
மக்கள் விரோதிகளும், குற்றவாளிகளும், பாசிஸ்டுக்களும் அரசாளும் ஒரு தேசத்தின் மத்தியிலிருந்து கிடைக்கப்பெறுகின்ற செய்திகள் இவ்வளவுதான். பி.பி.சி சிங்கள சேவையைத் தொடர்ந்து தமிழ் செய்தி இணையங்கள் கைதிகள் சிலரின் அவலக்குரல்களை ஒலிவடிவில் பதிவு செய்திருந்தன.
எமக்குத் தெரிந்தவரை உலக மக்களுக்கு நீதியுரைக்கவென்ற தலையங்கத்தில் உலக அதிகார வர்க்கத்தின் நலனுக்காக நிறுவப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் நிறுவனம் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்காலில் நடந்தது போல எல்லாம் முடிந்த பின்னர், கண்டனம் தெரிவித்து அறிக்கைகளோடு அறிக்கைகளாக, செய்திகளோடு செய்திகளாக எங்காவது ஒரு மூலையில் கண்டன அறிக்கை வெளியிடுவார்கள். மனித உரிமைகள் கண்காணிப்பகம் சில பக்கங்கள் அதிகமாக அறிக்கை வெளியிடும். மன்னிப்புச் சபை ஆய்வு செய்து கண்டனம் தெரிவிக்கும். இதையெல்லாம் “ஆண்ட பரம்பரை” இப்போது தான் உணர ஆரம்பித்திருக்கிறது. உலகத்தின் ஒடுக்கப்படுகின்ற அனைத்து மக்களும் அன்றாடம் அனுபவிக்கின்றவை தான் இவையெல்லாம்.
இந்த உலகத்தின் பெரும்பான்மையானோரான ஒடுக்கப்பட்ட மக்கள் இப்படித்தான் ஏமாற்றப்படுகிறார்கள். அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட தேசிய இனமான தமிழ்ப் பேசும் மக்கள் இவர்களோடு இணைந்து பலம் பெறவும், ஒடுக்கப்பட்டோரைப் பலமடையச் செய்யவும் இதுவரை எண்ணிக்கூடப் பார்த்ததில்லை.
வாழ்வா சாவா என்று உயிருக்காகப் போராடிக்க் கொண்டிருக்க்கும் அனுராதபுரக் கைதிகளின் குரல் அவர்கள் இலங்கை அரசியல் வாதிகளிடம் தாம் முறையிட்டுள்ளதாகவும், யாருமே தம்மைக் கண்டுகொள்ளவில்லை எனவும் கூறுகிறார்கள்.
அதுவும் நாடுகடந்த தமிழீழ அரசு அடையாள அட்டைவழங்கும் அசாதரணக் கேலிக்கூத்தை அரங்கேற்றிக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் கைதிகளின் அவலக் குரல் சிறையிலிருந்து ஒலிக்கிறது.
புலிகள் அழிந்ததும் தமிழ் மக்களுக்குப் பொன்னும் பொருளும் குவிபேன் அன ஆசைகாட்டிய டக்ளஸ் தேவானந்தா எங்கே போய்விட்டார்? யாழ்ப்பாணக் குற்றச் செயல்களை புலிகள் தான் நடத்துகிறார்கள் என்ற அறிக்கைக்குப் பின்னர், அனுராதபுர அவலத்தையும் புலிகள் தான் நடத்தினார்கள் என்று அவசர அவரசமாக இன்னொரு அறிக்கை தயாரிக்கவா? இல்லை தேசிய கீதம் சிங்களத்தில் பாடப்படுவதற்கான நியாயத்தைத் தேடியலைந்து கொண்டிருக்கிறாரா?
அரசியல் கைதிகள் அவலத்தின் மத்தியில் உண்மையைக் கூறி டக்ளஸ் தேவானந்தாவின் முகத்தில் ஓங்கி அறைந்திருக்கிறார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகிந்த அரசோடு நல்லிணக்கமாக நடந்து கொள்கிறதாம்! எதற்காக? தமிழ்ப் பேசும் மக்களின் ஒரு பகுதியைச் சாரி சாரியாகக் கொன்றொழித்ததற்காவா?? கைதிகள் கூட்டமைப்பிடம் முறையிட்டதாகக் கூறுகிறார்கள். தேசியக் கூட்டமைப்பு தனது இந்திய எஜமானர்களையோ, நண்பன் ராஜபக்சவையோ அழைத்து வந்து கைதிகளைக் காப்பாறியிருக்கலாமல்லவா? தேர்தல் களத்தில் கடைவிரித்திருக்கும் அவர்களுக்கு கைதிகள் வாக்களிக்க வாய்ப்பில்லை என்பதால் மகிந்த ராஜபக்சவின் வாசற்படியில் மட்டும் தவமிருக்கிறார்களா? முன்னொரு பொழுதில் இதே வாக்குகளுக்காகவும் பதவி வழங்கிய போகத்திற்காகவும் வன்னியில் தவமிருந்த நன்றிக்கடன் கூட இவர்களுக்கில்லை.
கைதிகளின் குரல் இவர்களின் முகத்திலும் ஓங்கி அறந்திருக்கிறது.
அவ்வப்போது கைதிகளை விடுதலை செய்ததாக அரசாங்கத்திற்குப் பக்கப்பாட்டுப் பாடும் இலங்கை அரசின் உத்தியோக பூர்வ தமிழ் ஏஜன்ட் குமரன் பத்மனாதன், ஆயுதக் கடத்தலை அடியோடு மறந்துவிட்டு பாதிக்கப்பட்ட கைதிகளுக்காக பாடுபடுவதாகக் கூறுகிறாரே. இத்தனை காலமும் ஹிட்லரின் கொலகோஸ்டிற்கு இணையான சிறையில் கைதிகள் வதைக்கு உள்ளாகும் போது பிரபாகரனுக்குப் பின்னதாக அவர் நம்பிக்கை வைத்திருக்கும் கோதாபயவின் காதுகளில் இதைப் போட்டுவைத்திருக்கலாமே? மனிதாபிமானம் மிக்க உளவாளியென்றாவது பெயரெடுத்திருப்பார்.
தமிழ் மக்களை வெட்கித்தலைகுனிய வைத்திருக்கும் இவரின் அதிகார முகத்தில் கைதிகளின் அழுகுரல்கள் ஓங்கி அறைந்திருக்கிறது.
அடையாள அட்டை புகழ் நாடுகடந்த தமிழீழத்தின் உருத்திர குமார் இலங்கை அரசின் கோரங்களைக் கண்டுகொள்வதே இல்லை. மனிதர்கள் இல்லாத தமிழீழத்தைய அவர் விரும்புகிறார்? கைதிகள் எல்லாம் ஒரு கேடா அவருக்கு? கே.பி ஆரம்பித்து வைத்த நாடுகடந்தத தமிழீழத்தின் அடையாள அட்டையின் ஒவ்வொரு முகங்களின் மீதும் கைதிகள் ஓங்கி அறைந்திருக்கிறார்கள்.
மில்லியன்களை உலகம் முழுவதும் பதுக்கி வைத்டிருக்கும் புலிகளின் முன்னாள் பிரதிநிதிகள், போர்க்குற்றவாளி ராஜபக்ச உலகம் முழுவதும் உலா வரும் போது தமது வீடுகளின் கொல்லை புறத்தில் ஒளிந்துகொண்டார்கள். கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருப்பதே அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. மில்லியன்களைப் பாதுகாப்பதென்பது கைதிகள் குறித்துக் கவலை கொள்வதை விட அதிக சக்தியைச் செலவிடும் வேலை என்று எண்ணியிருப்பார்களோ? தேவையேற்பட்டால் அப்பாவிகளின் கைகளில் ஆக்கிரமிப்பாளன் ராஜராஜ சோழனின் புலிச் சின்னம் பதித்த, அழிவுகளை அரசியலாக்கிய புலிக் கொடியைக் கொடுத்து ஐரோப்பியத் தெருக்களில் உலாவரச் சொல்வார்கள், கைதிகளா கொக்கா, புலிக்கொடி தானே முக்கியம் அவர்களுக்கு?
கைதிகள் அவர்களின் பணபலத்தைக் கடந்து சென்று அவர்கள் முகத்தில் ஓங்கி அறைந்துள்ளார்கள்.
புலம் பெயர் நாடுகளிலிருந்து சேவை செய்கிறோம், அரசியல் பேசுகிறோம் பேர்வளிகள் என்று கொழும்பிற்கும் மேற்கிற்கும் தாண்டித்தாண்டி மனிதாபிமான வியாபாரம் நடத்தும் புலம்பெயர் புலியெதிர்ப்புக் கும்பல், கைதிகள் போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்தி பிரசாரம் மேற்கொண்டாலும் வியப்படைய முடியாது.
மரத்துப் போய் மரணித்துப் போன பிணங்களாய் உலாவரும் இவர்களின் முகத்தில் கூட கைதிகள் ஓங்கி அறைந்திருக்கிறார்கள்.
ஒடுக்கப்படுகின்ற தமிழ், சிங்கள், முஸ்லீம் கைதிகளுக்கு ஆதரவாக அவர்களை அவமானப்படுத்தி அடைத்து வைத்திருக்கும் இலங்கை இந்திய உலக அதிகார அமைப்பிற்கு எதிராகக் குரல் கொடுப்பதென்பது சமூகக் கடமை.