்களின் எழுத்துக்களில் காணலாம்.)

இப்படியொரு கருத்துநிலைச் சர்வாதிகாரம் இன்றைய ஆளும் வர்க்கங்களுக்கு மிகவுந் தேவைப்படுகிறது. நவீன தாரளவாதக் கொள்கைகள் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் சமுதாய ஏற்றத் தாழ்வுகளும் மிகப் பெரிய அளவில் அதிகரிப்பதற்கு வழி வகுத்துள்ளன. சிறு உற்பத்திகளைப் பெரும் நெருக்கடியில் தள்ளி விட்டுள்ளன. வேலையின்மை வீதத்தை அதிகப் படுத்தியதுடன் பட்டினியையும் அதிகரித்து உள்ளன. இப்படி எல்லாம் நடக்கவில்லை என்று நமது நாட்டு அனுபவங்களின் அடிப்படையிற் கூட மறுத்து விட முடியாது.

எனவே, இங்கே அரசியல் பற்றிய கேள்வி இன்றைய முதலாளித்துவவாதிகளுக்கு இயற்கையாக ஏற்படுகிறது. வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்ற ஜனநாயகத் தேர்தல்கள் நடைமுறையில் இருக்கிற போது எப்படித் தாக்குப் பிடித்திருக்க முடியும்? வேறு விதமாகக் கேட்பது என்றால், உலக நிதி மூலதன ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தப் பொருளாதார ஒழுங்கமைப்பு ஜனநாயக அரசியலில் எப்படிப் பிழைத்திருக்க முடியும்? இந்தக் கேள்விக்குப் பதிலாகப், பன்னாட்டு நிதி மூலதனக்காரர்களும் அவர்களோடு கூட்டுச் சேர்ந்துள்ள உள்நாட்டு முதலாளிகளும் பலப்பல வழிமுறைகளைக் கையாள்கிறார்கள்.

அவற்றில் ஒரு வழிமுறை தான், ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் எந்தவொரு அரசியல் அமைப்பு ஆட்சிக்கு வந்தாலும், அதே நவீன தாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப் படும் என்பதை உறுதிப் படுத்துவது.

தெரிவை மறுத்தல்

பலவித வழிமுறைகளில் இது உறுதிப் படுத்தப் படுகிறது. ஒரு வழிமுறை, நவீன தாரளவாதப் பாதையிலிருந்து விலகினால் முதலீடுகள் நாட்டை விட்டு வெளியேறி விடும் என்ற பயத்தைக் கிளப்பி விடுவதாகும். எல்லா அரசியல் அமைப்புகளிலும் (கட்சிகளிலும்) இந்தப் பயம் ஊன்றப் படுகிறது. அவ்வப்போது உண்மையாகவே இப்படி முதலீடுகள் வெளியேறுவதன் மூலம், சில நேரங்களில் திட்டமிட்ட சூழ்ச்சியாகவே கூட முதலீடுகளை வெளியேறச் செய்வதன் மூலம், அந்தப் பயம் அப்படியே பேணப் படுகிறது. மற்றொரு வழிமுறை, அதிகார வர்க்க ஆட்களிடையே ஏகாதிபத்திய நிறுவனங்களின் ஆட்களைப் பெருமளவுக்கு ஊடுருவச் செய்வதும், அதிகார வர்க்கத்தினரிடையே பெருமளவுக்கு நவீன தாராளவாதக் கருத்துக்கள் ஆக்கிரமிக்கச் செய்வதுமாகும். மிகப் பரவலான வலைப்பின்னல் அமைப்பு, பயிற்சித் திட்டங்கள், பயிலரங்குகள், ‘திறன் வளர்ப்பு” நடைமுறைகள் போன்ற ஏற்பாடுகள் மூலமாக இந்த ஆக்கிரமிப்பு நடத்தப் படுகிறது.

இங்கு நாம் அலசுகிற மூன்றாவது வழிமுறை ஒன்று இருக்கிறது. இன்றைய நடைமுறைகள் எதுவானாலும், அவற்றை ஒரு நுட்பமான கோட்பாடு வடிவத்திற்கு உருமாற்றப்பட்ட கருத்தாக்கங்களாகத் தருகிறார்கள். அந்தக் கோட்பாடுதான் என்றென்றும் நிலைத்திருக்கும் உண்மை என்றும், அதுதான் ‘இயற்கை நிகழ்ச்சிப் போக்குகளோடு” அல்லது ‘மனித இயல்போடு” ஒத்துப் போவது என்றும் கற்பிக்கப் படுகிறது. ‘அபிவிருத்தி” என்ற கருத்தாக்கம் இதற்குச் சரியான எடுத்துக்காட்டாகும். ஆளுக்காள் இந்தக் கருத்தாக்கத்தைக் கட்டிவிட முயல்கிறார்கள். இந்த மூன்றாவது வழிமுறை, ஒரு கருத்துநிலைச் சர்வாதிகாரத்தைத் திணிக்கிற முயற்சியே அன்றி வேறொன்றும் இல்லை. இவ்வாறு உருவேற்றப்படுகிற கருத்துச் சர்வாதிகாரத்திற்கு ஒரு அரசியற் பணியிருக்கிறது. மக்களுக்கு உள்ள அரசியல் தெரிவு உரிமையைத் தட்டிப் பறிப்பதுதான் அந்தப் பணி. அரசியலை அழிக்கும் கைங்கர்யத்தின் ஒரு பகுதிதான் இது.

அரசியலை அழிப்பதன் பின்னணியில் ஒரு தொடர்ச்சியான தர்க்கவாத உத்தி இருக்கிறது. ‘அபிவிருத்தி” என்பது நவீன தாராளவாதத்தின் மிக உயர்ந்த புனிதமாகக் கட்டமைக்கப் படுகிறது. அதிற் கருத்துநிலைச் சர்வாதிகாரம் பிரதிபலிக்கிறது. அது, மாறுபட்ட மேம்பாட்டுப் பாதைகளில் தங்களுக்குத் தேவையானதை மக்களே தேர்வு செய்கிற அரசியல் உரிமையை நிராகரிக்கிறது. அதை நியாயப்டுத்த ‘அரசியல் படு பாதாள நிலைக்குப் போய் விட்டது” என்றும், ‘அரசியற் கட்சிகள் எல்லாம் சுயநல நோக்கத்தோடு தான் செயற் படுகின்றன” என்றும் ‘அரசியல்வாதிகளிடைய ஊழல் ஊறிப் போய்விட்டது” என்றும், இது போல் இன்னும் பல வகைகளிலும் திரும்பத் திரும்பச் சொல்லப் படுகிறது. அரசியலில் ஈடுபடுவோரின் தரம் தாழ்ந்துள்ளது என்ற அனுபவ உண்மையைக் காட்டி, மக்களின் அரசியல் தெரிவுரிமை மறுக்கப் படுகிறது. ‘தொழில் துறையின் தானைத் தலைவர்கள்” என்றுந் ‘தொழில் முனைவோர் என்றுங் கூறப் படுகிறவர்களோடும், பத்திரிகைத் துறையில் உள்ள சில தொழில் முனைவர்களோடும், ‘நேர்மையான, கறாரான” அதிகாரிகளோடும் இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் பாதகமான முறையில் முரண்படுகிறவர்களாகக் காட்டப் படுகிறார்கள். மேற்படி தொழில் துறைத் தளபதிகளும், தொழில் முனைவோரும் இந்த நுட்பமான ஏற்பாட்டில், நவீன தாராளவாத மேம்பாட்டுத் திட்டங்களை உயர்த்திப் பிடிப்போராக மேம்பாட்டுக்கு உறுதியளிப்போராக அதனை உருவாக்குவோராக காட்டப் படுகிறார்கள்.

இத்தகைய கருத்தாக்கங்களின் ஆதிக்கத்தால் அரசியற் கட்சிகள் பயத்திற்கு உட்பட்டவையாக, எந்தவொரு மாற்று மேம்பாட்டுத் திட்டத்தையும் முன்வைக்க முடியாத நிலைக்குத் தள்ளப் படுகின்றன. கருத்தாக்கங்களின் வர்க்கத் தன்மை பற்றிய தத்துவார்த்தப் புரிதல் உள்ள இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.

விரிந்து பரந்ததாக உள்ள மற்ற அரசியல் கட்சிகளைப் பொறுத்த வரையில் மேம்பாட்டுப் பிரச்சனைகளில் இக்காட்சிகளுக்கு உள்ள கருத்து வேறுபாடுகள் பின்னுக்குச் சென்று காணாமல் போய்விடுகின்றன.

ஏனெனில் இக் கட்சிகள் எல்லாமே, மேற்படி நுட்பமான பொருளில், ‘அபிவிருத்தி” என்பதன் கைதிகளாக மாறி விடுகின்றன. இக் கட்சிகளுக்கு இடையேயான கருத்து மோதல்கள் எப்படித் தீர்க்கப் படுகின்றன என்றால் மாற்றுத் திட்டங்களுக்கு இடையே தங்களுக்குத் தேiவானதை மக்களே தேர்வு செய்து கொள்வதன் மூலமாக அல்ல. மாறாகப், பணபலம், உடற்பலம், சந்தர்ப்பவாதக் கூட்டணி அரசியல் ஆகியவற்றின் மூலமாகத் தீர்க்கப் படுகின்றன. அதே போல், இக் கட்சிகளிடைய, பொருளாதார செயல் திட்டம் பின்நோக்கிச் சவாரி செய்வதாக மாறிவிடுகிறது. என்பதால், அறிவுப் பூர்வமான, உணர்வுப் பூர்வமான இளைஞர்களை ஆற்றல் மிக்க தலைவர்களாக இக் கட்சிகளால் தமது அணிகளுக்குள் ஈர்க்க முடிவதில்லை. இந்த இளைஞர்களின் சமூகக் கடமையுணர்வும் கூர்மையாகச் சரிவடைகிறது. வேறு சொற்களில் சொல்வதனால், பன்னாட்டு நிதி மூலதனத்தால் பரப்பப்படுகிற ‘அபிவிருத்தி” என்ற கருத்தாக்கத்தின் ஆதிக்கமே, அரசியற் செயற்பாட்டாளர்களின் தரம் அபிவிருத்தி அடையாமல் தாழ்ந்து போவதற்குக் காரணமாகிறது.

இவ்வாறாக, ‘அரசியல்வாதிகள்” தரம் தாழ்ந்துவிட்டார்கள் என்ற அம்சத்தைப் பயன்படுத்தித் தான் ‘அபிவிருத்தி” என்ற நவீன தாராளவாதக் கருத்தாக்கத்தை மிகப் புனிதமானதாக உயர்த்துகிற முயற்சி நியாயப்படுத்தப் படுகிறது. (இதற்கு விதிவிலக்காக இடதுசாரிகள் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை மட்டும் ஒரு போதும் உரத்துச் சொல்லப் படுவதில்லை). அதே நேரத்தில் இப்படி ‘அரசியல்வாதி” தரம் தாழ்வதற்கே மேற்படி புனிதமயமாக்கல் தான் ஓரளவுக்காவது காரணமாகிறது. முதலாளித்துவ அரசியல்வாதிகள், சிறு முதலாளித்துவ அரசியல்வாதிகள் ஆகியாரின் தரம் தாழ்வதற்கு வர்க்கம் சார்ந்த காரணங்கள் கண்டிப்பாக உள்ளன. ஆனால், நவீன தாராளவாத ‘அபிவிருத்தி” என்பதன் கருத்துநிலை ஆதிக்கமும் இதற்கு நிச்சயமாகப் பங்களிக்கிறது.

வேரறுக்கப்படும் அரசியல் தலைமை

ஆக, அரசியலை அழித்தொழிக்கிற நடைமுறை இன்றைய உலகமயமாக்கல் யுத்தத்தின் ஒரு அடிப்படை அம்சமாக இருக்கிறது. இது வெளிப்படுத்தப் படுவது, ‘அபிவிருத்தி” என்ற நவீன தாரளாவாதக் கருத்தை மிக நுட்பமான உண்மையாக உயர்த்துவதன் மூலமாக மட்டுமல்ல. இந்த அபிவிருத்தி வியூகத்தின் மூல கர்த்தாக்களாகிய ‘தொழில் துறைத் தளபதிகள்”, பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்கள், தொழில் முனைவோர் எனப்படுவோர், ‘நேர்மையான அதிகாரிகள்” எனப்படுவோர் ஆகியோரை சமூக முன் மாதிரிகளாக, ஏன் அரசியல் தலைவர்களாகக் கூட, உயர்த்துவதன் மூலமாகவும் இது வெளிப்படுகிறது.

அரசியலை அழிப்பது என்பது நவ தாராளவாதத்துக்கு எதிரான எந்தவொரு சவாலையும் தடுத்துக் குலைப்பது மட்டுமல்ல, நாடு இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிற துயரங்களை மேலும் பெருக்குவது மட்டுமல்ல, மக்கள் தங்களுக்குத் தேவையான பாதையைத் தாங்களே சுதந்திரமாகத் தேர்வு செய்வதற்கான மாற்று வாய்ப்புகளை மறுப்பது மட்டுமல்ல, அதாவது ஜனநாயகத்தை மறுப்பது மட்டுமல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக, மக்களின் அரசியல் பங்கேற்பைத் தடுப்பதாகும். அர்த்தமுள்ள அரசியல் பங்கேற்பு என்பது மக்களின் தன்னாளுமையை உறுதிப் படுத்துகிற ஒரு வழிமுறை எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு உட்படுகின்றவர்களாக அல்லாமல், தங்களது வாழ்க்கையைத் தாங்களே வடிவமைக்கிறவர்களாக, முடிவுகளை எடுக்கக் கூடியவர்களாக மாறுகிற ஒரு வழிமுறை தான் அரசியற் பங்கேற்பு. அரசியல் என்பது பொருளாதார மாற்றத்துக்கான ஒரு கருவி மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களைத் தாங்களே உறுதிப்டுத்திக் கொள்கிற ஒரு வடிவமுமாகும். உலகமயமாக்கல் கோட்பாடும் நடைமுறைகளும் அரசியலை அழிக்க முயல்வதன் மூலம் மக்களின் இந்த வழிமுறையை நிராகரிக்க முயல்கின்றன.

கருத்துருவாக்கங்களின் வர்க்கத்தன்மை

ஆனால், உலகமயமாக்கல் இப்படி அரசியலை அழிக்க முயன்றாலும், அரசியல் வேறு வடிவத்தில் மறுபடியும் காட்சிக்கு வரவே செய்கிறது. யுத்தம் என்பது ஒரு மாறுபட்ட வடிவத்தில் அரசியலின் தொடர்ச்சியே ஆகும் என்கிறார் ஆய்வாளர் கிளாவ்ஸ்விட்ஸ்[Clauswitz]. . பொதுவாக அரசியல் என்பது அதன் அறிவுப்பூர்வ நியாயமான வடிவத்தில் அதற்குரிய நியாயமான வெளி இல்லாமல் தடுக்கப்பட்டாலுங் கூட, அறிவுப்பூர்வமற்ற நியாயமற்ற எல்லா வடிவங்களிலும் அது மீண்டும் தலைதூக்குகிறது. பயங்கரவாதம், சகோதரப் படுகொலைகள் போன்ற வன்முறை மிக்க, எவ்வித ஆக்கப்பூர்வ விளைச்சல்களையும் கொடுக்காத வடிவங்களில் அரசியல் மறுபடி தோன்றுகிறது. ஆகவே, அரசியல் அழிக்கப் படுவதற்கு எதிரான போராட்டம், அரசியலின் அறிவுப் பூர்வமற்ற நியாயமற்ற வடிவங்களுக்கு எதிரான போராட்டமும் ஆகிறது. இந்தப் போராட்டத்தில் ஜனநாயக சக்திகள் உணர்வுப் பூர்வமான உந்துதலுடன் இணைந்ததாக வேண்டியுள்ளது.

எதையும் வர்க்கக் கண்ணோட்டத்தில் காண்பது லெனினின் ஒரு சிறப்புக் குணமாகும். ஒரு முறை, லெனின் நாடு கடத்தப்பட்டு லண்டனில் இருந்த போது, அவரைச் சந்திக்க ஒரு இளந் தோழர் தாய்நாட்டிலிருந்து வந்திருந்தார். சிறந்த விருந்தோம்பற் பண்பு கொண்டவரான லெனின் அந்த இளைஞரை லண்டனின் பல்வேறு முக்கிய இடங்களுக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காட்டினார். ‘இதோ, இது தான் அவர்களுடைய ட்ரஃபல்கர் சதுக்கம்,” இது தான் அவர்களுடைய வெஸ்ட்மின்ஸ்ட்டர் பாலம்”, ‘அவர்களுடைய புனித போல் தேவாலயத்தை உனக்குப் பிடித்திருக்குமே” என்றெல்லாம் ஒவ்வொரு இடமாகக் காட்டி விளக்கினார். லெனினின் மனைவியார் க்ருப்ஸ்கயா[Krupskaya], லெனின் பற்றிய நினைவுக் குறிப்புகளில் நினைவு கூரும் போது இப்படி லண்டனில் அவர் ‘அவர்களது”, ‘அவர்களது” என்று அடையாளப் படுத்தியது ஏன் என விளக்கம் அளித்துள்ளார். தாமும் அந்த இளம் தோழரும் ரசியாவை சேர்ந்தவர்கள் என்பதாலும் அந்த வரலாற்றுச் சின்னங்கள் ஆங்கிலேயர்களுடையவை என்பதாலும் லெனின் அவ்வாறு குறிப்பிடவில்லை. மாறாக, அவற்றைக் கட்டி எழுப்பியவர்கள் ஆளும் வர்க்கத்தினர் என்பதால் அவ்வாறு குறிப்பிட்டார். ‘அவர்கள்” என்ற சொல்லை ஆங்கிலேயர்களை அல்ல, ஆள்வோரைக் குறிப்பிடுவதற்கு; பயன் படுத்தினார் லெனின். இன்று, அனைத்துக்கும் மேலாக அரசியல் அழிக்கப் படுவதற்கு எதிரான போராட்டம் ‘அவர்களுக்கு” எதிராக நடந்தாக வேண்டும். அந்தப் போராட்டம் ஆளும் வர்க்கங்களிடமிருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டிடும் வகையில் தொடர்ச்சியான, உறுதியான, திட்டவட்டமான வடிவத்தினை எடுக்க வேண்டும்.

மூலம் : பிரபாத் பட்நாயக், People’s Democracy

தமிழில் : அஸ்வத்தாமா

Exit mobile version